articles

img

ஆசிரியர் இயக்கங்களின் மூத்த தலைவர் தோழர் எல்.கோபாலகிருஷ்ணன் காலமானார்

திருச்சிராப்பள்ளி, ஜன. 21 - ஆசிரியர் இயக்கங்களின் முதுபெரும் தலைவரும் எல்.ஜி. என்று அனைவராலும் மரியாதையுடன் அழைக்கப்படு பவருமான தோழர் எல்.கோபாலகிருஷ்ணன், தமது 102வது வயதில், ஜனவரி 21 செவ்வாயன்று திருச்சியில் காலமானார்.  ஆரம்ப ஆசிரியர் சம்மேளனம் முதல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடங்கி மாஸ்டர் வ.ராமுண்ணி மேனன், ஒய்.வி.சுப்பாராவ் முதலான மூத்த தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியவர் எல்.ஜி.  ஜில்லா போர்டு காலத்தில் ஆசிரியர் நலன்களுக்காகப் போராடிய போது வெகு தூரத்தில் உள்ள கொடைக்கானல் மலை கடைக்கோடி கிராமமான கவுஞ்சிக்கு மாற்றப்பட்டு பழிவாங்கப்பட்டார். எனினும் மனந்தளராமல் சங்கப்பணி களைத் தொடர்ந்தார். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.பாலசுப்பிரமணியன், என்.வரதராஜன், கே.பி. ஜானகியம்மாள், ஏ.நல்லசிவன், கோ.வீரையன் முதலானவர்களின் உதவியுடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை அமைப்பதிலும், வளர்ப்பதிலும் முழுமூச்சுடன் ஈடுபட்டார். 

மதுரை மேற்கு வட்டாரச் செயலாளராக திறம்பட செயல்பட்டார். கான்பூரில் நடந்த சிஐடியு அகில இந்திய  மாநாட்டில் ஒரு பார்வையாளராக கலந்து கொண்டார். பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றபோது மதுரை,கடலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார். சங்க ஜனநாயகத்திற்கான போராட்டங்களின் தொடர்ச்சியாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உதயமான போது அதில் முன்நின்றார். மாநில அலுவலகச் செயலாளராகவும் பணியாற்றினார். தமிழகத்தில் ஜாக்டா, ஜாக்சாட்டோ, ஜாக்டீ, ஜாக்டீ - ஜியோ முதலான கூட்டமைப்புகளை உருவாக்குவதிலும் அகில இந்திய அளவில் சிசிஎஸ்டிஓ (CCSTO), இந்திய பள்ளி ஆசிரியர் சம்மேளனம் (STFI) ஆகிய வலிமையான அமைப்புகளை உருவாக்குவதிலும் முன்நின்றார். பல தலைவர்களை உருவாக்கிய தலைவராக விளங்கினார். தான் பணியாற்றிய மதுரை மேற்கு ஒன்றிய ஆசிரியர்களின் குடியிருப்பு ஒன்றிற்கு ‘ராமுண்ணி நகர்’ என்று பெயரிட்டு இயக்க நிறுவனருக்கு மரியாதை செய்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக வெளிவந்து கொண்டிருக்கும் புதிய ஆசிரியன் என்னும் இடதுசாரி, முற்போக்கு பல்சுவை மாத இதழ் மதுரையில் இயங்கியபோது அதன் தொடக்க கால ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் எல்.ஜி. பணியாற்றினார்.   செழுமையான அனுபவங்களைக்கொண்ட தோழர் எல்.ஜி. திருச்சியில் தமது மகள் ஜி.விஜயலட்சுமி இல்லத்தில் வசித்து வந்தார். 2021இல் நூற்றாண்டு கண்ட அவருக்கு கட்சியின் தலைவர்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அகவை 101, 102 எட்டிய டிசம்பர் 15 அன்றும் தலைவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

தலைவர்கள் நேரில் அஞ்சலி

இந்நிலையில், 2025 ஜனவரி 21 செவ்வாயன்று உடல்நலக்குறைவால் காலமானார்.  அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி, மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி.வெற்றிச்செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரேணுகா, லெனின், மேற்கு பகுதி செயலாளர் ரபீக் அகமது, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் செந்தமிழ்செல்வன் ஆகியோர் மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தினர். 

இன்று இறுதி நிகழ்ச்சி 

தோழர் எல்.ஜி. அவர்களது இறுதி நிகழ்வு ஜனவரி 22 (இன்று) திருச்சியில் நடைபெறுகிறது. அஞ்சலி நிகழ்வுகளுக்குப் பிறகு அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்படுகிறது.