articles

img

விண்ணில் இருந்து வந்த அறிவியல் தேவதை -சி.முருகேசன்

விண்ணில் இருந்து வந்த அறிவியல் தேவதை...

விண்ணில் இருந்து கீழே பூமியைப்  பார்க்கும்போது, வாக்குவாதங்களும் சண்டைகளும் மிகவும் அற்பமாகத் தெரிகின்றன. தனது வாழ்நாளில் சுமார் 600 நாட்கள் விண்வெளி யில் மிதந்த சுனிதா வில்லியம்ஸ் கூறிய வார்த்தை கள் இவை. வெறுப்பும் பகையும் போரும் ஆதிக்க மும் கோலோச்சும் காலகட்டத்தில் சுனிதாவின் வாக்கு  கூடுதல் கவனம் பெற்றுள்ளன. நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லி யம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.சுமார் 30 ஆண்டு பணிக்காலத்தில், விண்வெளியில் இருந்து அவர் பார்த்த காட்சிகளையும் அனுபவங்களையும் இளைய தலைமுறையினரிடம் பகிர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். சுனிதா வில்லியம்ஸ் கடந்த டிசம்பர் மாதம் நாசா வில் இருந்து ஓய்வு பெற்றார். அவர், சமீபத்தில் கேரளா வின் கோழிக்கோட்டில் நடந்து முடிந்த கேரள இலக்கிய  விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்தி ருந்தார். சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் நீண்ட கால பயணமாக அவர் இந்தியா வந்துள்ளார்.கேரள பய ணத்தின்போது, அவர் மாணவர்கள், விஞ்ஞானிகள் எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பார்வை யாளர்களைச் சந்தித்து, விண்வெளியில் தனது வாழ்க்கை மற்றும் பணியின் எதிர்பாராத இறுதி அத்தி யாயம் குறித்து நினைவு கூர்ந்தார். கேரள இலக்கிய விழா 2016இல் தொடங்கிய கேரள இலக்கிய விழாவின்  (KLF) 9ஆவது நிகழ்ச்சி, 2026 ஜனவரி 22 முதல் 25 வரை கோழிக்கோடு கடற்கரையில் நடைபெற்றது. முதலமைச்சர் பினராயி விஜயனால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த நான்கு நாள் நிகழ்வில், பெக்கி  மோகன், அமிஷ் திரிபாதி, பியூஸ் மிஸ்ரா ஷோபா டே  உட்பட 17 நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் 250 அமர்வுகளில் பங்கேற்றனர். கோழிக்கோட்டில் நடந்த கேரள இலக்கிய விழா,  ஆசியாவின் மிகப்பெரிய விழாவாகும். இதில் உலக  அளவில் பிரபலமான ஆளுமைகளுடன் எழுத்தாளர் ஆர்.சச்சிதானந்நன், திரைக்கலைஞர்கள் பிர காஷ்ராஜ், பாவனா, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன், கவிஞ ரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்க பாண்டியன், கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது  ரியாஸ், உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். கைநீட்டி வானத்தைத் தொடுவது போல்  சுனிதா வில்லியம்ஸ் உடன் தனது சந்திப்பு குறித்து  முகநூல் பதிவில் அமைச்சர் எம்.பி.ராஜேஷ் தெரி வித்துள்ளதாவது: நேற்று, நட்சத்திரங்களின் அன்பானவரைச் சந்தித்தேன். எல்லையற்ற வானத்தில் சுற்றித் திரிந்த  நட்சத்திரப் பெண் பூமியில் எங்களுடன் இருந்தார்.  நேற்று கேரள இலக்கிய விழாவில் டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் சமூக நீதி குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற பிறகு, நான் ஓய்வறைக்கு சென்றேன். அப்போது சுனிதா வில்லியம்ஸைச் சந்திக்கும் அரிய  வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் எங்களுடன் அமர்ந்து ஒரு சாதாரண மனிதரைப் போல எளிமை யாகப் பேசினார். கேரளா, இங்குள்ள மக்கள் மற்றும்  நாட்டின் அழகு பற்றி..... கேரள சமூக முன்னேற்றம்,  கல்வி, சுகாதாரத் துறைகளில் சிறந்து விளங்கு வதைக் கண்டு வியந்ததாக கூறினார். ஒரு சில ஊடக  ஊழிர்களும் நண்பர்களும் அவர்களுடன் புகைப்படம்  எடுக்க பரிந்துரை செய்ய என்னை அணுகினர். எண்ணிக்கை அதிகரித்தபோது, உங்கள் பெரும் பாலான நேரத்தை விண்வெளியில் செலவிடுகிறீர்கள் பூமியில் வாழும் நான், உங்களைப் போன்றவன் அல்ல என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். அவர்களின் கோரிக்கைகளை என்னால் புறக்கணிக்க முடியாது. அதனால்தான் நான் உங்களைத் தொந்த ரவு செய்கிறேன் என்றேன். அதைக் கேட்டு, அவர் வெடிச் சிரிப்பினை உதிர்த்தார். எங்களுடன் சிறிது நேரம் செலவிட்ட பிறகு, அவர் தனது ரசிகர்களின் ஆர வாரங்களுக்கு மத்தியில் கேரள இலக்கிய விழா மேடைக்கு புறப்பட்டார். கால்பந்து ஜாம்பவான் மாரடோனா, கியூப புரட்சி கர ஜாம்பவான் பிடல் காஸ்ட்ரோவுடன் தனது முதல்  கைகுலுக்கலைப் பற்றி “நான் அவரைத் தொட்ட போது, கை நீட்டி வானத்தைத் தொடுவது போல் உணர்ந்தேன்,” என்று கூறினார். நேற்று நானும் அதைத்  தான் உணர்ந்தேன். -தகவல் சி.முருகேசன்