articles

img

நவம்பர் புரட்சி தினம் : மக்கள் எழுச்சிகளின் அணிவகுப்பு - என்.குணசேகரன்

 வரலாறு பல புரட்சிகளை கண்டுள்ளது. புரட்சிகர மாற் றங்கள் எந்த நாட்டிலும் எந்த சகாப்தத்திலும் நிகழாமல் இருந்ததில்லை. அனைத்து துறைகளிலும் புரட்சிகர புதிய நிகழ்வுகள் இடையறாமல் நடந்து வந்துள்ளன. வரலாற்றில் நிகழ்ந்த அனைத்து புரட்சிகளி லும் தனித்த மகத்துவம் கொண்டதாக 1917 நவம்பர்7- அன்று நிகழ்ந்த ரஷ்யப் புரட்சி திகழ்கிறது. ஏனெனில் இந்த புரட்சியின் போதுதான் முதன்முறையாக மேலாதிக்க ஒடுக்குமுறை சக்திகள் தூக்கி எறியப்பட்டு, அதுவரை ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்டு வந்த மக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தடைந்த மகத்தான மாற்றம் நிகழ்ந்தது. முதலாளித்துவம் கட்டியமைத்த ஏற்றத் தாழ்வான சமுதாயத்தை அடியோடு மாற்றி, உண்மையான மானுட சமத்துவத்தை நிலை நாட்டிய பெருமை ரஷ்யப்புரட்சியையே சாரும். மாமேதை லெனினுடைய மார்க்சியத்தலை மையின் வழிகாட்டுதலில் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றிய அந்த புரட்சி நெடிய மானுட வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்தது.

மக்கள் இயக்கத்தின் மீது நம்பிக்கை

1905ஆம் ஆண்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான முயற்சி ரஷ்யாவில் தோல்வியடைந்தது. இந்தப் புரட்சியின் தோல்விக்குப் பிறகு ஜார் அரசாங்கம் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் மீது கடுமையான அடக்கு முறையை ஏவியது. இந்நிலையில் நம்பிக்கை வறட்சி நாடு முழுவதும் நிலவியது. எனினும் கம்யூனிஸ்ட் கட்சியான போல்ஷிவிக் கட்சி தொடர்ந்து புரட்சிக்கான தயாரிப்புகளை செய்து வந்தது.ஏராளமான வேலை நிறுத்தங்கள்,தொழிலாளர்களின் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள்,கிராமப்புற விவ சாயிகளின் எழுச்சி என மக்கள் திரண்டனர்.இவற்றின் ஊடாக கம்யூனிஸ்ட் கட்சியை கட்டும் பணியும் விரிவாக நடந்தது. இவ்வாறு செயலாற்றிய கம்யூனிஸ்டுகள் மக்களின் இயக்கத்தின் மீது அசைக்க முடி யாத நம்பிக்கை கொண்டிருந்தனர்.பாட்டாளி களின் எழுச்சி மீது வலுவான நம்பிக்கை கொண்டவர்களில் அன்று முதன்மை இடத்தில் இருந்தவர் லெனின். மக்கள் திரளின் படைப்பாற்றல் திறன் மீது லெனினுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. 1905 ஜூன்-ஜூலையில் அவர் எழுதினார்: “புரட்சிகள்,ஒடுக்கப்பட்டோர் மற்றும் சுரண்டப்பட்டோரின் திருவிழாக்கள். வேறு எந்த நேரத்திலும் இல்லாத அளவிற்கு, புரட்சி யின் போது மக்கள் கூட்டம் புதிய சமூகத்தை  படைப்பவர்களாக முன்வருகின்றனர். இத்த கைய நேரங்களில், படிப்படியான முன்னேற்றங்களையே அறிந்திருக்கின்ற வர்களின் பார்வையில், மக்கள் அற்புதங் களைச் செய்யும் திறன் பெற்றவர்களாக காட்சி யளிக்கின்றனர்….” மக்கள் நிகழ்த்திய ஒரு மாபெரும் அற்புதம் ரஷ்யப்புரட்சி. ஆனால் இது ஏதோ  மந்திர சக்தியால் நிகழ்ந்த அற்புதம் அல்ல.  முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் சுரண்டல் கொள்கைகளை எதிர்த்து மக்கள் தொடர்ச்சியாக திரண்டு நடத்திய போராட்டங்க ளின் உச்சமாக நவம்பர் புரட்சி உருவெடுத்தது.  மூலதனக் குவியலும் மக்களின் வாழ்வாதார  வீழ்ச்சியும் ஏக காலத்தில் நடக்கிற போது, ஒரு கட்டத்தில் எழுகிற பாய்ச்சல் வேக மாற்றமாக புரட்சி வெடிக்கிறது. ஆனால் எல்லா  மக்கள் எழுச்சிகளும் நவம்பர் புரட்சி பயணப் பட்ட வழித்தடத்தில் செல்வதில்லை. மார்க்சிய - லெனினிய அடித்தளம் இருந்தால் மக்கள் எழுச்சி சோஷலிசப் புரட்சியாக மலரும். இது நவம்பர் புரட்சி எடுத்துரைக்கும் படிப்பினை. 

நவீன தாராளமயம்: தோல்விகளின் அணிவகுப்பு 

சமீப காலங்களில் கூட முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களில் மக்கள் திரள் பங்கேற்பு அதிகரித்து வருகிறது. முதலாளித்துவ மூலதனக் குவியலை தீவிரப்படுத்த கொண்டுவரப்பட்டவை நவீன  தாராளமயக் கொள்கைகள். அதனை கடைப் பிடித்த நாடுகள் தற்போது அடுக்கடுக்காக தோல்விகளை சந்தித்து வருகின்றன.அந்த நாடுகளில் மக்கள் எழுச்சி பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவுக்கு அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கை போன்ற நாடு களில் ஆளும் வர்க்கங்கள் கடைப்பிடித்த கொள்கைகள் மக்களை கிளர்ந்தெழச் செய்தன. இரண்டு நாடுகளுமே தங்களது சுயமான உள்நாட்டு வளர்ச்சியை ஏற்படுத்தாமல் பன்னாட்டு மூலதனத்தின் பிடியில் தங்கள் பொருளாதாரத்தை அடகு வைத்தன. சர்வதேச நிதி நிறுவனத்தின் கட்டளைகளுக்கு அடி  பணிந்து மக்கள் நலன் காக்கும் கொள்கை களை கைவிட்டன. விலைவாசி உயர்வும், வேலையின்மையும் மக்களை கடுமையாகத் தாக்கின. மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டது.ஆட்சியா ளர்களை மக்கள் விரட்டி விரட்டி ஓடச்செய்தனர். ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியை வங்கதேசம் கட்டியமைக்க முயற்சித்தது. ஆனால் இந்த ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி ஏகபோக, பன்னாட்டு முத லாளிகளுக்கு பயன்பட்டதே தவிர அதனால் ஏழைகளின் வாழ்வில் ஏற்றம் ஏற்படவில்லை. பொருளாதார இன்னல்களும் ஏற்றத்தாழ்வு களும் கடுமையாக பாதித்த நிலையில், மக்கள் வீதிகளில் திரண்டு போராடினர். ஆனால், ஆட்சி மாறினாலும் உழைக்கும் வர்க்கங்களின் உண்மையான விடுதலை சாத்தியமாக வில்லை.  அதற்கு, மக்கள் எழுச்சிகள் மார்க்சிய - லெனினியப் பாதையில் பயணப்பட வேண்டும். 

இதே நிலைதான் இலங்கையிலும் ஏற்பட்டது. ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த நவீன தாராளமயக் கொள்கைகள் உள்நாட்டு ஏகபோகத்தையும் பன்னாட்டு மூலதனத்தை யும் வலுப்படுத்தியதே தவிர ஏழைகள் வாழ்வில் முன்னேற்றத்தை சாதிக்கவில்லை.இதர பல நாடுகளிலும் இதே நிலை நீடிக்கிறது. தெற்காசியாவில், முறைசாரா வேலை களில் பணியாற்றும் தொழிலாளர்களின் விகிதம் 87 சதவீதமாகவும், கிழக்கு ஆசியாவில் அது 50 சதவீதமாகவும் உள்ளது.64 சதவீத த்திற்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் முறைசாரா வேலைகளில் உள்ளனர்.முறை சாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு கண்ணியமான வேலை நிலைமைகள், நியாய மான ஊதியம், பராமரிப்பு சேவைகள் அல்லது பிற சமூக பாதுகாப்புகள் எதுவுமில்லை.  இன்றைய முதலாளித்துவம் உலக ஏற்றத்தாழ்வினை அதிகரித்து வருகிறது.சர்வதேச நிதி நிறுவனம் (IMF) தனது ‘உலக பொருளாதார அவுட்லுக், ஏப்ரல் 2024’ அறிக்கையில், உலகின் வடக்கு பிராந்திய நாடு களுக்கும் தெற்கு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் இடைவெளியை சுட்டிக்காட்டி யது. “பல குறைந்த வருமானம் கொண்ட வள ரும் நாடுகளின் பொருளாதாரங்களைப் பொறுத்தவரை, வளர்ச்சி கீழ்நோக்கிச் செல் கிறது…” என்று அந்த அறிக்கை கூறுகிறது. இதற்கெல்லாம் காரணமாக உள்ள முதலாளித்துவ தாராளமயக் கொள்கைகளை தொழிலாளர்கள் ஒன்று திரண்டு, சரியான தலைமை வழிகாட்டுதலுடன் போராட வேண்டும். கொடூரச் சுரண்டலிலிருந்து விடுதலை பெற இதுவே தீர்வாக அமையும். இந்தியாவிலும் நவீன தாராளமயக் கொள்கைகள் விவசாயத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் விவசாயிகளை போராட்டக் களத்தில் கொண்டு வந்தன. விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டமும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல தரப்பு உழைக்கும் வர்க்கங் களின் போராட்டமும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்காமல் மைனாரிட்டி அரசாக செயல் படும் நிலையை உருவாக்கின.  ரஷ்யப் புரட்சியின் படிப்பினைகளை சரியாக உணர்ந்தால்தான், மக்கள் எழுச்சி களை விடுதலை இலக்கு நோக்கிய பயண மாகக் கொண்டு செல்ல முடியும்.

மானுடத்தின் எதிர்காலம் மார்க்சிய- லெனினியம்தான்

எண்ணற்ற படிப்பினைகளை சோவியத் புரட்சி வழங்கியுள்ளது. தொடர்ந்து அவற்றை பயில வேண்டியது அவசியம். எனினும் எதிர்கால புரட்சிகளுக்கு கீழ்க்கண்ட பொது வான கோட்பாடுகளை சோவியத் புரட்சி முன்னிறுத்துகிறது.

  1.     தொழிலாளர், விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கங்களின் அணி சேர்க்கைதான் சோசலிச மாற்றத்திற்கு இட்டுச் செல்லும்.  
  2.     தொழிலாளி வர்க்கம் உள்ளிட்ட சுரண்டப் படும் வர்க்கங்களின் போராட்டத் திறனையும், வர்க்க விழிப்புணர்வையும் வளர்த்தெடுக்க கம்யூனிஸ்டு கட்சி தேவை.
  3.      லெனினியக் கோட்பாடுகள் அடிப்படையில் செயல்படும் கட்சியால்தான் வர்க்கங்களை அரசியல்படுத்தி, அமைப்பாக உருவாக்கி, வர்க்கப்போராட்டங்களை முன்னெடுக்க முடியும்.
  4.      முதலாளித்துவத்தின் அதிகாரவர்க்க, இராணுவ, காவல்துறை அரசு இயந்திரத்தை அகற்றி, அதற்கு பதிலாக மக்கள் அதிகாரம் படைத்தவர்களாக திகழ்கிற ஜனநாயக அர சினை நிறுவிட வேண்டும். அனைத்து உற்பத்தி துறைகளும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டிலேயே இயங்கிட வேண்டும்.
  5.      அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற நிர்வாக அமைப்புகளுக்கும் ஜனநாய கத் தேர்தல்கள் நடைபெறும். தேர்ந்தெடுக்க ப்பட்ட பிரதிநிதிகள் சரியாகச் செயல்பட வில்லை என்றால் அவர்களை திரும்பப் பெறும் அதிகாரமும் மக்களுக்கு வழங்கப் படும். மேற்கண்ட கோட்பாடுகள் அடிப்படையில் இயங்கும் சமூகத்தை உருவாக்குவதுதான் உலக உழைக்கும் மக்களின் முக்கியக் கடமை.  இந்த கோட்பாடுகள் மார்க்சிய - லெனினிய கோட்பாடுகள். அவையே மானுடத்தின் எதிர்காலம்.