பாட்டாளி வர்க்கத்தின் தத்துவ ஆசான் தோழர் சு.பாலவிநாயகம்
ஒரு முறை, மார்க்ஸ் நினைவு தின சிறப்புக் கூட்டத்திற்கு நெல்லைக்கு வந்திருந்த தோழர் நன்மாறன், நெல்லை மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களை நினைவு கூர்ந்து, புகழாரம் சூட்டி தனது உரையைத் துவக்கினார். இது தான் தோழர் நன்மாறன் அவர்களின் பாணி. பேசும் ஊரின் சிறப்பினையும், தன்னலம் கருதாத தலைவர்களையும் குறிப்பிட்டுத்தான் தனது பேச்சைத் துவக்கு வார். அன்றும் அப்படித்தான். அன்று அவர் தோழர் சுபாவி என அன்பொழுக அழைக் கப்படும், தோழர் பாலவிநாயகம் குறித்துப் பேசினார். தோழர் பாலவிநாயகம் பொதுக் கூட்டங்களிலும் இயக்கவியல் பொருள் முதல்வாதம் குறித்து பேசுவார் என குறிப் பிட்டார். அவரது பேச்சு ஆணித்தரமாக வும், ஆவேசத்துடனும் இருக்கும் என்றார். பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி யில் இண்டர்மீடியட் படிப்பை முடித்து விட்டு, திருச்சியில் ரயில்வே வேலைக்குச் சென் றார் தோழர் பாலவிநாயகம். டிஆர்இயூ சங்கத்தில் சேர்ந்து தீவிரமாக தொழிற் சங்கப் பணிகளை மேற்கொண்டார்.
தோ ழர்கள் கல்யாணசுந்தரம், உமாநாத், அனந்தநம்பியார் போன்ற தலைவர்க ளோடு இணைந்து பணியாற்றினார். 1948இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய் யப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகள் மீது கொடூர அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தோழர் பாலவிநாயகமும் கைது செய்யப் பட்டார். இதனை திருச்சி சதி வழக்கு என வரலாறு பதிவு செய்திருக்கிறது. திருச்சி சதிவழக்கில் தோழர் பாலவிநாயகம் 25ஆவது குற்றவாளி. கம்யூனிஸ்ட்டுகளை தடுப்பு காவல் சட்டத்தின்படி கைது செய்திருப்பது அரசி யலமைப்பு சட்டம் வழங்கி உள்ள அடிப்ப டை உரிமைகளுக்கு எதிரானது என தோழர் ஏ.கே.கோபாலன் தொடுத்த வழக் கில் சென்னை உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்து தீர்ப்பு எழுதியது. தனி மனித அரசியல் உரிமை குறித்த வரலாற் றுச் சிறப்புமிக்க வழக்கு என இன்றளவும் எடுத்துரைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, 1952இல் தோழர் பாலவிநாய கம் உள்ளிட்டு பலரும் விடுதலை செய் யப்பட்டனர். எனக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை என எழுதிக் கொடுத்தால் வேலையில் சேரலாம் என நிர்வாகம் கூறியது. தோழர் பாலவிநாயகம் எழுதிக் கொடுக்க மறுத்தார். வேலை பறி போனது. நெல்லைக்கு திரும்பினார் தோழர் பாலவிநாயகம். அந்த நாள் முதல், அவர் மறைந்த 1980 வரையிலும் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்திலும், பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக் கத்திலும் தன்னை முழுமையாக ஒரு சேர பிணைத்துக் கொண்டார். நெல்லை மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தனக் கென தனி முத்திரையை பதித்துள்ளார் தோழர் பாலவிநாயகம்.
1949களில் நெல்லையிலும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக சதி வழக்கு புனையப்பட்டது. தோழர் கள் நல்லசிவன், நல்லக்கண்ணு உள்பட 92 பேர் அதில் சேர்க்கப்பட்டனர். கட்சியும், தொழிற்சங்க அமைப்புக ளும் கடும் நெருக்கடியை சந்தித்தன. நெல்லை மாவட்டத்தில் கட்சியை புனர மைக்க தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் அனுப்பி வைக்கப்பட்டார். மாவட்ட அமைப்புக்குழு உருவாக்கப்பட்டது. அதில் தோழர்கள் எஸ்.ஏ.முருகானந்தம், என்.வானமாமலை, சு.பாலவிநாயகம் போன்றோரும் இடம் பெற்றிருந்தனர். 1952 முதல் 1964 வரை ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கம், தொழிலாளர்களை யும், விவசாயிகளையும் அணிதிரட்டி மகத்தான பல போராட்டங்களை முன் எடுத்தது. அதில் தோழர் பாலவிநாயகம் அவர்களின் பங்கு முக்கியம் வாய்ந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடந்த சித்தாந்தப் போராட்டத்தின் விளை வாக, 32 தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர். தமிழ கத்தில் இது குறித்து விவாதிக்க 1964 ஏப்ரல் 28, 29 தேதிகளில் மதுரையில் சிறப்புக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் 52 தோழர்கள் கலந்து கொண்டனர். இதுவே மாநில கம்யூனிஸ்ட் இணைப்புக் குழுவாக உருவானது.
இதுவே பின்னா ளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமையாக பரிணமித்தது. இந்த 52 பேரில் ஒருவராக திகழ்ந்தார் தோழர் சு.பாலவிநாயகம். 1962இல் இந்திய சீன யுத்தம் நடைபெற்ற போது கம்யூ னிஸ்ட்டுகளை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காங்கிரஸ் அரசாங்கம் கைது செய்தது. தோழர் சு.பாலவிநாயகம் கைது செய் யப்பட்டு 16 மாதங்கள் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உரு வான 1964 முதல் 1978 வரை கட்சியின் மாவட்டச் செயலாளராக தோழர் சு.பால விநாயகம் செயல்பட்டார். பீடித் தொழிலா ளர் சங்கம், மோட்டார் தொழிலாளர் சங்கம், பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம், இந்தியா சிமெண்ட்ஸ் தொழிலாளர் சங்கம் என பல அமைப்புகளை துவக்கி, அதன் நிர்வாகியாக தோழர் பாலவிநாயகம் செயல்பட்டார். 1970இல் சிஐடியு அமைப்பு துவக்கப்பட்ட போது, நெல்லை மாவட்டத் தலைவராக தேர்வாகி செயல்பட்டார். கூட்டங்களுக்கு சென்று, அங்கேயே தங்கி, தோழர்களுடன் இரவு முழுவதும் அரசியல், சித்தாந்த உரையாடலை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டி ருந்தார். செவல்குளம், தேவிபட்டணம் தோ ழர்கள் சிலாகித்து இன்றளவும் அதனைச் சொல்வது உண்டு. எங்கு சென்றாலும் பை நிறைய புத்தகங்கள் உண்டு. அதனை விற்று தான் இயக்கப் பணிகளே நடக்கு மாம். ஊழியர்கள் பணம் காசு இல்லை என்று சொல்லி வந்தால், கொஞ்சம் பண மும் கொஞ்சம் புத்தகங்களும் கொடுத்து, புத்தகத்தை விற்று பணத்தை எடுக்கச் சொல்வது உண்டு.
ஊழியர்களை வாசிக் கத் தூண்டுவதில் அவருக்கு நிகர் அவர் தான் என்று தோழர்கள் குறிப்பிடுகின்ற னர். அவசரநிலை காலத்தில் கொல்லப் பட்ட மாணவர் ராஜனின் கதையை விவ ரிக்கும் போது கண்ணீர் விட்டு அழாதவர்க ளை அந்த கூட்ட அரங்கில் பார்க்க முடியாது. ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர் தோழர் பாலவிநாயகம். லெனின் எழுதிய என்ன செய்ய வேண்டும், ஒரடி முன்னால் ஈரடி பின்னால் உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளார். மூலதனம் முதல் தொகுதியை மொழிபெயர்த்த செய்தியை தோழர்கள் உற்சாகமாக கூறுகின்றனர். மாநில சுயாட்சி குறித்து நெல்லையில் நடை பெற்ற கருத்தரங்கில் தோழர் பி.டி.ரணதிவே உரையை மொழிபெயர்த்த அரு மையை தோழர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பல நூல்கள், பத்திரிகைகளை வாசித்து அதனை தோழர்களிடம் விவரிக்கும் பாங்கை, அரசியல்படுத்தும் பணியை மெய்சிலிர்க்க கூறுகின்றனர். அவசரநிலை காலத்தில் தோழர் பால விநாயகம் கைது செய்யப்பட்டு ஒராண்டு சிறையில் இருந்தார்.
அப்போது அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. தூத்துக்குடியில் நடைபெற்ற பத்தாவது மாவட்ட மாநாட்டில் மாவட்டச் செயலாள ராக தேர்வான சில மாதங்களில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. சென்னையில் தோழர் வி.பி.சிந்தன் தலையிட்டு மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்த போதிலும், உடல்நிலை முன்னேற் றம் இன்றி 55வது வயதில் காலமானார். தத்துவம், உலக அரசியல், இலக்கி யம் மட்டும் அல்ல, உள்ளூர்ப் பிரச்சனைக ளிலும் திறம்படத் தலையீடு செய்துள்ளார். பாளையங்கோட்டை நகரசபைக்கு கொக்கி ரகுளம் பகுதியில் இருந்து நான்கு முறை தேர்வாகி உள்ளார். அந்தப் பகுதியில் குடியிருந்த மார்க்சிய ஆய்வாளர் தோழர் என்.வானமாமலையும் நகரசபைக்கு தேர்வாகி செயல்பட்டுள்ளார்.
அதே பகுதி யில் சில காலம் தோழர் ஏ.நல்லசிவனும் குடியிருந்து உள்ளார். நெல்லை மருத்துவ க்கல்லூரி மருத்துவமனைக்கு அருகில் உள்ள மகாராஜநகர் பகுதியை வீட்டு மனைக்கு ஒதுக்கி அதனை நேர்மையாக செயல்படுத்திட தோழர் பாலவிநாயகம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு செயல்பட்டுள்ளது. பாளையங்கோட்டை பகுதிகளில் தெரு வுக்கு தமிழ் பெயர் சூட்டியதில் நகரசபை சேர்மன் மகாராஜ பிள்ளை மற்றும் தோழர் பாலவிநாயகம் ஆகியோருக்கு முக்கிய பங்குண்டு. நெல்லையப்பபுரம் பகுதியில் ஆயிரத்திற்கும் அதிக ஏக்கர் விவசாய நிலத்தை விவசாயிகளுக்கு உரிமையாக்கிட தொடர் போராட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்திலும், நூற்றுக் கணக்கான விவசாயிகளுக்கு நிலம் உரிமையானதிலும் தோழர் பாலவிநாய கத்திற்கு முக்கிய பங்குண்டு. கோடிக்கால் பூதமடா, தொழிலாளர் வர்க்கமடா என வர்க்க உணர்வோடு உழை க்கும் மக்களை அணிதிரட்டி, வலுவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடித்தள மிட்ட, பாட்டாளி வர்க்கத்தின் தத்துவ ஆசான் தோழர் சு.பாலவிநாயகம். அவரது நூற்றாண்டு விழாவை நெல்லை மாவட்டக்குழு கொண்டாட இருக்கிறது. அது சமயம் மறைந்த தோழர் நாறும்பூநாதன் தொகுத்துள்ள நூலொன்றும் வெளிவர உள்ளது.