தடை
பொது இடங்களில் தங்கள் கூட்டங்களை நடத்த ஆர்.எஸ்.எஸ்.க்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை கர்நாடகத்தில் வலுவாக எழுந்துள்ளது. பொது இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதை ஒழுங்கமைக்க மாநில அரசு ஆணையும் வெளியிடுகிறது. அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ள இந்த ஆணையில் குறிப்பாக, கல்வி நிலையங்களைத் தவறாகப் பயன்படுத்துவது, அத்துமீறல் என்று கூறியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். - பாஜக தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். 2013 ஆம் ஆண்டில் நீங்களே போட்ட ஆணைதான் இது என்று மாநில அரசுத்தரப்பில் பதிலடி தந்துள்ளனர். இந்த பதிலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நடைமுறைப்படுத்துவதில் அக்கறையும் தேவை என்றும் கருத்து நிலவுகிறது.
படை
போஜ்பூரி திரையுலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் கேசரிலால் யாதவ், பீகாரில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைந்திருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி முந்திக் கொண்டது என்று ஊடகங்களில் செய்திகள் வரும் வேளையில், ஏராளமான ரசிகர்களைக் கொண்ட கேசரிலாலின் முடிவு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது ரசிகர் படை மத்தியிலும் உற்சாகம் தொற்றியுள்ளது. தேர்தல் பணியில் பெரும் மாற்றத்தைக் காண முடியும் என்று இந்தியா கூட்டணியினர் தெரிவித்திருக்கிறார்கள். அவரது துணைவியார் சந்தா, ஆர்.ஜே.டி. வேட்பாளராகக் களம் இறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாடை
“எப்படிப்பட்ட சுதந்திரம் உள்ள பல்கலைக்கழகம் என்று நாங்கள் வந்தோம். இப்பல்லாம் எப்போதுமே பதற்றமாகத்தான் இருக்குது” என்று ஜவகர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பொங்குகிறார்கள். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு வரையில், எப்போதும் எங்கு வேண்டுமானாலும் தனியாகவே மாணவிகள் சென்று வருவது வழக்கம். இப்போது மதியம் 2, 3 மணிக்குக்கூட அச்சமாக உள்ளது. பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி உள்ளே நுழைந்தபிறகுதான் மாணவிகளுக்குப் பாதுகாப்பில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம், பெண் விடுதலை உள்ளிட்டவற்றைப் பற்றி ஏபிவிபிக்காரர்கள் பேசினாலே கெட்ட வாடைதான் வருது என்று மாணவர்கள் குமுறியுள்ளனர்.
உடை
பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடி மக்களின் மனதைக் கவர்ந்த பாடகர் ஜூபீன் கர்க், அக்டோபர் 1 ஆம் தேதியன்று உயிரிழந்தார். இது சிங்கப்பூரில் நிகழ்ச்சிக்காகச் சென்றபோது நிகழ்ந்தது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அசாமின் ஆளும் பாஜகவோ, மறைக்கும் முயற்சியில் இறங்கியது. மக்களின் எழுச்சிமிகுந்த அஞ்சலிகள், போராட்டங்கள் ஆட்சியாளர்களின் அலட்சியத்தை உடைத்தெறிந்தது. இதன்பின்னர்தான் சந்தேகப்படக்கூடியவர்கள் என்று சிலரைக் கைது செய்தார்கள். போராட்டங்கள் வலுக்கவே, கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. நீதி வேண்டும் என்ற கோரிக்கையுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.