articles

img

மதுரை... ஸ்மார்ட் சிட்டியா? சுமார் சிட்டியா? நோக்கம் மக்கள் நலனே - அவதூறு அல்ல... அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவுக்கு பதில்....

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக 2016ம் ஆண்டு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு 2018ம் ஆண்டு இறுதியில் பணிகள் துவங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.மோகன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் அவர்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில் மதுரை நகரின் வளர்ச்சிக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற, மாமன்றங்களிலும், மக்கள் மன்றங்களிலும் தொடர்ந்து பேசியுள்ளனர். கட்சியின் வழிகாட்டுதலோடு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் தொகுதி மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தலையீடுகள் செய்தும், பல விஷயங்களுக்கு தீர்வு கண்டும் வருகிறார்.

கருத்துக் கேட்பு கண்துடைப்பே!
ஸ்மார்ட் சிட்டி பணியில் மக்களிடம் கருத்து கேட்டுத் தான் இப்பணிகள் துவங்கப்பட்டதாக சொல்வது கண்துடைப்பாக நடத்தப்பட்ட நாடகமே. அரசின் வழிகாட்டலில் சரியான திட்டமிடாத ஏற்பாட்டில் உள்ள குளறுபடிகளால் மதுரை மக்கள், சிறு வியாபாரிகள், பெரும் வர்த்தகர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மதுரை நகர் முழுவதும் சாலைகள் பெயர்ந்து மக்கள் அன்றாடம் அவதிப்பட்டு வருகின்றனர். கீழே விழுந்து காயங்களோடு எழுவதும், ஒருசில மரணங்களும் இக்காலத்தில் நடந்துள்ளது.

ஒப்பந்தத்தில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லாமல், பணிகள் துவங்கி எப்போது நிறைவடையும் என்ற முடிவில்லாமலும் 3 முறை பணிகள் நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது. ஆளும் அமைச்சர்களும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் ஆய்வு என்ற பெயரில் சுற்றிப்பார்த்தார்களே தவிர அதிகாரிகளை வைத்து பணிகளின் தன்மை, தரம் பற்றி ஆய்வு கூட்டங்கள் இதுவரை நடத்தியதாக தெரியவில்லை.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் இணைத் தலைவர் என்ற முறையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மக்கள் படும் சிரமத்தை விரைந்து தீர்க்க ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் பேசியும், கடிதம் கொடுத்தும் பதில் எதுவுமின்றி இருந்த சூழ்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் வி.பி.ராஜன் செல்லப்பா அவர்களும் பங்கேற்றுள்ளார்.

ராஜன் செல்லப்பாவின் அதிகாரத் தோரணை
பணிகள் பற்றி விளக்கங்கள் கேட்கின்ற போது அதிகாரிகளை பதில் சொல்ல விடாமல் அதிகார தோரணையுடன் இடைமறித்து ராஜன் செல்லப்பா அவர்கள் பதில் சொல்வது எப்படி சரியாகும்? மக்கள் படும் சிரமத்தை தீர்க்க ஆலோசனைக் கூட்டம் நடத்தினால் அரசியல் செய்வதாக ராஜன் செல்லப்பா சொல்வது சரியல்ல.

அண்ணா பல்கலைக்கழக பொறியாளர்களை வைத்து ஆய்வு செய்ததாக கூறியுள்ளார். அது எப்பொழுது நடந்தது? அந்த அறிக்கைகள் எங்கே? கண்காணிப்பு குழுவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினருக்கு கூட தெரியாமல் எப்படி நடந்தது? 28.02.2020 அன்று நடந்த மாவட்ட வளர்ச்சி கண்காணிப்பு கூட்டத்தில் பொறுப்பேற்க வேண்டிய ஆணையாளரோ, நகர்ப்பொறியாளரோ ஏன் வரவில்லை? 

திட்ட மதிப்பீடுகள் உயர்ந்தது ஏன்?
முதல் கூட்டத்தில் பெரியார் பேருந்து நிலைய திட்ட மதிப்பீடு 159.70 கோடியாகவும், இரண்டாவது கூட்டத்தில் 162 கோடியாகவும், மூன்றாவது கூட்டத்தில் 167.7 கோடியாக தொகை உயர்த்தியதின் காரணம் என்ன? தொகையை உயர்த்தி விட்டு பேருந்து நிறுத்தங்களின் எண்ணிக்கையை முதலில் 67 என்றும், பின்னர் 59 என்றும் குறைத்தது ஏன்? \திட்ட மதிப்பீட்டு தொகையை திருத்தி வைக்கப்படும் போது அதற்கான மதிப்பீடுகளும், ஒப்புதலும் எங்கே பெறப்பட்டது? 4 மாசி வீதிகளில் சிறப்பு சாலை திட்ட பணிக்கு முதல்கட்டமாக 47.92 கோடியாகவும், 2வது கட்டத்தில் இது 53 கோடியாக உயர்ந்து 19.01.2021 நடந்த கூட்டத்தில் 50 கோடியாக குறைத்து காண்பிக்கப்படுகிறது. இதுவே திட்டத்தில் உள்ள குளறுபடிகளை வெளிப்படுத்துகிறது. 4 மாசி வீதிகளில் நடைபெற்று வரும் பணிகளில் மழைநீர் சேகரிப்புக்கோ, மரம் வளர்ப்பதற்கோ எந்த ஏற்பாடுகளும் இருப்பதாக தெரியவில்லை. அடுத்து நடைபெறும் கீழமாசி வீதியில் சாலை நடைபாதை புதுப்பிக்கும் பணியின் போது நெருக்கடியை தவிர்க்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

இருள் சூழ்ந்த மர்மம் என்ன?
ஏற்கெனவே நீண்டநாட்களாக பயன்பாட்டில் இருந்த தெருவிளக்குகளை யாருக்கும் தெரியாமல் 29.06 கோடி செலவில் எல்.இ.டி. விளக்காக மாற்றி இருள் சூழ்ந்த நகரமாக மாற்றிய மர்மம் என்ன? 

இதேபோன்று வைகையை ஒட்டியுள்ள சாலைப் பணிகளை எந்த துறை செய்கிறது என்பதே குழப்பமாக உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் 70 சத பணிகள் நிறைவடைந்துள்ளது என்று கூறப்பட்டது. 5 மாதங்களுக்கு பின் நடைபெறக்கூடிய கூட்டத்திலும் அதே 70 சதம் பணிகள் நிறைவடைந்துள்ளது என்று கூறுவதில் திட்டம் எவ்வளவு ‘வேகமாக’ நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.இந்த திட்டத்தின் மூலம் மதுரை மாநகரம் பொலிவு பெறவில்லை. பசுமை நகராக மாற்றுவதற்கான எந்த உருப்படியான நடவடிக்கையும் இருப்பதாக தெரியவில்லை. ஒட்டுமொத்த பணிகளும் தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் திரு.ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சி அமைச்சர் திரு.வேலுமணி ஆகியோருக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனங்களே பணிகளை மேற்கொண்டு வருவதாக மதுரை மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

இதன் காரணமாகவே, திட்ட அதிகாரிகள் ஏதும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். மக்கள் நலன் சார்ந்து ஒரு எம்.பி., என்ற முறையில் திட்டத்தின் இணைத்தலைவர் என்ற பொறுப்பினை உணர்ந்து ஆய்வுக் கூட்டங்களையும், நல்ல தலையீடுகளையும் செய்தால் அதை அவதூறு என்று சொல்வது நீண்ட கால அரசியலில் ஈடுபட்டு வரும் திரு.ராஜன் செல்லப்பா போன்றோருக்கு அழகல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

அறிக்கை :  இரா.விஜயராஜன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

                                              **************************

நாங்கள் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் ஆனாலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோழர்.சு.வெங்கடேசன் அவர்கள் வெற்றி பெற்ற பிறகு தான் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு என ஒன்று இருப்பதும் அதே போல ஸ்மார்ட்சிட்டிக்கான ஆலோசனைக்குழு இருப்பதும் அதில் சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதும் தெரியவந்தது. அது தெரியவந்தது முதல் இந்த கூட்டத்தை கூட்டுவதற்கான முயற்சிகளை சு.வெங்கடேசனும் நானும் மேற்கொண்டோம். தொடர்ச்சியாக பலமுறை மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி இறுதி வரை கூட்டாமல் இருந்ததன் காரணமாகவே ஸ்மார்ட்சிட்டி ஆலோசனைக்குழுவின் இணைத்தலைவர் என்கிற முறையில் அந்த கூட்டத்தை தானே கூட்டுவதாக எம்.பி., சு.வெங்கடேசன் என்னிடம் கூறினார். கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தான் மாவட்ட நிர்வாகம் எங்களுடைய அழுத்தத்திற்கு பணிந்து மறுநாளே கூட்டத்தை நடத்துகிறோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அறிக்கை  : மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 

                                              **************************

தொல்லியல் மையங்கள் 

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் மிக முக்கியமான அம்சமே அந்த நகரத்தின் தொல்லியல் பகுதிகளை பாதுகாத்து அதை மேலும் மேம்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவருவதுதான். இந்தியா முழுமைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகரங்களில் எல்லாம் இந்த திட்டத்தின் கீழ் வரும் நிதியை அப்படியான தொல்லியல் பகுதிகளில் மேம்பாட்டிற்கு செலவழிப்பதைத்தான் முதன்மையான ஒதுக்கீடாக கொண்டுள்ளனர். ஆனால் தமிழகத்திலும் நமது மதுரையிலும் தான் புதிய கட்டிடங்களையும் சாலைகளையும் உருவாக்குவதற்கு ஸ்மார்சிட்டி திட்டத்தின் பெரும்பான்மையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவிடப்பட்டு இருக்கிறது என்பதை ஆலோசனைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தார் சு.வெங்கடேசன். அதற்கு உதாரணம்தான் பெரியார் பேருந்து நிலையம், புதிய பழ அங்காடி, புதிய வாகன நிறுத்தங்கள், வைகையின் கரையில் அமையும் சாலைகள் போன்றவை. 

 திருமலை நாயக்கார் மஹாலைச் சுற்றி பூங்கா அமைத்தல் என ஒரு பணி திட்டமிடப்பட்டு முடிக்கப்பட்டு இருக்கிறது. திருமலை நாயக்கார் மஹால் என்பது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதி. அது சார்ந்த மேம்படுத்துதல் நடவடிக்கைக்காக இந்திய தொல்லியில் துறையிடமோ அல்லது மாநில தொல்லியல் துறையிடமோ உரிய அனுமதி பெறப்பட்டதா என்ற சு.வெங்கடேசனின் கேள்விக்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒருபுறம் தங்களுக்குத் தெரியாத காரணங்களையெல்லாம் கூற, மறுபுறம் வடக்குத் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா, இப்பிரச்சனையில் மாநகராட்சி தொல்லியல் துறையோடு பேசி இதனை முடிக்க வேண்டுமென குறுக்குச்சால் ஓட்டிக்கொண்டு இருந்தார். மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “ இது மாநகராட்சி அதிகாரிகளின் கவனக்குறைவு மட்டுமல்ல, இந்திய தொல்லியல் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல்” என்பதை கவனப்படுத்தினார். 

அதைப் போலவே பெரியார் பேருந்து நிலையம் விரிவாக்கம் என்ற பெயரில் அங்கு மதுரையின் மாபெரும் அடையாளமாக இருக்கக் கூடிய மதுரை கோட்டையை எந்தவிதமான கவனத்திலும் கொள்ளாமல் அதற்கு அருகிலேயே சுற்றுலா தகவல் மையத்தை அமைக்கிறோம், மேலும் அதன் மாடியில் தனியாருக்கு விடக்கூடிய வகையில் தங்கும் அறைகளை அமைக்கிறோம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ‘ஸ்மார்ட்சிட்டி’ என்று சொல்லிவிட்டு மதுரையின் முக்கியமான இந்த கோட்டையைக்கூட சுற்றுலா மையத்தோடு இணைத்து பயன்படுத்துகிற ஏற்பாடு ஏன் இந்த திட்டத்தில் யோசிக்கப்படவில்லை என்ற சு.வெங்கடேசனின் கேள்விக்கு, மதுரை கோட்டைக்கும் சுற்றுலா மையத்திற்கும் இடையில் ஒரு சிறிய இரும்பு பாலம் அமைத்து இணைத்து விடுகிறோம் என்று சமாளித்தார் மாநகராட்சி ஆணையர். 

ஒட்டுமொத்த மதுரையின் மையப்பகுதி முழுமைக்கும் சேர்த்து இருப்பது ஒரே ஒரு பூங்காவான ஜான்சிராணி பூங்கா மட்டும் தான். இருக்கும் இந்த பூங்காவையும் அழிக்கும் நோக்கில் பெரிய வணிக வளாகத்தை ஏன் கட்டியுள்ளீர்கள் இதற்கும் ஸ்மார்சிட்டி திட்டத்திற்கும் என்ன தொடர்பு என்ற சு.வெங்கடேசனின் கேள்விக்கு பதில் எதுவும் இல்லை. இதே நிலைதான் இவர்கள் தமுக்கம் மைதானத்தில் கலாச்சார மையம் அமைக்கும் பணியிலும்.