இது பொறுப்பதில்லை
இது பொறுப்பதில்லை -தோழா எரிதழல் கொண்டு வா! கதிரை வெனிசுலாவை -தீண்டும் கையைப் பொசுக்கிட வா ! போன நூற்றாண்டின் -அந்த ஈனக் காலனியம் மீண்டும் தலைஎடுக்கும் - அதை கூண்டில் அடைத்திடணும் ! வெண்பு றாக் கூட்டை - தன் வீடாக்கு தே கழுகு ! கொஞ்சும் கிளிக் கூட்டில் - பாம்பு முட்டை யிடவருது ! சாகும் கிழவனுக்கு - உயிர்த் தண்ணீர் உதவிடுமோ ? மாளும் ஏ காதிபத்யம் -பெட்ரோல் உண்டும் பிழைத்திடுமோ ? பாடை கட்டியாச்சே - ஏ காதி பத்தியமே பல் துருவ உலகில் - உனக்கு பட்டினி தான்உணவே ! பூமியைப் புண்ணாக்கி -அந்த புண்ணில் குடியேற ஆதிபத் தியப் புழு - வருதே ஆசை வரை மீற! நானும் வெனிசுலா -தம்பி நீயும் வெனிசுலா ! ஞானம் மிகு மனிதர் - ஓதும் நாமம் வெனிசுலா ! வான வெளி எங்கும் -கோஷம் போகும் பார்உலா! ஈனன் ட்ரம்ப் செவியை -குடையும் ஈட்டி வெனிசுலா ! அமெரிக்கா எங்கும் - மக்கள் கோபம் கொதிக்கிறது! வெள்ளை மாளிகை மேல் -அவர் எச்சில் தெறிக்கிறது! சுதந்தி ரச் சிலை - மட்டுமா சுடரை ஏந்தியது? அமெரிக்க மக்கள் - நெஞ்சம் அனைத்தும் ஏந்தியது ! இரணி யன் வயிற்றில் -பிறக்கும் பிரக லாதன்போல் வல்லரசின் வயிற்றில் -பிறக்கும் சமதர் மக்கூர் வேல்! பாம்பு தன் குட்டியையே -விழுங்கும் பழக்கம் கேட்டதுண்டு! ஆம் இந்த வல்லரசு - நேட்டோ டென்மார்க்கை கவ்வுமின்று ! டாலடிக்க வில்லை - இப்போ டாலர் நாணயமே! ஆளடிக் கும் வலிமை -அதன் ஆணவம் போனதுவே ! வெனிசு லா நாடே ! - நீ விந்தைத் தேன் கூடே ! கூட்டில் கையை விட்டான் - ட்ரம்பை கொட்டுது தேன்ஈயே! ஒற்றை யாய் இல்லை -சாவேஸ் உன்னதத் தாயகமே! நெற்றிக் கண் அம்மா - எங்கள் நெஞ்சும் உன் வீடகமே! சின்ன தேசமல்ல - நீ வண்ண தேசமம்மா! என்ன நான் சொல்ல? -உன்புகழ் பென்னம் பெரிய தம்மா! பெட்ரோல் வளநாடே - உன் பெருமைக் கெது ஈடே ? குற்றேவல் செய்ய -மறுத்தாய் வீரத்தின் குறியீடே! தாவீது கோலியாத்தை -கொன்ற காவியக் கதை கேளும்! வீரிய வெனிசுலாவே - ஆதி பத்தியம் வீழும் வீழும்!