articles

தன்னாட்சியைத் தாரைவார்க்கும் அடிமைத்தனம்! இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஒரு பார்வை

தன்னாட்சியைத் தாரைவார்க்கும் அடிமைத்தனம்! இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஒரு பார்வை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தற்போது ஒரு ‘புல்டோசர்’ போன்ற பிம்பத்தை உலக அரங்கில் வெளிப் படுத்தி வருகிறார். இந்தியாவில் நலிந்த பிரிவினரின் உரிமைகளை நசுக்க புல்டோசர்கள் பயன்படுத்தப் படுவதை நாம் அண்மைக்காலமாகப் பார்த்து வருகி றோம். அதே போன்ற ஒரு ஆதிக்க மனப்பான்மை இப்போது சர்வதேச அரசியலில், நாடுகளை நசுக்குவதில் எதிரொலிக்கிறது. இது இந்தியாவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த  தன்னாட்சியைச் சிதைப்பதாக உள்ளது. இது தேசிய இறையாண்மைக்கு இழைக்கப்படும் பெரும் தீங்கு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

வெளியுறவுக் கொள்கையில்  மூன்றாம் தரப்பின் தலையீடு

இந்தியாவின் வெளியுறவுத் தொடர்புகளில் சமீப பல ஆண்டு காலமாக இத்தகைய போக்கே நீடித்து வருகிறது. பகல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான ராணுவ மோதல்கள் நிலவிய போது, ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தன்னிச்சை யாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இரு நாடுகளும் மிகுந்த கவனத்துடன் பேசி முடிவெடுத்ததாக இந்தியா கூறிவந்த நிலையில், இரு தரப்பும் அதிகா ரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே டிரம்ப் தலை யிட்டார். இது “இருதரப்பு விவகாரங்களில் மூன்றாம் தரப்பு தலையீட்டை ஒருபோதும் ஏற்க மாட்டோம்” என்ற இந்தியாவின் புனிதமான கொள்கையை அப்பட்டமாக மீறுவதாகும். இந்திய அரசு மௌனம் காத்தது அதன் பலவீனத்தையே காட்டுகிறது.

அமெரிக்காவின்  பிடியில் இந்திய வர்த்தகம்

மோடி அரசின் கீழ் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்ட ஒன்றாக மாறி வருகிறது. பிப்ரவரி 6, 2026 அன்று அமெரிக்கா வெளியிட்ட “ரஷ்யாவால் அமெரிக்காவிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர் கொள்ளும் பொருட்டு இறக்குமதி வரிகளை மாற்றிய மைக்கும் ஜனாதிபதி உத்தரவு” என்ற ஆவணம், இந்தியா எவ்வாறு அமெரிக்காவுடன் இணங்கிப் போகிறது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. இதன் ஒரு அங்கமாக, வேளாண்மை, டிஜிட்டல் கொள்கை மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியா-அமெரிக்கா இடையே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் ஒரு வலுவான சான்றாகும். பிப்ரவரி 7 அதிகாலையில் இரு நாடுகளும் இதை வெளியிட்டா லும், உலக வர்த்தகத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்களிலிருந்து இதைத் தனித்துப் பார்க்க முடியாது.

விவசாயிகளின்  வாழ்வாதாரம் கேள்விக்குறி

சர்வதேச விவாதங்களில் இந்தியா ஒரு ‘சுங்கவரி ராஜா’ எனத் தொடர்ந்து சித்தரிக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடு களே அதிகப்படியான மானியங்களையும், ஊடுருவ முடியாத சுங்கவரிச் சுவர்களையும் கொண்டுள்ளன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு குறைந்தாலும், அதில் ஈடு பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை குறையவில்லை. எனவே, இது வெறும் வர்த்தகப் பொருள் அல்ல; கோடிக்கணக்கான சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனை. இந்தியாவின் 39 சதவீத வேளாண் சுங்கவரியை அமெரிக்கா விமர்சிக்கிறது. ஆனால், ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவோ தானியங்கள் மற்றும் பால் பொருட்களுக்கு 188 சதவீதத்திற்கும் அதிகமான வரியை விதித்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா எரிபொருள் இறக்குமதி செய்ததற்காக, இந்தியா மீதான சுங்கவரியை 50 சதவீதமாக உயர்த்து வோம் என்று அமெரிக்கா அச்சுறுத்தியது. இந்த ‘வரிப் பயங்கரவாதத்தின்’ விளைவாகவே இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

ஏமாற்றப்படும் இந்தியச் சந்தை

உண்மையில், அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரி 0 முதல் 3 சதவீதம் மட்டுமே. ஆனால், அமெரிக்கா தற்போது இந்தியப் பொருட்க ளுக்கு 18 சதவீத வரி விதிக்கிறது. இந்த ஒப்பந் தத்தின் மூலம் பாதாம், உலர்ந்த பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு இந்தியச் சந்தை தாராளமாகத் திறந்துவிடப்பட்டுள்ளது. அமெரிக்க விவசாயத் துறை அமைச்சர் புரூக் ரோலின்ஸ், இந்த ஒப்பந்தத்தை “அமெரிக்க விவசாயிகளுக்கான வெற்றி” என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். 2024-இல் நிலவிய 1.3 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை யை இதன் மூலம் அமெரிக்கா ஈடுகட்டப்போகிறது.

எரிசக்தி மற்றும் பாதுகாப்பு இறக்குமதியில் இழப்பு

இந்த ஒப்பந்தத்தின் மிக மோசமான அம்சம் என்னவென்றால், அடுத்த ஐந்தாண்டுகளில் அமெ ரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெய் மற்றும் இதர பொருட்களை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து மலிவான விலையில் எண்ணெய் வாங்குவதைத் தவிர்த்துவிட்டு, அதிக விலையுள்ள அமெரிக்க எண் ணெய்யை வாங்க மோடி அரசு சம்மதித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 45 பில்லியன் டாலர் வர்த்தக உபரி (Trade Surplus), இனி அமெரிக்கா விற்குச் சாதகமாக முடியும். இந்த ஒப்பந்தத்தை மீறினால் வரிகளை உயர்த்து வோம் என்ற அமெரிக்காவின் நேரடி மிரட்டலுக்கு இந்தியா பணிந்துள்ளது. விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் தளவாடங்களையும் அமெரிக்கா விடமிருந்தே வாங்க வேண்டிய கட்டாயம் ஏற் பட்டுள்ளது. இது இந்தியாவின் அதி முக்கியத்துவம் வாய்ந்த முடிவெடுக்கும் அதிகாரத்தை அமெரிக்கா வின் கைகளில் ஒப்படைப்பதற்குச் சமம்.

கண்காணிப்பு மற்றும்  பொருளாதாரக் கட்டுப்பாடு

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த உத்தரவுகள் வெறும் வர்த்தகத்தோடு நின்றுவிடவில்லை. இந்த ஒப்பந்தத்தை இந்தியா சரியாகச் செயல்படுத்துகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு பிரத்யேகக் கண்கா ணிப்பு அமைப்பையும் அமெரிக்கா உருவாக்கி யுள்ளது. ஒருவேளை இந்தியா இதில் ஏதேனும் சுணக்கம் காட்டினால், மீண்டும் சுங்கவரிகள் உயர்த்தப்படும் என்ற அச்சுறுத்தல் தொங்கிக் கொண்டே இருக்கிறது. இது இந்தியாவின் பொருளா தாரக் கொள்கைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இருந்து தீர்மானிக்கும் ஒரு ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளது. நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும்  தற்சார்பு பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் இப்போது அமெரிக்க நிறுவனங்களின் லாபத்திற்கா கப் பலியிடப்படுகின்றன. குறிப்பாக, டிஜிட்டல் கொள்கை மற்றும் தரவுப் பாதுகாப்பு விவகாரங்க ளில் அமெரிக்காவின் பெரும் தொழில்நுட்ப நிறுவ னங்களுக்குச் சாதகமான மாற்றங்களைச் செய்ய இந்தியா இணங்கியுள்ளது. இது இந்தியாவின் தரவு இறையாண்மையை (Data Sovereignty) அமெரிக்க நிறுவனங்களின் காலடியில் வைப்பதாகும். இந்தியச் சந்தையின் விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் ஜனாதிபதி டிரம்ப் நிர்ணயிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

சரணாகதி அரசியலும்  எதிர்காலமும்

இந்த வர்த்தக ஒப்பந்தத்தை ஒரு பெரிய வெற்றி யாகப் பாரதிய ஜனதா கட்சி கொண்டாடினாலும், உண்மையில் இது ஒரு முழுமையான சரணாகதி ஆகும். அமெரிக்காவின் ஒட்டுமொத்த ராணுவம் சார் சூழ்ச்சித் திட்டங்களுக்கு (Strategic Plan) ஏற்ப இந்தியா தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது. நாட்டின் தன்னாட்சி அதிகாரம் சிதைக்கப்படுவ தையும், வெளிநாட்டுச் சக்திகளின் தலையீட்டையும் மூடிமறைக்க அரசு முயல்கிறது. கடந்த சில நாட்களாக நாடாளுமன்றம் கூடிக்கொண்டிருந்த போதிலும், ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட தகவல்களுக்கு இந்திய அரசு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மௌனம் காத்தது அவமானகரமானது. ஐந்து நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டதன் மூலம், இந்தியா தனது பொரு ளாதாரச் சுதந்திரத்தை இழந்துவிட்டது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதார இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும். மோடி அரசு முன்னெடுக்கும் இந்தத் தவறான பாதை, வரும் காலங்களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை யை அமெரிக்காவின் ஒரு துணை அமைப்பாக மாற்றி விடும் ஆபத்து உள்ளது. நமது விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களின் நலனைப் புறக்கணித்து விட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தேவைகளை நிறைவேற்றுவது தேசத்தின் நலனுக்கு எதிரானது. இது ஒரு வெளியுறவுக் கொள்கை உத்தி சார்ந்த படுதோல்வியே ஆகும். பீப்பிள்ஸ் டெமாக்ரசி, (பிப்ரவரி 8 )  தலையங்கத்தின் தமிழ்ச் சுருக்கம்.