articles

img

தியாகி ஜெயப்பிரகாஷ் நினைவுடனும் போலீஸ் கொடுத்த குண்டுடனும்...

1980. நவம்பர் 3. பஞ்சாப்பின் லூதியானா மாநகரம்.

இந்திய இளைஞர்களின் விடிவெள்ளியாக, வெண்கொடி ஏந்திய வீரர்களது எழுச்சிமிகு சக்தியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உதயமான உற்சாகமிகு மாநாடு. மாநாட்டு அரங்கில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பெரும் உத்வேகத்துடன் கூடியிருந்த இளைஞர்களிடையே மகிழ்ச்சிப் பெருக்கு. மாநாட்டு மேடைக்கு கம்பீரமாக வந்து அமர்ந்தார் பண்டிட் கிஷோரி லால். மாவீரன் பகத்சிங்கின் உற்ற தோழர். பகத்சிங்கின் வாரிசுகளை வாழ்த்தி சங்கத்தை துவக்கி வைப்பதற்காக பகத்சிங்கே வந்து அமர்ந்திருப்பதுபோல தோழர்கள் மத்தியில் உணர்ச்சிப் பேரலை.

மேடையில் அறிவிக்கிறார்கள். தென் நாட்டின் புரட்சிகர மையமாம் மதுரையிலிருந்து, அரசியல் போராட்டத்தில் போலீசிடம் குண்டடிபட்டு, ஒரு குண்டு இன்னும் உள்முதுகிலேயே இருக்கக் கூடிய ஓர் இளம் தோழர் மாநாட்டுப் பிரதிநிதியாக வந்திருக்கிறார், அனந்தன், மேடைக்கு வாருங்கள் என்கிறார்கள்.மதுரையிலிருந்து சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி (எஸ்ஒய்எப்) பிரதிநிதியாக சென்றிருந்த அனந்தனும், பார்வையாளராக சென்றிருந்த பொ.மோகனும் உணர்ச்சிப் பிரவாகத்தில் ஆழ்கிறார்கள். மேடையை நோக்கி அனந்தன் செல்கிறார். இரண்டு புறமும் அமர்ந்திருந்த அத்தனை பிரதிநிதிகளும் எழுந்து நின்று கரவோசையால் விண்ணதிர செய்கிறார்கள்.மேடைக்குச் சென்றதும் அந்த பகத்சிங்கே கட்டியணைத்ததுபோல பண்டிட் கிஷோரி லால் ஆரத் தழுவுகிறார்.

“அந்த நிமிடமே இந்த தேசத்திற்காக என்னுடைய உயிர் பிரிந்துவிடாதா என்று உணர்ச்சி கொந்தளிப்பில் ஆழ்ந்துவிட்டேன். கண்களில் கண்ணீர் சொரிந்தது; எனக்கு முன்னால் குண்டடிபட்டு இறந்த 23 வயதே நிரம்பிய மகத்தான தோழன் தியாகி குட்டி ஜெயப்பிரகாஷ், மனக்கண்ணில் தெரிந்தான்.

எனது வாழ்வில் கிடைக்கப் பெறாத பெரும் பேறு லூதியானா மாநாடும், பண்டிட் கிஷோரி லாலின் வாழ்த்தும்.”

- உணர்ச்சி ததும்ப இதை விவரித்த போது, தோழர் ஏ.சி.ஏ.அனந்தனின் கண்களில் 1980களின் மதுரை மாநகரத்து மார்க்சிய இயக்கம் ஜொலித்தது.

40 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

1980 ஜனவரி 4, நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் நிறைவு நாள். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் வேட்பாளர். நிறைவுப் பிரச்சாரத்தையொட்டி மாபெரும் அணிவகுப்பு நடைபெற்றது. முனிச்சாலை பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணியின் பேரணி வந்தபோது, அரசியல் எதிரிகள் திட்டமிட்ட கலவரத்தை உருவாக்கினார்கள். சமூக விரோதிகள், ஆயுதங்களால் தோழர்களைத் தாக்க துவங்கினார்கள். அவர்களுக்கு பதிலடியும் கிடைத்தது. இந்த தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த காவல்துறை, கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான தனது வெறித்தனத்தை அரங்கேற்றத் துவங்கியது. தோழர்கள் மீது கொடும் தாக்குதல் நடத்தியது. திடீரென அறிவிப்பு ஏதுமின்றி துப்பாக்கிச் சூடு நடத்தியது. 

அணிவகுப்பின் முகப்பில், அன்றைக்கு மார்க்சிய இயக்கத்தின் துடிப்புமிக்க ஊழியர்களாக சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் இளைய தோழர்கள் உணர்ச்சிமிகு கோஷங்களை இட்டுக் கொண்டிருந்தார்கள். சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி என்பது, தமிழகம் முழுவதும் இளைஞர்களை இடதுசாரிப் பாதையில் அணிதிரட்டிய ஒரு மாபெரும் இயக்கமாக இருந்தது. அரசியல் வேறுபாடின்றி அனைத்துப் பகுதி இளைஞர்களும் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் ஈர்க்கப்பட்டிருந்த காலமது. அப்படி ஈர்க்கப்பட்டு சமூகப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டு வாலிபர் முன்னணியின் துடிப்பு மிக்க தோழனாக செயல்பட்டவர் பெத்தானியாபுரம் - கண்மாய்கரை பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ். அவர் உள்ளிட்ட இளைஞர்களை நோக்கி போலீசாரின் குண்டுகள் பாய்ந்தன. நெஞ்சில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் வீழ்ந்தார் ஜெயப்பிரகாஷ். அடுத்து ஒரு இளைஞர் வீழ்ந்தார். அவரது பெயர் ராஜூ. எம்ஜிஆரின் தீவிர ரசிகர்.

ஜெயப்பிரகாஷ் குண்டடி பட்டு வீழ்ந்து, தரையில் துடித்துக் கொண்டிருந்த காட்சியைக் கண்டு பதறி ஓடிச் சென்று அவரை தூக்குகிறார் அனந்தன். சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் மதுரை செயலாளர் அவர்தான். அடுத்தடுத்து பாய்ந்த குண்டுகள் அனந்தனையும் துளைத்தன. 4 குண்டுகள். ரத்த வெள்ளத்தில் அவரும் வீழ்ந்தார். ஜெயப்பிரகாஷ் சற்று நேரத்தில் மரணமடைய, அனந்தனுக்கு உயிர் இருக்கிறது என்பதை உணர்ந்த தோழர்கள் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள்.
தலைவர்கள், தோழர்கள், இந்திய மாணவர் சங்கத்தின் ஊழியர்களாக இருந்த மருத்துவர்கள் என எல்லோரும் மருத்துவமனையில் குவிகிறார்கள்.

மறுபுறம் தோழர் ஜெயப்பிரகாஷ் கொல்லப்பட்டது தோழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், ஆத்திரமும் ஏற்படுத்தியது. ஏராளமான தோழர்கள் காயமடைந்தனர். பெரும் கொந்தளிப்பான சூழல் நிலவியது. “எனது உடலிலிருந்து 3 குண்டுகளை எடுத்துவிட்டார்கள். ஒரு குண்டு வயிற்றில் பாய்ந்து குடலை துளைத்து உள்முதுகில் சென்று சிக்கிக் கொண்டது. அதை எடுக்க முடியவில்லை. அப்படியே இருந்தாலும் உயிருக்கு ஆபத்து இல்லை என்ற நிலையில், அதை விட்டுவிட்டார்கள். 40 ஆண்டுகளாக தோழன் குட்டி ஜெயப்பிரகாஷ் நினைவோடும், போலீஸ் கொடுத்த அந்த துப்பாக்கிக் குண்டோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

அந்த காலகட்டத்தில் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியும், மார்க்சிய இயக்கமும் எங்களைப் போன்ற தோழர்களின் உயிர் மூச்சாக இருந்தது என்றால் மிகையல்ல. அன்றைக்கு தீக்கதிர் நாளிதழை விநியோகம் செய்யும் பணியிலும் ஈடுபட்டேன். 35 ஆண்டு காலம் தீக்கதிர் பத்திரிகையை மதுரை நகர் முழுவதும் கொண்டு சென்று சேர்த்த அந்தப் பணி இன்றைக்கும் எனக்கு பெருமிதம் அளிக்கிறது.

குடும்ப சூழல் காரணமாக கட்சியின் முழு நேர ஊழியராக முடியவில்லை. ஆனால் கட்சியும், அன்றைக்கு என்னுடன் பணியாற்றிய காஸ்ட்ரோ படிப்பகம், பாரதி படிப்பகம் உள்பட மதுரை நகரின் அனைத்து தோழர்களும் செங்கொடியின் பற்றுறுதி மிக்க ஊழியர்களாக செயல்பட்டோம். கட்சியும், வாலிபர் இயக்கமும் கடந்த 40 ஆண்டு காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. ஏராளமான இளைஞர்கள், குட்டி ஜெயப்பிரகாஷ் போன்ற தியாகிகள் உயர்த்தி பிடித்த வாலிபர் இயக்கத்தின் வெண்கொடியையும், மார்க்சிய இயக்கத்தின் செங்கொடியையும் இன்றும் உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள். அந்த தியாகிகளின் உதிரத்தால் சிவந்த செங்கொடி வெல்வது உறுதி. அந்த நம்பிக்கையோடு நடைபோடுவோம்” என்று உணர்ச்சி பொங்க குறிப்பிடுகிறார் தோழர் ஏ.சி.ஏ.அனந்தன்.

==எஸ்.பி.ஆர்.===

;