articles

img

எது செயல்திறன்? (மக்களவை, மாநிலங்களவை)

தில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட 76 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்துவைத்து பிரதமர் மோடிபேசும்போது, இந்தியாவின் இளம் ஜனநாயகத்தில் மக்களவையின் 2014 - 29 ஆம் ஆண்டு நாடாளுமன்ற காலகட்டம் மிக முக்கியமானது என்று கூறியிருக்கிறார். அத்துடன், சரித்திரத்தில் மக்களவையின் வெவ்வேறு காலகட்டங்களை மதிப்பிடும் போது தேசத்தின் வளர்ச்சியில் இது ஒரு பொற்காலமாக நினைவு கூர வேண்டியது நமது பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.
இந்த காலகட்டம் என்பது இன்னும் ஒரு மக்களவையின் ஆயுளையும் சேர்த்துக் குறிப்பிடுவதாகும். அடுத்த ஐந்தாண்டு காலமும் தானே பிரதமராக இருக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் இந்த 17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடரின் செயல்திறன் 135 சதவீதமாகும் என்றும், மாநிலங்களவையில் செயல்திறன் 100 சதவீதமாகும் என்றும் கூறியுள்ளார். கடந்த இரண்டு தசாப்தங்களில் தற்போதைய மக்களவையே செயல்திறனுடன் உள்ளதுஎன்றும் பெருமைப்பட்டிருக்கிறார்.

கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின்  படிக்கட்டுகளை தொட்டுக் கும்பிட்டு நுழைந்தபிரதமர் நரேந்திரமோடி தற்போது அந்த கட்டிடத்தையே கைவிட்டு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் முயற்சியில் தீவிரமாகியிருக்கிறார் என்பது தெரிந்ததே. அதுபோல ஏற்கெனவேபின்பற்றப்படும் நாடாளுமன்ற ஜனநாயகநடைமுறைகளையும், மரபுகளையும் சிறிதும்மதிக்காமல் எதேச்சதிகார பாணியிலேயே இரு அவைகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார். இவர் ஆட்சிப்பொறுப்பேற்றதும் முதல்  வேலையாக திட்டமிட்ட பொருளாதாரத்துக்கான ஐந்தாண்டுத் திட்டத்தை ஒழித்துக் கட்டினார். நிதி கமிஷனையும் பலி கொடுத்தார். அத்துடன் நாடாளுமன்றத்தின் பல்வேறு நிலைக்குழுக்களை புறக்கணித்து செயல்பாடற்றதாக்கிவிட்டார். மத்திய அமைச்சரகங்களும் கூட தனித்தனி பொறுப்புகளுடன் செயல்படுவதை விடுத்து எல்லாமே பிரதமர் அலுவலகத்தையே சார்ந்ததாக செய்துவிட்டார். ஒரு சூப்பர்மேன் போல கருதி சர்வாதிகாரத்தை நோக்கிய நடவடிக்கையையே மேற்கொண்டிருக்கிறார்.

இரு அவைகளிலும் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டு ஜனநாயகத்தை கேலிக்குறியதாக்கிவிட்டார்.  இந்த நிலையில் தான் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையின் செயல்திறன் அதிகரித்துள்ளதாக பீற்றிக் கொண்டுள்ளார். இந்தாண்டு மட்டும் 25 சட்டங்களை கொண்டுவந்திருக்கிறார். அவற்றில் குடியுரிமை சட்டம்,விவசாய விரோத மசோதாக்கள் ஆகியவையும்அடங்கும். இவர்களது செயல்பாடு பத்திரிகையாளர்களுக்கும், அரசியல் செயல்பாட்டாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், எதிராகவே, அறிவுஜீவிகளுக்கும் அமைந்துள்ளது. ஆனால் பல்வேறுகொடிய குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்துத்துவாவாதிகளை பாதுகாக்கும் வேலையை இவரதுகாவல்துறை செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டுகளில் மக்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும் போதாது என்று இன்னும் ஐந்தாண்டுகள் தர வேண்டுமென்று கேட்கிறார். கொடுத்தால்நாடு என்னாகும்?

==இந்த பகுதி தீக்கதிர் தலையங்கம் ==


 

;