articles

img

போராட்ட பேரலை எழட்டும்....

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, மக்கள் மீது மிகப்பெரிய அளவில் துன்பத்தையும், துயரங்களையும், மரணங்களையும் அளித்துள்ள அதே சமயத்தில் மோடி அரசாங்கத்தாலும் மக்களின்துன்பங்கள் பல முனைகளிலும் அதிகரிக்கப்பட்டிருக் கின்றன. மக்கள் வேலையின்மைக் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். வருமானங்கள் குறைந்து, பசி-பட்டினிக் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்தின் மோசமான கொள்கைகளின் விளைவாக, பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தின் விலைகளும் கடுமையாக உயர்ந்திருக்கின்றன.

ஏப்ரல், மே மாதங்களில் 2 கோடியே 20 லட்சம் பேர் தங்கள் வேலைகளை இழந்திருக்கிறார்கள். மே மாதத்தில் வேலையின்மை விகிதம் 12 சதவீதத்தை எட்டியிருக்கிறது. (ஆதாரம்: இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம் - CMIE) சாமானியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் நுகர்வுப் பொருள்களை வாங்குவது படுவீழ்ச்சி அடைந்திருக்கிறது. பசி-பட்டினிக் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதை, இலவச உணவு மையங்களுக்கு வெளியே பொருள்களை வாங்குவதற்காக மக்கள் நீண்ட நெடிய வரிசையில் நின்றுகொண்டிருப்பதைப் பார்ப்பதிலிருந்து நன்கு தெரிந்துகொள்ள முடிகிறது.  

24 முறை உயர்வு
நாட்டில் இத்தகைய சூழ்நிலை இருந்துவரும் நிலையில்தான், ஒன்றிய அரசாங்கம் மக்கள் மீது மிகவும் கொடூரமான முறையில் விலைவாசி உயர்வைத் திணித்திருக்கிறது. இவ்வாறு பணவீக்கத்திற்குப் பிரதான காரணம் நாளும் உயரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளேயாகும். மே 4க்குப்பின், இவற்றின் விலைகள் 24 தடவை உயர்ந்திருக்கின்றன. ஜூன் மாதத்தில் மட்டும் இதுவரை (ஜூன் 22வரையிலும்) 12 தடவைகள் உயர்ந்திருக்கின்றன. மும்பை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற மெட்ரோபாலிடன் நகரங்கள் உட்பட ஏழு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் இப்போது பெட்ரோலின் விலை லிட்டர் 100 ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான விலைக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த விலை உயர்வுகளுக்குப் பிரதான காரணம் ஒன்றிய அரசு பெட்ரோலியப் பொருட்களின் மீது கலால் வரி மற்றும்இதர வரிகள் மூலமாக மிகப்பெரிய அளவில் சுமைகளை ஏற்படுத்தி இருப்பதாகும். இவ்வாறான வரிகள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையில் 55 முதல் 58 சதவீதம் அளவிற்கு ஏற்றப்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக, 2014-15-லிருந்து அரசாங்கத்திற்கு பெட்ரோலியப் பொருட்களின் மூலமாக வருவாயில் 138 சதவீதம் அளவிற்கு உயர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 

விலைவாசி கடும் உயர்வு
பெட்ரோல்-டீசல் விலைகள் உயர்வது, இவற்றின் விளைவாகப் போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்வதால் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும், பல்வேறு வேளாண் இடுபொருட்களின் விலைகளும் உயர்வதற்கு இட்டுச் செல்கின்றன.எனவே, வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், பொருளாதார மந்தம் நீடித்துள்ள நிலை யிலும், பணவீக்கம் நன்கு வேரூன்றும் நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. மொத்த விலைவாசிக் குறியீட்டெண் உயர்வு, 2021 மே மாதத்தில் சுமார் 13 சதவீதம் (12.94)ஆகும். இது கடந்த 11 ஆண்டுகளில் மிகவும் உச்சபட்சமாகும். நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண், இதே காலகட்டத்தில் 6.3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அரிசி, சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், முட்டைகள் போன்ற உணவுப் பொருள்களின் விலைகளும் விண்ணை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. சமையல் எண்ணெய் மிகவும் மோசமான விதத்தில் 60 சதவீத உயர்வினை எட்டியிருக்கிறது. பம்பு செட்டுகள் மற்றும் டிராக்டர்களுக்குப் பயன்படுத்தப்படும் டீசலின் விலை உயர்வு காரணமாக விவசாயிகள் கடுமையானத் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

எரிவாயு மானியம் கடும் வெட்டு 
சமையல் எரிவாயுவிற்கு அளித்துவந்த மானியம் வெட்டப்பட்டுவிட்டதன் காரணமாக, அதன் விலைகளும் செங்குத்ததாக உயர்ந்திருக்கின்றன.  2019-20இல் சமையல் எரிவாயுவிற்கு அளித்து வந்த நேரடி ரொக்க மானியம் 22,635 கோடி ரூபாயாக இருந்தது, 2021 பிப்ரவரியிலும் 3,559 கோடி ரூபாயாகக் குறைந்துவிட்டது. இதன் விளைவாக, இதன் ஒட்டுமொத்த சுமையும் நுகர்வோர் மீது ஏற்றப்பட்டிருக்கிறது. விலைவாசிகளைக் கட்டுப்படுத்துவதில் மோடி அரசாங்கத்தின் தோல்வி அப்பட்டமாகத் தெரிகிறது. அது ஏற்கனவே அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தை, அதில் சமையல் எண்ணெய்கள் உட்பட பல முக்கியமான அத்தியாவசியப் பொருள்கள் மீதிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கியதன் மூலம், நீர்த்துப் போகச் செய்துவிட்டது. இதன் காரணமாக பெரும் வர்த்தகர்கள் சமையல் எண்ணெய்களைப் பதுக்கிவைத்து, கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு அனுமதிக்க ப்பட்டிருக்கிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களுடன் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்ததன் மூலம் அரசாங்கம் தன் மக்கள் விரோத குணத்தையும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஒன்றிய பெட்ரோலியம்- இயற்கை வாயுத் துறை  அமைச்சர் தர்மேந்திர பிரதான், சமீபத்தில், எரிவாயு மீது ஏற்றப்பட்டுள்ள வரிகளைக் குறைக்க முடியாது என்றும், ஏனெனில் இவ்வாறு வசூலித்திடும் பணம் நலத் திட்டங்களுக்கும், தடுப்பூசித் திட்டத்திற்கும் தேவைப்படுகிறது என்றும் கூறியிருக்கிறார். ஆனால், இதே அரசாங்கம்தான், கார்ப்பரேட் வரிகளை வெட்டிக் குறைத்திருப்பதன் மூலம் சுமார் 1.45 லட்சம் கோடி ரூபாய் வருவாயை இழந்திருக்கிறது. இதன்றி கார்ப்பரேட்டு களுக்கு இதர பல சலுகைகளையும் விலக்குகளையும் அளித்திருக்கிறது.

செல்வ வரி விதியுங்கள்
பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரிகள் மற்றும் செஸ்கள் ஆகியவற்றைக் குறைப்பதன் மூலம் ஏற்படும் எவ்விதமான வருவாய் இழப்புகளையும், 2019க்கு முன்பிருந்த நிலைக்கு கார்ப்பரேட் வரிகளை மீண்டும் விதிப்பதன் மூலம் சரிசெய்துகொள்ள முடியும். மேலும் பெரும் பணக்காரர்கள் மீது செல்வ வரி (wealth tax) விதிப்பதன் மூலம் போதிய வருவாயை ஈட்டிட முடியும். ஆனாலும், ஒன்றிய மோடி அரசாங்கம் கார்ப்பரேட்டுகளையும் பெரும் பணக்காரர்களையும் குஷிப்படுத்தவே விரும்புவதால், அவர்கள் மீது எவ்விதமான வரியும் விதிக்காது. மாறாக சாமானிய மக்கள் மீது மட்டும் இப்போதுள்ள இக்கட்டான காலத்திலும் கூட கசக்கிப் பிழிந்து வருவாயை ஈட்டிடவே நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

போராட்டத்தில் அணிவகுப்பீர்
விலைவாசிகளை உயர்த்துவதன் மூலம் சாமானிய மக்களின் மீது தாங்கமுடியாத அளவிற்கு சுமைகளை ஏற்றியிருப்பதைச் சகித்துக்கொள்ள முடியாது. இந்தப் பின்னணியில்தான் இடதுசாரிக் கட்சிகள் ஜூன் 16 முதல் 30 வரை 15 நாட்களுக்கு, விலைவாசி உயர்வுக்கு எதிராகவும்,பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியும், கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. இடதுசாரிக் கட்சிகள், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிகளையும் இதர வரிகளையும்  வெட்ட வேண்டும் என்று கோரி இருக்கின்றன. சமையல் எரிவாயுவிற்கு மீண்டும் மானியம் அளித்திட வேண்டும் என்று கோருகின்றன. அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விலைவாசிகளை கட்டுப்படுத்துவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று கோருகின்றன. காய்கறி எண்ணெய்களின் ஊக வர்த்தகத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. வருமானவரி செலுத்தாத குடும்பத்தினரில் தனிநபர் ஒவ்வொரு வருக்கும் இலவச உணவு தானியங்கள் 10 கிலோ அளித்திட வேண்டும் என்றும், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், சர்க்கரை, தேயிலை ஆகியவற்றுடன் கூடிய உணவுப் பொருள் தொகுப்பை இலவசமாக அளித்திட வேண்டும் என்றும், மாதந்தோறும் ஆறு மாத காலத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7,500 ரூபாய் அளித்திட வேண்டும் என்றும் கோருகின்றன.  அனைவருக்கும் தடுப்பூசிகளை இலவசமாகச் செலுத்திடுவதற்கான போராட்டமும், இலவச உணவுத் தொகுப்புகளை அளிப்பதற்கான போராட்டமும், வேலை உறுதித் திட்டத்தை விரிவாக்குவதற்கான போராட்டமும், பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளை வெட்டு வது உட்பட விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட நடவடிக்கைகள் எடுப்பதற்கான போராட்டமும் கைகோர்த்து முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம் 

ஜூன் 23, 2021

தமிழில்: ச.வீரமணி