articles

img

கொரோனா... பீகாரிலும் பேரழிவுக் காட்சிகள்...

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பீகார் மாநிலத்தையும் விட்டுவைக்கவில்லை. எப்படி மத்தியில் உள்ள தங்களுடைய எஜமானர்கள் இருந்துவருகிறார்களோ அதேபோன்றே மாநிலத்தில் ஆள்கிறவர்களும் இதனால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்காக எவ்விதமான தயாரிப்பு வேலைகளிலும் ஈடுபடாமல் இருந்து வருகிறார்கள்.  மாநிலத்தலைநகரிலிருந்து மாவட்டங்கள் வரை சுகாதார உள் கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு நாளும், கோவிட்-19கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ‘பாசிடிவ்’ என அறிவிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் தொற்று, புதிய பகுதிகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. போதிய படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் விநியோகம் போதிய அளவிற்கு இல்லை. இவற்றால் இவை கள்ளச்சந்தை யில் விற்கப்படுகின்றன. இவற்றை வாங்கக்கூடிய நிலையில் ஏழை மக்களும், நடுத்தர மக்களும் கூட இல்லை.

தனியார் மருத்துவமனைகள் அதீத கட்டணங்கள் வசூலிக்கின்றன. எனினும்கூட அவற்றால் உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. பெரும்பாலான நோயாளிகள் மாநிலத் தலைநகர் பாட்னாவிற்கு விரைகின்றனர். அங்கேயாவது தங்களுக்கு சிகிச்சை கிடைக்காதா என்ற நம்பிக்கையுடன் வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அங்கேயும்சிகிச்சைகள் கிடைப்பதில்லை.  நோயாளிகள் தவிப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், பாட்னாவில் உள்ள நாலந்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர், தலைமைச் செயலருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமலும், வெண்டிலேட்டர் கள் இல்லாமலும், இதர தேவையான உபகரணங்கள் இல்லாமலும் நோயாளிகள் இறந்து கொண்டிருப்பதைத் தன்னால் பார்க்க முடியவில்லை என்று கூறி,தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருப்பதையொட்டி மாநில அரசின் சார்பில் சர்வகட்சி கூட்டத்திற்கு ஏற்பாடுசெய்யப்பட்டது. எனினும் அது ஒரு கண்துடைப்பு வேலையேயாகும். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்றும்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும்,  அனைவருக்கும் மாதந்தோறும் 7500 ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட வேண்டும் என்றும், 35 கிலோ உணவு தானியங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் எதனையும் செய்ய மாநில அரசு முன்வர வில்லை.

 மாநிலத்தில் நிலைமைகள் மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கின்றன. தர்பங்கா, சமஸ்டிபூர், சப்ரா, பெகுசரய், சஹார்ஷா, பூர்னியா, முசாபர்பூர், மேற்கு சம்பரான் ஆகிய மாவட்டங்களிலிருந்து வரும் செய்திகள், மாவட்டத் தலைநகர்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு வெளியே எவ்விதமான சிகிச்சையும் கிடைக்காமல் மக்கள் கொத்து கொத்தாக இறந்துகொண்டிருக்கின்றனர் என்று கூறுகின்றன.கொரோனா வைரஸ் தொற்றானது, ‘நல்லாட்சி’ அளித்ததாக கூறப்பட்ட முதல்வர் நிதிஷ் குமாரின் முகத்திரையை கிழித்தெறிந்துவிட்டது. இப்போது அவர் முற்றிலுமாக ‘பெரியண்ணன்’ பாஜக-வின் தயவில் இருக்க வேண்டியிருக்கிறது.  அதே சமயத்தில் பாஜக-வோ, மாநிலத்தில் உள்ள அனைத்து தோல்விகளுக்கும் நிதிஷ்குமாரே பொறுப்பு என்று குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள்இப்போது மீண்டும் திரும்பி வந்துகொண்டிரு ப்பதால், பீகார் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பேரழிவை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

- பாட்னாவிலிருந்து அருண் மிஸ்ரா...

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 2.5.21)

தமிழில்: ச.வீரமணி