articles

img

என்றென்றும் வழிகாட்டும் பொன்மலை தியாகிகள் - ஆர்.ராஜா, திருச்சி மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்தும், உள்நாட்டில் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்தும் 1946 இல் இந்திய நாடு முழுவதிலும் வீரமிக்க போராட்டங்கள் அலைஅலையாக எழுந்தன. வங்காள தேபாகா இயக்கம், திருவாங்கூர் புன்னப்புரா-வயலார் எழுச்சி, தெலுங்கானா விவசாயிகள் போராட்டம், கப்பற்படை எழுச்சி என்று நாடு கொதித்தது. இந்த அலை ரயில்வே தொழிலாளர்கள் மத்தியிலும் பரவியது.

 போராட்டத்தின் பின்னணி

மே 1946 இல் ரயில்வே தொழிலாளர்களின் வேலை நிறுத்த வாக்கெடுப்பு அகில இந்திய ஒற்றுமையுடன் நடைபெற்றது. இதனால் அச்சமுற்ற ஆங்கிலேய தென்னிந்திய ரயில்வே நிர்வாகம் தொழிலாளர்களின்  உரிமையைப் பறித்து, வேலை நிறுத்த வாக்கெடுப்பில் பங்கு கொண்டதற்காக பொன்மலை குழந்தை வேலு, விருத்தாச்சலம் ராமசாமி, தஞ்சாவூர் நாராயணசாமி அய்யர் உள்ளிட்ட தொழிலாளர் தலைவர்களை பணி நீக்கம் செய்தது.

ஜூலை 22, 1946 இல் பொன்மலை பெயிண்டிங் பிரிவின் ஏழு தொழிலாளர்களை தற்காலிகமாக பணி நீக்கம் செய்ததை எதிர்த்து அப்பிரிவு தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்தனர். நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தை முறிவடைந்ததால் ஆகஸ்ட் 24 முதல் தென்னிந்திய ரயில்வே முழுவதும் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

 மாபெரும் வேலைநிறுத்தம்

430 ரயில் நிலையங்களில் 300 நிலையங்கள் மூடப்பட்டன. வாரக்கணக்கில் ஒரு வண்டி கூட நகரவில்லை. பொன்மலை பணிமனை முகப்பில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் குடும்பத்தினரும் அமைதியாக மறியல் செய்தனர். “எதுவரினும் போராட்டத்தைக் கைவிடோம்” என்ற உறுதி அவர்களிடம் மேலோங்கி நின்றது. வேலை நிறுத்தத்தை உடைப்பதற்காக நிர்வாகம், தொழிலாளர்களுக்கு 100 சதவீதம் வரை சம்பள உயர்வு தருவதாக அறிவித்தது. ஆனால் தொழி லாளர் களுக்கு இதை வெறுப்புடன்நிராகரித்தனர்.

 கொடூரமான துப்பாக்கிச் சூடு

செப்டம்பர் 2, 1946 இல் நேரு தலைமையி லான இடைக்கால அமைச்சரவை பதவியேற்ற சரியாக 71 மணி நேரத்திற்குப் பின் செப்டம்பர் 5 ஆம் தேதி காலை 9 மணிக்கு பொன்மலையில் கொடூரமான தாக்குதல் தொடங்கியது. சங்கத்திடலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீது மலபார் சிறப்புக் காவல்படை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. 26 வயது தங்கவேலு, 28 வயது தியாகராசன், 26 வயது ராஜூ, 25 வயது ராமச்சந்திரன், 24 வயது கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஐந்து இளம் தோழர்கள் அதே இடத்தில் பலியானார்கள். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சங்கத்தின் பொதுச்செயலாளர் அனந்தன் நம்பியார் குற்றுயிரும் குறையுயிருமாக ஆக்கப்பட்டார். 273 தொழிலாளர்கள் மீது சதிவழக்கு போடப்பட்டது.

 வெற்றியும் பாடமும்

அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவர் எஸ்.குருசாமி பேச்சுவார்த்தை நடத்திய பின் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. முதல் ஊதியக்குழு அமைக்கப்பட்டு ஊதிய விகிதங்கள் மாற்றப்பட்டன. 8 மணி நேர வேலை உறுதிப்படுத்தப்பட்டது. வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. பொன்மலை தியாகிகள் ஐவரின் தியாகம் இந்திய ரயில்வே தொழிற்சங்க வரலாற்றில் என்றென்றும் மங்காது ஒளிவீசும். அவர்களின் ரத்தத்தில் பிறந்த வெற்றி நாடு முழுவதிலும் ரயில்வே தொழிலாளர்களின் கவுரவத்தையும் மதிப்பையும் வெகுவாக உயர்த்தியது.