articles

img

லெனினியப் பாதையில் தீக்கதிர் - ஜி.ராமகிருஷ்ணன்

கல்கத்தா நகரத்தில் 1964 அக்டோபர் 31 ல் நிறைவுபெற்ற கட்சியின் 7 ஆவது அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. கட்சி துவங்கப்பட்டு 59 ஆண்டுகள் நிறைவடைந்து 2023 அக்டோபர் 31 அன்று கட்சி 60 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவா வதற்கு முன்னதாகவே 1963 ஆம் ஆண்டில் தீக்கதிர் இதழ் உதயமானது. வாரப் பத்திரிகையாக துவங்கப்பட்ட இதழ் 1971-இல் நாளேடாக மலர்ந்தது. மதுரையில் இருந்து வெளியான தீக்கதிர், அடுத்தடுத்து சென்னை, கோவை, திருச்சி என நான்கு பதிப்புகளானது. வருகிற செப்டம்பர் 22-ல் நெல்லையில் தீக்கதிரின் ஐந்தாவது பதிப்பினை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர். பிரகாஷ் காரத் துவக்கி வைக்கிறார். தொடக்க காலத்தில் தீக்கதிர் துவங்கப்பட்டது கட்சிக்குள் தத்துவார்த்த போராட்டத்தை நடத்துவ தற்காக. இப்போதும் அத்தகைய தத்துவார்த்த போராட்டத்தை மக்கள் மத்தியில் முனைப்பாக நடத்த வேண்டிய அவசியம் உள்ளது.

‘இஸ்க்ரா’

இந்த இடத்தில், ரஷ்யாவில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான புரட்சிக்குத் தலைமை தாங்கிய ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் லெனின் கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். 1898 ஆம் ஆண்டு ரஷ்ய சமூக ஜனநாயக தொழி லாளர் கட்சி (ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி) துவங்கப் பட்டது. 1900 ஆம் ஆண்டு ‘தீப்பொறி’ என்று பொருள் படும் கட்சிப் பத்திரிகையான ‘இஸ்க்ரா’ துவங்கப் பட்டது. கட்சிப் பத்திரிகை துவங்குவதன் நோக்கம் பற்றியும் அதனுடைய உள்ளடக்கம் பற்றியும் லெனின் எழுதிய ’இஸ்க்ரா ஆசிரியர் குழுவின் பிர கடனத்தை’ தனி பிரசுரமாக இஸ்க்ரா வெளியிட்டது. “ரஷ்ய தொழிலாளர் வர்க்க இயக்கம் மற்றும் ரஷ்ய சமூக ஜனநாயகத்தின் வரலாற்றில் நாம் மிக முக்கியமான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருக்கி றோம்” என்று கூறும் தோழர் லெனின், ஓர் அரசியல் கட்சியின் செய்தித்தாளைத் துவங்கும்போது அதன் நோக்கத்தை வரையறுக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். இன்றைய இந்தியாவில் மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் பாஜக உழைக்கும் மக்களின் ஒற்று மையை சீர்குலைத்து வருகிறது. உழைக்கும் மக்களி டையே ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்றால், ஆர்.எஸ்.எஸ் பாஜகவினுடைய இந்துத்துவ, கார்ப்ப ரேட் கூட்டு அரசை கருத்தியல் ரீதியில் மக்களிடையே அம்பலப்படுத்தக்கூடிய தத்துவார்த்த போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதையே, “கட்சி பத்திரிகையின் வாயிலாக திடமான கருத்தியல் ஒற்றுமைக்காக உழைக்க வேண்டியது அவசியம்” என்கிறார் தோழர் லெனின்.

அம்பலப்படுத்துவது முக்கியம்

அதானி குழுமத்திற்கு பாஜக அளித்துவரும் ஆதரவும், சலுகைகளும், பாதுகாப்பும் மத்தியில் ஆளும் பாஜக மோடி அரசின் கார்ப்பரேட் கூட்டை அம்பலப்படுத்துகின்றன. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பொய்யான பங்கு மதிப்பீட்டின் மூலமாக உல கின் மூன்று முதல் பணக்காரர்களில் ஒருவராக முன்னேறிய அதானியின் குழுமம் எப்படிப்பட்ட மோசடிகளில் ஈடுபட்டது என கடந்த ஜனவரி மாதம்  `ஹிண்டன்பர்க்’ நிறுவனம் புலனாய்வு அறிக்கை யை வெளியிட்டது. உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தக் குற்றச்சாட்டுகளால் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்து உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 30-ஆவது இடத்திற்குக் கீழ் அதானி தள்ளப்பட்டார். உள்நாட்டில் நாடாளுமன்றத்தில் இது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் வாய் திறக்கவே இல்லை. தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையில் இந்திய பங்குச்சந்தை ஒழுங்கு முறை அமைப்பான ‘செபி’ அதானி குழுமத்திற்காக விதிகளை வளைத்தது அம்பலமாகியுள்ளது. இவ்வளவு பெரிய குற்றச்சாட்டுக்குப் பிறகும்கூட விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட நாட்டின் வளங்களையும், பொதுத்துறை நிறுவனங்க ளையும் அதானிக்கு தாரைவார்க்கும் நடவடிக்கை களை ஒன்றிய அரசு கைவிடவில்லை. இப்போது திட்ட மிட்ட குற்றங்கள் மற்றும் ஊழலை வெளிப்படுத்தும் அமைப்பு  (ஓசிசிஆர்பி) அதானி குழும நிறுவன பங்கு களில் குடும்பத்தினரே ரகசியமாக முதலீடு செய்ததாக குற்றம்சாட்டி இருக்கிறது. இப்போதும் பிரதமர் இது குறித்து வாய்திறக்கவில்லை.  மத்திய தணிக்கை குழுவே சுட்டிக்காட்டியுள்ள 7.5 லட்சம் கோடி மெகா ஊழல் குறித்தும் வாய்திறக்கவில்லை. அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்களுக்கு லட்சக் கணக்கான கோடிகள் கடன்கள் தள்ளுபடி, வரிச்சலு கைகள் வழங்கப்படுகின்றன. அதேநேரத்தில், பெட்ரோலியப் பொருட்களுக்கு, சமையல் எரிவாயு விலைக்கு மானியம் வழங்கி விலைகளை குறைத்திட ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. மத ரீதியில் மக்களைப் பிளவுபடுத்தி அதிகாரத்தி ற்கு வருவதும், அதிகாரத்தை தக்க வைப்பதுமான கொள்கைகளை கடைப்பிடிக்கும் பாஜக - சங்பரிவா ரத்தின் திட்டத்தால் மணிப்பூர் மாநிலம் கடந்த மே  மாதம் முதல் பற்றி எரிகிறது. ஊடகங்களின் நடவ டிக்கைகள் குறித்து  கள-ஆய்வு நடத்திய இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், மாநில பாஜக அரசாங்கம் மக்களைப் பிளவுபடுத்தி வன்முறையை ஏவி இருக்கிறது என தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியி ருக்கிறது. இதற்காக பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மீது இரண்டு வழக்கு களை மணிப்பூர் மாநில அரசு பதிவு செய்திருக்கிறது. உச்சநீதிமன்றம் இது தவறான அணுகுமுறை என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறது.

போர்க்குரல்

இது போன்ற பின்னணியில் பாட்டாளி வர்க்கத்தின் போர்க்குரலாக ஒலிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான  தீக்கதிர், சமூ கத்தில் வகிக்கும் பாத்திரம் மிக முக்கியமானது. “தற்போதைய அரசியல் அமைப்பினால் ஒடுக்கப் பட்ட அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுத்திட வேண்டும்” என இஸ்க்ராவின் நோக்கம் குறித்து தோழர் லெனின் 125 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டது இன்றைக்கும் பொருந்துகிறது. எதேச்சதிகார அரசின் அனைத்து அருவருப்பான அம்சங்களையும் அம்பலப்படுத்திட நம்முடைய பத்திரிகை இடம் தர வேண்டும்’ என லெனின் குறிப்பிட்டது போல, தற்போதைய இந்தியச் சூழலில் தீக்கதிர் எதேச்சதிகார மோடி அரசை, அதன் கார்ப்பரேட் கூட்டை தொடர்ந்து அம்பலப்படுத்தி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது.  தீக்கதிரை திக்கெட்டும் மக்களிடம் கொண்டு சேர்த்து, வலிமைமிக்க மக்கள் சக்தியைத் திரட்டி எதேச்சதிகார சக்திகளையும், ஏகாதிபத்திய சக்திக ளையும் முறியடிப்போம்!