தொழிலாளர்கள் பூச்சிகளைப் போல சாகக் கடவதுதான் விதியா?
இந்தியாவின் குடியரசு தினக் கொண்டாட் டங்கள் ஒருபுறம் கோலாகலமாக நடந்து கொண்டிருந்த வேளையில், கொல் கத்தாவின் தெற்குப் புறநகர்ப் பகுதியான ஆனந்த பூரில் உள்ள நசிராபாத் கிடங்கு வளாகத்தில் உழைக்கும் வர்க்கத்தின் மீதான ஒரு கொடும் தாக்கு தல் அரங்கேறியது. ஜனவரி 26 அதிகாலையில் ஏற்பட்ட அந்தப் பயங்கரத் தீ விபத்தில், அங்கு தங்கியி ருந்த தொழிலாளர்கள் உடல் கருகி மடிந்த செய்தி நாட்டை உலுக்கியது. ஜனவரி 29 அன்று 21 ஆக இருந்த பலி எண்ணிக்கை, தற்போது 31 ஆக உயர்ந்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட உயிரிழப்பு தரவுகள் திட்டமிட்டு குறைத்துக் காட்டப்பட்டன என்பது, சுமார் 28 தொழிலாளர்கள் மாயமாகி இருந்த போதே தெளிவாகத் தெரிந்தது.
இந்தத் துயரம் வெறும் தற்செயலான விபத்து அல்ல; இது ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட படுகொலை. ‘வாவ் மோமோ’ (Wow Momo) எனும் நாடு தழுவிய பிரபல உணவு பிராண்டின் தயாரிப்பு மையத்தில் பணியாற்றிய அந்தப் புலம்பெயர் தொழிலாளர்கள், இரவு நேரங்களில் அந்தக் கிடங்கிற்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்டிருந்தனர். ஒரு அவசர கால வெளியே றும் வழி கூட இன்றி, அவர்கள் மூச்சுத் திணறியும் தீயில் கருகியும் மாண்டு போயினர். நவீன கால அடிமை முறையின் கோர முகத்தை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
லாப வெறியும் நிறுவனப் படுகொலையும்
இந்தத் தொழிலாளர்கள் தங்கியிருந்த இடம் ஒரு தற்காலிகத் தங்குமிடம் அல்ல, அது ஒரு மரணப் பொறி. முறையான வேலை நேரம், கூடுதல் நேர ஊதியம், சங்கமாக இணையும் உரிமை என எதையும் அந்த நிறுவனம் வழங்கவில்லை. இ.எஸ்.ஐ (ESI) மற்றும் வருங்கால வைப்பு நிதி (PF) போன்ற சமூகப் பாதுகாப்பு உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், மாண்டு போன தொழிலாளர்களின் குடும்பங்கள் இன்று எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி வீதியில் நிற்கின்றன.
குறைந்தபட்ச காற்றோட்டம், தீயணைப்புக் கருவி கள் அல்லது அவசர கால வழிகள் கூட இல்லாத இத்தகைய ‘வியர்வைக் கூடாரங்களில்’ (Sweatshops) தொழிலாளர்களைப் பூட்டி வைப்பது என்பது லாப வேட்டைக்காக நடத்தப்படும் திட்டமிட்ட குற்றமா கும். ஆனால், அதிகார வர்க்கமோ குற்றவாளிக ளைப் பாதுகாக்கவே முனைகிறது. மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, விபத்து நடந்த பகுதியை மூடி மறைப்பதிலும், உண்மை நில வரத்தை வெளிவராமல் தடுப்பதிலும் காட்டிய அக்க றையை, குற்றவாளிகளைக் கைது செய்வதில் காட்டவில்லை. ‘ராம்சார் தளமாக’ அங்கீகரிக்கப்பட்ட சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து இத்தகைய சட்ட விரோதக் கட்டுமானங்கள் எழ அரசு உடந்தையாக இருந்துள்ளது. அம்மாநில தொழிலாளர் துறையின் மெத்தனமும், முறையான பாதுகாப்பு தணிக்கைகள் மற்றும் தீயணைப்பு மேற்பார்வை இல்லாததுமே இன்று 31 உயிர்களைப் பலிவாங்கியுள்ளது.
வர்க்கப் பகைமையைக் கக்கும் நீதித்துறை
மேற்கு வங்கத்தின் நிலைமை இப்படி இருக்க, நாட்டின் உயரிய நீதித்துறையின் போக்கு அதைவிட அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஜனவரி 29 அன்று, ‘பெண் தொழிலாளர் சங்கம்’ தொடர்ந்த ஒரு பொது நல வழக்கின் விசாரணையின் போது, இந்தியத் தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் கடும் கண்டனத்திற்குரியவை. “நாட்டில் எத்தனை தொழில்துறை நிறுவனங்கள் தொழிற்சங்கங்களால் மூடப்பட்டுள்ளன? இந்த ‘ஜண்டா’ (கொடி பிடிக்கும்) சங்கங்களால்தான் நாட்டின் பாரம்பரியத் தொழில் கள் அனைத்தும் அழிந்துவிட்டன. தொழிலாளர்க ளுக்கு வேலை செய்ய விருப்பமில்லை, தொழிற் சங்கத் தலைவர்கள்தான் நாட்டின் தொழில் வளர்ச்சி க்குத் தடையாக இருக்கிறார்கள்” என்று கூறி சாடி யுள்ளார்.
தலைமை நீதிபதியின் இந்த வார்த்தைகள் தற் செயலான கருத்துக்கள் அல்ல, அவை இந்திய ஆளும் வர்க்கத்தின் நீண்டகால வர்க்கப் பகைமை யின் பிரதிபலிப்பாகும். வாவ் மோமோ கிடங்கில் தங்களை வெளியே பூட்டி வைத்திருந்த நிலையிலும், மிகக் குறைந்த ஊதியத்திற்காக இரவு பகலாக உழைத்த அந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு “வேலை செய்ய விருப்பமில்லை” என்று கூறு வதை விட பெரிய அவமானம் இருக்க முடியாது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் தனது வர்க்கப் பார பட்சத்தினால் உண்மைகளைக் காண மறுக்கிறார்.
புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை நிலை
தொழிலாளர் நல வாரியத்தின் (Labour Bureau) ‘தொழில் தகராறுகள், மூடல்கள், ஆட்குறைப்பு மற்றும் வேலை பறிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தலைமை நீதிபதியின் வாதத்தைத் தவிடுபொடியாக்குகின்றன. 2023-ஆம் ஆண்டில் தொழில் தகராறுகள் 17 ஆண்டுகளில் இல்லாத அளவு க்குக் குறைந்துள்ளன. 2006-இல் 432 ஆக இருந்த தொழில் தகராறுகள், 2023 செப்டம்பர் வரை வெறும் 30 ஆக மட்டுமே சரிந்துள்ளன. 2007-இல் 389, 2008-இல் 421 என இருந்த எண்ணிக்கை இன்று மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது. அப்படி யென்றால், தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு தொழிற்சங்கங்கள் எப்படி காரணமாக முடியும்?
உண்மையில், தொழிற்சங்கங்கள் பலவீனமாக இருக்கும் மாநிலங்களில்தான் அதிகப்படியான தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. மக்கள வையில் ஒன்றிய அரசு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,04,268 தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் தொழிற்சங்கங்கள் அல்ல; மாறாக நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு (Amalgamation), கலைப்பு (Dissolution) மற்றும் கம்பெனிகள் சட்டம் 2013-இன் கீழ் நீக்கப்பட்ட நிகழ்வுகளே ஆகும். மேலும், ‘திவாலாகுதல் மற்றும் திவால் வாரி யத்தின்’ (IBBI) தரவுகள், பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றும் கார்ப்பரேட்டுகளின் நிலையையே காட்டுகின்றன.
பொருளாதார நெருக்கடியும் உழைப்புச் சுரண்டலும்
தொழில்துறை வீழ்ச்சிக்குத் தொழிற்சங்கங்கள் காரணம் என்ற வாதம் முற்றிலும் தவறானது. நவதா ராளவாதக் கொள்கைகளால் ஏற்பட்ட உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடியும், சந்தையில் மக்களின் வாங்கும் திறன் (Aggregate Demand) குறைந்ததும், நிதி மூலதனத்தின் ஆதிக்கம் அதிகரித்ததுமே இதற்குக் காரணம். இது குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களைச் (MSME) சிதைத்துள்ளது. நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் பட்ஜெட் தரவுகள் சுட்டிக்காட்டுவது போல, வேலை வாய்ப்பற்ற வளர்ச்சியும் (Jobless Growth), வருமான வரிசை ஏற்றத்தாழ்வுமே இன்றைய முட்டுக் கட்டைக்குக் காரணம்.
இந்த எதார்த்தத்தை மறைத்துவிட்டு, தொழிலா ளர்களின் உரிமைகளை ஒடுக்குவதையே அரசு குறிக்கோளாகக் கொண்டுள்ளது. புதிய தொழிலா ளர் சட்டத் தொகுப்புகள் (Labour Codes) அறிவிக்கப் பட்டதன் மூலம், கார்ப்பரேட்டுகளுக்கு ‘சுகமான சூழலை’ ஏற்படுத்தித் தர அரசு முனைகிறது. இதன் மூலம், அரசியலமைப்புச் சட்டம் 19 (1) (c) வழங்கி யுள்ள சங்கம் சேரும் உரிமையும், கூட்டுப் பேரம் பேசும் உரிமையும் பறிக்கப்படுகின்றன.
ஆனந்தபூர் துயரம் என்பது ஒரு மாநிலத்தின் விபத்து அல்ல; அது ஒட்டுமொத்த இந்தியத் தொழிலாளர் வர்க்கமும் தள்ளப்பட்டுள்ள அவல நிலையின் அடையாளம். கார்ப்பரேட்டுகளின் லாப வெறிக்காகவும், அதிகார வர்க்கத்தின் அலட்சி யத்திற்காகவும் நமது தொழிலாளர்கள் பூச்சிகளைப் போலச் சாவதை நாம் அனுமதிக்க முடியாது. உழைப்பவர்களின் உயிரை விட லாபம் பெரிதல்ல என்பதை உரக்கச் சொல்ல வேண்டிய தருணம் இது. தங்களை தற்காத்துக் கொள்ளக் கூட வழியின்றி பூட்டி வைக்கப்பட்டுக் கொல்லப்படும் தொழிலாளர்களின் குரலாக மாறி, இந்த அநீதியான கட்டமைப்புக்கு எதிரா கப் போராடுவதே நம் முன் உள்ள கடமையாகும்.