articles

img

இயக்கப் பணியும் மக்கள் தொண்டுமே இவரது அடையாளம் - ஜி.ராமகிருஷ்ணன்

களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்

கீழத் தஞ்சையில் செழித்து வளர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தின் வேர்களில் ஒருவராகத் திகழும் தோழரைச் சந்திக்கவிருக்கிறோம். நாகை மாவட்டம் புதுச்சேரி கிராமத்தில் பட்டியலின சமூகத்தில்  ஒரு விவசாயத் தொழிலாளி குடும்பத்தில் 1942இல் பிறந்தவர் ஏ. கண்ணையன். பெற்றோர்களுக்கு  3 மகன்கள், 3 மகள்கள்.  இவர்தான் மூத்தவர். குடும்பத்தின் வறுமை நிலையால் பள்ளிப் படிப்பை 2 ஆம் வகுப்புக்கு மேல் தொடர முடியவில்லை. சிறுவனாக விளையாட வேண்டிய வயதில் பண்ணையார் வீட்டு மாடு மேய்க்கும் வேலையைச் செய்தார். நாள் முழுவதும் மாடு மேய்த்துத் தொழுவத்தில் கட்டிவிட்டுத் திரும்பினாலும் மற்ற எடுபிடி வேலைகளையும் முடித்த பின்புதான் வீட்டுக்குச் செல்ல வேண்டும். அந்த வயதில் இவரும்  ஒரு  பண்ணை அடிமையாகத்தான்   இருந்தார். ஒரு நாள் இவருடைய பாட்டி வயலுக்குச் சென்றபோது பண்ணையாரின் ஏஜெண்ட் “மணி என்னா” என்று  கேட்டார். தன் கழுத்தில் இருப்பதைக் காட்டி “குண்டு மணி” என்று பதிலளித்தார். “நான் ஒண்ணு கேட்டா நீ ஒன்று சொல்றியா,” என்று சொல்லியபடி பாட்டியை  ஏஜெண்ட் சாட்டையால் அடித்தார். ஆனால் வீரமும் தியாகமும் நிறைந்த செங்கொடி இயக்கப் போராட்டங் களால் அந்த பண்ணையடிமை முறை ஒழிக்கப் பட்டது வரலாறு.

உற்சாகம் தந்த அடி

பண்ணையில் உழவு, அண்டை கழித்தல், நாற்றுப் பறித்தல், அறுவடை போன்ற சாகுபடி வேலைகளைச் செய்திருக்கிறார். “பாட்டியை அடித்தது போல உங்கள் அம்மாவை அந்த ஏஜெண்ட் அடித்திருக்கிறாரா,” என்று கேட்டபோது, “ஆம், ஆனால் என் அப்பா திருப்பி அடித்தார். அதைப் பார்த்து உற்சாகமடைந்தேன்” என்று நினைவுகூர்கிறார் கண்ணையன். 1960களில் எல்லாக் கிராமங்களிலும் அறுவடைக் கால கூலி உயர்வுக்கான போராட்டம் நடைபெறும். போராட்டத்திற்கு ஆதரவாகக் கம்யூனிஸ்ட் தலைவர் கள் வருவார்கள். புதுச்சேரி, ஆவராணி, ஆலங்குடி போன்ற அடுத்தடுத்த கிராமங்களில் 1950களின் முற்பகு தியிலேயே விவசாயிகள் சங்கமும் கம்யூனிஸ்ட் கட்சி யும் தொடங்கப்பட்டுவிட்டன. பண்ணையார்களையும் வேறு சில குடும்பங்களையும் தவிர கிராமத்து மக்கள் எல்லோரும் அவற்றில் இணைந்தார்கள். கேரளத்தில் இஎம்எஸ் தலைமையிலான அரசு கொண்டு வந்த நில உச்சவரம்பு சட்டத்தைப் போல் தமிழகத்திலும் கொண்டு வரக் கோரி 1961இல் நடந்த மறியல் போராட்டத் தில் இவரது தந்தை கலந்துகொண்டு மற்றவர்க ளோடு சேர்ந்து 3 மாதம் சிறையில் இருந்தார். “1964ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உருவானபோது  பி. ராமமூர்த்தி, என். சங்கரய்யா போன்ற தலைவர்கள் எங்களின் எல்லாக் கிராமங் களுக்கும் வந்தார்கள். நாகை தாலுகா கிராமங்களில் இருந்த கட்சிக் கிளைகள் எல்லாமும் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தன” என்று குறிப்பிட்டார்.

போலீசை வளைத்த மக்கள்

1968இல் மாவட்டம் முழுவதும் கூலி உயர்வுக்கான வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. வெளி யூர்களிலிருந்து ஆட்களைக் கொண்டுவந்து வேலை யில் ஈடுபடுத்திப் போராட்டத்தை உடைக்க இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையிலான நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் முயன்றது. அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் ஆவராணி, புதுச்சேரி கிராமங் களில் போராட்டத்தை ஒடுக்குவதற்குக் காவல்துறை யை ஏவியது அன்றைய மாநில  அரசு. காவல்துறை யினர் மக்களை மிரட்டினர். எதிர்ப்புத் தெரிவித்த 35 பெண்களை, குழந்தைகளுடன் இருந்தவர்களையும் சேர்த்துக் கைது செய்து கீழ்வேளூர் காவல் நிலையத்திற்குக் கொண்டுசென்றனர். தகவலறிந்த சிக்கல் கிராமத்தின் கட்சிக் கிளைச்  செயலாளர் பக்கிரி போராட்டம் நடந்த இடத்திற்கு விரைந்தார். குழந்தைகளோடு பெண்கள் கைது  செய்யப்பட்டதையும் காவல்துறையினர் குவிக்கப் பட்டிருப்பதையும் அறிந்து ஆண்களும் பெண்களு மாக சுமார் 1000 பேர் திரண்டார்கள். பக்கிரி அறைகூவல் விடுத்ததும், ஆயுதங்களோடு இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களை மக்கள் சூழ்ந்துகொண்டு “கேரோ” செய்தார்கள். அவரைப்  பார்த்து “சுட்டுவிடு வோம்” என்று காவல்துறை அதிகாரி மிரட்டினார். அவர் முன், நெஞ்சைக் காட்டி, “சுடுங்கள்” என்று கூறி னார் தோழர் பக்கிரி. “கைது செய்யப்பட்டவர்களை விடு தலை செய்து இங்கே கொண்டு வரவில்லையென்றால் போலீஸ் கிராமத்தைவிட்டு வெளியேற  அனுமதிக்க மாட்டோம்,” என்று உரக்க முழங்கினார். மக்கள் உறுதியாக நின்றார்கள். கூட்டத்தைக் கலைப்பதற்காகத் துப்பாக்கிச்சூடு நடத்தினால் இரண்டு பக்கமும் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்படும்  என்று மிரண்டுபோன காவல்துறையினர்  பணிந்தனர்.  காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வர்களைக் கொண்டுவந்து மக்களிடம் ஒப்படைத்தனர். அதற்குப் பிறகுதான் அவர்களால் கிராமத்தைவிட்டு வெளியேற முடிந்தது. தோழர்கள் ஆதலிங்கம், பி.ஏ.குருசாமி உள்ளிட்ட தலைவர்களோடு தோழர் கண்ணையன் காவல்துறையினர் அடக்குமுறையை உறுதியாக எதிர்த்து நின்றார்.

இந்த வீரம் செறிந்த நிகழ்ச்சியை விவரித்தபோது கண்ணையனின் முகத்தில் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஒளியைப் பார்த்தேன்.  கீழத்தஞ்சை முழுவ துமே  போர்க்களமாக திகழ்ந்த காலக்கட்டம் அது. 1968, நவம்பர் 15 அன்று நாகை நகரத்தில் விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்தும் காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டித்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் ஏ. பாலசுப்ரமணியன் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்து கிராமத்திற்கு திரும்பிய பக்கிரி வீட்டிற்கு வந்து சேரவில்லை.  மறுநாள் காலையில் அவரது இறந்துபோன உடல்தான் கிடைத்தது. நிலச்சுவான்தார்களையும், காவல்துறை அடக்குமுறையையும் எதிர்த்துச் சிங்கமெனக் கர்ச்சித்த செங்கொடி இயக்கத் தீரர் தோழர் சிக்கல்  பக்கிரியை மிராசுதார்கள் அடியாட்களைக் கொண்டு கொலை செய்துதான்  மௌனமாக்க முடிந்தது. விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்ததற்காக கேக்கரை கிராமத்தைச் சார்ந்த நடுத்தர விவசாயியும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர் ராமச்சந்திரன் என்பவரையும் மிராசுகளின் அடியாட்கள் வெட்டிக் கொன்றனர்.

வெண்மணி நெருப்பு

இவ்விருவரின் படுகொலைகளையும், பல கிராமங்களில் போராடிய செங்கொடி இயக்கத்தினர் மீது காவல் துறையினராலும் மிராசுதார்களின் ஆட்களாலும் தொடுக்கப்பட்ட தாக்குதல்களையும் தொடர்ந்துதான் அதே ஆண்டு டிசம்பர் 25 அன்று  கீழ வெண்மணியில் 44 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட கொடுமை நிகழ்த்தப்பட்டது. இந்தப் போராட்ட வரலாற்றைப் பகிர்ந்த கண்ணை யன் இத்தனை ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்திருக்கிற ஒரு துண்டறிக்கையை எடுத்துக் காட்டினார். வெண்மணித் தியாகிகள் நினைவுச் சின்ன அடிக்கல் நாட்டுவிழா அழைப்புதான் அந்தத் துண்டறிக்கை. பி. ராமமூர்த்தி தலைமையில், மேற்கு வங்கத்தின் அன்றைய துணை முதலமைச்சர் ஜோதி பாசு அடிக்கல் நாட்டினார். அதைக் கொடுத்தபோது கண்ணையனின் கண்கள் கலங்கின. அதைப் பார்த்ததும் நானும் கண் கலங்கினேன். வெண்மணியில் நிலச்சுவான்தார்களின் கோரத்தாண்டவத்தைக் கண்டித்துத் தமிழகத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதுமே ஆவேசக் குரல்கள் எழுந்தன. சுரண்டல் கூட்டம் எதிர்பார்த்தது போல் கீழத்தஞ்சையில் செங்கொடி இயக்கம் ஓய்ந்துவிட வில்லை. தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தினால் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் உபரி நிலம் விவசாயத் தொழிலாளர்களுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் விநியோகிக்கப்பட்டது. சுமார் 1,80,000 விவசாய தொழிலாளர், ஏழை விவசாயிகள் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி மனைப்பட்டா பெற்றுத் தந்தது.

சிறையும் வழக்குகளும்

விவசாயிகள் சங்கத்திலும், விவசாயத் தொழிலாளர் சங்கத்திலும் பணியாற்றி வந்த கண்ணை யன் 1972இல் கட்சி உறுப்பினராக இணைந்தார். 1976இல் உள்ளாட்சித் தேர்தலில் புதுச்சேரி ஊராட்சிமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் மாநாட்டில் வட்டக்குழு உறுப்பினராகத் தேர்வானார்.  1968இல் கூலி உயர்வுக்கான போராட்டத்தின்போது கைதுசெய்யப்பட்ட கண்ணையன் ஒன்றரை மாதம் சிறைப்படுத்தப்பட்டார். 1973இல் நடந்த விவசாயிகள் போராட்டத்திலும் பங்கேற்று 3 மாதம் சிறையில் இருந்திருக்கிறார். 30க்கும் மேற்பட்ட வழக்குகளை சந்தித்து, அத்தனையிலும் விடுதலையானேன்,” என்றார். 1986இல் கிளைச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டு 2004 வரையில் அப்பொறுப்பில் இருந்திருக்கிறார். விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் இரண்டிலுமே பல பொறுப்பு களில் பணியாற்றியிருக்கிறார்.

மக்கள் பணி

வர்க்கப் போராட்டத்தின் முன்கள வீரராகப் பணியாற்றிய கண்ணையன் கிராமத்து மக்களின் கல்வி, குடிநீர் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான இயக்கங்களுக்குத் தலைமை தாங்கி தீர்வு கிடைக்கச் செய்திருக்கிறார். புதுச்சேரி கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி இயங்கி வந்தது. கட்சியோடு இணைந்து கண்ணையன் மேற்கொண்ட முயற்சி களால் அது நடுநிலைப்பள்ளியாகவும், பிறகு உயர்நிலைப் பள்ளியாகவும் மாறி, இப்போது மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளியாக்குவதற்கு மக்களிடம் வசூல் செய்து ஒரு லட்ச ரூபாய் அரசுக்கு கட்டி யிருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர் தோழர் நாகை  மாலியின் முன்முயற்சியால் பொதுத்துறை நிறுவனங் களிடமிருந்து நிதி பெற்று பள்ளிக் கட்டடத்திற்கான இடமும் உறுதிப்படுத்தப்பட்டது. கிராமத்தில் நெல்  கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. நடுநிலைப் பள்ளியாக இருந்த காலம் துவங்கி இன்று வரையில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக செயல்பட்டு வருகிறார் கண்ணையன். கிராமத்தில் கட்சிக் கிளையும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள்,  மாதர், வாலிபர் சங்கங்களின் கிளைகள் இயங்கி வருகின்றன. ஊராட்சி மன்றத் தலைவராக மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர்  கோமதி ஜீவாராமன் செயல்படுகிறார். “கிராமத்திற்கு தீக்கதிர் 5 இதழ்கள் வருகின்றன. 150 குடும்பங்கள் கட்சி யின் அங்கமாக உள்ளனர்” என்றவரின் கண்களில் நியாயமான பெருமிதம். இவருடைய சகோதரர்களும், சகோதரிகளும் கட்சியில் இயங்கி வருகின்றனர். பிள்ளைகளும் கட்சி ஆதரவாளர்கள். தாத்தா, பாட்டி தொடங்கி அடுத்த தலைமுறை வரையில் மூன்று தலைமுறைகளாக இவருடைய குடும்பம் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அங்கமாக இருக்கிறது. கண்ணையன் போன்ற தோழர்கள் ஆற்றிய களப்பணிகள்தான் இப்போதும் கீழத்தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துடிப்போடு செயல்படு வதற்கு அடித்தளமாக உள்ளன. 82 வயதாகும் தோழர் கண்ணையன் கட்சி உறுப்பினராகச் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். கைதுகள், சிறைகள், வழக்குகள் போன்ற சோதனைகளையெல்லாம் தாங்கி 60 ஆண்டு காலமாகக் கட்சிப் பணியாற்றியதோடு கிராமத்து மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவும் பாடுபட்ட தோழர் கண்ணையனின் பங்களிப்பு பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.