articles

ஊழலுக்கு உடந்தையாக ஒழுங்காற்று அமைப்பு!

‘கார்ப்பரேட் உலகின் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஏமாற்று வேலையை உலகின் 3ஆவது பெரிய செல்வந்தர் எப்படிச் செய்தார்’ என்ற தலைப்புடன், அதானியின் ஊழல்களைச் சுட்டிக்காட்டி, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டு, ஒன்றரை ஆண்டுகள் கழித்து, அவர்க ளுக்கு விளக்கம் கேட்கும் எச்சரிக்கை ஒன்றை இந்தி யாவின் பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி அனுப்பியுள்ளது. ஆம்! ஒன்றரை ஆண்டுதான்! 

நகைப்பிற்குரிய செபியின் கடிதம்

2023 ஜனவரி 24 அன்று வெளியான அறிக்கைக்கு விளக்கம் கேட்டு 2024 ஜூன் 27 அன்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளது செபி! அதிலும்கூட, முதல் மின்னஞ்சல் செபியின் கணினியிலேயே ஆபத்தானது என்று முடக்கப்பட்டு, முடக்கப்பட்ட செய்தி மட்டும் ஹிண்டன்பர்க்-குக்கு அனுப்பப்பட்டு, சில மணிகள் கழித்து மற்றொரு மின்னஞ்சலில் செபியின் 46 பக்க ஷோ காஸ் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் அனுப்பப்பட்ட முறையிலேயே, தாங்கள் தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருப்பதை வெட்கத்துக்குரிய வகையில் வெளிப்படுத்திய செபி, அதன் எச்சரிக்கைக் கடிதத்திலும் சொல்லில் பிழை, (ஹிண்டன்பர்க்கின்) பொறுப்புத் துறப்பில் பிழை என்று சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகளை எழுப்பி, இந்தியாவின் அரசு நிர்வாகத்தையே நகைப் பிற்கு உரியதாக்கியிருக்கிறது.

ஹிண்டன்பர்க்கின் சவாலும் செபியின் பூசி மெழுகலும்

உண்மையில் ஹிண்டன்பர்க்கின் 106 பக்கங்களும் 32 ஆயிரம் சொற்களும் கொண்ட அறிக்கை, 720 ஆதாரங்களுடன், அதானி நிறு வனங்கள் தொடங்கப்படுவதற்கு முன் அதானி சகோ தரர்கள் ஈடுபட்ட கடத்தல்களிலிருந்து, அவர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பங்குச் சந்தையில் நுழைந்து, இந்தியப் பங்குச் சந்தைகளில் மிகப்பெரிய ஊழல்வாதியாகக் குறிப்பிடப்படும் கேத்தன் பரேக் உடனான தொடர்புகள், அதானி நிறுவன பங்குகள் மேலும் மேலும் விலை உயரக் காரணமான வெளி நாட்டு நிறுவனங்கள் போலியானவை என்பவை உட்பட ஏராளமானவற்றை வெளிப்படுத்தியிருந்தது. ஒரு வேளை ஹிண்டன்பர்க் அளித்திருந்த ஆதா ரங்கள் போலியானவை என்றால், விளக்கமளித்து, அந்நிறுவனத்தின்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். வேடிக்கை என்னவென் றால், தவறென்றால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கு மாறு அந்த அறிக்கையிலேயே ஹிண்டன்பர்க் நிறு வனம் ‘சவால்’ விட்டிருந்தது என்பதுதான். 

ஹிண்டன்பர்க் மீது பாயாத செபி, ஊடகங்களிட மும் உச்ச நீதிமன்றத்திலும் பூசி மெழுகியது. அறிக்கை வெளியாகி 5 நாட்கள் கழித்து, அதானி நிறுவனங்களின் சார்பில் ஒரு 413 பக்க பதில் வெளி யிடப்பட்டது. அது வெளியான சில மணிகளிலேயே அதற்கும் பதில் அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க், தாங்கள் எழுப்பியிருந்த 88 கேள்விகளில், 62 கேள்வி களைப் பற்றி அதானி வாயே திறக்கவில்லை என்பதை யும், முக்கியமான குற்றச்சாட்டுகள் எதற்கும் பதில ளிக்கவில்லை என்பதையும் மேலும் ஆதாரங்களு டன் விளக்கியது. 

அனைத்துக்கும்  ஆதாரங்கள் இருந்தும்...

உண்மையில், அதானி பங்குகளை வாங்கிய நிறு வனங்கள் பலவும் போலியானவை, ஒரே நாளில் தொடங்கப்பட்டவை என்பதையெல்லாம் அவற்றின் பதிவு விபரங்களுடனேயே முதல் அறிக்கையில் வெளி யிட்டிருந்தது ஹிண்டன்பர்க். அத்துடன், வெளிநாட்டு நிறுவனம் போலி என்று குறிப்பிட்டால், அந்த நாட்டில் அந்த முகவரிக்குச் சென்று, அப்படி நிறுவனம் இல்லை என்பதைப் படமெடுத்து வெளியிட்டிருந்தது. அதானி நிறுவனங்களுக்கு அரசு வழங்கிய ஒப்பந்தங்கள் உட்பட அனைத்திலும் எப்படியான முறைகேடுகள் நடைபெற்றன, எவ்வகையான விதி மீறல்கள் நடந்துள்ளன, லஞ்சம் பெற்ற அதிகாரிகள் விபரங்கள் என்று அனைத்திற்கும் ஆதாரங்கள் குறிப்பிட்டு ‘வெல்லும் சொல் இன்மையறிந்து’ என்ற குறளுக்கு விளக்கமளிப்பது போலத்தான் அந்த அறிக்கை அமைந்திருந்தது.

ஒருவர் திருடியிருக்கிறார். அந்தத் திருட்டு ஆதாரங்களுடன் சமூக ஊடகங்களில் வெளியா கிறது. காவல்துறை என்ன செய்யும்? திருட்டுக் கொடுத்தவர் புகாரே அளிக்கவில்லை என்றாலும், ஆதாரங்களுடன் குற்றம் தெரிந்து விட்டதால் நட வடிக்கை எடுக்குமா இல்லையா? ஒன்று அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, அந்தச் செய்தியும், ஆதாரங்களும் தவறு என்றால், செய்தியை வெளியிட்டவரின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், செபி இரண்டையுமே அப்போது  செய்யவில்லை. 520 நாட்கள் கழித்து ஓர் எச்சரிக்கைக் கடிதத்தை ஹிண்டன்பர்க்குக்கு அனுப்பியுள்ளது. சரி... அதிலாவது, அந்த அறிக்கையில் உள்ள குற்றச் சாட்டுகள் தவறானவை, ஆதாரங்கள் போலியா னவை, அதனால் தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக் கக்கூடாது என்று  கேட்டிருந்தால் பரவாயில்லை. 

இதைவிட இழிவு வேறில்லை

அதானி நிறுவனங்கள் பலமுறை ஒழுங்காற்று அமைப்புகளின் குற்றச்சாட்டுகளுக்கும், தண்டனை களுக்கும் ஆளாகியிருப்பதைக் குறிப்பிட ‘ஊழல்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியது தவறு, அவர்க ளுக்கு குறைவான தண்டனை வழங்கப்பட்டுள்ள தைக் குறிப்பிட ‘மென்மையான அணுகுமுறை’ (லீனியென்சி) என்ற சொல்லைப் பயன்படுத்தியது தவறு என்பது போன்றவைதான் செபி எழுப்பி யுள்ள குற்றச்சாட்டுகள். பதிலாக லீனியென்சி என்ற  சொல்லுக்கு கேம்ப்ரிட்ஜ் ஆங்கில அகராதியின் பொருளை ஹிண்டன்பர்க் சுட்டிக்காட்டியிருப்பதை விட இழிவு செபிக்கு இனி ஏற்பட முடியாது என்பது, இந்தியர் என்ற முறையில் நாம் அனைவரும் வேத னையும் வெட்கமும் படவேண்டிய செய்தி.

இத்தனைக்கும் பிறகு, சில தகவல்களை தேர்ந்தெடுத்து ஹிண்டன்பர்க் பயன்படுத்தியுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளது செபி. அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவை முறைகேடுகள் என்றால் செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதும், இல்லை யென்றால் தவறான தகவலை அளித்தவர்கள்மீது (ஹிண்டன்பர்க்) நடவடிக்கை எடுப்பதும்தானே சரி? அதைவிட்டு, சில தகவல்களை மட்டும் தேர்ந்தெ டுத்து குறிப்பிடுகிறார்கள் என்பது என்ன குற்றச் சாட்டு? எல்லாவற்றிற்கும் மேலாக, ஹிண்டன்பர்க் அறிக்கை ‘பொறுப்பற்றது’ என்று குறிப்பிட்ட செபி, எங்குமே தவறானது என்று குறிப்பிடவில்லை என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. 

குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் ஆய்வுகள்...

ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப்பின் ஃபோர்ப்ஸ், கார்டியன், ஃபார்ச்சூன், ப்ளூம்பெர்க் என்று நம்பகத் தன்மை வாய்ந்த, உலகின் மிகப்பெரிய செய்தி நிறுவனங்கள் உட்பட, 42 நிறுவனங்கள் தனிப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிட்ட கட்டுரை கள், ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளை உறுதிப் படுத்துவதாக அமைந்திருக்கின்றன என்பதையும் பதிலில் சுட்டிக்காட்டியிருக்கிறது ஹிண்டன்பர்க். எல்லாவற்றிற்கும் உச்சமாக, அதானி நிறுவனங்க ளைத் தணிக்கை செய்யும் பணியிலிருந்த, பிக்-4 என்றழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய தணிக்கை  நிறுவனங்களில் ஒன்றான டிலாய்ட் நிறுவனமே வெளியேறிவிட்டது.

இவ்வளவுக்குப் பின்னும், தங்கள் நலனுக்காக ஹிண்டன்பர்க் அந்த அறிக்கையை வெளியிட்டது என்பதும் செபியின் குற்றச்சாட்டு. வேடிக்கை என்னவென்றால், அதானி நிறுவனப் பங்குகளை ஷார்ட் செல்லிங் (அதாவது விலை குறையும் என்று பந்தயம் கட்டுவதைப்போல!) செய்திருக்கிறோம் என்றுதான் அறிக்கையையே தொடங்கியிருந்த ஹிண்டன்பர்க், இறுதியாகப் பொறுப்புத் துறப்பி லும் அதைக் குறிப்பிட்டிருந்தது. புதிதாக எதையோ  கண்டுபிடித்ததைப்போல இதனை செபி குறிப்பிட்டு, சிறுபிள்ளைத்தனமாக இருப்பதையும் வெளிக் காட்டியுள்ளது.

அதல பாதாளம் சென்ற இந்தியாவின் மரியாதை

ஹிண்டன்பர்க் நிறுவனம் தொடக்கப்பட்ட நோக்கமே அப்படி ஷார்ட் செல்லிங் செய்து முறை கேடுகளை வெளிப்படுத்துவதுதான். பிற நிறுவ னங்களை அப்படி ஷார்ட் செய்து ஈட்டிய வருவா யைவிட, அதானி நிறுவனங்களில் குறைவாகவே ஈட்டியதாகவும், இந்தியாவில் நிலவுகிற மோசமான (ஊழல் நிறைந்த என்று படிக்க வேண்டும்!) நிர்வாகச் சூழல்களால், சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்குத் தேவைப் படும் என்று பெருந்தொகையை முன்கூட்டியே ஒதுக்கியதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டிருப்பது, உலக அரங்கில் இந்தியாவின் மரியாதையை அதல பாதாளத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதைப் பற்றி, மோடியோ, இந்த அரசோ கவலைப்படவில்லை என்பது உச்சகட்ட வேதனைக்குரியது. அப்படியான மோசமான நிர்வாகம்தான் இருக்கிறது என்பதை, அதானி பற்றி எழுதியதற்காகவே செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டது, அதானி பற்றிப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஆகிய நடவடிக்கைகள் உணர்த்து வதாக அந்நிறுவனம் குறிப்பிடுவது மேலும் வெட்கத்துக்கு உரியது.

தவறு செய்தவர்களை காப்பாற்றுவதற்காகவே...

‘அதானி பங்குகளை ஷார்ட் செய்வதென்றால் இந்திய பங்குச் சந்தையில் பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எங்கள் மீது சட்ட நடவடிக்கையை இந்தியாவில் எடுக்க செபி விரும்புகிறது. எங்களின் ஒற்றை ஊழியர்கூட இந்தியா வில் இல்லை. எங்களுக்காகப் பணியாற்றுகிற பங்கு முதலீட்டு நிறுவனம் மூலமாகவே எங்கள்  பரிவர்த்தனை நடந்தது. அது கோட்டக் மகிந்திரா  வங்கியின் மூலம் நடைபெற்றது என்பதைக் கண்டு பிடித்த செபி, அந்தப் பெயரைக்கூடக் குறிப்பிடாமல், கேஎம்ஐஎல் என்று சுருக்கமாகக் குறிப்பிட்டதுகூட, அவர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு முறைகேடுகள் இந்தியாவில் மலிந்திருக்கின்றன’ என்று ஹிண்டன்பர்க்கின் பதில் குறிப்பிடுவது, சட்ட ஆலோசனையைக்கூட செபி சரி யாகச் செய்யவில்லை என்பதையும், தவறு செய்கிற பெருமுதலாளிகளைக் காப்பாற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது என்பதை யும் வெட்ட வெளிச்சமாக்குகிறது. ஹிண்டன்பர்க்கின் பதில் வெளியானதும் கோட்டக் வங்கியின் பங்குகள் விலை சரிந்தது தனிச் செய்தி.

நடவடிக்கை எடுக்காத நாடு இந்தியாவே...

இந்தியாவின் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பு என்பது, முதலீட்டாளர்களைக் காப்பதாக இல்லாமல், தவறு செய்பவர்களைக் காப்பதாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தி, முதலீட்டா ளர்களை எச்சரிப்பதுதான் தங்கள் நோக்கம் என்றும், அந்த நோக்கத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ள ஹிண்டன்பர்க், தாங்கள் இதுவரை வெளியிட்ட அறிக்கைகளிலேயே இதைத்தான் மிகச்சிறந்த பணியாகக் கருதுவதா கவும் குறிப்பிட்டிருக்கிறது. ஹிண்டன்பர்க் அறிக்கைக ளால் பல நாடுகளிலும் பல நிறுவனங்களின் நிறு வனர்கள் உட்பட தவறிழைத்த பலரும் சிறை உட்பட தண்டனைகளைப் பெற்றிருக்கிற நிலையில், இந்தியாவில் செபி நடவடிக்கையே எடுக்காத போதும், மிகப்பெரிய ஊழலை வெளிக்கொணர்ந்தி ருப்பதாக அந்நிறுவனம் கருதுவது, இந்தியா எவ்வ ளவு மோசமான நிலையிலிருக்கிறது என்பதற்கான குறியீடாக விளங்குகிறது.

மாணவர்களின் கல்வியில் நீட் தொடங்கி, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்று அனைத்திலும் ஊழலை  மட்டுமே செய்திருக்கிற மோடி அரசு, வரிகளாக மக்களின் பணத்தைச் சுரண்டி பெரு முதலாளிக ளுக்கு கடன் தள்ளுபடிகளாக வழங்கிக் கொண்டி ருக்கிறது. அது போதாதென்று, மக்கள் சிறுகச் சிறுகச் சேமித்தால், வங்கிச் சேமிப்பின் வட்டிக்கும் வரி போட்டு, பங்குச் சந்தை பக்கம் திருப்பி, அதனையும் பெரு முதலாளிகள் உறிஞ்சி எடுத்துச் செல்ல எல்லா உதவிகளையும் செய்கிறது என்பதைத்தான் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளிப்படுத்தியிருக்கிறது. வலுவாக அமைந்திருக்கிற எதிரணி, உடனடியாகக் கவனம் செலுத்தி இந்த ஊழல்களைத் தடுக்க வேண்டும் என்பது, நம் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் எதிர்பார்ப்பும்கூட!







 

;