கொரோனா தடுப்பூசி உலக மக்களின் முக்கியத் தேவையாக மாறியுள்ள நிலையில், அது இந்தியா உள்ளிட்ட வளர்முக நாடுகளது மக்களின் கைகளுக்கு இன்னும் பெருமளவில் சென்று சேராததன் பின்னணியில் பெரும் முதலாளித்துவ கார்ப்பரேட்டுகளின் நலனும் அந்தக் கார்ப்பரேட்டுகளால் இயக்கப்படும் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளின் நலன்களுமே அடங்கியுள்ளன. ஒருபுறம் உலகில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளையெல்லாம் குவிப்பதிலும், பதுக்குவதிலும் முதலாளித்துவ உலகம் தீவிரம் காட்டுகிறது. மறுபுறம் மக்களைக் காப்பதற்கு இடைவிடாமல் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட வளர்முக நாடுகளுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறது சோசலிச உலகம்.கொரோனா பரவத் துவங்கிய காலக்கட்டத்திலும் சரி, ஓர் ஆண்டுக்குப் பிறகு தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் சொந்தம் என்ற முறையில் விஞ்ஞானத்தை பயன்படுத்துவதிலும் சரி முதலாளித்துவமும் சோசலிசமும் எதிரெதிர் துருவத்திலேயே நிற்கின்றன.
60 மடங்கு அதிகம்
உலக சுகாதார அமைப்பு, வளர்ந்த நாடுகள், தடுப்பூசிகளை பெருமளவில் உற்பத்தி செய்து, வளர்முக நாடுகளுக்கு உதவி செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தது. ஆனால் அந்த வேண்டுகோளை இந்தியா, சீனா, ரஷ்யா தவிர வேறு எந்த நாடும் அமலாக்கவில்லை. மற்றொரு புறத்தில் கியூபா இன்னும் ஓராண்டுக்கும் மேலாக தனது மருத்துவப் படைகளை அனுப்பி கொரோனாவுடன் வீரியமிக்கப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றது. மறுபுறத்தில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் உள்ளிட்டவை உலகில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 50சதவீதத்திற்கும் அதிகமாக தாங்களே வாங்கி குவித்து வைத்துக் கொண்டன. ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள கொரோனா தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவுக்கு 60 மடங்கு அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
###############
பலன் பெற்றது யார்?
2021 மார்ச் 30 அன்று இறுதி செய்யப்பட்ட விபரங்களின்படி, அமெரிக்கா மற்றும் கனடாவின் மொத்த மக்கள் தொகை 36.87கோடி; இதுவரை அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள கொரோனா தடுப்பூசி 15.31 கோடி. 100 பேருக்கு 41.5பேர் கொரோனா தடுப்பூசி கிடைக்கப்பெற்றிருக்கிறார்கள்.பிரிட்டனின் மொத்த மக்கள்தொகை 6.8 கோடி; இதுவரை அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள கொரோனா தடுப்பூசி 3.45 கோடி; அங்குள்ள 100 பேருக்கு 50.8 பேர் தடுப்பூசி கிடைக்கப்பெற்றிருக்கிறார்கள்.ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளின் மொத்த மக்கள் தொகை 44.5 கோடி; அந்த நாடுகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ள கொரோனா தடுப்பூசி 7.22 கோடி; 100 பேருக்கு 16.2பேர் தடுப்பூசி கிடைக்கப்பெற்றுள்ளனர்.அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் ஆகிய பணக்கார நாடுகளது மக்களுக்கு அதிகமான தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆனால் உலகின் பிற பகுதி மக்களுக்கு அந்த வாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது.
###############
தட்டிப் பறிக்கப்பட்டவர்கள் யார்?
ஐரோப்பாவின் இதரநாடுகளின் மக்கள்தொகை 23.7கோடி; அந்த நாடுகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ள கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 1.66 கோடி; 100 பேரில் வெறும் 7 பேருக்குத்தான் தடுப்பூசி கிடைக்கப்பெற்றுள்ளது.லத்தீன் அமெரிக்கக் கண்டத்தில் மொத்த மக்கள்தொகை 65.41 கோடி; இந்த பெரிய மக்கள் தொகைக்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள கொரோனா தடுப்பூசி 4.57 கோடி டோஸ்கள் மட்டுமே. 100 பேரில் வெறும் 7 பேருக்கு மட்டுமே தடுப்பூசி கிடைக்கப்பெற்றுள்ளது.இந்தியாவின் மக்கள் தொகை 138 கோடி. ஆனால் இங்கு வெறும் 6.31 கோடி கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன. 100 இந்தியர்களில் வெறும் 4.6 பேருக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி கிடைக்கப்பெற்றுள்ளது. ஒட்டுமொத்த ஆசியாவின் மக்கள் தொகை - இந்தியா உட்பட (சீனா தவிர) 182 கோடி. இவர்களில் 100 பேருக்கு வெறும் 3.7பேருக்கு மட்டும்தான் தடுப்பூசி கிடைக்கப்பெற்றுள்ளது.ஆப்பிரிக்க கண்டத்தின் மொத்த மக்கள்தொகை 134 கோடி. இந்த நாடுகளுக்கு மொத்தமே வெறும் 1.03 கோடி தடுப்பூசிகள்தான் கிடைக்கப்பெற்றுள்ளன. 100 பேரில் வெறும் 0.8 பேருக்குதான் தடுப்பூசி கிடைக்கப்பெற்றுள்ளது.
###############
5 நிறுவனங்கள்
உலகம் முழுவதும் சில குறிப்பிட்ட நிறுவனங்களே தற்சமயம் அதிகப்படியான கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகின்றன. அதில் 90சதவீதம் தடுப்பூசிகளை உற்பத்தி செய்பவை 5 பெரும் நிறுவனங்கள். அவற்றில் சினோவேக் மற்றும் சினோபார்ம் ஆகியவை மக்கள் சீனத்தின் பிரம்மாண்டமான அரசு நிறுவனங்கள் ஆகும். பைசர், ஆஸ்ட்ராஜெனெகா, மாடர்னா ஆகிய நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்தவை.
###############
எல்லாமே அமெரிக்காவுக்கு!
சீன நிறுவனங்களில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் மட்டும்தான் அநேகமாக உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. மாடர்னா நிறுவனம் உற்பத்தி செய்யும் ஒட்டுமொத்த தடுப்பூசியும் அமெரிக்காவுக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறது. பைசர் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஆய்வகங்களில் தயாரிக்கும் ஒட்டுமொத்த தடுப்பூசியையும் அமெரிக்காவிற்கே அளிக்கிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உள்ள அதன் ஆய்வகங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒட்டுமொத்த தடுப்பூசியையும் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கே அளித்து வருகிறது. இதுதவிர இந்த நிறுவனம் இஸ்ரேலுக்கும் சில வளைகுடா நாடுகளுக்கும் தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது. அதுவும் அமெரிக்கா கூறியதால் இஸ்ரேலுக்குக் கொஞ்சமும், வளைகுடாவில் சில மன்னர்களின் வேண்டுகோளுக்காக அமெரிக்காவின் ஒப்புதலின்பேரில் கொஞ்சமும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன.
###############
ஸ்புட்னிக் - வி
ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ரஷ்யா தொடர்ந்து உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது. அது உள்நாட்டு தேவைக்கும் பிற வளர்முக நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. ரஷ்யாவைப் பொறுத்தவரை தனது ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பிற நாடுகள் தாராளமாக உற்பத்தி செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது. தென்கொரிய நிறுவனமான ஹன்கூக் கோரஸ் பார்ம் - ஸ்புட்னிக் தடுப்பூசி உற்பத்தியை துவக்கி உள்ளது. இந்த நிறுவனத்துடன் ‘தென்கொரியாவின் பல்வேறு மருந்து நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. அதன்படி இந்தாண்டு இறுதிக்குள் 50 கோடி தடுப்பூசிகளை கொரிய நிறுவனங்களே உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரிய நிறுவனங்கள் உட்பட ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து 85 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை மேற்கொண்டுள்ளன.
###############
பிரச்சனை காசு அல்ல...
உலக ஊடகங்களும், இந்திய ஊடகங்களும் இது தொடர்பான விபரங்களை மறைக்கின்றன. வாய்ப்பு இருந்தும் இந்த நிறுவனங்களால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முடியாத அல்லது துவக்க முடியாத நிலைமை ஏன் ஏற்பட்டிருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனை. இது அறிவுசார் சொத்துரிமை என்ற பிரச்சனையின் பிடியில் சிக்கியிருக்கிறது. சீரம் இந்தியா நிறுவனம் ஒரு மாதத்திற்கு 10 கோடி முதல் 20 கோடி வரையிலான கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் இப்போது வெறும் 6 கோடி முதல் 7 கோடி வரையிலான தடுப்பூசிகளையே உற்பத்தி செய்ய முடிகிறது. இதற்கு அந்நிறுவனம் கேட்டுள்ள ரூ.3ஆயிரம் கோடி மானியத்தொகை மட்டும்தான் பிரச்சனையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது உண்மையல்ல என்பதை சீரம் இந்தியா நிறுவனத்தின் பிரகாஷ்குமார் சிங், இந்திய வர்த்தகத்துறை மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர்களுக்கு மார்ச் துவக்கத்தில் எழுதியுள்ள கடிதம் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. அமெரிக்கா சமீபத்தில் “பாதுகாப்பு உற்பத்திச் சட்டம்” என்ற சட்டத்தை மருந்துப் பொருள் உற்பத்திக்கும் பொருத்தி உத்தரவிட்டுள்ளது. இதன்விளைவாக தடுப்பூசி உற்பத்திக்கான சில முக்கிய மூலப்பொருள்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் குழாய்களுக்கான மூலப்பொருட்கள், சில குறிப்பிட்ட திறன்மிகுந்த வேதிப்பொருட்கள் ஆகியவற்றை இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்திருக்கிறது. ஏன் இந்த தடை என்றால், இந்தப் பொருட்கள், கொரோனா தடுப்பூசி தயாரிக்க அமெரிக்காவின் பைசர் நிறுவனத்திற்கு அதிகப்படியாக தேவைப்படுகிறது. எனவே இந்தப்பொருட்களை அமெரிக்காவிடமிருந்தோ ஐரோப்பாவிலிருந்தோ வேறு நாடுகள் இறக்குமதி செய்துவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்கா மேற்கண்ட தடைச்சட்டத்தை பிரயோகித்திருக்கிறது. இதன்விளைவாக இந்தியாவின் மருந்து நிறுவனங்கள் மேற்கண்ட மூலப்பொருட்களை பெற முடியவில்லை என்பது மிக அடிப்படையான காரணமாகும்.இந்தக் காரணத்தை பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் மஹிமா தத்லாவும் உறுதி செய்கிறார். ஆண்டுக்கு 60 கோடி டோஸ்கள் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஒற்றை முறைப் பயன்பாடு தடுப்பூசியை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் போட்டுள்ள இந்த நிறுவனம், முக்கிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்திட அமெரிக்கா விதித்துள்ள தடையால், தடுப்பூசி உற்பத்தியையே இன்னும் துவக்க முடியவில்லை என்று அவர் வேதனை தெரிவித்திருக்கிறார்.
###############
இல்லை என்று சொல்லாத சீனா
இத்தனை இடையூறுகள் இருந்த போதிலும் சீனா தொடர்ந்து தனது மருந்துகளை கேட்கும் அனைத்து நாடுகளுக்கும் இல்லை என்று சொல்லாமல் அனுப்பி வருகிறது. உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம், “உலக அளவில் தடுப்பூசிகள் விநியோகிப்பதில் அதிர்ச்சிதரத்தக்க ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கின்றன; இதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்று விடுத்த வேண்டுகோளை ஏற்று சீனா கிட்டத்தட்ட 80 நாடுகளுக்கு மனிதநேய உதவி என்ற அடிப்படையில் தடுப்பூசிகளை அளித்திருக்கிறது. இவை தவிர மூன்று சர்வதேச அமைப்புகள் மற்றும் 10 நாடுகளுடன் உற்பத்தியில் ஒத்துழைப்பு என்ற முறையில் தொழில்நுட்ப உதவிகளை அளித்திருக்கிறது. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பாவின் இதர நாடுகள் என உலகம் முழுவதும் சீனாவின் சினோவேக் தடுப்பூசி இடைவிடாமல் அனுப்பப்பட்டு வருகிறது. 80 நாடுகளில் 69 நாடுகள் முற்றிலும் ஏழ்மை நிலையில் உள்ள வறிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
###############
இந்திய நிலை என்ன?
இந்தியாவைப் பொறுத்தவரை ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராஜெனெகா கூட்டாண்மைக்காக கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனம் உற்பத்தியை துவங்குவதற்கு முன்பே சீரம் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை துவக்கிவிட்டது. கொஞ்சம் கூடுதலாக மூலதனம் கிடைத்தால் மாதம் ஒன்றுக்கு 10 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் கூறியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல, ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள ‘பயாலஜிக்கல்-இ’ என்ற நிறுவனம் ஆண்டுக்கு மொத்தம் 60 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன்பெற்றிருக்கிறது. இந்த தடுப்பூசிக்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் சமீபத்தில் ஒப்புதல் அளித்திருக்கிறது. ஆனாலும் கூட பயாலஜிக்கல்-இ நிறுவனம் இன்னும் உற்பத்தியை துவக்க முடியவில்லை.
###############
ஓரங்கட்டப்பட்ட இந்திய பொதுத்துறை மருந்து நிறுவனங்கள்
இந்தியாவில் தலைசிறந்த தடுப்பூசி உற்பத்தி பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. அவை ஏற்கெனவே சீர்குலைக்கப்பட்டன. அதன் விளைவை இப்போது நாடு அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. மறுபுறத்தில் பிரிட்டனின் ஆஸ்ட்ராஜென்கா நிறுவனத்திற்காக இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக்கும், கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் நிறுவனமும் தனியார் நிறுவனங்கள்தான். லாபம் இல்லாமல் இந்த நிறுவனங்களால் இயங்க முடியாது. எனினும் அமெரிக்க கார்ப்பரேட்டுகளைப் போல அதீத லாபம் பார்க்காமல் ஓரளவு நியாயமான விலையில் தர ஒப்புக் கொண்டுள்ளன. அதை இந்திய அரசு வாங்கி மானிய விலையில் அல்லது இலவசமாக மக்களுக்கு அளிக்க ஒப்புக்கொண்டு அதன்படி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதே விலையில் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றன இந்த தனியார் நிறுவனங்கள். இதில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை. மாறாக இந்த நிறுவனங்களிடம் விலை கொடுத்து வாங்கி, நல்லெண்ண அடிப்படையில் ஏழு நாடுகளுக்கு இந்திய அரசு இலவசமாக அனுப்பி வைத்திருக்கிறது. இதுதவிர, மேற்கண்ட நிறுவனங்களது தடுப்பூசி உற்பத்தியில் பெரும்பகுதி அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
###############
‘அமெரிக்காவே முதலில்’ என்ற வெறி
உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச அளவில் தடுப்பூசிகளை வாங்கித்தரும் கோவேக்ஸ் என்ற அறக்கட்டளை - இரண்டும் இணைந்து ‘WHO COVAX’ என்ற திட்டத்தின்கீழ் உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு கோவிட் 19 தடுப்பூசிகளை அளிப்பது என்று அறிவித்தன. கோவேக்ஸ் என்ற அறக்கட்டளை அமெரிக்காவின் மிகப்பெரும் கார்ப்பரேட் பெருமுதலாளியான பில்கேட்ஸ் மற்றும் மெலின்டா கேட்ஸ் பவுண்டேசனின் நிதியில் இயங்கும் கவி (GAVI) மற்றும் செபி(CEPI) ஆகிய அமைப்புகளால் இயக்கப்படும் அறக்கட்டளை. இது உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் ஆகியவற்றுடன் இணைந்து உலகளாவிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது என முடிவு செய்திருந்தன. ஆனால் இந்த மிக முக்கியமான அமைப்பு சீனாவின் தடுப்பூசிகளையோ அல்லது ரஷ்யாவின் தடுப்பூசிகளையோ இத்திட்டத்தின்கீழ் உலகம் முழுவதும் அனுப்புவதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்க மறுத்துவருகிறது. அதுமட்டுமல்ல, ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் மருந்து கட்டுப்பாட்டு தலைமையகமும் ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறது. உலக வர்த்தக அமைப்பு, சீனா மற்றும் ரஷ்யாவின் மருந்துகளை அங்கீகரித்தாலும் பில்கேட்ஸ் பவுண்டேசனில் செல்வாக்கு செலுத்துகிற கார்ப்பரேட்டுகள் மற்றும் அவரது ஆதரவு பெருமுதலாளிகள் ஆகியோரது “அமெரிக்காவே முதலில்” என்ற எதேச்சதிகார வெறியானது, சீனா மற்றும் ரஷ்யாவின் மருந்துகளை தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கின்றது. இதன்விளைவாக உலகம் முழுவதும் ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டத்தின்கீழ் கொரோனா தடுப்பூசிகள் சென்று சேர்வது இயலாத காரியமாக மாறியிருக்கிறது.
###############
‘சர்வதேச பொதுப் பொருள்’
சீனாவைப் பொறுத்தவரை தனது தடுப்பூசிகள் உலக மனித இனத்தை பாதுகாப்பதற்கான ஒரு சர்வதேச பொதுப் பொருள் என்று வகைப்படுத்தியிருக்கிறது. இதுவரையிலும் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ள 70 கோடி கொரோனா தடுப்பூசிகளில் 87 சதவீதம் அமெரிக்கா உள்ளிட்ட பெரும் பணக்கார நாடுகளுக்கே சென்றிருக்கிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல்களை உலக சுகாதார அமைப்பே வெளியிட்டிருக்கிறது. இந்த நிலையில் வளர்முக நாடுகளுக்கு முதன்மை முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து நாங்கள் விநியோகிப்போம் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீ அளித்த பேட்டியை மேற்கோள் காட்டி சிஜிடிஎன் டிவி தெரிவிக்கிறது. சீனாவில் பல்வேறு துறைமுகங்களிலிருந்து உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு தடுப்பூசிகள் கப்பலில் ஏற்றப்பட்ட வண்ணம் இருக்கின்றன. சீனாவின் விமான நிலையங்களில் பிரதானமாக நடக்கும் சரக்குப் போக்குவரத்து, உலக நாடுகளுக்கு இலவசமாகவும், மிகக்குறைந்த விலையிலும் சீனா அளித்து வரும் கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்துள்ள போதிலும் சீனா உயிரியல் தொழில்நுட்பத்தை சுயேச்சையாக வலுப்படுத்தி வைத்திருக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி கோடிக்கணக்கான உலக மக்களுக்கு தடுப்பூசி அனுப்பி வருவதை உலக நாடுகளின் தலைவர்கள் பெருமிதத்துடன் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளனர்.
ஒரே ஒரு டோஸ் தடுப்பூசி கூட பிற நாடுகளுக்கு அமெரிக்காவோ, பிரிட்டனோ, ஐரோப்பிய யூனியன் நாடுகளோ கொடுத்து உதவாத நிலையில், வணிக ரீதியாகக் கூட பிற நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யாத நிலையில் மக்கள் சீனம் இதுவரை தான் உற்பத்தி செய்ததில் சரிபாதி தடுப்பூசியை உலக நாடுகளுக்கு அளித்திருக்கிறது. மார்ச் இறுதி நிலவரத்தின்படி சீனா 23 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்திருக்கிறது. 11.5 கோடி தடுப்பூசிகளை உலகம் முழுவதும் அனுப்பியிருக்கிறது.
கட்டுரையாளர் : எஸ்.பி.ராஜேந்திரன்