articles

img

சாதி விறகெரித்து சமத்துவப் பொங்கல் வைப்போம்! - மதுக்கூர் இராமலிங்கம்

நவீன நகர்மயச் சூழலில் உணவுத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அண்மையில் கோயம் புத்தூரில் ஒரு உணவுத் திருவிழாவில் இரண்டா யிரம் ரூபாய் கட்டிச் சென்றவர்கள் ஒன்றும் கிடைக்கா மல் வெறும் தட்டோடு அமளியில் ஈடுபட்ட காட்சி அரங் கேறியது. ஆனால், ஆதி மனிதர்கள் கொண்டாடிய உண்மையான உணவுத் திருவிழாதான் பொங்கல் திருநாள். இது உணவோடு மட்டும் தொடர்புடை யதல்ல. மரபு சார்ந்த, இயற்கையோடு இயைந்தும், இணைந்தும் மனிதகுலம் வாழத் தலைப்பட்டதன் வெளிப்பாடாகவும் விளங்குகிறது. பொங்கல் என்பது தீட்டு அணுகாத ஒரு திருவிழா என்பார் மானுடவியல் அறிஞர் தொ.பரமசிவன். சேனை, சேம்பு, சிறு கிழங்கு, பனங்கிழங்கு ஆகிய  மண்ணிற்கு அடியில் விளையக் கூடிய கிழங்கு வகைகள் உயர்சாதியினர் என்று சொல்லப்படுப வர்களால் விலக்கப்பட்டவை. இன்றும் பெருங் கோயில்களில் இவை பயன்படுத்தப்படுவதில்லை. வெங்காயம், வெள்ளைப்பூண்டு நாங்கள் சேர்ப்ப தில்லை என்று ஒன்றிய நிதியமைச்சர் கூறியதற்கும் கூட இதுவே காரணமாக இருக்கக்கூடும். ஆனால், பொங்கலில் கிழங்கு வகைகள்தான் பிரதான இடத்தை வகிக்கின்றன. பொங்கல் எளிய மக்களின் இனிய கொண்டாட்டம் என்பதற்கு இதுவே சாட்சி என்றார் அந்த ஆய்வறிஞர்.

சிறப்பிக்கும் வள்ளுவமும் நிந்திக்கும் மனுஸ்மிருதியும்

பொங்கல்திருநாள் உழவர் திருநாள் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. உழவுக்கென்று தனி அதிகா ரமே படைத்தளித்தார் வள்ளுவப் பேராசான். உழவே தலை என உழவைக் கொண்டாடினார். “உழவினார் கை மடங்கினார் இல்லை விளை வதூஉம் விட்டேன் என்பார்க்கும் நிலை” என்பது குறள்.  எல்லா பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள் கூட உழவர்களின் கையை எதிர்பார்த்துத் தான் வாழவேண்டும் என்பது இதன் பொருள். உழுபவர் தான் உலகத்திற்கே அச்சாணி என்றெல்லாம் வள்ளுவம் பேச மறுபுறத்தில் மனு அநீதி விவசாயத்தை ஒரு பாவத்தொழில் என்று சபிக்கிறது. மனுஸ்மிருதியின் 10-ஆவது அத்தியாயம் 84-ஆவது ஸ்லோகத்தில் சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்பு பெரி யோர்களால் நிந்திக்கப்பட்டது. ஏனெனில் இரும்பு முகத்தினையுடைய கலப்பையும் மண்வெட்டியும் பூமியையும், பூமியில் உண்டான பலப்பல ஜந்துக்களை யும் வெட்டுகிறது அல்லவா? என்கிறது. ஆனால், சங்க இலக்கியம் தொடங்கி தமிழ் இலக்கிய மரபில் உழவு என்பது உணவளிக்கிற உயர்ந்த தொழிலா கவே கொண்டாடப்பட்டு வந்துள்ளது.

அணையா அடுப்பும்  அட்சய பாத்திரமும்

பசி போக்குவதே என் மதக்கோட்பாடு என்கிறார்  சுவாமி விவேகானந்தர். வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடிய வள்ளலார், பசிப் பிணி போக்க அணையா அடுப்பை ஏற்றி வைத்தார். அந்த அடுப்பை ஏற்றியபோது உலகத்தில் தர்மம் இருக்கும் வரை இந்த அடுப்பு எரியும். இந்த அடுப்பு எரியும் வரை உலகில் தர்மம் இருக்கும் என்றார். மணிமேகலை கையில் ஏந்திய அமுதசுரபியும் பசியில்லா உலகம் உருவாக வேண்டும் என்ற மானுடப் பெருங்கனவின் கற்பனை வடிவமே ஆகும். மகா பாரதத்தில் தர்மனுக்கு சூரியனால் வழங்கியதாகக் கூறப்படும் அட்சயப் பாத்திரத்தின் துணையோடு தான் பாண்டவர்கள் வனவாசத்தை சமாளித்ததாகத் தெரிகிறது. இன்றைக்கு அந்த அட்சயப்பாத்திரம் இருந்தால் அம்பானிக்கும், அதானிக்கும் எடுத்துக் கொடுத்துவிடுவார் பிரதமர் மோடி.  பசிக்கொடுமை குறித்து பல குறள்களில் பேசுகிறார் திருவள்ளுவர். உறுபசியும், ஓவாப் பிணியும், செறு பகையும் இல்லாததே நாடு என்கிறார். நெருப்புக்கு மத்தியில் கூட தூங்கிவிட முடியும். ஆனால் பசி யோடு ஒருவன் தூங்க முடியாது என்கிறார் இன்னொரு குறளில். வறுமையை விட மோசமானது என்ன என்று  யோசித்துப் பார்த்து வறுமையை விட கொடியது வேறு ஒன்றுமில்லை என்கிறார். வறுமையையும் பசியை யும் போக்க வள்ளுவன் கண்டவழி ஈகை எனும் அறம் தான். அதே நேரத்தில் பிச்சை எடுத்துத் தான் ஒருவர் உயிர்வாழ வேண்டிய நிலை இருக்கு மேயானால் இந்த உலகத்தை படைத்ததாகக் கூறப்படும் கடவுள் (உலகியற்றியான்) அலைந்து திரிந்து கெட்டுத் தெலையட்டும் என சபிக்கிறார்.  உல கியற்றியான் என்பதை கடவுள் என்றும் புரிந்து கொள்ளலாம். சுரண்டல் மிகுந்த சமூக அமைப்பு என்றும் புரிந்துகொள்ளலாம். “தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற மகாகவி பாரதி யின் கோபக் குரலும் வள்ளுவரின் எதிரொலிதான். கயமை என்னும் அதிகாரத்தில் “ஈர்ங்கை விதிரார் கயவர்/கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லாத வர்க்கு” என்பது ஒரு குறள். கையை மடக்கி தாடை  எலும்பை உடைக்காதவரை கயவர்கள் தங்கள் சாப்பிட்ட கையைக் கூட உதறமாட்டார்கள் என்பது இதன் பொருள். இதைத் தான் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார், “வசதி படைத்தவன் தர மாட்டான், வயிறு பசித்தவன் விட மாட்டான்” என வர்க்கப்போராக வர்ணிக்கிறார்.

பொன் காதணியும்  வேளைக் கீரையும்

சங்க இலக்கியப் பாடல்கள் ஒரே காலத்தில் எழுதப் பட்டவை அல்ல. அந்தக் கால சமூகத்தில் இருந்த வளமையை சில பாடல்கள் பேசுகின்றன என்றால், சில பாடல்களில் வறுமையும் பேசப்பட்டுள்ளது. இரு  வேறு வர்க்கங்கள் இருந்ததற்கு சங்ககாலப் பாடல் களும் சாட்சியமாய் இருக்கின்றன. வாசலில் தானியத்தை காயவைத்து காவலுக்கு இருக்கிறார்கள் பெண்கள். அப்போது மேய வந்த கோழிகளை விரட்ட தங்களது பொன்னால் செய்யப் பட்ட காதணிகளை கழற்றி வீசினார்கள். மாலையில் சிறுவர்கள் வாசலில் சிறு தேர் ஓட்டி விளையாடும் போது அந்த பொன் காதணிகள் இடறியதாம் என்று பட்டி னப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடுகிறார். இதோ இன்னொரு காட்சியை  சிறுபாணாற்றுப் படை காட்டுகிறது. குடிசை வீடு, மழை நீர் ஒழுகிய தால் மண் சுவரெங்கும் பாசி படர்ந்திருக்கிறது. வளை யல் அணிந்த குடும்பத் தலைவி பசியால் வாடி மெலிந்தி ருக்கிறாள். நீண்ட நாட்களாய் சமைக்கப்படாததால் அடுப்பில் காளான் வளர்ந்திருக்கிறது. நாய் அடுப்பங்க ரையில் குட்டி போட்டுள்ளது. பசியால் நாய்க்குட்டி களும் கத்திக் கதறுகின்றன. குடும்பத் தலைவி வீட்டுக்கு வெளியே முளைத்துள்ள வேளைக்கீரை எனும் கீரையைப் பறித்து வந்து மண் சட்டியில் சமைக்கி றாள். உப்பிட்டு சமைக்கக்கூட வழியில்லை. வெறும் தண்ணீரில் வேகவைத்து ஊருக்குத் தெரிந்துவிடக் கூடாதென்பதால் கதவைச் சாத்திவிட்டு குழந்தைக ளுக்குக் கொடுத்தாள் என்று நத்தத்தனார் என்ற புலவர் பாடியுள்ளார். அந்தக் குடும்பத்தின் தலைவன்  கிணைப் பறை கொட்டுவோன் என்றும் கூறப்பட்டுள்ளது. “திறவாக்கண்ண” என்று துவங்கும் இந்தப் பாடல் “அழிபசி வருத்தம்” என்று முடிகிறது.

புரட்சி அடுப்பும்  சோசலிச சமூகமும்

வறுமையும் பசியும் இல்லாத உலகத்தை காலம் காலமாக கவிஞர்களும், கலைஞர்களும், சமூக சீர்திருத்தவாதிகளும் கனவு கண்டுள்ளனர். கம்பன் கூட அயோத்தியில் வறுமையில்லை என்கிறார். ஆனால், மாமேதைகள் மார்க்ஸ்சும், எங்கெல்சும் தான், வறுமைக்கு என்ன காரணம் என்பதை கண்ட றிந்து அதை முற்றாக களைவதற்கான தீர்வையும் அறிவியல்ப்பூர்வமாக முன்வைத்தனர். புரட்சி அடுப்பில் தான் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற சோசலிச சமூகம் என்பது சாத்தியமாகும். முதலாளித்துவம் தன்னுடைய கோரப் பசிக்கு இந்த பூவுலகையே வேட்டையாடித் தின்று கொண்டி ருக்கிறது. சுற்றுச்சூழல் முற்றாக நாசமாக்கப்படுகிறது. இயற்கையோடு மனிதனுக்குள்ள இயங்கியலை வெளிப்படுத்தும் விழாவாகவும் பொங்கல் திருநாள் விளங்குகிறது என்றால் அது மிகையல்ல.  இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம், இது எனது என்னுமோர் கொடுமையை தவிர்ப்போம் என்பது பாவேந்தரின் பாட்டு வரி. சமத்துவ உலகில் தான் அன்பெனும் பயிர் செழித்து வளரும். உயிர் வளர்க்கும் உழவை போற்றுவோம். சாதி, மத வெறியை யும், பெண்ணடிமைத்தனத்தையும், மூட நம்பிக்கை களையும் எருவாக்கி சமத்துவப் பயிர் வளர்ப்போம்.  கரும்பின் ஒவ்வொரு கணுவிலும் வேராய் இருப்பது நாளை குறித்த நம்பிக்கைக் கனவுதான். சுரண்டல் இல்லாத சோசலிச உலகம் மார்க்சிய அறிவியல் வெளிச்சத்தில் விடிந்தே தீரும் என்பது ஆருடம் அல்ல. வெளிச்சம் தரும் சமூக விஞ்ஞானம்.