articles

img

ரிதன்யாக்களின் மரண ஓலம் எப்போது தீரும்? - பி.சுகந்தி

ரிதன்யாக்களின் மரண ஓலம் எப்போது தீரும்?

“சாரிப்பா....என்னை மன்னிச் ச்சிருங்க பா. இவங்க கொடுக்கிற மெண்டல் டார்ச்சர், உடல் ரீதியான டார்ச்சரை என்னால தாங்க முடியல. லைஃப் பூரா உங்களுக்கு நான் பாரமா இருக்க விரும்பல. இந்த கொடுமையான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு வேற ஒரு வாழ்க்கையை ஏத்துக்குற மன வலிமை எனக்கு இல்ல. அது அசிங்கம். சோ என்ன மன்னிச்சிடுங்க பா!” இது ரிதன்யாவின் அழுகுரல். இந்த  கண்ணீர்க் குரலை கேட்கும் ஒவ்வொரு வருக்கும் இந்த ஆணாதிக்க சமூகத்தின் மீது கோபம் கொப்பளிக்க வேண்டும்.

வரதட்சணைக்  கொடுமையின் பயங்கரம்

திருமணமான 78 நாட்களில் மூன்று முறை தன் பெற்றோரின் வீட்டுக்குத் திரும்பிய ரிதன்யாவை மூன்று முறையும் அவளது பெற்றோர்கள் “கொஞ்ச நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் மகளே.... அட்ஜஸ்ட் செய்து வாழ்க்கையை ஓட்டு” என்று அறிவுரை செய்து அனுப்பியுள்ளனர். திருமணத்தின் போது 70 லட்சம் மதிப்புள்ள வால்வோ கார், 300 பவுன் நகை, இதற்கு மேல் இரண்டு கோடி ரூபாயும் செலவழித்தும் ரிதன்யாவின் கணவன் வீட்டுப் பணவெறி தீரவில்லை. ரிதன்யா MSC CA படித்த ஒரு பெண். அவ ளது அழுகுரலின் மையப்புள்ளி “கல்லானா லும் கணவன்” என்பது தான். “வேறொரு வாழ்வைத் தேர்வு செய்ய எனக்கு மன வலிமை இல்லை.... இது எனது தலைவிதி. அதன்படி  தானே எல்லாம் நடக்கும். அதை யாராலும் மாற்ற முடியாது...” என்ற கதறல்.

ஆணாதிக்க  சமூகத்தின் அறிவுரைகள்

பிறந்தது முதல் மரணம் தழுவும் வரை ஆணாதிக்க சமூகத்தின் அறிவுரைப்படி தான் பெண்கள் நடக்க வேண்டியுள்ளது. தன் உயிரையே மாய்த்துக்கொண்டாலும் பரவாயில்லை, இந்த சமூகத்தின் எழுதப்படாத சட்டத்தின்படி தான் ஒவ்வொரு பெண்ணும் வாழ வேண்டியதுள்ளது. தங்கச்சி, பாப்பா, கண்ணு என்று துவங்கி “புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணு” வரை இந்த அறிவுரைக்கு குறைவேயில்லை. எத்தகைய துன்ப துயரங்களை அனு பவித்தாலும் “கணவனே கண் கண்ட தெய்வம்” என்ற பழமைவாதத்தை முறியடிக்கக் கற்றுத் தராதது நம் சமூகத்தின் குற்றமல்லவா? சாதி இறுக்கமும், மூடநம்பிக்கைகளும் நிறைந் துள்ள இந்திய குடும்பங்களில் இத்தகைய கொடுமைகள் தொடர்கதையாகவே நீடிக்கிறது. தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில்  “வேறு சாதியைச் சார்ந்த இளைஞனை திருமணம் செய்ய மாட்டேன்”, “காதல் திருமணம் செய்ய மாட்டேன் - பெற்றோர் விருப்பத்தின்படி தான்  திருமணம் செய்வேன்” என உறுதி ஏற்றபின்னர்  தான் வள்ளி கும்மி என்ற ஒரு கலை குறிப்பிட்ட சமூகப் பெண்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது. இது மேலும் மேலும் பெண்களின் உரிமை யை, சுதந்திரத்தைப் பறிக்கிறது.

எதிர்பார்க்கப்படும் சமூக மாற்றம்

தன் வாழ்க்கைத் துணையைத் தானே தேர்வு செய்யும் உரிமையையும், ஒரு வாழ்க்கையில் தவறு நடந்துவிட்டால் அந்த வாழ்க்கையைப் புறந்தள்ளிவிட்டு புதியதொரு வாழ்க்கையைத் தேர்வு செய்யும் தனி மனித சுதந்திரத்தையும் பெண்ணுக்கு வழங்கும் ஒரு சிறந்த சமூகம் எப்போது உருவாகப்போகிறது? குடும்ப வன்முறைகளையும், வரதட்ச ணைக் கொடுமைகளையும் சகித்துக்கொண்டு வாழ வேண்டும் என்று இந்த சமூகம் சொல்லு கின்ற அறிவுரையின்படி, “தன்னால் வேறு ஒரு வாழ்வை எண்ணிப் பார்க்க முடியவில்லை,  எனவே தான் தற்கொலை செய்துகொள் கிறேன்” என்ற ரிதன்யாவின் குரல் எதனை உணர்த்துகிறது? கொடுமைகளை எதிர்த்து நின்று தன்னம்பிக்கையுடன் சமூகத்தில் வாழும் பெண்களுக்குச் சூட்டப்படும் பெயர்களே இதற்குக் காரணம். எனவே தான் இத்தகைய தற்கொலைகள் தொடர்கின்றன.

வரதட்சணை - ஒரு புற்றுநோய்

வரதட்சணை என்பது இந்திய சமூகத்தில் ஆழமாகப் புரையோடிக் கிடக்கின்ற ஒரு புற்று நோய். இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற் கும் ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் மரணத்தைச் சந்திக்கிறாள். 2020 ஓராண்டில் மட்டும் 6,966 பேர் வரதட்சணை கொடுமை யால் உயிரிழந்துள்ளனர். இவை காவல் நிலை யங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தான். “ஆசை மகளையே இழந்துவிட்டோம், இனி எதற்கு வழக்கு? போலீஸ், கோர்ட்” என வழக்கைப் பதிவு செய்யாமல் இருக்கும் பெற்றோர்கள் எண்ணிக்கை ஏராளம். திருமண வாழ்வில் முறிவு ஏற்பட்டால் அது சமூகத்தால் இழிவாகப் பார்க்கப்படும் என்பதாலேயே வர தட்சணை கொடுமைகளைத் தாங்கிக்கொண்டு புகாரைப் பதிவு செய்யாமல் வாழ்க்கையைத் தொடரும் பெண்கள் ஏராளம் ஏராளம்.

சில உதாரணங்கள்

திருமணமான ஒரு வார காலத்தில் 5 பவுன் நகை போடாததால் கணவன் வீட்டாரால் வெளியேற்றப்பட்டு தன் வீட்டிற்கு வந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட பொன்னேரி இளம் பெண். திருமணமான 6 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் தற் கொலை செய்துகொள்ளும் இளம்பெண்கள். 2001 முதல் 2012 வரை இந்தியாவில் 91,220 வரதட்சணை மரணங்கள் நடந்துள்ளன.

சட்டங்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள்

வரதட்சணை கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என சட்டம் சொல்கிறது. 1961இல் வரதட்சணை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு 1984, 86இல் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. 1983இல் இந்திய தண்டனைச் சட்டத்தில் 498(ஏ) பிரிவு இணைக்கப்பட்டது. கணவனோ அவரது உறவினர்களோ பெற்றோர்களோ பெண்ணை மனரீதியாக, உடல்ரீதியாகத் துன்புறுத்தினால் சிறைத் தண்டனையை உறுதி செய்கிறது இச்சட்டம். வரதட்சணை நேரடியாகவோ மறைமுக மாகவோ கேட்டாலும் குற்றம் என சட்டம் சொல்கிறது. ஆனாலும் இந்தச் சட்டங்கள் எல்லாம் ஏட்டளவிலேயே உள்ளன. வரதட்ச ணை கொடுமையால் கடும் காயங்களுடன் காவல் நிலையத்திற்கு வரும் பெண்களைக் கூட  சமாதானப்படுத்தி மீண்டும் கணவன் வீட்டுக்கு அனுப்பிவைக்கும் காவல்துறை அதிகாரிகள் பலர் உள்ளனர். ஆனால் இச்சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என காரணம் கூறி, இதில் 498(ஏ) சட்டப்பிரிவை நீக்குவதற்கு ஒன்றிய அரசு பெரும் முயற்சியை எடுத்து  வருகிறது. சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப் பட்டால் அதற்குக் காரணம் யார்? எந்த ஒரு சட்டத்தையும் தவறாகப் பயன்படுத்துவது காவல்துறையல்லவா? காவல்துறையின் மீது நடவடிக்கை எடுப்ப தற்குப் பதில் சட்டத்தையே திருத்த முயற்சிப்பது பெண்களுக்கு இந்த அரசு இழைக்கும் பெரும் துரோகமாகும்.

முதலாளித்துவத்தின் வியாபாரம்

திருமணம் “சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படு கின்றது” என சொல்லுகிறார்கள். இல்லை, அது சொர்க்கத்தில் அல்ல - சொக்கத்தங்கத்திலும் ரொக்கப் பணத்திலும் தான் தீர்மானிக்கப்படு கிறது. வரதட்சணையே கொடுக்காமல் மண வறைக்குச் செல்லும் வாய்ப்புள்ள பெண்கள் எத்தனை பேர்? ஆயிரம் கனவுகளோடு தன்  திருமண வாழ்வில் நுழைந்து, வரதட்சணை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வீடு திரும்பும் பெண்கள் எத்தனை பேர்? பெற்றோரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்பதால் கணவன் வீட்டு நிர்பந்தங்களைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்யும் ரிதன்யாக்கள் எத்தனை பேர்?

வரதட்சணையின் வடிவங்கள்

வரதட்சணையின் வடிவங்களையும், புதிய புதிய விழாக்களையும் இந்த முதலாளித்துவ சமூகம் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றது. பல நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நுகர்வோரை வாங்க வைக்க அப்பொருள் பெண்ணுக்கு கொடுக்கும் சீதன மாக விளம்பரப்படுத்தப்படுகின்றது. ஆச்சி மசாலா கூட “அம்மா வீட்டு சீதனமாக” விளம்பரப்படுத்தப்படுகின்றது. பல திருமண வீடுகளில் பெண்ணுக்கு கொடுக்கப்படும் சீதனப்பொருட்கள் திருமண மண்டபத்தின் முன் காட்சிப் பொருளாக வைக்கப் படுகின்றன. கார், இருசக்கர வாகனம், ஃப்ரிட்ஜ்,  வாஷிங் மெஷின், கட்டில், மெத்தை உட்பட அனைத்து வரதட்சணைப் பொருள்களும் அருவருக்கத்தக்க வகையில் சபையை அலங்கரிக்கின்றன. கல்வி கடைச்சரக்காகிப் போன இந்தக் காலத்தில் தன் மகனைப் படிக்க வைத்த செலவைக் கணக்கிட்டு வட்டியும், முதலுமாகப் பெண் வீட்டிலிருந்து பெற்றுக்கொள்ளும் கொடுமை நடக்கின்றது. கல்வி எனும் வியா பாரத்தில் முதலீடு செய்து வரதட்சணை என்னும் லாபத்தைச் சம்பாதிக்கும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் மகளைப் படிக்க வைத்த செலவை பெண் வீட்டார் யாரிடம் வாங்குவார்கள்?

விழாக்களின் பெருக்கம்

திருமணத்திற்குப் பின்பு வளைகாப்பு, பிரசவம், குழந்தைக்குப் பெயர் வைத்தல், சோறு  ஊட்டுதல், பூப்புனித நீராட்டு விழா, தாவணி அணியும் விழா, வசந்த விழா, மணமகனின் தந்தை இறந்தால் கொள்ளி வைத்த கைக்கும் மோதிரம் அணியும் விழா என மணமகளின் வீட்டைக் கொள்ளையடிக்க இந்த முதலாளித்துவ - ஆணாதிக்க சமூக அமைப்பு தான் எத்தனை எத்தனை விழாக்களைக் கண்டுபிடித்துள்ளது ! எனவே தான் பெண் குழந்தை பிறக்கும் போதே அது குடும்பத்தில் பாரமாகப் பார்க்கப்படு கிறது. இதுவே பெண் கருக்கொலை, சிசுக்கொலைக்கு முக்கியமான காரணியாய் அமைகிறது.

சர்வ சாதி, சர்வ வர்க்கப் பிரச்சனை

பெண்கள் படித்துச் சம்பாதித்துத் தன் சொந்தக் காலில் நின்றாலும் அவர்களால் இந்த வரதட்சணை என்ற சுரண்டலில் இருந்து விடுபட முடியாது. ஒருபுறம் நிலஉடமை ஆணா திக்க சமூகம் வரதட்சணை என்ற பெயரில் சுரண்டுகிறது. மறுபுறம் மனுதர்மக் கோட்பாடு ஆண்களைச் சார்ந்து தான் பெண்கள் இருக்க வேண்டும் என நிர்பந்திக்கிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் இந்தக் கோட்பாடுகளும், வளர்ந்து வரும் நுகர்வு கலாச்சாரமும் மேலும் பெண் களின் உயிரைக் குடித்துக்கொண்டே தான் இருக்கும். மக்கள் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், வர்க்கத்தின் பெயரால் வேறுபட்டுக் கிடந்தாலும் வரதட்சணை வாங்காத சாதியோ மதமோ வர்க்கமோ இல்லை எனலாம். பழங்குடி சமூக மக்கள் மத்தியில் கூட, முன்பு  இல்லாத வரதட்சணைப் பழக்கம் இப்போது தலை தூக்கியுள்ளது. இது இந்த முத லாளித்துவ - ஆணாதிக்க சமூக அமைப்பின் வெற்றி.

தீர்வுக்கான பாதை

பெண்களை வரதட்சணை கொடுமையி லிருந்து பாதுகாக்கும் சட்டங்கள், விவாகரத்து செய்யும் உரிமை, மறுமணம் செய்யும் உரிமை, பெண்களுக்குச் சொத்துரிமை என எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அவை இத்தகைய பிரச்சனைகளை முழுமையாகத் தீர்க்காது. தனியுடமைச் சமூகத்தை ஒழித்து உரு வாகப்போகும் பொதுவுடமைச் சமூகத்திலே தான் பெண்ணுரிமைச் சமூகத்தைக் காண முடியும். அது தொலைதூரப் பயணம் என்றா லும் அதுவே நமது பயணத்தின் பாதையாக இருக்க முடியும்.