மருத்துவத் துறையைப் பாதுகாப்போம்!
மருத்துவத்துறை ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் அந்த நாட்டின் பொருளாதாரமும் ஆரோக்கிய மாக இருக்கும். மருத்துவம் இலவசமாக கிடைப்பது என்பது சமூக நீதிக்கான உரிமை யாகும். அது அனைவருக்கும் சமமான மருத்துவ சேவையை வழங்க உதவுகிறது. நமது நாட்டில் மருத்துவம் தனியார் மயத்தை நோக்கிச் செல்லும் நிலையில் தனி நபர் மருத்துவச்செலவு அதிகரித்து வருகிறது. இது பல குடும்பங்களுக்கு நிதிநெருக்கடியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் மருத்துவ சேவை கிடைப்பதில் தடங்கல் ஏற்படுத்துவதுடன் குறைந்த வருமா னம் கொண்ட பல குடும்பங்களை கடனில் தள்ளி உள்ளது.
கொரோனா காலத்தில் இந்தியாவின் பங்கு
கொரோனா தொற்று உலகையே உலுக்கிய நிலையில் அதிலிருந்து மீண்டு வர பல வளர்ந்த நாடுகள்கூட சவாலை சந்தித்த நிலை யிலும் நமது நாடு வெகுவிரைவில் அதிலிருந்து மீண்டு வந்தது. 04.03.2023 நிலவரப்படி இந்தியா ஒட்டுமொத்தமாக 220 கோடிக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசிகளை செலுத்தி யுள்ளது. இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 95 சதவீதம் பேர் குறைந்தது ஒரு டோஸ் கோவிட் தடுப்பூசியை இலவசமாக பெற்றுள்ள னர். 88 சதவீதம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய மான காரணம் மருத்துவ மற்றும் பொது சுகா தாரத்துறை அரசின் வசம் இருந்தது தான். தற்போது அரசின் வசம் இருக்கும் மருத்து வத்துறை படிப்படியாக தனியார்மயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அரசு தன் மக்களுக்கு மருத்துவத்தை இலவசமாக வழங்கும் கடமையிலிருந்து தன்னை படிப்படி யாக விலக்கிக் கொண்டு வருகிறது.
தேசிய சுகாதாரக் கொள்கை
ஒன்றிய அரசு தேசிய சுகாதாரக் கொள்கை 2017-ன் படி மருத்துவ சேவை வழங்க பொது - தனியார் கூட்டு ஒத்துழைப்பிற்கு அழைப்பு விடுக்கிறது. 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவகாப்பீடு வழங்கியுள்ளது. படிப்படி யாக, மருத்துவ காப்பீடு இருந்தால் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் கூட சிகிச்சை பெற முடியும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப் பட்டுள்ளனர்.
நிரந்தரத் தன்மையற்ற பணியிடங்கள்
அரசு மருத்துவமனைகளில் நிரந்தர தன்மையற்ற பணியிடங்களை உருவாக்கி துறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. தேசிய சுகாதார திட்டம் (NHM) என்ற ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் மருத்துவ மனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் இதர ஊழியர்களை தொகுப்பூதிய ஒப்பந்த, வெளி முகமை முறையில் பணிய மர்த்துவதன் மூலம் மருத்துவத்துறையை படிப்படியாக நிரந்தரத் தன்மையற்றதாக மாற்றி வருகிறது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசின் நாசகரத் திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வரும் தமிழ்நாடு அரசு, தனியார்மய மாக்கல் கொள்கையில் ஒன்றிய அரசுடன் துணை நிற்கிறது.
தொகுப்பூதிய செவிலியர்கள்
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு ரூ.7700 ஊதியத்தில் 7243 செவிலியர்களையும், அத னை தொடர்ந்து படிப்படியாக இன்று வரை 15,000 செவிலியர்களையும் தமிழக அரசு தொகுப்பூதிய முறையில் பணியமர்த்தியது. இரண்டு வருடம் தொகுப்பூதிய முறையில் பணி செய்த பின் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவார்கள் என்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால் 8 வருடங்கள் கடந்தும் 8000 செவிலியர்கள் பணி நிரந்தரம் பெறாமல் இருந்து வருகின்றனர். தொடர் போராட்டங்கள் மூலம் தற்போது ஊதியம் ரூ.18 ஆயிரம் ஆக மாற்றப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதி
திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தது. ஆனால் ஆட்சி அமைத்த பின் இன்றுவரை அதற்கான நடவடிக்கை ஏதும் எடுக்காமல்; அதற்கு மாறாக போராடிப் பெற்ற உரிமைகளையும் பறித்துக் கொண்டது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை, கிண்டி முதி யோர் மருத்துவமனை, பெரியார் நகர் மருத்துவமனை ஆகியவற்றில் முழுக்க ஒப்பந்தப் பணியிடங்களை மட்டுமே தோற்று வித்துள்ளது. இதனால் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம் பெறுவது தாமதமாகி வருகிறது. கொரோனா காலகட்டத்தில் எம்.ஆர்.பி மூலம் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களை இரண்டு வருடங்களுக்குப் பின் தொகுப்பூதிய பணி யிடங்கள் காலியாக இருந்தும் ஒரே நாளில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்தது தற்போதைய அரசு. முதல் வரின் கனவுத் திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் - தொகுப்பூதிய, நிரந்தர தன்மை யற்ற செவிலியர்களைக் கொண்டே செயல் படுத்தப்படுகிறது.
மருத்துவத்துறையில் செவிலியர்களின் பங்கு
மருத்துவத்துறையில் செவிலியர்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது. கொரோனா தொற்று மக்களை அச்சுறுத்திய நிலையில்; பல உயிர்களைக் காவு வாங்கிய நேரத்தில்; உறவினர்களே நோயாளிகளிடம் இருக்க அஞ்சிய நிலையில் நோயாளிகளுடன் இருந்து உயிரை துச்சமென மதித்து அவர்களுக்கு செவிலியர்கள் சேவை வழங்கி யது குறிப்பிடத்தக்கது.
புறக்கணிக்கப்பட்ட மகப்பேறு உரிமை
கடந்த ஆட்சிக் காலத்தில் போராடிப் பெற்ற தொகுப்பூதிய செவிலியர்களுக்கான மகப்பேறு விடுப்பு ஊதியம் இந்த ஆட்சி காலத்தில் திரும்பபெறப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மருத்துவமனைகளில் அர்ப்பணிப் புணர்வுடன் பிரசவம் பார்க்கும் செவிலியர் களுக்கு மகப்பேறு விடுப்பு என்பது மறுக்கப் பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் வழங்க வலியுறுத்தியும் கூட, ஊதியம் வழங்க மறுக்கிறது அரசு.
சம வேலைக்கு சம ஊதியம்
தொகுப்பூதிய செவிலியர்கள் நிரந்தரச் செவிலியர்களுக்கு இணையான பணியை செய்யும் பட்சத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதற்காக அரசுத் தரப்பால் அமைக்கப் பட்ட குழுவானது, தொகுப்பூதிய செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களுக்கு இணையான பணியை செய்யவில்லை என்று உண்மைக்கு மாறான அறிக்கையை வழங்கியதால், இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து தொகுப்பூதிய செவிலியர்களின் பணியை ஆராய உத்தரவிட்டது நீதிமன்றம். அந்தக் குழு தொகுப்பூதிய செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களுக்கு இணையான பணியை செய்கிறார்கள் என்பதை உறுதி செய்து சம ஊதியம் வழங்க பரிந்துரைத்த நிலையில், சம ஊதியம் வழங்க மறுத்து சமூக நீதிக்கு எதிராக அரசு செயல்படுகிறது.
செவிலியர் பற்றாக்குறை
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேசிய மருத்துவ ஆணையம், இந்திய நர்சிங் கவுன்சில், இந்திய பொது சுகாதாரத் தர நிர்ணயங்களின் பரிந்துரைகளில் 3இல் ஒரு பகுதி செவிலியர் பணியிடங்கள் மட்டுமே உள்ள தால் மூன்று செவிலியர்களின் பணியை ஒரு செவிலியர் செய்யும் நிலை உள்ளது. நிதி ஆயோக் கடந்த 2021ஆம் ஆண்டு மாவட்ட மருத்துவமனைகளின் செயல்திறன் குறித்து வெளியிட்ட அறிக்கையில் நமது மாநிலம் சேவைகள் வழங்குவதில் முதன்மை மாநில மாக இருந்தாலும் செவிலியர் எண்ணிக்கை யில் பரிந்துரைகளை விட குறைவாக நாட்டில் 30ஆவது இடத்தையே பிடித்துள்ளது. செவிலியர் பற்றாக்குறையால் நோயாளி களுக்கு வழங்கப்படும் சிகிச்சையில் தொய்வு ஏற்படுவதுடன் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் காத்திருப்பு நேரம் அதி கரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் கடந்த காலங் களில் இருந்த அடிப்படை பணியிடங்கள் ஒழிக்கப்பட்டுள்ளதால் செவிலியர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதுடன் சிகிச்சை தரத்தில் குறைபாடுகள் ஏற்படுகிறது.
‘கொத்தடிமை’ கூலி முறை
ஒரு துறை நிரந்தரத் தன்மையுடையதாக செயல்பட வேண்டுமென்றால் அந்த துறையில் பணி செய்யும் ஊழியர்கள் நிரந்தர ஊழியர்களாக பணியமர்த்தப்பட வேண்டும். தமிழ்நாடு மருத்துவத்துறையில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக பணிய மர்த்தப்பட்டு வந்த நடைமுறை மாறி நோயாளி கள் நல சங்கம், மாவட்ட சுகாதார சங்கம், முத லமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் 11 மாத ஒப்பந்த முறையில் பணி அமர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 32 அரசு மருத்துவக் கல்லூ ரிகள், 234 அரசு மருத்துவமனைகள், 1832 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 504 அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ள நிலையில் ஆரம்ப சுகாதாரநிலையங் களில் 1387 நிரந்தர செவிலியர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 8,572 செவிலியர்கள் தொகுப்பூதிய முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். செவிலியர் பற்றாக்குறை காரணமாக தொகுப்பூதிய செவிலியர்கள் 8மணி நேர வேலை என்ற வரையறை கடந்து 12மணி நேரத்திற்கும் மேலாக பணி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெண்கள் நலனில் அதிக அக்கறை செலுத்தும் திமுக அரசு பெண்கள் அதிகமாக இருக்கும் இந்த துறையில் கொத்தடிமை கூலி முறையில் பணியமர்த்துவதும் அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதும் சமூகநீதி கொள்கைக்கு எதிராகவும், அனைவருக்கும் இலவச மருத்துவ உரிமையை மறுப்பதாகவும் உள்ளது. மக்களுக்கான தரமான அடிப்படை சேவையை வழங்குவதை உறுதிப்படுத்தும் விதமாகவும், மருத்துவத்துறை அரசின் வசம் நிரந்தரமாக இருக்கும் விதமாகவும் தமிழ்நாடு செயல்பட வேண்டும்.