articles

img

ஏ.பி.யை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த பெரியார்....

1952 ஆம் ஆண்டில் நடைபெற இருந்த பொதுத்தேர்தலுக்கான தயாரிப்புகள் 1951 ஆம் ஆண்டின் இறுதியில் துவங்கப்பட்டன.இதையொட்டி தலைமறைவாக இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி, தந்தை பெரியாரை ரகசியமாகச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு சென்னை ஷெனாய் நகரில் உள்ள குத்தூசி குருசாமி வீட்டில் பல நாட்கள் நடைபெற்றன.

கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில சுயாட்சி கோரிக்கையை ராமமூர்த்தி பெரியாருக்கு விளக்கிக்கூறி, திராவிடர் கழகமும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றும் கம்யூனிஸ்ட் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் வற்புறுத்தினார்.இதையடுத்து, திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாது என்று கூறிய பெரியார், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.அதுவும் பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகளாகிய பி.ராமமுர்த்தியையும் ஏ.பாலசுப்பிரமணியத்தையும் ஆதரித்துக் கூட்டங்களில் பேசினார்.திண்டுக்கல் கூட்டத்தில் பெரியார் ஒரு புதிய தகவலைக் கூறினார்.அவருக்கு முன்பாக பேசிய ஏ.பாலசுப்ரமணியம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில சுயாட்சித்திட்டம் குறித்து விரிவாகப் பேசினார்.அந்தப் பேச்சு முழுவதையும் உன்னிப்பாகக் கேட்ட பெரியார், கம்யூனிஸ்ட்கள் விரும்பும் மாநில சுயாட்சியை அடிப்படையாகக் கொண்டசமஷ்டி இந்தியாவாக இருந்தால், இது பாலசுப்ரமணியம் விளக்கியபடி இருக்குமானால் நான் தனித் திராவிடநாடு கோரிக்கையை வற்புறுத்த மாட்டேன் என்று பிரகடனம் செய்தார்.

“பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பார்ப்பானை அடி என்று கூறுகிறீர்களே, இப்போது ஏ.பிக்கு ஓட்டு போடச் சொல்கிறீர்களே சரியா?” என்று பெரியாரிடம் கேட்கப்பட்டது.அதற்கு பெரியார், ஏ.பி. பூணூல் அணியாதவன். நாஸ்திகன். நான் சூத்திரனாக இருந்துபார்ப்பனீயத்தை எதிர்ப்பதை விட பிராமணனாக பிறந்து நாஸ்திகனாக இருப்பது அபூர்வம்.அவரைப்போன்று 10 பேர்கள் இம்மாதிரி பிராமணனாகப் பிறந்தோர் நாஸ்திகனாக மாறினால் எனது கழகத்தைக் கலைத்து விடுவேன். ஏனெனில் எனது வேலை சுலபமாக முடிந்துவிடும் என விளக்கமளித்து ஏ.பிக்கு வாக்களியுங்கள் என்று பெரியார் மக்களை கேட்டுக் கொண்டார்.இதுபோன்றே மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தனது நண்பர் பி.டி.ராஜனை ஆதரிக்காமல், அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பி.ராமமூர்த்தியை ஆதரித்தார். 

கட்டுரையாளர் : சச்சிதானந்தம், சிபிஎம் மாவட்டச் செயலாளர், திண்டுக்கல்