articles

img

‘சமுத்திரத்தாயின் சரித்திரக் குழந்தை’ சேதுக்கால்வாய் போராட்டமும் தோழர் சீத்தாராம் யெச்சூரியும்! -எஸ்.ஜி.ரமேஷ்பாபு

இறப்பவர்கள் எல்லாம் காலமாவ தில்லை. தன் வாழ்நாள் முழு வதும் மனித குலத்தை நேசித்து அதற்காக வாழ்க்கையை அர்ப்பணிப்ப வர்கள் மட்டுமே காலமாகி நிற்பர். தோழர் சீத்தாராம் யெச்சூரி காலமாகி நிற்கிறார். எளிய மக்களுக்கு ஒளிவீசும் தாரகையாக என்றும் ஜொலிப்பார்.

சமூகத்தில் நடக்கும் எந்த ஒரு பிரச்ச னையையும் அவர் மிகவும் ஆழமாக புரிந்துகொண்டு அதன் தத்துவ அடிப்படையில் தனது வாதங்களை முன் வைப்பார். 

சேது கால்வாய் திட்டம் என்ற தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பிற் கான வாசலை மதத்தின் பெயரால் மத வெறியர்கள், தடை செய்ய திட்டமிட்டு பிரச்சாரம் செய்தனர். “நாம் வணங்கும் ராமபிரான் கட்டி இப்போதும் கடலுக்க டியில் இருக்கும் ராமர்பாலம் (ராமசேது) சேது சமுத்திரத் திட்டத்தால் உடையும் ஆபத்து உள்ளது; இந்துக்களின் நம்பிக் கையை மத்திய காங்கிரஸ் அரசும், திமுக வும் திட்டமிட்டு அழிக்க பார்க்கிறது’’ என்ற கூப்பாடு எழ ஆரம்பித்தது.

ஒரு பக்கம் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சேதுகால்வாய் திட்டத்தை அமலாக்க வேண்டுமென தொடர் போராட்டங்களை  நடத்தி வந்தது.

கலாச்சாரம் எனும் ஊடகம்

அப்போது (2008) சென்னையில் தமுஎகச மாநாட்டில் தோழர் யெச்சூரி  “மூட நம்பிக்கைகள், மதவெறி போன்ற வற்றை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு ஊடகமாக கலாச்சாரம் திகழ வேண்டும். இலக்கிய நயத்தை ரசித்துப் போற்றுகிற அதே நேரத்தில், புராணக் கற்பனையையும் வரலாற்று உண்மை யையும் பாகுபடுத்தி பார்க்க வேண்டும். இன்றைய இலங்கை, இந்தியா உள்பட ஒரே நிலப்பகுதியாக இருந்த காலகட்டம் உண்டு. கடல் மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து தான் இலங்கை தனித் தீவா கியது. அதற்கு இடையே ஒரு பாலம் இருந்ததாக சொல்வது இனிய புராண கற்பனை. அதையே வரலாற்று உண் மையாகக் கூறி சேது சமுத்திரத் திட்டம் போன்றவற்றை முடக்க முயல்வார்களா னால் அதை எதிர்த்துப் போராட வேண்டும்” என முழங்கினார். சேதுக் கால்வாய் திட்ட அமலாக்கத்திற்காக வாலிபர் சங்கம் நடத்திய போராட்டத் திற்கு ஆதரவாக அவர் எங்களுடன், பின்னாளில் ஜனாதிபதியாக உயர்ந்த பிரணாப் முகர்ஜியையும் பார்க்க வந்தார்.

தென்மாவட்டங்களில் நடைபெறும் சாதி மோதல்களின் அடிப்படைக் கார ணிகளில் முக்கியமானது வேலை யில்லா திண்டாட்டம் என தென்மாவட்ட கலவரங்கள் குறித்து விசாரிக்க அமைக் கப்பட்ட நீதிபதி மோகன் குழு குறிப்பிட் டது.  அதற்கு சேது சமுத்திர திட்டம் நிறை வேற்றப்பட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் முதல் பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்தன.

சேதுத் திட்டம்...

இந்திய பெருங்கடல் பகுதியில் இராமேஸ்வரம், பாம்பன் பகுதிக ளுக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடைப் பட்ட கடல் பகுதி பாக் நீரிணை என்றும், பாம்பனுக்குப் பிறகான கன்னியாகுமரி வரையிலான கடல் பகுதி பாக் கடல் என்றும் அழைக்கப்படுகின்றது. இதில் பாக் கடல் பகுதி கப்பல்கள் சென்று வரத் தேவையான ஆழத்தோடு உள்ளது. இத னால் இங்கு கால்வாய் தோண்டத் தேவையில்லை. ஆனால், பாக் நீரிணை பகுதியும், அங்கு உள்ள மணற் திட்டுகளும் கப்பல்கள் செல்வதற்கு தேவையான ஆழமில்லாத பகுதிகள்.  இந்த பாக் நீரிணையையும், மணற் திட்டையும் ஆழப்படுத்தி ஒரு கால்வாய் அமைக்கும் பணியே சேது சமுத்திரத் திட்டமாகும்.

1860-ல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆங்கிலேயரான கேப்டன் ஏ.டி.டெய்லர் பாம்பனுக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை தோண்டும் திட்டத்தை 1863-ல் சென்னை மாகாண ஆளுநராக இருந்த சர் வில்லியம் டெனிசன் ஏற்றுக்கொள்கிறார். பின்பு 1872 - ல் சென்னை துறைமுகப் பொறி யியலாளர் ராபர்ட்ஸன் ஒப்புதல் தர ஆய்வுப்பணிகள் துவங்கி நடந்து வந்தன. அந்த ஆய்வுகளைப் பின் பற்றி, நாடு விடுதலையானபின் 1955-ல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நியமித்த ராமசாமி தலைமையிலான சேது சமுத்திரத் திட்டக் குழு ரூ.998 லட்சம் ரூபாய்க்கான திட்ட மதிப்பீட்டை சமர்ப்பிக்கிறது. 

நீண்டகாலத்திற்குப் பிறகு 1983-ல் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது நியமித்த லெட்சுமி நாராயணன் குழு, 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்தை தயாரிக்கிறது. 2௦௦4ல் மத்தி யில், இடதுசாரிகள் ஆதரவுடன் திமுக கூட்டணியுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. புதிய ஆய்வுக்குழு போடப் பட்டது. அப்போது செலவாகும் என திட்ட மிடப்பட்ட தொகை 2427 கோடி. 2004 டிசம்பர் 6 ஆம் தேதி சேது சமுத்திர கால்வாய்த் திட்ட நிறுவனம் அமைக்கப் பட்டது. இதன் துவக்கவிழா 2005 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. இராமேஸ்வரம், தூத்துக் குடி, நாகப்பட்டினத்தில் அலுவலகங்கள் திறக்கப்பட்டன.    

ஆனால் மக்களின் மத நம்பிக்கை யை தூண்டி, நீண்டநெடிய மிகப்பெரிய திட்டம் நிறுத்தப்பட்ட நிகழ்வு உலகிலேயே இதுவாகத்தான் இருக்கும். அதற்கு பாஜகவும் இந்து அடிப்படைவாத குழுக்களுமே காரணம்.​

இந்நிலையில் தான், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் 2007 ஆம் ஆண்டு அன்றைய மாநிலத் தலைவர்க ளான எஸ்.கே.மகேந்திரன், எஸ்.கண்ணன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஆர்.வேல்முருகன் ஆகியோர் தலைமையில் மதுரை, தூத்துக்குடி, விருதுநகர்,  சிவ கங்கை ஆகிய முனைகளில் துவங்கி பிரம்மாண்டமான சைக்கிள் பேரணி நடத்தியது.

அடுத்து 2008ஆம் ஆண்டு டிசம்பர் 13 முதல் 28 தேதிவரை ‘வேண்டும் வேலை’ என்ற முழக்கத்துடன் கன்னி யாகுமரி, கோவை, இராமேஸ்வரம் ஆகிய முனைகளில் எஸ்.கண்ணன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஆர்.வேல்முருகன் தலைமையில் புறப்பட்ட சைக்கிள் பிரச்சாரம் 3000 கிலோமீட்டர் பய ணித்தும் 600 மையங்களில் பிரச்சா ரமும், 100 பொதுக்கூட்டங்களையும்   நடத்தியது. இதில் முக்கிய முழக்கமாக சேது சமுத்திர திட்டம் இருந்தது.

இதன் தொடர்ச்சியாக 2010ஆம் ஆண்டு துவக்கத்தில் சேதுகால்வாய் திட்டத்தை அகில இந்திய கவனஈர்ப்பு இய க்கமாக மாற்றிட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தலைநகர் தில்லியில் 48 மணி நேர உண்ணா விரதப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.  தமிழகத்திலி ருந்து நூற்றுக்கணக்கான இளை ஞர்கள் தலைநகர் தில்லியை நோக்கி திரண்டனர். அன்றைய மாநிலத் தலை வர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை யில் கடுமையான மழையிலும் போராட் டம் நடந்தது. போராட்டத்தை முடித்து வைக்க தோழர் சீத்தாராம் யெச்சூரி வருகை தந்தார். அவரது வருகையும் உரையும்  இளம் பட்டாளத்தை மிகவும் உற்சாகம் அடையச் செய்தது.

தோழர் யெச்சூரிதான் அதன் பின் அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து  மனு கொடுக்க எங்களை அழைத்துச் சென்றார். வாலி பர் சங்கத்தின் அகில இந்திய பொது செய லாளர் தபஸ் சின்ஹா, மாநில நிர்வாகி கள் ரமேஷ்பாபு, செ.முத்துகண்ணன், இல.சண்முகசுந்தரம், ஆர்.வேல் முருகன், மீனாட்சி, எஸ்.பாலா உள்ளிட் டோர் சென்றோம். அந்த பிரம்மாண்ட மான நாடாளுமன்ற கட்டடத்துள் அவ ருக்கு இருந்த மரியாதை எங்களை சிலிர்க்க வைத்தது. அதுமட்டுமல்ல, அவர் சேதுகால்வாய் திட்டம் குறித்து பிரணாப் முகர்ஜியிடம் விவரித்தது எங்களை ஆச்சரியப்பட வைத்தது. கார ணம், அவருக்கு அந்த பிரச்சனையில் இருந்த நுட்பமான ஞானம். ஒரு மனு கொடுக்கும் நிகழ்வாக அதை கருதாமல் அந்த திட்டம் வருவது தமிழகத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உள்ளார்ந்த நேசத்துடன் அவர் விளக்கினார்.

தமிழக வாலிபர் இயக்கம் அவரது நினைவுகளை என்றும் உயர்த்திப் பிடிக்கும்!

எஸ்.ஜி.ரமேஷ்பாபு

மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)