மேற்குவங்கம்: பெண்கள் பாதுகாப்பின் வீழ்ச்சி
மாநிலத்தில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்பதில் தெரிந்துகொள்ள முடியும். மேற்குவங்கம் 15 ஆண்டுகளுக்கு முன்பு, இடது முன்னணியின் ஆட்சியில் நாட்டின் மிகச் சீரிய, கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு மிகுந்த மாநிலமாக அறியப்பட்டது. ஆனால் இன்று அதே மாநிலம் மருத்துவமனையிலும் கல்வி நிலையத்திலும் மாணவிகள், பெண் மருத்துவர்கள் கூட உயிருடன் திரும்ப முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆர். ஜி. கர் மருத்துவமனை மற்றும் துர்காபூர் மருத்துவக் கல்லூரி சம்பவங்கள் — மம்தா பானர்ஜி ஆட்சியின் முகமூடியைக் கிழித்தெறிந்த இரு வரலாற்றுச் சம்பவங்களாக உள்ளன. ஆர் ஜி கர் மற்றும் துர்காபூர் சம்பவங்கள் 2024 ஆகஸ்ட் மாதத்தில் கொல்கத்தாவின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான ஆர். ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டார். மருத்துவமனையின் பாதுகாப்பு அமைப்புகள் முற்றிலும் செயலற்ற நிலையில் இருந்தது. “அரசு மருத்துவமனைக்கே பாதுகாப்பு இல்லையென்றால், பெண்கள் பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு?” என மருத்துவர்கள், மாணவர்கள், மக்கள் கேட்கத் தொடங்கினர். வேலை நேர பாதுகாப்பு நெறிமுறைகள் மீறப்பட்டதும், காவல் துறை தாமதமும், விசாரணைக் குழுவின் மோசமான விசாரணையும் வெளிப்பட்டது. இந்த சம்பவத்தின் வடுக்கள் மறையாத நிலையில், கடந்த வாரம் துர்காபூர் மருத்துவக் கல்லூரியில் 22 வயது மாணவி கொடூரமான பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் “இது அரசியல் சதி”, “வெளியிலிருந்து உருவாக்கப்பட்ட பிரச்சனை” என்ற குற்றச்சாட்டுகள் மூலம் சம்பவத்தைத் திசைதிருப்பியது. அரசு சார்ந்த ஊடகங்கள் பாதிக்கப்பட்ட மாணவியின் குணநலனையே கேள்விக்குள்ளாக்கின. இது பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க சமூக மனப்பான்மையை மேலும் அப்பட்டமாக வெளிப்படுத்தியது. பெண்களுக்கு அரணாக விளங்கிய இடதுமுன்னணி ஆட்சி மம்தா பானர்ஜி ஆட்சிக்கு முன்பு மேற்குவங்கத்தை நீண்டகாலம் ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி அரசு பெண்கள் பாதுகாப்பைச் சமூக முன்னேற்றத்தின் அடிப்படையாகக் கருதியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் “மகளிர் செல்” என்ற பெயரில் சிறப்பு காவல் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. மகளிர் ஆணையத்திற்கு பாலியல் வன்முறை, வேலை இடங்களில் தொந்தரவு ஆகியவற்றை நேரடியாக விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. பெண்கள் கல்வி விகிதம் 2001 கணக்கெடுப்பில் 68% இருந்தது, 2011-இல் 77% ஆக உயர்ந்தது. பாலியல் குற்ற வழக்குகள் விசாரணைக்கான விரைவான நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன. இவை மேற்குவங்கத்தை அக்காலத்தில் “பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலம்” என அறியச் செய்தன. மம்தா பானர்ஜி ஆட்சியில் சரிவு 2011-இல் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்தபின், பெண்கள் பாதுகாப்பு மையங்கள் பலவும் செயலிழந்தன. மகளிர் ஆணையத்தின் சுயேச்சையான செயல்பாடு குறைக்கப்பட்டது. மாநில அரசு தன்னைத்தானே “பெண் தலைமையிலான மக்கள் அரசு” என விளம்பரப்படுத்தினாலும், அதன் நடைமுறைகள் பெண்களுக்கு எதிரான பின்தங்கிய மனப்பான்மையையே வெளிப்படுத்தின. 2022-23 தேசிய குற்ற ஆவண பணியகம் (என்.சி.ஆர்.பி) அறிக்கையின்படி மேற்குவங்கத்தில் பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் 31% அதிகரித்துள்ளன. இடதுமுன்னணி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு ஒரு சமூகப் பொறுப்பாக இருந்தது; மம்தா பானர்ஜி ஆட்சியில் அது வெறும் அரசியல் விளம்பர வாசகமாக மாறிவிட்டது. வன்முறையின் சமூக - பொருளாதார வேர்கள் பெண்கள் மீதான வன்முறை என்பது வெறும் தனிநபர் குற்றச்செயல் அல்ல; அது ஒரு சமூக-அரசியல் கட்டமைப்பின் விளைவு. பாலின அடக்குமுறையும் பொருளாதாரச் சுரண்டலும் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கிற; ஆணாதிக்கமும் முதலாளித்துவமும் இணைந்து பெண்ணை இரட்டைப் பொருளாதாரச் சுரண்டலின் கீழ் வைப்பதுதான் இந்த வன்முறையின் வேராகும். மம்தா பானர்ஜியின் ஆட்சியில் மேற்குவங்கம் இதற்கு முக்கிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. ஒருபுறம் அரசு “பெண் தலைமையிலான அரசு” எனும் விளம்பரத்தைப் பரப்புகிறது; மறுபுறம், பெண்களின் பாதுகாப்பைச் சிதைக்கிற பொருளாதார மற்றும் நிர்வாகக் கொள்கைகளை முன்னெடுக்கிறது. அரசுப் பணியிடங்களில் ஒப்பந்த வேலை, சுகாதார மற்றும் கல்வித் துறைகளின் தனியார்மயமாக்கல், பாதுகாப்புப் பணியாளர்கள் குறைவு, காவல் துறையின் அரசியல் கட்டுப்பாடு — இவை அனைத்தும் பெண்கள் பாதுகாப்பைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியுள்ளன. ஆர்.ஜி.கர் மருத்துவமனை சம்பவத்தில் இதற்கு வெளிப்படையான சான்றுகள் உள்ளன. அங்கு கண்காணிப்பு கேமரா கூடச் செயலிழந்தன; இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் தனியாகப் பணியாற்ற வேண்டிய நிலை. இது ஒரு தனிப்பட்ட குற்றமல்ல — அரசின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களால் பெண்கள் பணியிடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியாத நிலையை உருவாக்குவதுதான் “வன்முறையின் சமூக வடிவம்”. வெறும் வாக்கு வங்கிகளா? பெண் உடல் மீது ஆதிக்கம், பெண் உழைப்புச் சுரண்டல், பெண் சுதந்திரம் மீது மத-கலாச்சாரக் கட்டுப்பாடுகள் ஒன்றிணைந்தால் இப்படிப்பட்ட வன்முறைகள் தொடர்கதையாகும். மம்தா பானர்ஜி அரசின் கொள்கைகள் இந்த மூன்றையும் வலுப்படுத்துகின்றன. மருத்துவமனைகளில் பெண் மருத்துவர்கள் பாதுகாப்பின்றிப் பணியாற்றுகிறார்கள்; கல்வி நிலையங்களில் மாணவிகள் சமூக ஒழுக்கம் என்ற பெயரில் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். மம்தா அரசு பெண்களை வாக்கு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் ஆர்.ஜி.கர் மற்றும் துர்காபூர் சம்பவங்கள், பெண்கள் பாதுகாப்புச் சிதைவின் அறிகுறிகளாக மட்டுமல்ல — ஆணாதிக்க பிற்போக்குத்தன கருத்துக்களின் ஆட்சி நடைபெற்றால் பெண்களின் உயிரை பலி கொள்ளும் எந்திரமாக ஆட்சி அதிகாரமும் மாறிவிடும் என்பதற்கு சான்றாகும். பெண்கள் பாதுகாப்பு அரசின் இதயமாக இருந்திட வேண்டும் — அரசியல் விளம்பரமாக அல்ல.