articles

img

அரசியல் சட்டக் கடமையை புறக்கணிக்கும் ஆளுநர் ரவி நீடிக்கத் தகுதியில்லை

தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி தன் பொறுப்பை உணர்ந்து செயல்படக் கூடியவராக இல்லா மல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருகிறது. 

தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஆளுநர் உரையை வாசிக்காமல் அவர் புறக்கணித்திருப்பது ஆர்.என்.ரவியின் உச்சக்கட்ட அராஜக அரசியல் ஆகும். தமது உரைக்கு முன்னதாக தேசிய கீதம் பாடவில்லை என்று சால்ஜாப்பு கூறியுள்ளார்.

இவர் ஒன்றிய அரசினால் தமிழ்நாட்டிற்கு அனுப்பப் பட்டுள்ள ஒருஅதிகாரி. மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதியல்ல. எந்த பிரச்சனையின் மீதும் தமிழ் நாட்டில் உத்தரவு பிறப்பிப்பதற்கு இவருக்கு தனி அதிகாரம் கிடையாது. 

ஆட்டுக்கு தாடி அவசியமில்லை

மாநிலங்களுக்கு ஆளுநர் வேண்டாம் என்பதே கம்யூனிஸ்ட்டுகள் நிலைபாடு. இதேபோல் பல கட்சிக ளுக்கு கருத்து இருந்தது இப்போதும் உள்ளது. அன்றைய திமுகவினுடைய தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள், அவருடைய பாணியில், “ஆட்டுக்கு தாடி எவ்வளவு அவசியமற்றதோ, அது போல தான் நாட்டுக்கு கவர்னரும். தேவையற்ற குழப்பத்தையே அது உருவாக்கும்” என்றார். பாஜக அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மோதல் போக்கை உருவாக்க ஆளுநரை பயன்படுத்தி வரு கிறது. தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி மாநில அரசி னுடைய நடவடிக்கைகளை அரசு விழாவில் அல்லது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பொது நிகழ்ச்சிகளில் பகிரங்கமாக எதிர்த்து விமர்சனம் செய்கிறார். திருக்குறள் குறித்தும், கம்பராமாயணம் குறித்தும், சங்க கால இலக்கியங்கள் குறித்தும் எல்லாமே தெரிந்தவர் போல் இட்டுக்கட்டி பல கருத்துக்களை குறிப்பிடுகிறார். வள்ளலாரைப் பற்றி இவர் கூறிய கருத்து தமிழ்நாட்டில் வலுவான எதிர்ப்பை உருவாக்கியது. இவை குறித்து வருகின்ற விமர்சனங்க ளை ரவி கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. தான் சொல்வது அனைத்தும் சரி என்று அதை நியாயப் படுத்தி முரட்டுத்தனமாக பதில் சொல்கிறார்.  

வெண்மணியில் குழப்பம் விளைவிக்க முயற்சி
சமீபத்தில் இவர் நாகப்பட்டினம் மாவட்டம் வெண் மணி கிராமத்திற்கு வருகை தந்தார். 55 ஆண்டுகளுக்கு முன்பு பண்ணையடிமை முறையும், தீண்டாமை கொடுமையும் நிலப்பிரபுத்துவ வன்முறைகளும் கோலோச்சி நின்ற காலத்தில் 1968இல் அறுவடை கூலியில் அரைப்படி நெல் கூடுதல் கேட்டார்கள் என்பதற்காக; போராடினார்கள் என்பதற்காக; செங்கொடியை உயர்த்தி நிலப்பிரபுக்களை எதிர்த்து வீதியில் வந்தார்கள் என்பதற்காக அவர்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமையின் உச்சம் தான் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என ஓலைக் குடிசையில் தஞ்சம் அடைந்த 44 உயிர்கள் நெருப்பு வைத்து கொளுத்தி சாம்பலாக்கப்பட்ட பயங்கரம். இது வரலாறு. இதற்கு அன்று நாடே கண்டனத்தை தெரிவித்தது. உலக மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள், இப்படிப்பட்ட கொடுமையும் நடக்குமா என்று. அன்று இந்த கொடுமையை கண்டிக்காதது இந்த ஆளுநர் ரவி சார்ந்திருக்கக்கூடிய ஆர்எஸ்எஸ்சும் பாஜகவும் (ஜனசங்கம்) அதன் தலைவர்கள் மட்டுமே. இதை எதிர்த்து ஒரு அறிக்கை கூட அவர்கள் வெளியிட வில்லை. 55 ஆண்டுகளுக்கு பின்பு ஆளுநர் ரவிக்கு திடீரென்று எங்கிருந்து வந்தது இந்த அக்கறை? வெண்மணி மக்களின் மீது இவருக்கு திடீர் கருணை ஏற்பட காரணம் என்ன? அன்று போராட்டத்தில் இருந்து உயிர் தப்பிய தோழர் பழனிவேல், ஆளுநரை சந்திக்க விரும்பவில்லை என்று கூறிய பின்னரும், அவரது இல்லத்திற்கு வந்து, வலுக்கட்டாயமாக அவரைச் சந்தித்தது ஏன்?

தேர்தல் நெருங்குகிற காலத்தில் அரசியல் ஆதா யத்திற்காக கடந்த கால வரலாற்றையும் பிரச்சனை களையும் திசை திருப்புகிறார்கள். எதிர்க்கட்சிக ளையும் உண்மைக்குப் புறம்பாக குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சிக்கிறார்கள்.  மீடியாக்களை பயன்படுத்தி எப்படியும் திசை திருப்பலாம் என்று கருதுகிறார்கள். குட்டையை குழப்பி மீன்பிடிக்க முயற்சிக்கிறார்கள்.

செங்கொடி இயக்கத்தின் கம்பீரம்

வெண்மணி கிராமத்தில் சொந்தமாக வாழ்வதற்கு ஒரு குடிசை கூட இல்லாமல் வாழ்ந்த மக்களை அந்த மண்ணில் இன்றைக்கு வாழ்வதற்கான இடவசதி, வேலை உத்தரவாதம், கூலி உத்தரவாதம், அவர்களு டைய குடும்பத்தினர் கவுரவமாக மண்ணில் நடமாடு வதற்கான ஒரு சூழ்நிலையை பண்ணையடிமை சாம்ராஜ்ஜியத்திலிருந்து மாற்றி நிமிர்ந்து வாழ செங்கொடி இயக்கம் வழி வகுத்தது. இந்த நிலை மையை மேலும் உயர்த்தி அவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டுமானால் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசத்தின் ஆட்சிக்கு வர வேண்டும். மோடியின் தலை மையிலே ரவி போன்ற- மத்திய ஆட்சியாளர்களின் கைக்கூலிகள் அதிகாரத்தில் இருக்கக் கூடிய நிலை யில் என்ன மாற்றங்களை கொண்டு வர முடியும்?

வெண்மணியிலே டிசம்பர் 25 ஆம் தேதி லட்சக் கணக்கான மக்கள் 44 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காலை 6மணி முதல் இரவு 10 மணி வரை திரண்டு வருவார்கள். வெட்டவெளியிலே அந்த மக்கள் நிற்க வேண்டும். உட்காருவதற்கு, ஒதுங்குவதற்கு, மதிய நேரத்தில் கொண்டு வந்த உணவை சாப்பிடுவதற்கு கூட அங்கே நிழல் இல்லை. அந்த இடத்தில் கம்யூனிஸ்ட்டுகளும், சிஐடியு தொழிற்சங்கமும் விவசாயிகள் சங்கமும், விவசாயத் தொழிலாளர் சங்கமும் இணைந்து, வெண்மணியி லேயே ஒரு மாபெரும் கட்டிடத்தை எழுப்பியுள்ளார் கள். இதில் எந்த ஆடம்பரமும் இல்லை, எந்த அத்து மீறலும் இல்லை, எந்த வர்த்தகமும் இல்லை. இதை வைத்து கோடி கோடியாக கொள்ளையடிக்கக்கூடிய நிலையும் இல்லை. உட்கார்ந்து எழுவதற்கும் மழை பெய்தால் மக்கள் நனையாமல் இருப்பதற்கும் ஒரு கட்டிடம். இதை ஆளுநர் ரவி ஆடம்பரம் என்றார். வெண்மணி தியாகிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள களங்கம் என்றார். என்னே ஒரு வன்மம்; பகைமை உணர்வு. 

வணிகமயம் ஆக்கப்பட்ட அயோத்தி

அயோத்தியில், முஸ்லிம்களுடைய வழிபாட்டு தல மாக இருந்து வந்த மசூதியை 500 ஆண்டுகளுக்கு பின்பு, அத்வானியின் தலைமையில் ஒரு ரதயாத்திரை நடத்தி 1992இல் வெறிபிடித்த சாமியார் கூட்டமும், ஆர்எஸ்எஸ் கூட்டமும், விஎச்பி, பாஜகவும் அதன் தலை வர்களும் திரண்டு தகர்த்து எறிந்தார்கள். இது வரலாறு. இதை உலகமே கண்டித்தது. மசூதி இருந்த மொத்த இடத்தையும் அதை சுற்றியுள்ள இடங்களை சேர்த்து 250 ஏக்கர் இடத்தையும் கையகப்படுத்திக் கொண்டார்கள். எப்படியோ, தீர்ப்பை வாங்கி- ராமர் கோவில் கட்டிவிட்டார்கள்.

அந்த 250 ஏக்கர் இடங்களில் ஏற்கெனவே பாபர் மசூதி இருந்த வளாக பகுதியில் வியாபாரம் செய்து வந்த சிறு முதலீட்டாளர்கள் விரட்டப்பட்டார்கள். அந்த 250 ஏக்கர் நிலமும், பிரம்மாண்டமான வர்த்தக கட்டிட மாக, சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக, நவீன ஹோட்டல்களாக ஏசியுடன் கூடிய தங்கும் வசதிகள் கொண்ட நவீன கட்டிடங்களாக மாற்றப் பட்டுள்ளன. ராமரை வழிபட லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்கிற அடிப்படையில் வழி பாட்டுக்கான இடமாக இல்லாமல்- கோடிக்கணக்கான ரூபாயில் வர்த்தகம் நடக்கக்கூடிய அதை கார்ப்பரேட் நிறுவனமே செய்யக் கூடிய விதத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் மோடி அரசு செய்து கொடுத்தி ருக்கிறது. உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசு இதற்கு உதவியிருக்கிறது என்று, நாடு முழுவதும் இதுகுறித்து குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. 

முற்றிலும் வணிகமயமாக்கப்பட்டுள்ள அந்த பூமியைத்தான் ராமஜென்ம பூமி என்று ரவி கூறுகிறாரா? பக்தியின் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப் பெரிய வர்த்தக மோசடி; அது களங்கம் என்று சொல்வதற்கு ஆளுநர் ரவி தயாரா? 
ராமர் பெயரால் வர்த்தகம் நடத்துபவர்கள், வெண்மணி தியாகத்தையும் அதற்காக எழுப்பப் பட்டுள்ள வெண்மணி நினைவாலயத்தையும் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.

இப்படி தமிழ்நாட்டில் அராஜக அரசியலை - அரசியல் அமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளை அரங்கேற்றி வரும் ஆளுநர், தமது அட்டூழியங்களின் உச்சகட்டமாக, சட்டமன்ற கூட்டத் தொடரின் துவக்க நாளில், அரசியலமைப்புச் சட்டம் தனக்கு விதித்துள்ள கடமையை - அதாவது, மாநில அரசின் கொள்கை விளக்க உரையை சட்டமன்றத்தில் வாசிக்காமல் - புறக்கணித்திருப்பது கடும் கண்டனத்திற்குரிய தாகும். இத்தகைய ஆளுநர் ரவி உடனடியாக தமிழ்நாட்டிலிருந்து திரும்பப் பெறப்பட வேண்டும். 

கட்டுரையாளர்: சிபிஐ(எம்) மூத்த தலைவர்