articles

img

வீட்டு உண்டியலில் இருந்து நாட்டு உண்டியலுக்கு... - எஸ்.பாலா

வீட்டு உண்டியலில் இருந்து நாட்டு உண்டியலுக்கு...

மக்களுடன் ஒன்றாக...

எப்போதும் கம்யூனிஸ்டுகள் மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்துஇருக்க வேண்டும் என்ற தத்துவத்துடன் புறப்பட்டோம். புதிய ஆண்டின் புதிய காலை யில், புது நம்பிக்கையுடன் கிராமம் கிராமமாக நாற்பத்தி யொரு நாட்கள் பயணித்தோம். ஒவ்வொரு கிராமமும் ஒரு புதிய அனுபவம், ஒவ்வொரு சந்திப்பும் ஒரு புதியபாடம்.  தேர்குன்றம்பட்டியின் வாழ்வியல் சித்திரம் இயற்கையின் கரங்களால் வடிவமைக்கப்பட்ட அழகான கிராமம் தேர்குன்றம்பட்டி. ஒருபுறம் மலையும் மறுபுறம் வயல்களும் கால்வாயும் சூழ்ந்த சிறிய உள்கிராமம். அழகிய மாலை நேரத்தில் செங்கொடியோடு வீடு வீடாகச் சென்றோம். விவசாய வேலைகளை முடித்து, ஆடுகளை மேய்த்து விட்டு, மாடுகளை குளிப்பாட்டி விட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர். விவசாயமும், ஆடு வளர்ப்பும் வாழ்வாதாரமாக கொண்ட ஏழை எளிய மக்கள். ஓட்டு வீடுகளும் குடிசைகளும் காரை வீடுகளும் கலந்த கிராமம். பெண்கள் பிரதான உழைப்பாளிகள்.

ஒரு லட்சம் கடனும்  ஒரு நூறு ரூபாய் நன்கொடையும்

“ஒரு வருஷத்துல ஒரு லட்ச ரூபா குழு கடன அடைச்சு  இருக்கேன்” என்ற குரல் வாசலில் கேட்டது. மூன்று ஏக்கரில் முப்பது மூட்டை நெல் விளைச்சல், கூலி போக வெறும் ஐந்து மூட்டை மட்டுமே மிச்சம். கையில் காசில்லை என்றவர், வீட்டு உண்டியலில் இருந்து நூறு ரூபாய் எடுத்து வந்து தந்தார். ஆட்டுக்கிடையில் கோடுகள் - விற்கப்பட்ட ஆடுகளின் அடையாளம். கடும் கடன் சுமையிலும், வறுமையிலும் கட்சிக்காக கொடுத்த அந்த நூறு ரூபாய் வரலாற்று சிறப்புமிக்க தருணமாக மாறியது.

இட்லிக்கடையின் இதயப்பூர்வ பங்களிப்பு

கிடாரிப்பட்டியில் இட்லி கடை நடத்தும் அடைக்கன், சமீபத்தில் யூடியூப்பில் பிரபலமானவர். அனைத்து வேலை களையும் தானே செய்து வரும் அவர், குளித்து முடித்து துண்டால் துடைத்துக் கொண்டிருந்த நேரத்தில் கட்சிக்காக நூறு ரூபாய் வழங்கி “நல்ல கட்சி இதுதான்” என்று மகிழ்ச்சி யுடன் சொன்னார்.

மலையடிவார மக்களின் மன உறுதி

உப்போடைப்பட்டி - அழகர் கோயில் மலையடிவாரத்தில் அமைந்த மேட்டுப்பாங்கான கிராமம். பெரும்பாலும் குடிசை களும் தகரக் கொட்டகைகளும். மனதை உருக்கும் காட்சி. நூறு நாள் வேலை போராட்டத்தில் கலந்து கொண்ட பெண், “எங்களுக்கு சம்பளம் வாங்கித் தந்த கட்சி” என்று பெருமை யுடன் நூறு ரூபாய் தந்தார். பக்கத்து வீட்டு அக்கா “இப்பயும் சம்பளம் வரல, ஏதாவது செய்யுங்க” என்ற கோரிக்கையை வைத்தார்.

கூலித்தொழிலாளர்களின் கொடை

எம்ஜிஆர் நகரில் காட்டு வேலைக்கு சென்று திரும்பிய  கணவர், பின்னால் விறகு சுமந்து வந்த மனைவி. காசு இல்லை என்றவர்கள், பக்கத்து வீட்டில் கடன் வாங்கி வந்து நூறு ரூபாய் தந்தனர். பனை ஓலை வேய்ந்த குடிசை வீட்டில் “இருங்க அண்ணே, கலர் வாங்கி வரேன்” என்ற வார்த்தைகள் நெஞ்சை நெகிழ வைத்தன.

எண்பது வயது பாட்டியின் ஆசீர்வாதம்

எம்.ஜி.ஆர் நகரில் எண்பது வயது நிரம்பிய கருப்பாயி பாட்டியின் வார்த்தைகள் இன்னும் காதில் ஒலிக்கின்றன - “நீங்க நல்லா இருக்கனும் சாமி”. கட்சியின் வரலாற்றை நேரில் கண்ட மூத்த தலைமுறையின் ஆசீர்வாதம் அது. டங்ஸ்டன் போராட்டத்தின் தாக்கம் பல இடங்களில் மக்கள், கம்யூனிஸ்ட் கட்சியும் வாலிபர்  சங்கமும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை தடுத்ததையும், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உண்மைகளை எடுத்துக்கூறி சிறப்பாக செயல்பட்டதையும் பெருமையுடன் பேசினர். எண்களுக்குள் ஒளிந்திருக்கும் உண்மைகள் மதுரை புறநகர் மாவட்டத்தில் 2025 ஜனவரி 1 முதல் பிப்ரவரி 10 வரை 41 நாட்களில் 1,014 குழுக்கள் மூலம் 36,24,190  ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஆனால் இந்த எண்களுக்குள் ஒளிந்திருக்கும் உண்மை - ஒவ்வொரு ரூபாயிலும் ஏழை மக்களின் வியர்வையும், நம்பிக்கையும் கலந்திருக்கிறது.

கிராமப்புற பெண்களின் பங்களிப்பு

விவசாயம், ஆடு மாடு வளர்ப்பு, கூலி வேலை என பல்வேறு துறைகளில் உழைக்கும் பெண்கள், கட்சியின் கொள்கைகளை சிறப்பாக புரிந்து வைத்திருக்கிறார்கள். குறிப்பாக நூறு நாள் வேலைத் திட்டத்தில் அவர்களுக்கு கிடைத்த ஊதியம், சமூக அந்தஸ்து, சுயமரியாதை ஆகிய வற்றை உணர்ந்திருக்கிறார்கள். அந்த அனுபவங்களே அவர்களை கட்சியின் தீவிர ஆதரவாளர்களாக மாற்றியுள்ளது. கிராமங்களில் பெண்கள் தான் கட்சியின் கொள்கைகளை பரப்புவதில் முன்னணியில் நிற்கிறார்கள். ஒரு நாளின் கூலியை கட்சிக்கு கொடுப்பதில் பெருமை கொள்கிறார்கள்.

 சமூக நீதியின் தேவையும் கட்சியின் பங்கும்

வறுமை, கடன் சுமை, வேலையின்மை என பல்வேறு பிரச்சனைகளால் கிராமப்புற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நுண்கடன் நிறுவனங்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் பெண்கள், விவசாயத்தில் நஷ்டம் அடைந்த விவ சாயிகள், நிரந்தர வேலை இல்லாத கூலித் தொழிலாளர்கள் என அனைவரும் வாழ்வாதாரப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் கட்சி மட்டுமே தங்க ளுக்கு குரல் கொடுக்கிறது என்ற நம்பிக்கை அவர்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது. அதனால்தான் தங்களின் வறுமைக்குள்ளும் கட்சிக்கு பங்களிப்பு செய்வதை பெருமையாக கருதுகிறார்கள்.

தலைமுறைகளின் நம்பிக்கை

இந்த வெகுஜன வசூல் பயணம் வெறும் நிதி திரட்டும்  பணி அல்ல. அது மக்களின் வாழ்வியலை நேரில் கண்டு  உண ரும் வாய்ப்பு. அவர்களின் துயரங்களையும், நம்பிக்கை களையும், போராட்டங்களையும் புரிந்து கொள்ளும் தரு ணம். எளிய மக்களை சந்தித்தபோது கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவத்தின் மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெற்றது. அவர்களின் அன்பும் ஆதரவும் புதிய ஆற்றலையும் உத்வேகத்தையும் அளித்தது.