articles

img

ஐந்து தசாப்தங்கள் அழியாத அர்ப்பணிப்பு - முனைவர் விஜு கிருஷ்ணன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளரான தோழர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியாவின் ஒழுங்க மைக்கப்பட்ட இடதுசாரி சக்தியின் மிகவும் அறியப்பட்ட முகங்களில் ஒருவராக இருந்தார். கடந்த தசாப்தத்தில், அவர் கார்ப்பரேட்-வகுப்புவாத மற்றும் எதேச்சதி கார ஆட்சிக்கு எதிராக மிக உரத்த குரலை எழுப்பி யவர்களில் ஒருவராக இருந்தார். 1974ல் இந்திய மாணவர் சங்கத்தின் மாணவர் இயக்கத்தின் மூலம் தனது அரசியல் செயற்பாட்டைத் தொடங்கிய அவர்,  அடுத்த ஐந்து தசாப்தங்களாக சோசலிசம் மற்றும் மக்கள் விடுதலைக்கான அழியாத அர்ப்பணிப்புடன் வாழ்ந்தார்.

பட்டை தீட்டிய 1970கள்

1970களின் குழப்பமான ஆண்டுகளில் அவரது அரசியல் கருத்துக்கள் பட்டை தீட்டப்பட்டன. வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அவமான கரமான தோல்வி, பொதுவான ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சி, சிலியில் எழுந்த எதிர்ப்பு இயக்கத்துட  னான சர்வதேச ஒற்றுமை, பாலஸ்தீன விடுதலை இயக்கம், நிறவெறி எதிர்ப்பு இயக்கம் மற்றும் கியூப மக்களின் வீரமிக்க எதிர்ப்பு ஆகியவை அவரது காலத்து இளைஞர்களை ஈர்த்தன. இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட அதிகாரத்துவ நெருக்கடி நிலையின் உச்சக்கட்டத்தில், அந்த எதிர்ப்பை ஒழுங்கமைத்து களத்தில் இறங்கியதால் அவர் 1975இல் கைது செய்யப்பட்டார். நெருக்கடி நிலைக்குப் பிறகு, 1977-78 ஆம் கல்வியாண்டில் ஒரே ஆண்டில் மூன்று முறை  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்  தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அவரது பிரபலத்திற்கும், வளாகத்தில் அவர் கட்டமைக்க உதவிய இந்திய மாணவர் சங்கத்தின் வலுவான எழுச்சிக்கும் வெளிப்பாட்டுக்கும் சான்றாகும். 1984-86  காலகட்டத்தில் அவர்  மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவராக இருந்தார். ஒப்பீட்டளவில் இளம்  வயதான (32) அவர் 1984இல் சிபிஐ(எம்) மத்தியக் குழுவிலும், அடுத்த ஆண்டு புதிதாக உருவாக்கப் பட்ட மத்திய செயற்குழுவிலும் இணைக்கப்பட்டார். 1992இல் நடைபெற்ற கட்சியின் 14ஆவது காங்கிரஸில் அகில இந்திய மாநாட்டில் அரசியல் தலைமைக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நம்பிக்கையை விதைத்தவர்

சோவியத் யூனியனின் பின்னடைவின் பின்னணி யில் ‘வரலாற்றின் முடிவு’ மற்றும் தாராளவாதத்தின் வெற்றி பற்றிய பேச்சுகள் அதிகரித்த காலத்தில், சோச லிசத்தின் எதிர்காலம் குறித்து உலகெங்கிலும் தீவிர  விவாதங்கள் நடந்த சமயத்தில் அவர் அரசியல் தலைமைக் குழுவில் இணைக்கப்பட்டார். பாசிச ஆர்எஸ்எஸ்-இன் தலைமையில் அரசியல் வலதுசாரி கள் மேலோங்கி வந்த காலமும் அது. கூட்டுத் தலைமையுடன் சேர்ந்து, உறுப்பினர்களிடையே மனச்சோர்வை விரட்டி நம்பிக்கையை ஊட்டக்கூடிய கருத்தியல் தெளிவுடன் மார்க்சிஸ்ட் கட்சியை அவர் வழிநடத்தினார். இக்காலகட்டத்தில் ஏகாதிபத்தியம், நவதாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள், வகுப்புவாத சக்திகள் மற்றும் இந்துத்துவா சித்தாந்தம் ஆகியவை குறித்த அவரது எழுத்துகள் மிகவும் பொருத்தமானவை. இந்தியாவில் கூட்டணி அரசியலின் காலகட்டத்தில், குறிப்பாக முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, கொள்கைகளை வகுப்பதிலும் குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை உருவாக்குவதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் முதல் பதவிக் காலத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், வன உரிமைச் சட்டம்,  தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற முற்போக்கான சட்டங்களை நிறைவேற்றுவதற்கு இடதுசாரிகளின் வலிமையைப் பயன்படுத்த முடிந்தது.

ஊக்கமளிக்கும் சின்னம்

12 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, வகுப்புவாத-கார்ப்பரேட் பாஜக ஆட்சிக்கு எதிராக முழங்கிய குரல்களில் அவரது குரல்  உரத்து ஒலித்தது. பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கினார். தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளில் அவர் நாடாளுமன்றத்திலும் தெருக்களிலும் ஊக்க மளிக்கும் சின்னமாக விளங்கினார். குறிப்பாக, நிலம்  கையகப்படுத்தல் அவசரச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போதும், நரேந்திர மோடி தலைமை யிலான பாஜக அரசாங்கத்தை மூன்று கார்ப்பரேட் ஆதரவு விவசாயச் சட்டங்களை மன்னிப்புக் கேட்டு திரும்பப் பெற வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் போதும் எதிர்க்கட்சிகளை விவசாயி களுக்கு ஆதரவாக அணிதிரட்டியதில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது.  பிரிவினைவாத குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்ப்பைக் கட்டமைப்பதிலும், அரசியலமைப்பு, மதச்சார்பின்மை, ஜம்மு-காஷ்மீர்  மக்களின் உரிமைகள், மாநிலங்களின் கூட்டாட்சி உரிமைகள், சிவில் உரிமைகள், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதிலும் அவர் வகித்த பங்கு அவருக்கு பரந்த மரியாதையை பெற்றுத் தந்தது. பொதுச் சொத்துக்களைத் தனியார்மயமாக்கல், உணவுப் பாதுகாப்பு, பணமதிப்பிழப்பின் ஆபத்துகள், ஜிஎஸ்டி மற்றும் அது போன்ற விஷ யங்களிலும், கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிராகவும் அவரது குரல் வலுவாக ஒலித்தது. ஏகாதி பத்தியம், பாசிசம் மற்றும் முதலாளித்துவ வளர்ச்சி யின் நவதாராளமயப் பாதையை எதிர்கொள்ள மக்களை கருத்தியல் ரீதியாக தயார்ப்படுத்தும் சிறந்த கல்வியாளராகவும் அவர் திகழ்ந்தார்.  வர்க்கப் போராட்டத்தை தீண்டாமை, சமூக ஒடுக்குமுறை மற்றும் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்க வேண்டியதன் அவசியம் குறித்த அவரது தெளிவான சிந்தனை குறிப்பிடத்தக்கது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் உலகத் தலைவர்களுடனான அவரது பரந்த  உரையாடல்கள் நன்கு அறியப்பட்டவை. நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்திற்குப் பின்ன ரும், ஜனநாயக மாற்றத்திலும், அங்குள்ள பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும் அவர் வகித்த பங்கு அடிக்கடி குறிப்பிடப்படுகிறது.

தொழிலாளர் - விவசாயி ஒற்றுமையை உயர்த்திப் பிடித்தவர்

நவதாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் அமலாக்கத்துடன் விவசாயத் துறையில் தோன்றிய முரண்பாடுகள் குறித்த அவரது நுண்ணறிவு, பொதுவான எதிரியை தோற்கடிக்கும் நோக்கத்தை நிறைவேற்ற, நிலமற்றவர்கள், விவசாயத் தொழி லாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளை மையமாகக் கொண்டு மிகவும் பரந்த ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்ற உண்மையை மறக்காமல், கார்ப்பரேட் எதிர்ப்பு நிலைப்பாட்டை இயக்கம் சரியாக  மேற்கொள்ள உதவியது. விவசாயப் புரட்சி ஜன நாயகப் புரட்சியின் அச்சாணி என்றும், வலுவான தொழிலாளர்-விவசாயி ஒற்றுமையின் முக்கியத்துவம் குறித்தும் கட்சித் திட்டம் வலியுறுத்துவதை அவர் அடிக்கடி சுட்டிக்காட்டினார். தோழர் சீத்தாராம் உலகளாவிய நிதி மூலதனத்தின் மேலாதிக்கம் மற்றும்  ஆதிக்கத்துடன் இந்தியாவில் இந்துத்துவ பாசிச சக்திகளின் எழுச்சியை தொடர்ந்து இணைத்துப் பார்த்தார். இந்த பிரிவினைவாத பாசிச சக்திகளை எதிர்த்துத் தோற்கடிக்க தொழிலாளர் - விவசாயி கூட்டணி மட்டுமே முடியும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

மாணவர்களின் நாயகன்

தனிப்பட்ட முறையில், எனக்கு அவருடன் மூன்று தசாப்த கால தொடர்பு உண்டு. 1995ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவனாக இருந்த போது, இந்திய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த  பொதுக்கூட்டத்தில் முதன்முதலில் அவரைச் சந்தித்தேன். பல்கலைக்கழகத்தில் நான் தங்கி யிருந்த பத்தாண்டு காலத்தில், அரசியல் நிகழ்வு கள் குறித்த அறிக்கை, அவரது பரந்த அனுபவங்களி லிருந்து சுவையான நிகழ்வுகள், கலாச்சார மற்றும் இலக்கியக் குறிப்புகள், நகைச்சுவை மற்றும் கூர்மை ஆகியவற்றின் நுட்பமான கலவையுடன் கூடிய அவரது பேச்சுகளால் பார்வையாளர்களை கவர்ந்த எண்ணற்ற சந்தர்ப்பங்கள் உள்ளன. ஜேஎன்யு மாணவர் பேரவைத் தேர்தல்களில், வழக்கமாக தேர்தல் பிரச்சாரத்தின் உச்சகட்டமாக நடைபெறும் கடைசி பொதுக் கூட்டத்தில் பேசுவதற்கு அவரே மிக வும் விரும்பப்பட்ட பேச்சாளராக இருந்தார். இக்கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்ட இடதுசாரிக்கு ஆதரவாக தீர்க்கமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. இது எப்போதும் மிகப்பெரிய கூட்டத்தைக் கண்டது.

கூர்மையான உரைகளுக்குச் சொந்தக்காரர்

பல வகைகளில் அவர் என்ன பேசுவார் என்ற வரிசையை நாங்கள் கணிக்க முடிந்தது: பார்வை யாளர்கள் அவர் ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் அல்லது அவரது தாய்மொழியான தெலுங்கில் பேச  வேண்டுமா என்ற கேள்வியுடன் தொடங்கி; பல மொழி களில் புலமை பெற்றவராக, மாணவர் இயக்கத்தில் தனது அனுபவங்களை விவரித்து; ஜேஎன்யுவில் ஜன நாயகம் எவ்வாறு செயல்பட்டது என்பதை வலியுறுத்த மூன்று முறை சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை குறிப்பிட்டு; காங்கிரசால் திணிக்கப்பட்ட நெருக்கடி நிலையின் அடக்குமுறை, 1977 தேர்தல்களில் தோல்வியடைந்த பின்னரும் பல்கலைக்கழக வேந்தராக தொடர்ந்த இந்திரா காந்தி யிடம் அப்பதவியிலிருந்து விலகுமாறு ஜேஎன்யு  மாணவர் சங்கத்தின் கோரிக்கையை எவ்வாறு  படித்துக் காட்டினார் என்பது; பி.ஜி.வுட்ஹவுஸி லிருந்து ஏதாவது மேற்கோள் காட்டுவது; அப்போது  ஆண்கள் விடுதியாக இருந்த கங்கா விடுதியில் தங்கியிருந்ததை நினைவு கூர்வது முதலாளித்து வத்துக்கு மாற்று இல்லை என்ற வாதத்தை “சோஷலிசமே மாற்று” என்று எதிர்கொள்வது; “சீதா” (SITA - Socialism is The Alternative) என்ற சுருக்கெழுத்தைக் குறிப்பிட்டு புன்னகைப்பது எனத்  தொடரும். இது அவரது உரையை புதிதாகக் கேட்போரை கவர்வதற்கான ஒரு முன்னோட்ட மாகவே இருக்கும். பின்னர் வரவிருக்கும் அதிக  முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கு இது  ஒரு முன்னேற்பாடாக இருக்கும். சாதிய ஒடுக்கு முறை மற்றும் வகுப்புவாத அரசியலின் கூர்மையான விமர்சனம் தொடரும். உலக நிகழ்வுகள், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் தேசிய அரசியல் சூழ்நிலை பற்றிய பகுப்பாய்வும் அடுத்து வரும். உரையின் இந்த  இறுதிப் பகுதி சமகால பிரச்சனைகளை விரிவாகக் கையாளும். இது மிகவும் நுண்ணறிவு மிக்கதாக இருக்கும். தேர்தல் விவாதத்தின் தோரணையையும் போக்கையும் நிர்ணயிக்கும், வாக்காளர்கள் மீதும்  தாக்கத்தை ஏற்படுத்தும். சிக்கலான விஷயங்களைக் கையாளும்போதும்கூட, எளிமையான மற்றும் கவர்ச்சிகரமான முறையில் கருத்துத் தெரிவிக்கும் அவ ரது திறன், பேச்சிலும் எழுத்திலும் குறிப்பிடத்தக்கது.

‘படிப்பு முக்கியம் தோழர்’

அவர் சிறந்த கல்வித் தகுதிகள் கொண்டவர். நெருக்கடி நிலைக்குப் பிந்தைய விரைவான அரசியல் மாற்றங்களால் தனது முனைவர் பட்டப் படிப்பை விட்டுவிட வேண்டியதாயிற்று. எனது முனைவர் பட்டப் படிப்பை நான் முடிக்க வேண்டும் என்றும், தன்னைப் போலவும் பல தோழர்களைப் போலவும் இடையில் கைவிடக்கூடாது என்றும் அவர்  வலியுறுத்தியதை நான் அன்புடன் நினைவு கூர்கிறேன். உண்மையில் நான் அதைமுடித் தேன். எனது பேராசிரியர்  பணியை விட்டுவிட்டு கட்சியிலும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்திலும் முழுநேர ஊழியராக  மாறிய பின்னர், இயக்கத்தின் போக்கு தொடர்பாகவும், பரந்த ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காகவும் நாங்கள் பல முறை உரையாடியுள்ளோம். எங்களது பதில்களை கோரும் விஷயங்களை, அவர் ஆலோசித்த அல்லது கவனத்திற்குக் கொண்டுவந்த சந்தர்ப்பங்களும் உண்டு. கடந்த மூன்று தசாப்தங்களில், சில நேரங்களில் பல்வேறு விவாதங்களில் எதிர் எதிர்த் தரப்புகளில் இருந்தபோதிலும், அவர் எப்போதும் அன்பான மனப் பான்மையை கடைப்பிடித்தார். எனது கருத்துக்களை வடிவமைப்பதிலும் அவர் பங்கு வகித்தார். அவருடன் எனது கடைசி உரையாடல், நாகா மக்களின் வேண்டுகோளின் பேரில் அமைதிப் பேச்சு வார்த்தையின் முன்னேற்றம் குறித்ததாக இருந்தது. அவர் எதிர்க்கட்சிகளை அணிதிரட்டி பிரத மருக்கு கடிதம் எழுதி, அவர் விஷயத்தைத் தீர்த்து விட்டதாக கூறும் பெரும் உரிமைகோரலை கேள்விக் குள்ளாக்குவதில் பங்காற்றுவதாக உறுதியளித்தார். அது முடிக்கப்படாத பணியாகவே இருந்தது.  செந்தழல் வணக்கம் தோழர் சீத்தாராம்!