கப்பலோட்டிய தமிழன் எனவும், செக்கிழுத்த செம்மல் எனவும் போற்றப்படுபவர் வ.உ. சிதம்பரனார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யத்தினை எதிர்த்து, அவர்களுக்கெதிராக சுதேசி கப்ப லோட்டினார். அதனால் தண்டனை பெற்று சிறையில் செக்கிழுத்தார் என்பது மட்டும் அவரது தியாகம் அல்ல. தொழிலாளர் நல்வாழ்வுக்காகவும் உரிமைகளுக்கா கவும் சமூக நீதிக்காகவும் பாடுபட்டார். இவை யாவும் இன்றும் நாம் பின்பற்ற வேண்டிய செயல்பாடு களாகும்.
சுதேசி கப்பல் தொழில் என்பது வியாபாரம் மாத்திரம் அல்ல. ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை என்பதால் அதை வ.உ.சி தீவிரப்படுத்தினார். அதில் மக்களையும் பங்கு பெற வைத்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையில் ஒன்றுதான் சுதேசி கப்பல் தொழில் என மக்களுக்குப் புரிய வைத்தார். அதனால் அவருக்கு மக்கள் துணை நின்றனர். இரண்டு கப்பல்கள் வாங்கிட நிதி அளித்தனர்.
வ.உ.சி.யின் நடவடிக்கைகளுக்கு மக்கள் துணை நிற்பதைப்பார்த்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது கம்பெனி கப்பலில் தூத்துக்குடிக்கும் கொழும்புவிற்குமான பயணக் கட்டணத்தை 5 ரூபாயி லிருந்து 75 பைசாவிற்கு குறைத்தது. இதனால் பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்கு மாதம் ரூ.40,000 வரை நஷ்டமாகியது. வெள்ளை ஏகாதிபத்தியத்தின் நிர்வாகத்தில் நடக்கும் கோரல் மில்லில் நடக்கும் கொடுமைகளை கண்டு வெகுண்டெழுந்தார். கூலியோ வெகு குறைவு. பத்து வயது சிறுவன் கூட கொடுமையாக வேலை வாங்கப்படுதல், தவறு செய்தால் பிரம்படி போன்ற அட்டூழியங்களுக்கு முடிவு கட்டிட போராட் டம் நடத்தினார். ஏகாதிபத்தியத்தினை முடமாக்கிட இயந்திரங்க ளுக்கு ஊறு விளைவிப்பது. வேலை நிறுத்தம் போன்ற இரண்டு வழிகளை கையாளுவது சிறந்த வழி என வ.உ.சி. நினைத்தார். அதனை மக்களிடமும், கோரல் மில் தொழிலாளர்களிடமும் கோரிக்கையாக வைத் தார். இதனை ஏற்ற மக்களும் கோரல்மில் தொழிலா ளர்களும் ஆலையின், தண்ணீர் குழாயினை உடைத் தெறிந்தார்கள். வெள்ளையர்களை கல்லால் அடித்த னர். அவர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்க வியாபாரிகள் மறுத்தனர்.
தூய்மைத் தொழிலாளர்கள், நாவிதர்கள் உள்ளிட்ட தொழில் செய்யும் தூத்துக்குடியிலுள்ள அனைத்துத் தொழிலாளர்களும், கோரல்மில் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கள மிறங்கினர். இதனால் வெள்ளையர்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. உயிருக்கு பயந்த வெள்ளையர் கள் கப்பல் கம்பெனி அலுவலகங்களில் இரவில் தங்கி னர். கோரல்மில் தொழிலாளர்களின் பிரச்சனையை அவர்களுடைய பிரச்சனையாக மட்டும் பார்க்காமல் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமாகவே வ.உ.சி பார்த்தார். அதனால் தான் கோரல்மில் தொழிலாளர்களின் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது. 50% ஊதிய உயர்வையும் கோரல்மில் தொழிலாளர்கள் பெற்றனர். ஞாயிறு விடுமுறை உள்ளிட்ட சலுகைகளையும் பெற்றனர். கோரல்மில் தொழிலாளர்களின் போராட் டம் காரணமாக தூத்துக்குடி நகராட்சி, ஆங்கிலேயர்க ளால் நடத்தப்பட்டு வந்த ரயில்வே மற்றும் இதர நிறு வனங்களும் வ.உ.சி.யால், தங்கள் நிறுவனங்களிலும் வேலைநிறுத்தம் வரக்கூடும் என்ற அச்சத்தில் தங்கள் தொழிலாளர்களுக்கும் 50 சதவீதம் ஊதிய உயர் வினை அளித்தன. வ.உ.சி.யின் தொழிற்சங்க போராட் டம் தொழிலாளர்களை பொருளாதாரக் கோரிக்கை களுக்கு மட்டுமல்லாமல் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரிலும் அனைத்துத்தரப்பு தொழிலாளிகளையும் பங்கெடுக்க வைக்க உதவி செய்தது.
அடுத்த சில நாட்களில் கோரல்மில் தொழிலாளர்க ளின் போராட்டத்தினைத் தொடர்ந்து 1908 மார்ச் 10 அன்று விபின் சந்திரபால் விடுதலை நாளை ‘சுய ராஜ்யம்’ நாளாக கொண்டாட வ.உ.சி உள்ளிட்ட தலை வர்கள் முடிவு செய்தனர். ஆனால் ஆங்கிலேய ஏகாதி பத்தியம் இத்தகைய கொண்டாடத்திற்கு தடை விதித்தது. ஆனாலும் தடை உத்தரவை மீறி வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை நாள் கொண்டாட்டத்தை நடத்தினர். இவ்விழாவில் கலந்து கொள்ள அனு மதிக்கப்படாததைக் கண்டித்து பர்மா எண்ணெய் (பெட் ரோல்) நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டனர். இதன் காரணமாக வ.உ.சி. சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் உள்ளிட்ட தலைவர்க ளை ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கைது செய்தது. இதனைக்கண்டித்து பெஸ்ட் கம்பெனி ஊழியர்கள், கசாப்புக்கடைக்காரர்கள், குதிரை வண்டி தொழிலா ளர்கள் உள்ளிட்ட அனைவரும் வ.உ.சியின் கைது எதிராகப் போராடினர்.
அரசியல் காரணங்களுக்காக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது இந்தியாவிலேயே முதன்முதலில் வ.உ.சியின் கைதை எதிர்த்துத்தான். திலகரை கைது செய்தபோது நடந்த வேலை நிறுத்தம் பிந்தையதுதான்.
இத்தகைய நடவடிக்கைகளில் பங்கேற்ற கோரல்மில் தொழிலாளர்கள், தாங்கள் சில நாட்க ளுக்கு முன்பு பெற்ற ஊதிய உயர்வைக்கூட இழந்தனர். பொருளாதாரத்தை இழந்தாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை தொழிலாளிகளிடம் ஊட்டி அனைத்துத்தரப்பு தொழிலாளிகளையும் ஏகாதி பத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வைத்தது வ.உ.சி.யின் வெற்றி. வ.உ.சியின் நடவடிக்கைகளை பார்த்து அஞ்சியது பிரிட்டிஷ் அரசாங்கம். தூத்துக்குடி யிலும், திருநெல்வேலி போன்ற பகுதிகளிலும் ஏகாதி பத்திய எதிர்ப்பு உணர்வு மேலோங்கி இருக்கிறது என பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அப்போதைய ஆட்சித் தலைவர் (வின்ச் துரை) ரிப்போர்ட் அனுப்பினார். வ.உ. சி.யின் போராட்டங்களை பாரதி தனது பாடல்களில் கலெக்டர் வின்ச் வ.உ.சி.க்கு சொல்லுவது போல வும் அதற்கு வ.உ.சி கலெக்டருக்கு பதில் மொழி கூறுவதாகவும் பாடல்கள் பாடியுள்ளார். இப்படிப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது. இதைக் கேள்விப்பட்ட வ.உ.சி.யின் சகோதரர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை சித்தம் கலங்கி வாழ்நாள் முழுவதும் பைத்தியமாக அலைந்து 1943 ஆம்ஆண்டு இறந்தார். கடுங்காவல் சிறை தண்டனையை அனுபவித்தார்.
வ.உ.சியை தான்சார்ந்த காங்கிரஸ் கட்சி கைவிட்டபோதும் அவர் தன்னுடைய கொள்கை களை விடாமல் தொடர்ச்சியாக வாழ்நாள் முழுவதும் போராடினார். அவர் சிறையில் இருந்து மீண்டு சென்னையில் வசித்தபோது, ஆதி தமிழர் ஒருவரை துணைவராக கொண்டு தமிழ் இலக்கியங்களை கற்பித்தார். ஆதி தமிழரான அவரின் பெயர் சகஜா னந்தர் என்பதாகும். அவரை தங்களுடைய வீட்டிலேயே தங்க வைத்து தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்களை பயிற்றுவித்து பண்டிதராக்கினார். சென்னையை விட்டு ஓட்டப்பிடாரம் சென்றபோதும் சக ஜானந்தரையும் அழைத்துச் சென்றார். உறவினர் இல்ல விழாக்களுக்கும் சகஜானந்தரை அழைத்துச் செல்வார். யாராவது குலத்தைப்பற்றி கேட்டால் “இவரோ துறவி. இவருக்கு ஏது குலம் என அனைவரி டமும் கூறுவார். ‘என்னை பிள்ளையைப் போன்று வளர்த்தார் வ.உ.சி’ என சகஜானந்தர் பாராட்டினார். இப்படி சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவராகவும் வ.உ.சி வாழ்ந்தார்.
அதேபோல் 1927ஆம் ஆண்டு நவம்பர் 5 அன்று நடைபெற்ற சேலம் அரசியல் மாநாட்டில் வ.உ.சி பேசும் போது “இராஜாங்க உத்தியோகங்களும், ஸ்தல ஸ்தாபன உத்தியோகங்களும், பொது ஸ்தாபன உத்தியோகங்களும், நம் தேசத்திலுள்ள ஒவ்வொரு ஜாதியாருக்கும் அந்தந்த ஜாதியாரின் எண்ணிக்கை விகிதப்படி பகிர்ந்து கொடுக்கப்பட்டாலன்றி, நம் தேசத்தாருள் ஒற்றுமை உண்டாகப் போவதேயில்லை என்பதும், நமக்குள் ஒற்றுமை உண்டாகாமல் நாம் சுய அரசாட்சி அடையப்போவதே இல்லை யென்பதும் மனித அறிவுடைய எவர்க்கும் தெளிவாக விளங்கத் தக்கவை. இந்த உண்மைக்கு மாறாக பேசுகின்றவர் யாவராயினும் மனித அறிவில்லாதவர், அல்லது ‘பகலை இரவென்று கூறும் பாதகர்’ என்று நாம் கொள்ளக் கடவோம்” என பேசியது இடஒதுக்கீட்டு கொள்கைக்கு ஆதரவாக வ.உ.சி இருந்தார் என்பது தெரிகிறது. ஏகாதிபத்திய எதிர்ப்பு, விடுதலை நெருப்பு தொழிலாளர் உரிமை, சமத்துவக் கொள்கை கொண்ட மாமனிதர் வ.உ.சி.யை என்றென்றும் நாம் போற்றிடுவோம். பின்பற்றிடுவோம்!
கட்டுரையாளர் : மாவட்ட துணைதலைவர் சிஐடியு தூத்துக்குடி