பாஜக ஒரு மூழ்கும் கப்பல்... அது கரைசேர முடியாது!
அகில இந்திய மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் சாடல்
சீத்தாராம் யெச்சூரி நகர், மதுரை ஏப். 2- பாஜக ஒரு மூழ்கும் கப்பல், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் அவர்களும் சேர்ந்து மூழ்குகின்ற நிலைமை ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கூறினார். மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவரான அவர், தனது வரவேற்பு உரையில் தெரிவித்த கருத்துக் கள் வருமாறு: அரசனிடமே நீதிகேட்டுப் போராடிய மதுரை மண்! தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதிகேட்டுப் போராடிய பாண்டிய மன்னனின் கோட்டை கொத்தளத்தை அதிரவைத்த கண்ணகி போராடிய மதுரை மாநகரில் மோடி ஆட்சியின் எதேச்சதிகாரத்தை வீழ்த்தவும் அந்த ஆட்சியை தகர்த்தெறியவும் களம் பல கண்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என எழுதிய திருவள்ளுவரும், முற்போக்கு கருத்துக்க ளை மக்களிடம் பரப்பிய எண்ணற்ற சிந்தனை யாளர்களான ராமானுஜர், வள்ளலார் இராம லிங்க அடிகளார், அய்யா வைகுண்டசாமி, பாண்டித அயோத்திதாசர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பாரதிதாசன், சுவாமி சகஜானந்தர் போன்றவர்கள் வாழ்ந்த பெருமைமிகு மண் தமிழ்நாடு.
சிந்துச் சமவெளிக்கு நிகரான கீழடி நகர நாகரிகம் 24-ஆவது மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என தீர்மானித்த போது தோழர் யெச்சூரி நம்மோடு இருந்தார். ஆனால் மாநாடு நடைபெறும் இன்று அவர் நம்மோடு இல்லை என்பது ஈடு செய்ய முடியாத இழப்பாக உள்ளது. மதுரை தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகராக திகழ்ந்து வருகிறது, வைகை நதிக்கரையில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு நிகரான நகர்ப்புற நாகரிகம் இருந்துள்ளதை வெளிக் கொண்டு வந்துள்ளது. பெருமைமிகு கம்யூனிஸ்ட் தியாகிகளின் பூமி செங்கொடி இயக்க வரலாற்றில் மதுரை தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது. விடுதலைப் போராட்டம் தொடங்கி வர்க்கப் போராட்டம் வரை மதுரை ஒரு திருப்பு முனை யாக திகழ்ந்து வருகிறது.
தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 5 அகில இந்திய மாநாடு கள் நடைபெற்றுள்ளன. அதில் 3 மாநாடுகள் நடைபெற்ற நகரம் என்ற பெருமைக்குரியது மதுரையாகும். இதுமட்டுமல்ல செங்கொடி இயக்க வரலாற்றில் தமிழ்நாடு வீரவரலாற்றை படைத்துள்ளது. எண்ணற்ற தியாகிகளை தந்த மண் மதுரை. பொதும்பு பொன்னையா, வீராயி, மாரி - மணவாளன், தூக்குமேடை பாலு, பூந்தோட்டம் சுப்பையா, ரயில்வே ராமசாமி, மாணவச் செல்வங்கள் சோமசுந்தரம் - செம்பு லிங்கம், வீராங்கனை லீலாவதி என இந்த மண்ணின் தியாகிகள் பட்டியல் நீளும். கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் நீண்ட பாரம்பரியம் கொண்ட மதுரை சுதந்திரத்திற்கு பின்னர் மதராஸ் மாகா ணத்தில் 1952-இல் நடைபெற்ற முதல் சட்டப்பேர வைத் தேர்தலில் தோழர் பி. ராமமூர்த்தி சிறையில் இருந்து கொண்டே வெற்றிபெற்றார். அந்த தேர்தலுக்கு பின்னர் கம்யூனிஸ்டுகள் தலை மையில் ஆட்சி அமையும் வாய்ப்பு இருந்தது. ஆனால், காங்கிரஸ் சில மோசடிகளை செய்து ஆட்சி அதிகாரத்தைத் தட்டிப்பறித்தது. தமிழ் நாட்டில் கம்யூனிஸ்டுகளுக்கு என்று நீண்ட பாரம்பரியம் உள்ளது. தென்னிந்தியாவில் முதல் முதலாக மே தினத்தைக் கொண்டாடிய மாநிலம். அதற்கான பெருமை ‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலரையே சாரும்.
1925-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டிற்கு தலைமையேற்றவரும் அவர்தான். மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப் போராடியவர்கள் கம்யூ னிஸ்டுகள். மெட்ராஸ் ஸ்டேட் ‘தமிழ்நாடு’ என பெயர்வர காரணமானவர்கள். சமூக விடுதலைக்கான போராட்டங்களில் வெற்றி வாச்சாத்தி மலைக்கிராமப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக தொ டர்ச்சியாக களத்திலும் நீதிமன்றத்திலும் சட்டப்போராட்டம் நடத்தி குற்றவாளிகள் அனை வருக்கும் தண்டனை பெற்றத் தந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். தீண்டாமைக் கொடுமை, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதி ராகவும் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல்களுக்கு எதிராகவும் நாள்தோறும் போராட்டங்களை காணும் மண் தமிழகம். “தமிழ்நாட்டில் அருந்ததியர் சமூகத்தினருக்கு 3% இடஒதுக்கீடு பெற்றுத் தருவதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. சிபிஎம் எடுத்த முயற்சிகளின் காரணமாக அருந்த்தியர் சமூகம் இப்போது 3 சதவிகிதம் இடஒதுக்கீட்டைப் பெற்று வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின் போதே, இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்டுகள் தான்.
பாஜக-வை 100 சதவிகிதம் தோற்கடித்த தமிழ்நாடு இந்தியாவில் பாஜகவை 100 சதவிகிதம் வீழ்த்திய மாநிலம் தமிழ்நாடு. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக, பிற கட்சிகளை மிரட்டி கூட்டணிக்கு அழைப்பதாக செய்தி வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணிக்கு முகாந்திரம் உள்ள தாக செய்திகள் வருகின்றன. 2019, 2024 மக்களவைத் தேர்தலை போல் வரும் சட்டப்பேர வைத் தேர்தலிலும் பாஜக தோற்கடிக்கப்படும். எனவே, பாஜக ஒரு மூழ்கும் கப்பலாகத் தான் இருக்கும். மூழ்கின்ற கப்பல் கரைசேர முடியாது. பாஜக-வுடன் அதிமுக கூட்டணி வைத்தால் அவர்களுடன் சேர்ந்து மூழ்குகின்ற நிலைமை தான் அதிமுகவுக்கும் ஏற்படும். ஆதரவளித்த தமிழக மக்களுக்கு நன்றி! சிபிஎம் அகில இந்திய மாநாட்டையொட்டி மாநிலம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கருத்த ரங்குகளை நடத்தியுள்ளோம். மாநிலத்தில் வீடு, வீடாக சென்று மக்களிடம் நிதி வசூல் செய்துள்ளோம். 98 விழுக்காடு மக்கள் தாராள மாக நிதி அளித்தனர். அரசியலுக்கு அப்பாற் பட்டவர்களும் மனமுவந்து நிதிவழங்கினர். குழந்தைகள் பலர் தங்கள் உண்டியல் சேமிப்பை வழங்கினார்கள். இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற தமிழக மக்கள் பல்வேறு வகையில் ஒத்துழைப்பை வழங்கியதற்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் பேசினார்.