18.09.1999 அன்று தூத்துக்குடி தாள முத்துநகர் காவல்நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட தலித் சமூகத்தை சேர்ந்த வின்சென்ட்டின் வழக்கில் 18.07.2024 அன்று சாட்சியம் அளித்திட வேண்டுமென்று அவரது மனைவி கிருஷ்ணம்மாளுக்கு விசாரணை நீதிமன்றத்திலிருந்து சம்மன் வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் தன் வழக்கை தொடர்ந்து நடத்திட வேண்டுமென்பதில் கிருஷ்ண ம்மாள் உறுதியாக இருந்தார். தன் கணவர் போலீசாரால் கொலை செய்யப்பட்டபின் அவரது சமூகத்தை சேர்ந்த பலரும் வந்திருந்தார்கள், பின்னர் சென்று விட்டார்கள். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே தனது குடும்பத்தினருடன் பயணித்தது என்பதே இந்த உறுதிக்குக் காரணமாகும். கிருஷ்ணம்மாளின் சமூகத்தை சேர்ந்த பலரும் குற்றமிழைத்த போலீசாரை காப்பாற்றுவதற்கு மேற்கொண்ட வெளிப்படையான நடவடிக்கைகள் கிருஷ்ணம்மாளின் மன உறுதியின் முன்பு தோற்றுப் போயின. போராடிப் பெற்ற முதல் தகவல் அறிக்கை வின்சென்ட் காவல்நிலைய சித்ரவதை காரணமாக இறந்து போனது தெரிய வந்தவுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு செயலாளர் பி.இசக்கிமுத்து உள்ளிட்ட தோழர்கள் மேல அலங்காரதட்டு கிராமத்திற்கு சென்றனர். இந்த கிராமம் தலித் சமூகத்தினர் மட்டுமே பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியாகும். இந்த ஊரிலிருந்து பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக வின்சென்ட் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இவரது மரணம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் நடத்திய விசாரணையில் இந்த பஞ்சாயத்து தலைவரே உண்மையைக் கூறவில்லை. அப்போது கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்த க.கனகராஜ் வின்சென்ட்டின் உடற் கூறாய்வு துவங்குவதற்கு முன்பு வைத்த ஒற்றை கோரிக்கை, வின்சென்ட் மரணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகல் வழங்கப்பட வேண்டுமென்பதே. ஆரம்பத்தில் நிர்வாகத் தரப்பில் மறுத்த போதிலும், போராட்டம் தொடர்ந்ததன் காரணமாக போலீசார் தரப்பில் முதல் தகவல் அறிக்கை வழங்கப்பட்டது. இந்த ஆவணம் குற்றமிழைத்த போலீசாரை அம்பலப்படுத்தியதுடன் போலீசாரின் கைப்பாவையாக செயல்பட உடன்பட்டவர்களையும் அம்பலப்படுத்தியது. வழக்கை நீர்த்துப் போகச் செய்த சதி உடற்கூறாய்வு முடிந்தபின் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில், வின்சென்ட்டின் சமூகத்தை சேர்ந்த மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். காவல்நிலைய சித்ரவதை நிகழ்வில் பாதிக்கப்பட்டவரின் சமூகத்தை சேர்ந்த உள்ளூர் பிரமுகர்களையும், அதிகாரி களையும் ஈடுபடுத்தி துவக்கத் திலேயே குற்றத்தின் தன்மையை நீர்த்துப் போகச் செய்திடும் வழக்கமான நடவடிக்கைகள் கிருஷ்ணம்மாளிடம் எடுபட வில்லை. ஏனெனில் அவர் தனது கணவர் காவல்நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்யப் பட்டதை நேரில் பார்த்தவர் ஆவார். மாநிலச் செயலாளர் என்.சங்கரய்யா ஆறுதல் வின்சென்ட் உடலில் 38 காயங்கள் இருந்தன. அவரை கொலை செய்த பிறகு சாராயம் அவரது வாயில் ஊற்றப்பட்டிருந்தது. மாட்டு வண்டி பந்தயத்தின் போது கீழே விழுந்ததினால் இறந்து போனார் என்றும், சாராயம் குடித்ததினால் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து போனார் என்றும் இன்னும் பல்வேறு திசை திருப்பும் நடவடிக்கைகள் தொடர்ந்தன. அப்போது கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த தோழர்.என்.சங்கரய்யா தூத்துக்குடிக்கு வந்து கிருஷ்ணம்மாள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். குற்றமிழைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி கட்சியின் சார்பில் வாகன பேரணி நடத்தப்பட்டது. இதன் பிறகு அனைத்து பகுதி மக்களும் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் 25.09.1999 அன்று ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கரகோமதி, உப்பு தொழிலாளர் சங்க தலைவர் கே.பொன்ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் அறிக்கை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு காவல்துறையினரே வின்சென்ட் மரணத்திற்கு காரணம் என்று அரசுக்கு முதல் நிலை அறிக்கையை அளித்தார். தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் கிருஷ்ணம்மாள் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. தனக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கோரியும் கிருஷ்ணம்மாள் விண்ணப்பம் கொடுத்தார். தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் போலீசார் மீது நடவடிக்கை எடுத்திட இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தார். தனக்கு இழப்பீடு வழங்கிட வேண்டுமென்று கிருஷ்ணம்மாள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு விரிவான விசாரணைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டு எட்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டுமென்றும் இந்த தொகையை சம்பந்தப்பட்ட போலீசாரின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்ய வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில்... இதன் பின்னர் நீதிமன்றத்தில் போலீசார் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ராமகிருஷ்ணன் என்ற உதவி ஆய்வாளர் இறுதி அறிக்கையில் எதிரியாக காண்பிக்கப்படவில்லை. இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தாசின் கீழ் சிறப்பு பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். எனவே, மேற்சொன்ன ராமகிருஷ்ணனை காண்பித்து, மற்ற எதிரிகள் வழக்கிலிருந்து வெளியேறிடும் நிலை ஏற்பட்டது. இந்த ராமகிருஷ்ணனை வழக்கில் சேர்த்திட வேண்டுமென்று கிருஷ்ணம்மாள் தாக்கல் செய்த மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதித்தது. இந்த உத்தரவை ரத்து செய்திட வேண்டுமென ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 25 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு இதன் பின்னர் 25 ஆண்டுகள் கழித்து வழக்கு விசாரணை துவங்கியது. ஆனால், விசாரணையை மீண்டும் தடைப்படுத்திடும் எண்ணத்துடன் வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்றிட வேண்டுமென்று போலீசார் தாக்கல் செய்த மனுவை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஒருவரையும் நியமனம் செய்தது. விசாரணை நீதிமன்றம் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302-இன் கீழ் 9 போலீசார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக முடிவு செய்து ஆயுள் தண்டனையும் ரூ.10000 அபராதமும் செலுத்திட உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணம்மாளின் உறுதியான போராட்டம் 1999-ஆம் வருடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து கிருஷ்ணம்மாள் துவக்கிய சட்ட போராட்டத்திற்கு 2025-ஆம் வருடம் விசாரணை நீதிமன்றத்தில் நீதி கிடைத்துள்ளது. இத்தனை காலமும் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வழக்கிலிருந்து தப்பிக்க எத்தனித்தவர்களுக்கு பயப்படாமலும், எந்த நிர்ப்பந்தத்திற்கும் அடிபணியாமலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே தங்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்று கிருஷ்ணம்மாளும் அவரது குடும்பத்தினரும் விரும்பினர். இந்த காவல்நிலைய கொலை வழக்கை தடம்புரளச் செய்ய வீசப்பட்ட அதிகார, சமுதாய, பணபலன்களுக்கு அடிபணியாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து, கொண்ட கொள்கையில் உறுதியாக கிருஷ்ணம்மாளும், பல தோழர்களும் இருந்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்த கிருஷ்ணம்மாளின் நீதிக்கான போராட்டம் தூத்துக்குடி விசாரணை நீதிமன்றத்தில் வென்றுள்ளது.