முற்போக்கு எது? பிற்போக்கு எது?
கவிஞர் தமிழ் ஒளி கடலூர் மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவருடைய வாழ்க்கை சென்னை, புதுவையில் தான் இருந்தது. சென்னையில் ஏன் வாழ்ந்தேன் என்று அவரே சொல்லும் போது குந்தக் குடிசை இல்லாமல் தெருவோரம் வாழும் மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுடைய வாழ்வினை தெரிந்து கொள்ளலாம் என்பதால் அங்கு வாழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த போது மிகவும் நெருக்கடியான காலகட்டம். கட்சி தடை செய்யப்பட்ட நேரம். அடக்கு முறையைச் சந்திக்கிறார். கட்சியில் சேர்வதற்கு முன்பே அவர் கம்யூனிச, சோசலிச கருத்துகளின் பால் ஈர்க்கப்பட்டு இருந்தார்.
குடியரசு பத்திரிகையில் சோவியத் யூனியன் பற்றி பெரியார் எழுதியது, கம்யூனிஸ்ட் அறிக்கை ஆகியவற்றைப் படித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்கப்படுகிறார். 1965 ஆம் ஆண்டு மரணம் அடைவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது சுய விளக்க அறிக்கையில் தான் யார் என்று சொல்கிறார். நில பிரபுத்துவமும், முதலாளித்துவமும் தீமைகளை செய்து கொண்டிருக்கின்றன; இவை இரண்டையும் எதிர்த்து தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் போராட்டங்களை உள்வாங்கி இலக்கியம் படைக்க வேண்டும் என்று சொல்கிறார். இருக்கும் சமூகத்தை எதிர்த்துப் போராடினால் மட்டும் போதாது, புதிய சமுதாயம் உருவாக்கப் போராட வேண்டும் என்று என்னை அடையாளப்படுத்திக் கொள்கிறேன் என்று தெரிவிக்கின்றார்.
அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய கவிஞராக தமிழ் ஒளி இருந்திருக்கிறார். பத்திரிகை ஆசிரியராக, சிறுகதை எழுத்தாளராக, நாடக ஆசிரியராக, குழந்தைகள் பாடல் ஆசிரியராக, இலக்கிய திறனாய்வாளராக, ஆராய்ச்சியாளராக எனப் பல பரிமாணங்களைக் கொண்டவராக கவிஞர் தமிழ்ஒளி திகழ்ந்தார். பரிமேலழகரின் திருக்குறள் உரை அனைவராலும் ஏற்றுக்கொள்வதாக இருக்கும். அதையே கூட, திருவள்ளுவர் சொல்லியதைத் தாண்டி இவர் எழுதியுள்ளார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா? என்று ஒரு நூலை எழுதியுள்ளார். அதன் முடிவில் சிலப்பதிகாரம் காவியமும் அல்ல, நாடகம் அல்ல, இசை நாடகமென்று தெரிவித்துள்ளார்.
தமிழ் ஒளியின் சமூகப் பார்வை என்று சொல்லும் போது வர்க்கம், சாதி இரண்டும் இணைந்தது தான் நமது சமூகம் என்ற பார்வையாகத் தான் இருந்துள்ளது. சோசலிச எதார்த்த வாதம் என்பதை உயர்த்திப் பிடித்தார்.
நண்பருக்கு எழுதிய கடிதத்தில் தமிழ் ஒளி, தமிழ்நாட்டின் முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவராக உள்ளேன்; சர்வதேச நிகழ்ச்சிப் போக்குகளின் நீட்சியாக தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இயக்கம் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் என்று தெரிவிக்கிறார். அந்த அமைப்பை ஏற்படுத்தி அறிக்கையை முன் வைக்கிறார்கள். அதில் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்து உள்ள சூழலில் மக்களின் வாழ்க்கை தாகத்தை, மக்கள் சந்திக்கும் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளை இலக்கியத்தில் பிரதிபலிக்க வேண்டும் என்று அந்த அறிக்கை விவரிக்கிறது.
பிற்போக்கு எது, முற்போக்கு எது என்ற விளக்கத்தை தமிழ் ஒளி தருகிறார். நம்மையெல்லாம் நம்பிக்கை இழக்க வைத்து, முன்னேறாமல் தடுப்பது பிற்போக்கு. அதை நாங்கள் நிராகரிக்கின்றோம். நம்மைக் கிளர்ச்சி கொள்ள வைத்து, உணர்வை ஊட்டி, மாற்றத்திற்காக செயல்படுவதை முற்போக்கு என்று சொல்லுகின்றோம்; அதனை ஆதரிக்கிறோம் என்று அன்று விளக்கம் கொடுத்தார்.
சீனப் புரட்சியை பாராட்டி எழுதிய முதல் கவிஞர் தமிழ் ஒளி. மே தினத்தை முதன் முதலில் வரவேற்றுப் பாடிய கவிஞரும் தமிழ் ஒளிதான்.