articles

img

விளைநிலங்கள் - நீர்நிலைகளை காவு கேட்கும் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை ரத்து செய்க! -சாமி. நடராஜன்

வளர்ச்சித் திட்டங்கள், சாலை விரிவாக்கம், புதிய விமான நிலையம், சிப்காட் தொழிற்பேட்டைகள், புதிய தொழில் முதலீடுகளை வெளிநாடுகளிலிருந்து ஈர்க்கிறோம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்திடும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஆட்சிக் காலத்திலும் சரி, தற்போதைய ஆட்சியானாலும் நிலங்களை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துவதற்கு அரசு எந்திரத்தை மூர்க்கத்தனமாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. 

கார்ப்பரேட் நிறுவனங்களின் நில ஆக்கிரமிப்பு 

உலக ஏகபோக நிதி மூலதனம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பது, தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நிதி மூலதனத்தை எல்லையில்லாத அளவிற்குக் குவித்து வைத்துள்ள கார்ப்பரேட் கம்பெனிகள் பல்வேறு நாடுகளில் உள்ள நிலங்களைத் தனதாக்கி வருகின்றன. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாயிகளின் நிலங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிக் குவித்துள்ளன. 

யாருக்கான வளர்ச்சி? 

புதிய திட்டங்கள் அல்லது தொழில் வளர்ச்சி என்று கூறும் அரசுகள், வளர்ச்சிக்காகத்தான் நாங்கள் நிலங்களைக் கையகப்படுத்துகிறோம் எனக் கூறுகின்றன. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் துவங்கப்பட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் அரசின் அனைத்துச் சலுகைகளையும் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட சில ஆண்டுகளில் கம்பெனிகளை மூடிவிட்டு அடுத்த மாநிலங்களுக்குச் சென்றுவிடுகின்றன. 

2023 நில ஒருங்கிணைப்பு சட்டம்

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில், சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் 17 சட்டமசோதாக்களை எந்தவித விவாதமும் இல்லாமல் “குரல்” வாக்கெடுப்பின் மூலம் சட்டமாக்கியது. அதில் மிக முக்கியமான சட்டம் “தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023” ஆகும். 

சட்டத்தின் மோசமான அம்சங்கள் 

இந்தச் சட்டத்தின்படி 100 ஹெக்டேர் (250 ஏக்கர்) நிலம் தேவைப்படும் எந்தத் தனியார் நிறுவனமும் மாநில அரசை அணுகி நிலத்தைப் பெறலாம். இந்த நிலத்தில் அரசு நிலம்,  தனியார் விளைநிலங்கள், குளம், குட்டை,  வாய்க்கால், ஏரி போன்ற நீர்நிலைகள் அனைத்தும் அடங்கும். நில கையகப்படுத்த லுக்கு வழக்கமான கருத்துக் கேட்புக் கூட்டம்  கூட இருக்காது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான 5 பேர் குழுவே முடி வெடுக்கும். விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும்.

 நீர்நிலைகளின் தனியார்மயமாக்கல் 

தமிழ்நாட்டில் ஏற்கனவே பொதுப்பயன் பாட்டில் உள்ள நீர்நிலைகள் எவ்வித பராமரிப்பும் இல்லாமல் உள்ளதோடு தனியார் மற்றும் அரசு ஆக்கிரமிப்பிலும் உள்ளன. இந்தப் புதிய சட்டத்தால் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த நீர்நிலைகள் தனி யாருக்குச் சொந்தமாகும். நீர்நிலைகளின் தன்மை, கொள்ளளவு பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதமும் இல்லை. குறிப்பாக பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் பாசன வடிகால் வாய்க்கால்களை ஆக்கிரமித்து வைத்துள்ளன. 

தேர்தல் வாக்குறுதிக்கு  எதிரான செயல்பாடு  

2021இல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதியில் திமுக ஆட்சிக்கு வந்தால், அரசுத் திட்டங்களுக்காக நிலங்களைக் கையகப்படுத்தும்போது விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் சட்டமன்றத்தில் விவாதமே இல்லாமல் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதும், விவசாயிகளின் தொடர் எதிர்ப்பு போராட்டங் களையும் மீறி அமலாக்கப்படுவதும் சரியானதல்ல. 

எதிர்ப்புப் போராட்டங்கள் 

இச்சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வுடன் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இரண்டு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 22.06.2023 அன்று சென்னையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் பெருந்திரள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு விவசாயிகள் நலனில் அக்கறையுள்ள அரசு என்றால் விளைநிலங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாத்திட நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ உடன் ரத்து செய்வதே விவசாயிகளுக்குச் செய்யும் நன்மையாகும். 

சாமி. நடராஜன் 
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்