இன்று தில்லியில் செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றி உரையாற்றுகிறார். எல்லா மாநிலத் தலைநகரங்களிலும் முதலமைச்சர்கள் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்கள். 74 ஆண்டுகளை நிறைவுசெய்து சுதந்திர இந்தியா 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாட்டின் தலைநகரம் மற்றும் மாநிலத் தலைநகரங்களில் மட்டுமல்ல,பள்ளிகள், கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களிலும், ஏன் பட்டி தொட்டிகளில் எல்லாம் தேசியக் கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டுமென்று முடிவு செய்ததோடு, கட்சியின் அனைத்து அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றிட வேண்டும் என்று முடிவெடுத்தது. இதைத்தான் ‘‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று’’ என நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே விடுதலைக் கவிஞர் பாரதி பாடினார்.ஒரு புறத்தில் தேசியக் கொடி ஏற்றிக் கொண்டாடினாலும், மறுபுறத்தில் சுதந்திரத்தின் மேன்மைகள் எல்லாம் இன்றைய ஆட்சியாளர்களால் அரிக்கப்பட்டு வருகிறதே என்ற கவலையும் நம்மைக் கவ்விப் பிடித்துள்ளது.
நாட்டு விடுதலைக்காக,எதிர்கால இந்தியாவிற்காக கைது, சிறை, துப்பாக்கிச் சூடு, தூக்குமேடை என எத்தனை எத்தனை தியாகங்கள்! இந்தத் தியாகங்கள் எல்லாம் வீண்போக அனுமதிக்கக் கூடாது. அந்நியர் ஆட்சி அகற்றப்பட்டால் போதுமென்று காங்கிரஸ் கட்சி கருதியது. ஆனால், கம்யூனிஸ்ட்டுகளோ ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டு வெளியேற்றிய பிறகு நமது நாடு எத்தகைய இந்தியாவாக இருக்க வேண்டும் என்று கனவுகண்டார்கள். தங்கள் லட்சியங்களைப் பிரகடனம் செய்தார்கள். இதற்காகவே கம்யூனிஸ்டுகள் மீது ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசு அடுக்கடுக்கான சதி வழக்குகளைத் தொடுத்தது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். போராடிய கம்யூனிஸ்டுகளை துப்பாக்கிச் சூடு நடத்தியும் கொன்றார்கள். அவர்கள் கண்ட கனவு என்ன?1931 ஆம் ஆண்டு மீரட் சதி வழக்கில் கைதுசெய்யப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் கட்சியின் திட்டத்தை நீதிமன்றத்தில் பிரகடனம் செய்ததோடு 1931ஆம் ஆண்டு மார்ச் மாதம் கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டுப் பிரதிநிதிகள் மத்தியில் விநியோகம் செய்தார்கள்.
கம்யூனிஸ்ட்கள் செய்த பிரகடனம்
# அரசிடமிருந்து மதம் முற்றாகப் பிரிக்கப்பட வேண்டும்
# முழுமையான பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், கூட்டம் கூடும் உரிமை, வேலை நிறுத்த உரிமை, உழைப்பாளிகள் சங்கம் அமைத்துக்கொள்ள உரிமை
# சாதி ஒழிக்கப்பட வேண்டும்
# சாதி, மத, பாலின, இன வேறுபாடுகள் ஒழிக்கப்பட்டு சமத்துவம் உருவாக்கப்பட வேண்டும்
# பிரிட்டிஷ் துருப்புகள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்
# அந்நியத் தொழிற்சாலைகள், வங்கிகள், ரயில்வே, துறைமுகங்கள், தோட்டங்கள் தேச உடைமையாக்கப்பட வேண்டும்
# தேச அளவில் கூட்டாட்சி அமைக்கப்பட வேண்டும்
# நிலப்பிரபுக்களின் நிலங்கள் நிலமற்றவர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும்
# 16 வயது வரை அனைவரும் இலவசக் கட்டாயக் கல்வி, உணவு, சீருடை, பாட புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்
கம்யூனிஸ்ட்களின் பிரகடனம்-திட்டத்தின் முக்கியப் பகுதிகள் மட்டுமே இங்கே விளக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கம்யூனிஸ்ட்கள் பூரண சுதந்திரம் என்ற முழக்கத்தை முன்வைத்தார்கள். மேற்கண்ட முழக்கங்கள் கோரிக்கைகள் எல்லாம் பூரண சுதந்திரம் பற்றிய புரட்சிகரமான உள்ளடக்கமே ஆகும்.
இத்தகைய பிரகடனத்தை செய்துவிட்டு கம்யூனிஸ்டுகள் சும்மா இருக்கவில்லை. தொழிலாளர்கள், விவசாயிகள், அறிவுஜீவிகள், நடுத்தர மக்கள், மாணவர்கள், பெண்கள், தலித் மக்கள் மற்றும் பழங்குடி மக்களைத் திரட்டி போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தினார்கள். இத்தகைய பின்னணியில்தான் மாவீரன் பகத்சிங் சோஷலிசமே மக்கள் பிரச்சனைக்கு தீர்வு என்று சிறையில் இருந்து முழக்கம் இட்டார். பொது உடைமை போராளிகளான கம்யூனிஸ்ட்களின் போராட்டங்களைப் பார்த்துக்கொண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசாங்கம் சும்மா இருக்குமா? பெஷாவர் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, மதுரை சதி வழக்கு, சென்னை சதி வழக்கு என ஏகப்பட்ட சதி வழக்குகளைப் புனைந்தது. 1920 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திரப் போரட்டக் காலத்தில் 20 ஆண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. ஏ.கே.கோபாலன், பி.ராமமூர்த்தி, ஜீவானந்தம், வி.பி.சிந்தன், நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் தோழர் சங்கரய்யா உள்ளிட்டுப் பல கம்யூனிஸ்ட் தோழர்கள் 1947 ஆகஸ்ட் 14 அன்று இரவுப் பொழுதில்தான் விடுதலை செய்யப்பட்டார்கள்.
அரசியல் சட்டம்
இத்தகைய பின்னணியில் அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்கு ஏற்படுத்தப்பட்ட அரசியல் நிர்ணய சபை வரைவுக் குழு மதச்சார்பின்மை,ஜனநாயகம், கூட்டாட்சிக் கோட்பாடு, சுயச் சார்பு போன்ற அடிப்படைகளைக் கொண்ட சட்டத்தை உருவாக்கியது.
2014 ஆம் ஆண்டு தேர்தல் மூலம் மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பாசிசத் தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான பாஜக - மோடி அரசு அரசியல் சட்ட மாண்புகளை எல்லாம் தகர்த்திட முயற்சி செய்து வருகிறது.
கார்ப்பரேட் கம்பெனிகள், இந்துத்துவ சக்திகளின் கலவையான பாஜக அரசு,மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்திடவும் தேசப் பொருளாதாரத்தை உள்நாட்டு பன்னாட்டுப் பெருமுதலாளிகளுடைய கம்பெனிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லவும் முயன்று வருகிறது.
சுய சார்பு என்று பேசிக்கொண்டே,நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய எண்ணெய், எரிவாயு, உருக்கு, நிலக்கரி, மின்னுற்பத்தி, ராணுவ தளவாட உற்பத்தி, வங்கி, காப்பீட்டுத் துறை, தொலைத்தொடர்புத் துறை போன்ற அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களையும் மொத்தமாக பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்கு விற்று வருகிறது. மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து,விவசாயத்தையும், விவசாயிகளையும் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைத்திட நடவடிக்கை எடுத்து வருகிறது. மழை,வெயில்,புயல்,குளிர், பனி போன்ற எதையும் பொருட்படுத்தாமல் கடந்த 10 மாத காலமாக விவசாயிகள் தில்லியில் முகாமிட்டுப் போராடி வருகிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யாதது மட்டுமல்லாமல்,மக்கள் நலனுக்கு எதிரான பல புதிய சட்டங்களை மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்றியுள்ளது.
சுதந்திர இந்தியாவில் கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், போராடும் சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகின்றது. மோடி அரசை விமர்சித்தால், விமர்சிப்பவர்கள் மீது தேசத் துரோகச் சட்டம் பாய்கிறது. பீமா கொரேகான் பிரச்சனையில் பொய்யான சதிவழக்கைப் புனைந்து தேசத் துரோகக் குற்றம் சாட்டி பாதிரியார் ஸ்டான் சுவாமி உள்ளிட்டு 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். ஏற்கனவே பார்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டான் சுவாமி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஜாமீன் மறுக்கப்பட்டு காவலிலேயே மரணம் அடைந்தார். மோடி அரசாங்கம் இன்றைக்கு கார்ப்பரேட்கள் நலன்களைப் பாதுகாத்து தங்களுடைய ஆர்.எஸ்.எஸ்ஸின் நூறாண்டு கால இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தவும் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிடும் அனைத்து அதிகாரங்களையும், நிறுவனங்களையும் வளைக்கிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு மாநில அந்தஸ்தைப் பறிக்க அரசியல் சட்டத்தின் பிரிவு 370 ஐ ரத்து செய்தது, அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் மதச்சார்பற்ற இந்தியக் குடியரசை இந்துத்துவ நாடாக மாற்றிட மோடி அரசு முயற்சி செய்து வருகிறது. சிபிஐ,தேசியப் புலனாய்வு முகமை, தணிக்கைத் துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை எல்லாம் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றப் பயன்படுத்துவதோடு, நீதித் துறையையும் தனக்குச் சாதகமாக வளைத்திட முயல்கிறது. இத்தகைய வலைப்பின்னலின் ஒரு கண்ணிதான் பெகாசஸ் என்ற ஸ்பைவேர். இது கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசு செய்ததுபோன்ற தொலைபேசி ஒட்டுக் கேட்கும் பிரச்சனை அல்ல. மாறாக ராணுவ உளவு ஆயுதம். நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் முழுவதும் பெகாசஸ் பிரச்சனை மீது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதங்களைக் கேட்க பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மறுத்ததோடு, உச்சநீதிமன்ற விசாரணைக்கும் மறுத்து வருகிறார்கள். மொத்தத்தில் சுதந்திர இந்தியாவின் விழுமியங்களான மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சிக் கோட்பாடு, சுயச் சார்பு போன்றவற்றை பாஜக அரசு திட்டமிட்டு சீர்குலைத்து வருகிறது. ஆகஸ்ட் 15 அன்று தேசியக் கொடி ஏற்றும் பிரதமரும், அவரது அரசும் தான் நாட்டின் ஜனநாயக அமைப்பை சிதைக்கும் காரியங்களில் ஈடுபட்டுவருகிறார்கள். கண்ணீரும் செந்நீரும் சிந்தி போராடிப் பெற்ற சுதந்திரத்தை, இறையாண்மையை, மதச்சார்பின்மையை, கூட்டாட்சி முறையை, சுயசார்புக் கொள்கையைப் பாதுகாப்பதற்கு நாம் தேசியக் கொடி ஏற்றி சபதமேற்போம்.
கட்டுரையாளர்: ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)