articles

img

அடித்தட்டு மக்களுக்காக அர்ப்பணித்த அறிவாளி -கே.சாமுவேல்ராஜ்

தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்துகிற தலை வர்கள் அனைவரும்  தவறாது குறிப்பிட்டு இருப்பது, அரசமைப்பு, அதன் முகவுரை, ஜனநாயகம்,மதச்சார்பின்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் அவருக்கு இருந்த அக்கறையையும் ஆற்றலையும் தான்.

சர்வதேசியத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள பொதுவுடைமைச் சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்கிற ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல, அதன் தீரமிக்க போர்த்தளபதி என்ற முறையில் அவரது வெளிப் பாடுகள் காத்திரமானவை,துல்லியமானவை.

ஜனநாயகத்திற்கும் எதேச்சதிகாரத்திற்கும், அறிவியலுக்கும் அஞ்ஞானத்திற்கும்,முற்போக்கான புதுமைக்கும் பிற்போக்கான பழமைக்கும் இடையில் வரலாறெங்கும் நடைபெற்று வரும் போராட்டத்தில் தற்காலத்தின் முன்னத்தி ஏர் அவர் என்றால் அது மிகையல்ல. அவ்வகையில் இந்திய தேசம் மட்டு மல்ல; சர்வதேசமும் அவருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறது.

முற்போக்கு விழுமியங்களின் மீது பற்றுறுதி மட்டு மல்ல, வரலாற்றைப் பற்றிய ஆழமான புரிதலையும், மிகச் சரியான மதிப்பீடுகளையும் பெற்றிருந்தார்.

‘மிக மெல்லிய கோடு’

இன்றைய காலகட்டத்தில் தேசங்களின் ஜனநாய கத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் வரலாறு குறித்த தாகவே இருக்கிறது என்பதானால் அதன் திரிபுக ளுக்கு எதிராகப் பெரும் போர் தொடுத்தவர் அவர்.

“மனிதகுல நாகரிகம் மலர்ச்சியுறத் துவங்கிய காலத்திலிருந்தே, புராணக் கதைகளின் தொகுப்பிற் கும் வரலாற்றிற்கும் இடையே,அவற்றைப் பிரிக்கும் கோடு மிகவும் மெல்லியதாகத்தான் இருந்திருக்கி றது. புராணங்கள் உண்மை வரலாறு போன்று  மக்கள் மத்தியில் மிகவும் எளிதாக சென்றடைந்த தானது உண்மையில் பல்வேறு தேசியங்களைக் கட்டி எழுப்புவதற்கும் அடித்தளங்களாக அமைந்திருக்கின் றன” என்று 2009 - இலேயே எழுதினார்.

\இன்று உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேல் யுத்தம் இதற்கு ஒரு உதாரணமாகும். நாடு களுக்கு இடையேயான யுத்தங்கள் மட்டுமல்ல; அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடு களின் உள்நாட்டுப் பிளவுகளுக்கும், அமைதி யின்மைக்கும், ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்த லுக்கும் இதுவும் ஒரு அடித்தளமாக இருக்கிறது.

உணர்ச்சிமயமான மக்கள் திரள்

தோழர் சீத்தாராம் அவர்களின் பின்வரும் அவதானிப்புகள் குறிப்பிடத்தக்கவை.

“புராணங்கள் மக்களின் தொகுக்கப்பட்ட வர லாற்று நினைவுகளாகும். இவற்றை தங்கள் வாழ்க்கைப் பாடுகளுக்கு மத்தியில் ஒரே சீராக மக்கள் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. ஆனால் சிலர் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். மக்கள் திரளை உணர்ச்சிமயமாக வைத்திருப்ப தற்காக புராணங்கள் தொடர்ந்து நினைவுபடுத்தப் படுகின்றன. இவை நீண்ட காலத்திற்கு மக்கள் மனதை ஆட்கொள்கின்றன.

மேலும் இவற்றில் நெருக்கமான ஒன்றோடு தங்களைப் பிணைத்துக்  கொள்கிறவர்கள் அதன் தீவிர பிரச்சாரகர்களாகவும் மாறி விடுகிறார்கள். இவ்வகை உணர்வுகள் இன்று உலகம் முழுவதும் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன; பின்னர் அது பொருளாதார ஆதாயங்கள் பெறுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன” -என்று தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அம்பலப்படுத்தினார்.

எனவே மக்கள் இவற்றில் இருந்து விலகி நிற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துக் கொண்டேயிருந்தார்.

புதிய பார்வை - புதிய கோணம்

தமது கல்வி ஞானத்தாலும் ஆய்ந்து அறியும் நுட்பத்தாலும்   அவர் நிகழ்த்துகிற உரைகள் எல்லாம் நூல் வடிவம் பெற்று இன்றும் நிலைத்திருக்கின்றன. காலத்திற்கும் நிலைத்திருக்கும். 2004-இல் மதுரை தமுக்கம் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  நடத்திய தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் பேசுகிற போது புராணங்களில் கூறப்பட்டுள்ள தசாவதாரங்கள் குறித்து அவர் ஆற்றிய உரை, முற்றிலும் புதிய கோணம். 

மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி - ஆகிய 10 அவதா ரங்கள் பற்றிய கதைகள் உண்டு.

முதல் அவதாரம் மீன் வடிவத்தில் இருக்கிறது.உயிரினம் நீரில் தான் தோன்றியது என்பதே அறிவியல் என்று ஐயத்திற்கு இடமின்றி இன்று உறுதிப்படுத்தி இருக்கிறது.

இரண்டாவது ஆமை வடிவம், நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள் தோன்றின என்பதைக் குறிக்கும். 

மூன்றாவது  பன்றி வடிவத்தில் இருக்கிறது. இதுநிலத்தில் மட்டும் வாழக்கூடியது. உயிரினங்கள் நீரிலிருந்து படிப்படியாக நிலத்திற்கு வந்த கால கட்டத்தை இது காட்டுகின்றது.

நான்காவது நரசிம்ம அவதாரம். இது விலங்கு நிலையில் இருந்து மனித வடிவத்திற்கு மாறியதைப்  பிரதிபலிக்கிறது.

இதற்கு அடுத்தது வாமன அவதாரம். இது மனித குலம் குள்ளமான வடிவத்தை பெற்றிருப்பதை பிரதிபலிக்கிறது. 

இதனை அடுத்து ஆறாவது - பரசுராமன் அவதாரம். பரசுராமன் கோடாரியை ஆயுதமாக பயன்படுத்து கிறான். இது மனிதகுலம் விலங்குகளைத் தாக்கி, உணவாகக் கொள்ளும் காலத்தைப் பிரதிபலிக்கிறது.

ஏழாவது ராம அவதாரம். ராமன் வில் அம்பு ஆகிய வற்றை தன் ஆயுதமாகப் பயன்படுத்துகிறான்.

அடுத்து எட்டாவது அவதாரமாக வருவது பல ராமன். இந்த கட்டத்தில் மனித குலம் உழவுத் தொழிலை கற்றுக் கொள்கிறது. மனிதகுலம் விவசாயப் பொருளாதாரத்துடன் வளர்ச்சி பெற்ற கட்டத்தை இது காட்டுகிறது.

ஒன்பதாவது,  கிருஷ்ண அவதாரம். இந்தக் கால  கட்டத்தில் மனிதகுலம் மேலும் முன்னேறி கால்நடை களை குடும்ப பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொண்டது, சுதர்சன சக்கரம் என்பதன் மூலம் சக்க ரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டதும் இந்த அவதாரத்தின் மூலம் வெளிப்படுகிறது.

பத்தாவது கல்கி. குதிரையின் மீது அமர்ந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய காலம், நவீன காலத்தை நோக்கி மனிதகுலம் பய ணப்படும் என்பதைக்குறிக்கிறது. 

இந்த10 அவதாரங்களும் மனிதர்களின் பொரு ளியல் வாழ்க்கையைத்தான் - மனிதகுல நாகரிகத் தைத்தான் விளக்குகிறது என்று விவரித்தார் சீத்தாராம் யெச்சூரி.

மொத்தக்கூட்டமும் மெய்மறந்து கேட்டது.

லால் சலாம், நீல் சலாம்

அதே போல் அவரது சிறப்புகளில் ஒன்று, இந்தியத் தன்மையை முழுமையுடன் புரிந்து கொண்டது. இந்தியாவின் பிரத்தியேகமான சாதிய முறைமைக்கு எதிராகவும் சிறந்த பங்களிப்புகளைச் செய்தவர்.பொருளாதார ஒடுக்குமுறைக்கும்,சமூக ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்ட தீபத்தை ஒரு சேர ஏந்தியவர் அவர்.

இந்தியச் சமூகத்தில் வர்க்க ஒடுக்குமுறையும் சாதிய ஒடுக்குமுறையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது என்கிற வெளிச்சத்தைத் தந்து இரு ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டத்தை நோக்கிய பயணம் இரண்டு கால்களிலும் நடப்பது போன்றது என்ற தீர்க்கமான வழிகாட்டலைத் தந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டும் அமைப்புகளின் ஜனநாயக உள்ளடக்கத்தை உள்வாங்கி ‘லால் சலாம், நீல் சலாம்’ என்ற ஒருங்கிணைப்பை களத்தில் உரு வாக்கியவர்.

நவீன தாராளமய காலத்தில் அப்பொருளாதாரப் பாதை குறித்த போலி பிம்பங்களும், பிரமைகளும்  கட்டமைக்கப்பட்ட வேளையில் அதன் உள்ளார்ந்த பாரபட்சத்தை எளிய மொழியில் எடுத்துரைத்த அறி வார்ந்த தலைவர் அவர். ‘பளபளக்கும் இந்தியா, பரிதவிக்கும் இந்தியா’ என்று இரு தேசங்களை உருவாக்குகிற உலகமயப் பாதையை அவர் அம்பலப் படுத்தினார். அறிவார்ந்த பகுதியினர் துவங்கி சமூகத்தின் அடித்தட்டு மனிதர்கள் வரை வர்க்க பாரபட்சங்கள் குறித்த உரையாடலை எவ்வாறு நடத்துவது என்பதற்கு உதாரணமாய் ஜொலித்தவர்.

செவ்வணக்கம் தோழர் யெச்சூரி!

கே.சாமுவேல்ராஜ்

மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)