articles

img

சோசலிசம் தான் மாற்று என்பதை நாடு முழுவதும் எடுத்துச் செல்வோம்! -

சோசலிசம் தான் மாற்று என்பதை நாடு முழுவதும் எடுத்துச் செல்வோம்! 

லெனின் நூல் வாசிப்பு பயிற்சி முகாமில்   பெ.சண்முகம் பேச்சு

குன்னூர், ஆக. 4 - சோசலிசம் தான் மாற்று என்பதை நாடு முழுவதும் மக்களிடம் எடுத்துச் செல்வோம். அன்றாட கருத்துப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சோசலிசம் என்ற கருத்தை கொண்டு செல்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அழைப்பு விடுத்தார்.  நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாரதி புத்தகாலயம் சார்பில் லெனின் தொகுப்பு நூல்கள் வாசிப்பு பயிற்சி முகாம் ஆகஸ்ட் 2, 3 தேதிகளில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து சுமார் நூறு பேர் பங்கேற்றனர்.   ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாள் முகாம் நிறைவில் பெ.சண்முகம் பங்கேற்று பேசிய தாவது:  சோசலிசம் பற்றி, சோசலிசத்தின் மகத்தான சாதனைகளைப் பற்றி அன்றாடம் நடக்கக் கூடிய கூட்டங்களில் இப்போது கருத்துப் பிரச்சாரம் நடைபெறுவதில்லை.   அதேசமயம் வலதுசாரிகள் தங்கள் பிற்போக்கான தத்துவார்த்த கருத்துக்களை அன்றாடம் பிரச்சாரம் செய்கிறார்கள். இத்த கைய சூழ்நிலையில் மார்க்சிய அடிப்படையில் சோசலிச தத்துவார்த்த பிரச்சாரத்தை வலுப் படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.   அதேபோல் அன்றாட நடவடிக்கைகளில், அன்றாட பிரச்சாரங்களில் பொருள் முதல்வாத கருத்துக்களை பிரச்சாரம் செய்ய வேண்டும். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் வீடு என்பதை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.   நடத்திக் காட்டிய தோழர் லெனின்  இப்போது சோசலிச முகாம் இல்லை. இப்போது இருக்கும் காலகட்டம் வேறுபட்ட தாக இருக்கிறது. நம் நாட்டில் வகுப்புவாதத்தை எதிர்த்தும், ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தை எதிர்த்தும் மக்கள் ஜனநாயகப் புரட்சி மூலமாக சமூக மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.   கம்யூனிஸ்ட் தத்துவம், நடைமுறை சாத்தியமானதா என்ற கேள்வி எழுந்த போது, அது நடைமுறை சாத்தியமானது தான் என்று செயல்படுத்தி காட்டியவர் தோழர் லெனின். மார்க்சியத்தை வளர்த்தெடுத்ததில் மாமேதை லெனினுக்கு மகத்தான பங்கு உள்ளது. மாசேதுங், பிடல் காஸ்ட்ரோ, ஹோ சி மின் என இவர்கள் ஒவ்வொருவருக்கும் மார்க்சியத்தை வளர்த்ததில் பங்கு உண்டு.  வளர்த்தெடுப்போம்!  மார்க்சியத்தை காலத்திற்கு ஏற்ப வளர்த் தெடுக்க வேண்டும், அதை கற்றறிய வேண்டும். மார்க்சிய, லெனினிய மூல நூல்களை வாங்க வேண்டும், அதை படிப்பது மிக, மிக அவசியம். இந்த வாசிப்பு பயிற்சியில் பங்கேற்ற தோழர்கள், தத்துவார்த்த கல்வியை வளர்த்துக் கொண்டு, ஆசிரியர்களாக தமிழ்நாடு முழுவதும் கட்சி அணியினருக்கு இந்த கல்வி யை கொண்டு சேர்க்க வேண்டும்.  இன்றைக்கு அரசியல், தத்துவார்த்த, ஸ்தாபன ரீதியாக கம்யூனிஸ்ட் கட்சியை வலுவானதாக வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.  முற்போக்கு இலக்கியங்களை, அடிப்படை தத்துவார்த்த நூல்களை ஆழ்ந்து படிக்க வேண்டும். இதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி கல்வியை பரவலாக கொண்டு செல்ல முடியும்.   வாசிப்பு இயக்கம்  புத்தக அறிமுகம், வாசிப்பு முகாம், கலந்துரையாடல் என பல்வேறு வடிவங்களில் இதை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும். படிப்பதை பழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். வாசிப்பை தமிழகத்தில் ஓர் இயக்க மாக எடுத்துச் செல்வதன் மூலம் கட்சி தோழர் களை வளர்த்தெடுக்க முடியும்.  மூலதனம் வாசிப்பு போன்ற சில முன் முயற்சிகள் இருக்கின்றன. இது போன்ற பணிகள் கட்சியுடன்  இணைந்த ஒன்றாக இருக்க வேண்டும். கட்சியின் அரசியல் ஸ்தாபன வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும்.  அரசியல் தத்துவார்த்த தளத்தில் செய்யும் பணிகளை, களப்பணிகளுடன் இணைக்க வேண்டும். களப்பணியும், கருத்துப் பணியும் இணைய வேண்டி இருக்கிறது.   கட்சியை விரிவாக்கக் கூடிய முறையில் நமது பணிகளை வளர்த்தெடுக்க வேண்டும்.   சோசலிசம் தான் மாற்று என்பதை நாடு முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் என மதுரையில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் தீர்மானித்திருக்கிறோம். சோசலிசம் என்ற அடிப்படைக் கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். எதிரி வர்க்கத்துக்கு வலுவான மாற்றாக சோசலிசத்தை எடுத்துச் சென்று கட்சியை வளர்த்து விரிவுபடுத்துவது நமது கடமை.   கட்சிக் கல்வி  கட்சிக் கல்வியை மாநிலம் முழுமைக்கும் துணைக் குழு உறுப்பினர்களில் தொடங்கி மாநில செயற்குழு உறுப்பினர்கள் வரை முழுமையாக கொண்டு செல்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கட்சிப் பணிகள், எத்தனை வேலைகள் இருந்தாலும் இவை எல்லா வற்றிற்கும் மத்தியில் கட்சி கல்விப் பணியை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் தான் நாம் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.  இவ்வாறு பெ.சண்முகம் கூறினார்.