மார்க்ஸ்சுக்காகவே வாழ்ந்த ஏங்கெல்ஸ்
தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் 1820ஆம் ஆண்டு ஜெர்மனியின் பார்மென் நகரில் பிறந்தார். நெசவு ஆலை முதலாளியின் மகனாக இருந்தும், தொழிலாளர்களின் துன்பங்களைக் கண்டு கலங்கினார். 12 மொழிகள் அறிந்த அறிவு மேதையான ஏங்கெல்ஸ், மான்செஸ்டரில் தொழிலாளர் நிலைமையைக் கண்டு “இங்கிலாந்து தொழிலாளர் வர்க்கத்தின் நிலை” என்ற நூலை எழுதினார். 1844ஆம் ஆண்டு பாரிஸில் மார்க்ஸை சந்தித்து வாழ்நாள் தோழரானார். இருவரும் இணைந்து “கம்யூனிஸ்ட் அறிக்கை”யை 1848இல் வெளியிட்டனர். “ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம்” என்று தொடங்கும் இந்த அறிக்கை உலகை மாற்றியது. மார்க்ஸின் குடும்பத்தை பொருளாதார ரீதியாக ஆதரித்த ஏங்கெல்ஸ், மார்க்ஸின் 1883ல் மரணத்திற்குப் பின் “மூலதனம்” நூலின் இரண்டாம், மூன்றாம் பாகங்களை நிறைவு செய்தார். “இயற்கையின் இயக்க வியல்”, “குடும்பம், தனிச்சொத்து, அரசு” போன்ற சிறந்த நூல்களை எழுதினார். ஏங்கெல்ஸ் மான்செஸ்டர் நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றி மார்க்ஸின் ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்தார். நியூயார்க் டிரிபியூன் பத்திரிகையில் மார்க்ஸின் ஜெர்மன் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பினார். 1870ல் ஓய்வுபெற்று லண்டனில் மார்க்ஸ் அருகில் குடியேறினார். “டூரிங்கிற்கு மறுப்பு” நூல் மூலம் விஞ்ஞான சோசலிசக் கொள்கைகளை வலுப்படுத்தினார். விஞ்ஞான சோசலிசத்தின் இணை நிறுவனரான ஏங்கெல்ஸ், 1895 ஆகஸ்ட் 5ஆம் தேதி மறைந்தார். மார்க்ஸுக்காகவே வாழ்ந்த மாமனிதரின் நினைவு நாள் இன்று.