கடந்த 2011ஆம் ஆண்டு முதல் கடலோர சமூகங்களில் வாழ்வியல் பிரச்சனைகளை பொதுவெளியில் கொண்டுவர தொடர்ந்து இயங்கி வருகிறது. குறிப்பாக மீனவர்களின் வாழ்வியல் பிரச்சனைகள் மற்றும் கடலோரத்தை ஆதாரமாக கொண்டு வாழும் உப்பு காய்ச்சும் தொழிலில் ஈடுபடுவோர், சங்கு எடுக்கும் தொழிலில் உள்ளோர், இறால் பண்ணகளால் அழியும் கடலோர இயற்கை வளங்கள், உள்நாட்டு மீன் பிடி தொழிலாளிகள், பழங்குடியினர், பெண்கள் என பல தளங்களில் குரல் கொடுத்து வருவதோடு கடலோரம் எண்ணெய்சுத்திகரிப்பு நிறுவனங்கள், ஹைட்ரோ கார்பன் திட்டம் என வரும், பெரும் நிறுவனங்களால் வாழ்விழக்கும் மக்கள் குரலையும் எதிரொலித்து வருகிறோம்.
தமிழகத்தின் டெல்டா, தெற்கு, கொங்கு, வட மாவட்டங்கள் என ஒவ்வொரு மண்டலமும் அதற்கேயான தனித்தன்மைகளை கொண்டுள்ளன. இம் மண்டலங்களில் கடற்கரையும் அடக்கம்தான் என்றாலும், இதில் இருந்துமுற்றிலும் வேறுபட்டதாக கடற்கரை சூழலும், பண்பாடும் உள்ளன. இம்மண்டலங்கள் அனைத்திலும் கடற்கரைஎன்பது புறந்தள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. மேற்குறிப்பிட்ட தமிழக கடற்கரை மண்டலங்களானது பூலோகவியல் ரீதியிலும், சமூக ரீதியிலும் பன்முகத் தன்மையோடு இருப்பதைப் போல் அதன் அரசியல் பொருளாதார பிரச்சனைகளும் வேறுபட்டதாக உள்ளன. சோழமண்டலக் கடற்கரை, பாக்நீரிணை, மன்னார்வளைகுடா, மேற்குக்கடல் என இந்த மண்டலங்களுக்கு ஏற்ப பிரச்சனைகளும் பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளன.
கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் எதிர்கொண்டுள்ள போராட்டங்கள் சூழலியலை, கடற்கரையை சார்ந்ததாகவே உள்ளது. சுனாமிக்கு பிறகு கார்ப்பரேட்களின் கவனம் கடற்கரையை நோக்கி திரும்பியுள்ளதே இதற்கு முக்கிய காரணம்எனலாம். கடற்கரை மண்டலத்தின் வளம், போக்குவரத்து வசதி ஆகியன வர்த்தகத்திற்கும் பரிமாற்றத்திற்கும் உகந்தஇடமாகவும் உள்ளன. முக்கியமாக ஆலைகளின் கழிவுகளை வெளியேற்ற கடலும், அதன் உள்நாட்டு நீர்நிலைகளும் உகந்த இடங்களாக கார்ப்பரேட் நிர்வாகங்கள் கருதுகின்றன. அனுமின் நியங்கள், அனல்மின் நிலையம், பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு நிலையங்கள், ரசாயன தொழிற்சாலைகள், இத்தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய, தயாரித்த பொருட்களை ஏற்றுமதி செய்ய பெரும் துறைமுகங்கள் எனகடற்கரை எங்கும் தொழிற் வளர்ச்சிக்கான கட்டுமானப்பணிகள் நிறைந்த வண்ணம் உள்ளன. மறுபுறம் சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் கடற்கரையோரங்களில் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் அதிகரித்து வருகின்றன. நீலப் புரட்சி என்ற பெயரில் இறால் பண்ணைகள் அதிகரிப்பதால் விவசாய நிலங்கள் பாதித்து, நிலத்தடி நீரில் உவர் தன்மை அதிகரித்துவருகிறது. இதனால் குடிக்கவே நீரற்ற நிலையும், விவசாயம்அழியும் சூழலும் உள்ளது. இதுவல்லாமல் தொழிற் பேட்டைகளும் (சிப்காட்) கடற்கரையோரம் விரிவாகி வருகின்றன.
இத்தொழில் முயற்சிகளால் கடற்கரை மண்டலத்தில் சமூகப் பொருளாதார பரிவர்த்தனை அதிகரித்துள்ள அதே வேளையில் கடலரிப்பால் வாழ்விடம் இழப்பு, சாம்பல் - ரசாயனக் கழிவுகளால் மீன் வளக்குறைவு. நிலத்தடி நீர்பாதிப்பு, பொது சுகாதாரச் சீர்கேடு, சமுதாய மக்களிடையே உள் முரண்பாடு என பல இடர்களை கடற்கரை மக்கள் சந்திக்கின்றனர். பெரும் தொழில் நிறுவனங்களின் வேட்டைக் காடாக கடற்கரை மண்டலம் மாறியுள்ளதால் அந்நிலத்தில் இருந்து மக்கள் அந்நியப்படுவதும் அதிகரித்துள்ளது. இந்நெருக்கடிகளுக்கு எதிரான பெரும் மக்கள் வெடிப்புகளே கூடங்குளம் அணுவுலை, இனயம் துறைமுகம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆகிய எதிர்ப்பு போராட்டங்கள்.
கணக்கில் அடங்காத பொய் வழக்குகள்
2011ல் துவங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நீடித்த கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்ட இடிந்தகரை, கூத்தங்குழி, வைராவிகிணறு, விஜயாபதி, கூடன்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட 35 வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. சராசரியாக 1 நபர் மீது 25வழக்குகள் உள்ளன. 2013 மே 6 அன்று உச்சநீதிமன்றம் போராட்டக்காரர்கள் மீதான வழக்கை திரும்பப் பெறஅறிவுறுத்தியும் பெறாததால் வழக்கிற்காக அம்மக்கள்அலைந்து வருகின்றனர். இதே போலத்தான் ஸ்டெர்லைட்எதிர்ப்பு போராட்டத்திலும், இனயம் துறைமுக எதிர்ப்புபோராட்டத்திலும், இறால் பண்ணைகள் மற்றும் சிப்காட்விரிவாக்கங்களுக்கு எதிரான போரட்டத்திலும் போராட்டக் குழுவினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் கணக்கில் அடங்காதவை.
2015 ஆண்டு மழை வெள்ளம், வர்தா, ஒக்கி, கஜா,நிவர் என இயற்கையின் தாக்குதலும், அரசின் பாராமுகமும் மீனவர், விவசாயி, நிலமற்ற விவசாய கூலிகள், உப்பளத்தொழிலாளர், பழங்குடிகள் என அனைவரையும் சேர்த்தே பாதித்தது. இந்தப் பின்னணியில் கடலோர மக்கள்வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கடந்த ஜனவரி இறுதியில் நாகப்பட்டினத்தில் கடலோர சமூகங்களின் உரிமைகள் – பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் என்ற தலைப்பில், தமிழகத்தில் கடலோர மக்களுக்காக தொடர்ந்து செயலாற்றி வரும் பல்துறை வல்லுனர்கள் ஒன்றுகூடி கலந்தாய்வு கூட்டம் நடத்தி கீழ்க்காணும் கடலோர மக்களின் கோரிக்கைசாசனத்தை உருவாக்கி உள்ளோம்.தாங்கள் தங்களுடைய கட்சியின் தேர்தல் அறிக்கையில் இக்கோரிக்கைகளை இணைத்திட ஆலோசித்து ஆவன செய்ய வேண்டுகிறோம்.
கோரிக்கை சாசனம்...
$ புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் மீன்வள மசோதா மீன்பிடித் தொழிலை கார்ப்பரேட் மயமாக்கும் வகையிலும், சிறுதொழில் மீனவர்களை கடல் தொழிலில் இருந்து வெளியேற்றும் வகையிலும் உள்ளன. மேலும் உவர்நீர் மீன் மற்றும் இறால் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளன. எனவே இம்மசோதாவை மாநில அரசு நிராகரிக்க வேண்டும்.
$ நீலப்புரட்சியின் கீழ் அறிமுகமாகியுள்ள புதியத் திட்டங்கள் யாவும் கட்டுமான பணி சார்ந்தே உள்ளதே தவிரமீன் பதப்படுத்துதல், பரிமாற்றத்தில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவில்லை. Post harvest துறையில் அதிக நிதியும், திட்டமிடல்களும் அரசிற்கு தேவை.
$ சூரை மீன் பிடிப்பதற்காக மட்டும் புதிய துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. ஏற்கனவே திருவொற்றியூரில் அமைய இருந்த சூரைமீன் துறைமுகம் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அனுமதி ரத்துசெய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தேங்காய்பட்டிணம் துறைமுகத்தின் தொழிற்நுட்ப கோளாறுகளால் மீனவர்கள் உயிரும், உடமையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மேலும் புதிய துறைமுகங்கள் கட்டுவதற்கு பதிலாக இருக்கும் துறைமுகங்களை முறைப்படுத்த வேண்டும்.
கடற்கரை வளர்ச்சி திட்டங்கள்
$ திருவள்ளூர் முதல் கடலூர் வரை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், அனல் மின் நிலையங்கள், சிப்காட் நிறுவனங்கள், சாயக்கழிவு ஆலைகள் போன்றவை தொழிற் மயத்தின் பெயரால் கடற்கரை நிலங்களை சீரழித்துள்ளன. மேற்கொண்டு நிலம் பாதிக்காத வண்ணம், புதிய வளர்ச்சித் திட்டங்கள் நிராகரிக்கப்பட வேண்டும்.
$ பெரிய அளவிலான கடற்கரை நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் திட்டமான காட்டுப்பள்ளி (அதானி) துறைமுக விரிவாக்கத்திட்டம் உள்ளது. சுமார் 6 ஆயிரம் ஏக்கர்நிலம் கரையிலும் கடலிலும் ஆக்கிரமிக்கப்படும். இத்திட்டம்நிறைவேற்றப்பட்டால் பழவேற்காடு ஏரியே கடலில் மூழ்கும். 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் அழிக்கப்படும். இத்திட்டத்திற்கான அனுமதியை அரசு வழங்கக்கூடாது.
$ சட்டத்தை மதிக்காமல், சூழல் சீர்கேட்டில் ஈடுபடும்தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிறுவனங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக சமூக தணிக்கை குழுக்களை அமைக்க வேண்டும். இதில் அரசின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசுசாரா அமைப்பின் பிரதிநிதிகள், எழுத்தாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.
மீனவர்கள்
$ பருவநிலையில் அதிக மாற்றங்கள் இக்காலத்தில் ஏற்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையின் காலத்தில் நிலையற்ற தன்மை உள்ளது. கடல் சீற்றம் நீண்ட நாட்கள் உள்ளதால், மீனவர்கள் அதிக நாட்கள் தொழிலின்றி தவிக்கின்றனர்.
$ இயற்கை பேரிடரின் பாதிப்புகளும் அதிகரித்துள்ள நிலையில் வருடம் தோறும் வழங்கப்படும் மழைக்கால இழப்பீட்டு நிதியை உயர்த்தி பத்தாயிரம் ரூபாயாக வழங்க வேண்டும்.
$ தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் அனைத்து வகையான இரட்டைமடி, சுருக்குமடி மீன்பிடி கலன், வலைகள் மீதான தடையைமுறையாக உறுதிசெய்ய வேண்டும்.
$ கன்னா உள்ளிட்ட சுருக்கு மடியில் முதலீடு செய்துள்ள மீனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
$ மீனவர் கூட்டுறவு அமைப்புகள் தன்னிச்சையானஅமைப்பாக செயல்படவும், மீன் கொள்முதல் ஏற்றுமதிஉள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடும் வகையில்பொருளாதார, சட்டரீதியாக அதிகாரம் கொண்ட அமைப்பாகமாற்ற வேண்டும்.
$ CRZ (2) பிரிவில் உள்ள தனுஷ்கோடி, அரிச்சல்முனை ஆமை முட்டையிடும் பகுதியில் கற்களைகொட்டுவதை தடுத்திட வனஉயிரின பாதுகாப்பு சட்டம் 1972 ஐ முறையாக அமல்படுத்த வேண்டும்.
$ ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திலும்,இனயம் துறைமுகம், கூடங்குளம் போராட்டக் குழுவினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
$ அரசியல் தளத்தில் மீனவர் பிரதிநிதித்துவம் குறித்தவிவாதங்கள் அதிகரித்துள்ளன. மண்டல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கடற்கரை மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
உள்நாட்டு மீனவர்கள்
$ ஏரி, குளங்களில் பாரம்பரிய உள்நாட்டு மீனவர்களுக்கே முதல் உரிமை. டெண்டர் முறைகளை கைவிட்டு, கூட்டுறவு அமைப்புகள் மூலம் வளத்தை பகிர, மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
$ பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை கீழ் இயங்கும் அணைகள் அனைத்திலும் தனியார் டெண்டர்களை ரத்துசெய்துவிட்டு, கூட்டுறவு அமைப்புகள் மூலம் மீன்பிடித்தல், விற்பனையை முறைப்படுத்த வேண்டும்.
உப்பளம்
$ உப்பளத் தொழிலாளர்களை, தொழிற்சாலை தொழிலாளர் சட்டத்தின் (Industrial Labour act) கீழ் கொண்டுவர வேண்டும். உப்பளத் தொழிலாளர்களுக்கு EPF, ESI உள்ளிட்டவை கிடைக்க ஏற்பாடு செய்திடல் வேண்டும். பணிக்கால பயன்களும், ஓய்வுக்கால பயன்களும் ஓய்வூதியமும் கிடைத்திட ஏற்பாடு செய்திட வேண்டும்.
$ அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தைஉப்பளத் தொழிலாளர்களுக்கு உறுதிசெய்ய வேண்டும். மழைக்கால நிவாரணம் கிடைத்திட ஆவன செய்ய வேண்டும்.
$ உப்பளத் தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். முதலில் அனைத்து உப்பளங்களிலும் கழிவறைகள் கட்டுவதை, அவசர பணியாக மேற்கொள்ள வேண்டும்.
$ உப்பளத் தொழிலாளர்களின், தொழில்சார் (occupational hazard) உடல்பாதிப்புகளை சீரான கால இடைவெளியில் பரிசோதனை செய்ய தொடர்புடைய மாவட்ட தொழில்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.
இறால் பண்ணைகள்
$ இறால் பண்ணைகளால் விவசாயிகளும், மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இறால் பண்ணைகளால் நிலத்தடி நீரின் உவர் தன்மை அதிகரிக்கின்றது. பண்ணைகள் இயங்கும் பகுதிகளில் விவசாய நிலம் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் பிரச்சனையும் அதிகரித்துள்ளன.
$ திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டிணம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் என பல மாவட்டங்களின் விவசாயிகளும், மீனவர்களும் இறால் பண்ணைகளுக்கு எதிராக உள்ளனர். எனவே உவர் நீர் இறால் பண்ணைகளை மாற்று பொருளாதார தொழிலாக அரசு கருதுவது ஏற்புடையதல்ல.
$ பல இறால் பண்ணைகள் உரிமம் பெறாமலும், உரிமம் பெற்றதை விட அளவுக்கு அதிகமான நிலப்பரப்பில்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல நிலத்தடிநீரை உறிஞ்சும் மோட்டார்கள் குழாய்கள் வைக்கஅனுமதியே இல்லை. ஆனால் ஆயிரக்கணக்கில்இயங்கிக் கொண்டிருக்கின்றன. உரிய மாவட்ட நிர்வாகங்கள் இதனை முறைப்படுத்த வேண்டும்.
$ பழவேற்காடு, முத்துப்பேட்டை, பிச்சாவரம், இராமேஸ்வரம் போன்ற சூழலியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் கூட சட்டத்தை மீறி இறால் பண்ணைகள் இயங்குகின்றன.
$ அலையாத்திக் காடுகள், பவளப்பாறைகளைஅழித்து கழிவுநீர் வெளியேற்ற கால்வாய்கள் அமைக்கப்படுகின்றன.
சங்கு குளித்தல்
$ கடலில் நேரடியாக மூழ்கி சங்கு குளிக்கக் கூடியதொழில் அபாயகரமானதாக உள்ளன. பல உயிர் இழப்புகள் நிகழ்ந்துள்ளன. மீனவர்கள் பலர் ‘decompression sickness’ பாதிப்பால் உடல் பாகங்கள் செயலிழந்துள்ளன. சங்கு ஏற்றுமதி செய்யும் முகவர்களின் லாபத்திற்காக ஏழைத் தொழிலாளர்கள் உயிரிழப்பதை தவிர்க்க, இந்த முறையை தடைசெய்ய வேண்டும்.
பழங்குடிகள்
$ ஆற்றில் மூழ்கி இறால், நண்டு, மீன் பிடிக்கும் இருளர்,எனாதி உள்ளிட்ட பழங்குடிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவேண்டும். இவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் இவர்களை சட்டவிரோதமாக சில பூச்சி (Polycheatea) வகைகளை ஆற்றுப் படுகையில் இருந்து சேகரிக்கச் செய்து, கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். இப்பூச்சிகள் இறால் குஞ்சுபொறிப்பகங்களுக்கு இரைக்காக பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் ஆந்திராவிற்கு கடத்தப்படுகின்றன. இதை முறைப்படுத்திட வேண்டும்.
$ மீனவர் நலத்துறையின் கீழ் வழங்கப்படும் நலத்திட்டங்கள் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆற்றில் நண்டு வளர்ப்பு போன்ற பொருளாதார வாய்ப்புகளைபழங்குடிகளுக்கு வழங்க வேண்டும்.
$ இவர்களுக்கான சாதி சான்றிதழ் பல இடங்களில் கொடுக்கப்படாமல் உள்ளன. இதனால் பல அரசின் சலுகைகள் இவர்களுக்கு கிடைப்பதில்லை. இதற்காக தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டும்.
$ மத்திய, மாநில அரசுகள் கடலோர மக்கள் வாழ்வாதாரத்தின் மீது தொடுத்துவரும் தாக்குதல்கள் வரலாற்றில் என்றும் இல்லாத அளவு அதிகரித்துள்ள சூழலில் தங்கள் கட்சி நிச்சயம் இதற்கு மாற்று வழியை, கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் இந்த கோரிக்கை சாசனத்தை தங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
படக்குறிப்பு : கடலோர மக்களின் கோரிக்கை சாசனத்தை சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக தலைவர்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மமக செயலாளர் அமீன் ஆகியோரிடம் கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவர்கள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஜெய்சங்கர்,
மோசஸ் பிரபு, முத்தழகன் ஆகியோர் வழங்கினர்.
தொகுப்பாளர் : எஸ்.ஜி.ரமேஷ்பாபு, கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்
குறிப்பு : இந்தக் கட்டுரைத் தொகுப்பு இதே பக்கத்தில் (4-ஆம் பக்கம்) இரண்டு தொகுப்பாக அதாவது தலையங்கத்துக்கு கீழே பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத்தொகுப்பிலேயே கட்டுரை ஒரே தொகுப்பாக கொடுக்கப்பட்டு உள்ளது