articles

img

நவம்பர் 26 - அரசியலமைப்புச் சட்ட தினம் மதவெறியர்களிடமிருந்து தேசம் காப்போம்! - சீத்தாராம் யெச்சூரி

2015 நவம்பர் 27 அன்று மாநிலங்களவையில், டாக்டர் அம்பேத்கர் 125ஆம் ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு அமர்வில், அன்றைய மாநிலங்களவை உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த பொதுச் செயலாளருமான தோழர் சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரையின் சாராம்சம்:

1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் அரசியல் நிர்ணயசபையின் தலைவரால் கையெழுத்திடப்பட்டது. அன்றைய தினம் 395 பிரிவுகளில் 15 பிரிவுகள் மட்டுமே அமலுக்கு வந்தன. 1950 ஜனவரி 26 அன்றுதான் அனைத்து பிரிவுகளும் அமலாகி, இந்தியா முழுமையான குடியரசாக மாறியது. நவம்பர் 26ஐ அரசியலமைப்புச் சட்ட தினமாகக் கொண்டாடுவதன் பின்னணியில் இந்த வரலாற்று முக்கியத்துவம் உள்ளது.

நேரு, அம்பேத்கரின் பங்களிப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளமாக அமைந்தது ஜவஹர்லால் நேரு கொண்டுவந்த “குறிக்கோள்கள் அல்லது நோக்கங்கள் தீர்மானம்”. அரசியல் நிர்ணயசபையின் 11 அமர்வுகளில் 6 அமர்வுகள் இந்த தீர்மானத்தின் மீதே நடைபெற்றன. டாக்டர் அம்பேத்கர் சமூக நீதிக்காக பல முக்கிய சட்டங்களைக் கொண்டுவந்தார். அவர் வலியுறுத்திய மூன்று முக்கிய கோட்பாடுகள்: - சமத்துவம் - சகோதரத்துவம் - சுதந்திரம் “சமத்துவம் இல்லையேல் சுதந்திரமில்லை; சகோதரத்துவம் இல்லையேல் சமத்துவமோ சுதந்திரமோ இல்லை” என்பது அம்பேத்கரின் அடிப்படைக் கொள்கை.

கம்யூனிஸ்டுகளின் தேசபக்தி

1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்க காலத்தில், பிரிட்டிஷ் அரசின் பதிவுகளின்படி, கான்பூர், ஜாம்ஷெட்பூர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் கம்யூனிஸ்டுகள் நடத்திய வேலைநிறுத்தங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு பெரும் சவாலாக அமைந்தன. “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எப்போதுமே பிரிட்டிஷ் எதிர்ப்பு புரட்சியாளர்கள்” என பிரிட்டிஷ் அரசே ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.  1942-இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற சமயத்தில் பிரிட்டிஷ் பம்பாய் உள்துறை கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது: “சங் பரிவாரம் சட்டத்திற்கு உட்பட்டு குற்றமற்ற முறையில் நடந்து கொள்கிறது. குறிப்பாக 1942 ஆகஸ்டில் நடைபெற்ற கலவரங்களில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளது.” ஆனால், இத்தகைய சங் பரிவாரம் தான், இன்று இந்திய அரசமைப்புச் சட்டத்தை ‘பாதுகாக்கும்’ பொறுப்பில் இருக்கிறது என்பது, எத்தனை வெட்கக்கேடு!

வழிகாட்டும் நெறிமுறைகளும் இன்றைய நிலையும்

அரசியலமைப்பின் வழிகாட்டும் நெறிமுறைகள் பல முக்கிய கடமைகளை வலியுறுத்துகின்றன: - நலிந்த பிரிவினரின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு - மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாடு - அறிவியல் சிந்தனை மற்றும் பகுத்தறிவு வளர்ச்சி      ஆனால் இன்றைய நிலை வேறுவிதமாக உள்ளது: - உலகில் ஊட்டச்சத்துக் குறைபாடு மிக அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று - நாட்டில் 90 சதவீத குடும்பங்கள் மாதம் ரூ.10,000க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர் - 100 மெகா கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதி அளவிற்கு உள்ளது

மதச்சார்பின்மைக்கு சவால்கள்

அரசியலமைப்பின் பிரிவு 15 கூறுவது: “எந்தவொரு பிரஜையையும், மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் அல்லது இவற்றில் எதை ஒன்றையும் வைத்துப் பாகுபாடு காட்டக்கூடாது.” ஆனால் இன்று: மதவெறி அரசியல் தலைதூக்குகிறது; சகிப்பின்மை அதிகரித்துள்ளது; சமூக ஒற்றுமைக்கு சவால்கள் எழுந்துள்ளன.

கூட்டாட்சித் தத்துவத்தின் சீர்குலைவு

டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்திய கூட்டாட்சித் தத்துவத்தின்படி: - ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் சமமானவை - சட்டமன்றங்களும் நிர்வாக அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் - மாநிலங்களின் சுயேச்சையான மதிப்பு பாதுகாக்கப்பட வேண்டும் ஆனால் தற்போதைய நிலையில்: - மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன - கூட்டாட்சித் தத்துவம் சீர்குலைக்கப்படுகிறது - ஒன்றிய-மாநில உறவுகள் பாதிக்கப்படுகின்றன

வாக்குரிமையும் ஜனநாயகமும்

1950ல் இந்தியா அனைவருக்கும் வாக்குரிமை வழங்கிய முதல் நாடுகளில் ஒன்று. அமெரிக்காவில் கூட 1962ல்தான் அனைவருக்கும் வாக்குரிமை கிடைத்தது. ஆனால் இன்று. ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையிலான மோடி அரசு, வாக்குரிமையைப் பறித்து, நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பை முடக்குவதற்கு திட்டங்கள் தீட்டுகிறது.

அரசமைப்புச் சட்டத்திற்கான சவால்கள்
பாஜக அரசு “அரசமைப்புச் சட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்” என்று இப்போது கூறுகிறது. ஆனால் இந்த “மீண்டும் உறுதிப்படுத்தல்” என்ற கேள்வியே ஏன் எழுகிறது? அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டுதான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்கிறார்கள். அரசமைப்புச் சட்டம் இல்லையேல், இந்த அரசே இருக்க முடியாது. எனவே “மீண்டும் உறுதிப்படுத்தல்” என்பது அர்த்தமற்ற நாடகம்.

ஆர்எஸ்எஸ்-ன் தீவிர இந்துத்துவ நிகழ்ச்சி நிரல்

1939-ல் ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர் எழுதிய “நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்” என்ற புத்தகம் ஒரு முக்கியமான ஆவணம். அதில் அவர் : “இந்த நாட்டின் பூர்வகுடியினர் இந்துக்கள்தான், இந்துக்கள்  மட்டுமே” என்கிறார். ஹிட்லரின் நாஜி ஜெர்மனியை புகழ்ந்து, அதன் இனவெறி கொள்கைகளை ஆதரிக்கிறார். இந்தியாவிலும் அதேபோன்ற கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறார். இன்று இதே கொள்கைகளைத்தான் “இந்து ராஷ்டிரம்” என்ற பெயரில் முன்வைக்கிறார்கள். இது அரசமைப்பின் அடிப்படை நோக்கங்களுக்கே எதிரானது.

அரசமைப்பு மதிப்புகளின் சீரழிவு

தற்போதைய அரசின் செயல்பாடுகள் அரசமைப்பு மதிப்புகளை பல வழிகளில் சீரழிக்கின்றன: - மதச்சார்பின்மை என்ற சொல் அரசமைப்பில் சேர்க்கப்பட்டதே பிரச்சினைக்கு காரணம் என உள்துறை அமைச்சர் கூறுகிறார் - அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக மூடநம்பிக்கைகள் ஊக்குவிக்கப்படுகின்றன - “பிள்ளையார் பிளாஸ்டிக் சர்ஜரியை உருவாக்கினார்” என்பது போன்ற அறிவியலுக்கு புறம்பான கூற்றுகள் முன்வைக்கப்படுகின்றன

சமூக நீதியின் பின்னடைவு

டாக்டர் அம்பேத்கர் எச்சரித்தபடி, சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அரசியல் ஜனநாயகத்தையே ஆபத்திற்குள்ளாக்கும் நிலை உருவாகியுள்ளது: - தலித்/பழங்குடியினர் இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படவில்லை - பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன - சமூக நீதி கோட்பாடுகள் புறக்கணிக்கப்படுகின்றன. அரசியலமைப்புச் சட்டம் அமலான அன்று அம்பேத்கர், “அரசியலில் ‘ஒரு மனிதன், ஒரு மதிப்பு’ என்னும் கொள்கையை அங்கீகரித்திட இருக்கிறோம். ஆனால், நம் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில், நம் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளின் காரணமாக, இந்த கொள்கை மறுக்கப்படுவதைத் தொடர இருக்கிறோம். இது முரண்பாடாகும்” என்று கூறினார். இந்த முரண்பாட்டை களைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அரசியல் கட்சிகளை மறந்துவிடுங்கள். ஓர் இந்தியர் என்ற முறையில், நாம் நமக்கு நேர்மையாக நடந்துகொள்கிறோமா? நாம் உண்மையிலேயே டாக்டர் அம்பேத்கருக்கு நீதி வழங்குகிறோமா? அதேபோன்று அவரது பாரம்பரியத்தைச் சேர்ந்த - நமக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த - இந்த அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்குக் காரண கர்த்தாக்களாக இருந்த காந்தி, நேரு, அப்துல் கலாம் ஆசாத், சர்தார் பட்டேல் ஆகியோருக்கு நீதி வழங்குகிறோமா?

அச்சுறுத்தும் சக்திகளை அகற்றுவோம்!

டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூறியதுபோல, “அரசியலமைப்புச் சட்டம் என்பது ஓர் எந்திரம் போன்று, உயிரற்ற பொருள். இதனைக் கட்டுப்படுத்துபவர்கள், செயல்படுத்துபவர்கள் மூலம்தான் இது உயிர்பெறுகிறது.” இன்றைய சூழலில் அரசியலமைப்பின் அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றுவதில் நாம் தவறி வருகிறோம். நாட்டின் நலனில் அக்கறையுள்ள நேர்மையான குடிமக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே அரசியலமைப்பின் உண்மையான நோக்கங்களை நிறைவேற்ற முடியும். எனவே, அரசியலமைப்புச் சட்ட தினத்தை வெறும் சடங்காக அல்லாமல், அதன் உண்மையான நோக்கங்களை நிறைவேற்ற உறுதியேற்கும் நாளாக கொண்டாட வேண்டும். அம்பேத்கர் கனவு கண்ட சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை நிலைநாட்ட அனைவரும் பாடுபட வேண்டும்.  அரசமைப்புச் சட்ட தினம் என்பது வெறும் அதிகாரப்பூர்வ நிகழ்வாக இருக்கக்கூடாது. அது நமது அரசமைப்பின் அடிப்படை மதிப்புகளான சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்தும் நாளாக இருக்க வேண்டும். அரசமைப்பை அச்சுறுத்தும் சக்திகளை எதிர்கொண்டு, அதன் உயரிய நோக்கங்களை நிறைவேற்ற நாம் அனைவரும் உறுதியேற்போம்!

- தமிழில் : ச. வீரமணி