அப்பா, தோழர், ஆசான்
பி.ஆர்.சி. என எல்லோரலும் அன்புடன் அழைக்கப்படும் தோழர் பி.ராமச்சந்திரன் அவர்கள், எனது அப்பாவா? தோழனா? பிள்ளைகள் வளர்ந்துவிட்டால் “தோளுக்கு மிஞ்சினால் தோழன்” எனச் சொல்வது வழக்கம். ஆனால், மார்க்சியச் சிந்தனைகளைப் பள்ளிப் பருவத்திலேயே மனதார ஏற்று, அதிலிருந்து நூலிழை அளவு கூட விலகாமல் தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்த பி.ஆர்.சி. என்ற அப்பாவின் தோழமையாக 50 ஆண்டுகாலம் வாழ்ந்திருக்கிறேன் என்பது மிகவும் சிறப்பானது.
சமத்துவச் சிந்தனையின் ஆணிவேர்
அப்பா கேரள மாநிலத்தில் உள்ள தலச்சேரியில் பிறந்தவர். அவருடைய அம்மா பத்மாவதி அந்தக் காலத்திலேயே கான்வென்ட் பள்ளியில் படித்தவர்; இயல்பாகவே சமூகச் சிந்தனை உடையவர். அந்தக் காலகட்டத்தில் கேரளத்தில் தீண்டாமையை விடக் கொடுமையான சாதிய ஒடுக்குமுறை இருந்தது. ‘நாயாடிகள்’ என்ற சமூகத்தைச் சேர்ந்த மனிதர்கள், உயர்ந்த சாதியைச் சார்ந்தவர்களின் கண்களில் பட்டுவிடக்கூடாது என்ற பழக்கமான ‘காணாமை’ (Unseeability) என்ற கொடூரம் இருந்தது. கேரளத்தில் கம்யூனிசம் வேகமாக வளர்ச்சி அடைய, இதுபோன்ற சாதிய ஒடுக்குமுறையே ஒரு காரணம் என அருமை தோழர் ஏ.கே.ஜி. அவர்கள் ஒரு புத்தகத்தில் எழுதி இருக்கிறார். அப்பா சிறுவனாக இருந்தபோது, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக இயக்கம் நடந்தபோது, அதற்கான விளக்கத்தை அம்மாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அம்மா, “நம் வீட்டில் வேலை செய்யும் கல்யாணிக்கு அடிபட்டாலும், நாயாடிகளுக்கு அடிபட்டாலும், உனக்கு அடிபட்டாலும் உடலில் இருந்து வெளிவரும் ரத்தத்தின் நிறம் சிவப்புதான். எனவே மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை; அனைவரும் சமமானவர்கள்” என்று ஓர் எளிமையான உதாரணத்தின் மூலம் சமத்துவச் சிந்தனையை விதைத்துள்ளார். இதனால்தான் அப்பா, தனது அம்மாவை “என் முதல் தத்துவ ஆசான்” என்று சொல்லுவார். அப்பாவின் தந்தை சங்கரமேனன் வக்கீலாக இருந்தபோதும், கட்சியின் அனுதாபியாக இருந்து, அங்கு துவங்கப்பட்ட விவசாயச் சங்கத்தின் தலைவரா கவும் செயல்பட்டுள்ளார். பெற்றோரின் சிந்தனை களும் செயல்பா டுகளுமே தனது அரசியல் உறுதி ப்பாட்டிற்கு அடித்தளம் இட்டது என அப்பா சொல்லி இருக்கிறார். கட்சிப் பணியில் உருக்குறுதி தைரியமும் தன்னம்பிக்கையும் மிகுந்த எங்கள் அம்மா ஜானகியுடனான திருமணமும், அப்பாவின் கட்சிப் பணிகளுக்கு மேலும் வலுவூட்டியது. கொள்கைப் பிடிப்பும் கட்சிப் பணிகளில் அவருக்கு இருந்த ஈடுபாடும் உருக்கு போல் உறுதியாக இருந்தன. அந்த உறுதியை யாராலும் எந்தச் சூழ்நிலையாலும் நிலைகுலைய செய்ய இயலவில்லை என்பதை பல்வேறு நேரங்களில் நான் கண்டு வியந்ததுண்டு. 1964 ஆம் ஆண்டு, மத்திய அரசு சிபிஎம் தலைவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டபோது, கைது செய்யப்பட்டவர்களில் அப்பாவும் ஒருவர். சிறைக்கைதியான அப்பாவை மாதமொரு முறை கடலூர் சிறையில் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கும். அந்த இறுக்கமான சூழ்நிலையில் கூட, அப்பாவின் முகம் மலர்ந்த சிரிப்புடன்தான் இருக்கும். அரசியல் கைதியாக இருந்ததால் அவருக்கு வழங்கப்பட்ட சிறு தொகையில் எங்களுக்குச் சாக்லேட் வாங்கி வைத்து எங்களைப் பார்க்கக் காத்து க்கொண்டிருப்பார்.
துலாபாரமும் பாட்டியின் பீதியும்
அப்பா சிறைக்குச் சென்ற பிறகு, நாங்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள டால்மியாபுரம் (தற்போது கல்லக்குடி பழங்காநத்தம்) என்ற ஊரில், பாட்டி (அம்மாவின் அம்மா) வீட்டில் இருந்தோம். அப்போது டால்மியாபுரம் சிமெண்ட் தொழிற்சாலையில் ஒரு பெரிய போராட்டம் நடந்தது. காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் 150 பேரை நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த உண்ணாவிரதத்தில், அப்பா பத்து நாட்களும், தோழர் உமாநாத் 13 நாட்களும் உண்ணாவிரதம் இருந்தனர். தோழர் ராமமூர்த்தி தலையிட்டு அன்றைய முதலவராக இருந்த அண்ணாதுரையிடம் பேசிப் போராட்டம் முடிவுக்கு வந்தது. பத்து நாட்கள் உண்ணாவிதம் இருந்து உடலில் சோர்வு இருந்த பொழுதிலும், அப்பாவின் கண்களில் தெரிந்த ஒளியும், முகத்தில் தெரிந்த உறுதியும் என்றென்றும் மறக்க இயலாது. அந்த நேரத்தில் வெளிவந்த “துலாபாரம்” என்ற திரைப்படத்தில், கதாநாயகன் தொழிற்சங்கத் தலைவராக இருப்பார். அவர் போராட்டத்தில் கொல்லப்பட, அவரது மனைவியும் மூன்று குழந்தைகளும் நடுத்தெருவில் நிற்பார்கள். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அம்மாவின் உறவினர்கள், பாட்டியிடம் “உனது மகளுக்கும் இந்தக் கதாநாயகியின் நிலைதான் வரும்; உன் மருமகனை கட்சி வேலைகளை விட்டுவிட்டு ஏதாவது உருப்படியாக வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்ற சொல்” என்று அறிவுரை கூறியுள்ளனர். இதனால் பீதியடைந்த என் பாட்டி, அப்பாவிடம் தயக்கத்தோடு “இந்த கட்சி எல்லாம் வேண்டாம்” என்று பேச ஆரம்பித்ததுதான் தாமதம், உடனே அப்பா, “இப்படி என் கட்சிப் பணிகளில் தலையிட்டு, என்னை கட்சிப் பணி செய்யவிடாமல் தடுத்தால், நான் வீட்டிற்கு வருவதையே நிறுத்திக் கொள்வேன்” எனக் கோபத்தோடு கடுமையாகப் பேசினார். பாட்டி மௌனமாகிவிட்டார். இப்படித் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் பல்வேறு நெருக்கடிகளையும் தாக்குதல்களையும் சந்தித்தபோதும், அவரது அரசியல் உணர்வு கடுகளவு கூடக் குறையவில்லை.
கடைசி மூச்சு வரை கட்சி!
2008 ஆம் ஆண்டு இறப்பதற்கு முன், எந்த ஒரு உணர்வும் இன்றி உடலில் ஒரு அசைவு கூட இல்லாமல் இருந்தார். அவருக்குச் சிகிச்சை செய்த மருத்துவர்கள், “அவருடன் ஏதாவது பேசிக்கொண்டே இருங்கள்” என்று அறிவுறுத்தினார்கள். அப்பொழுது அப்பாவைப் பார்க்க வந்த தோழர் பிருந்தா காரத் அவர்கள், அப்பாவின் காதருகில் சென்று, “பி.ஆர்.சி.! ஏன் படுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? பொலிட்பீரோ கூட்டத்திற்கு நேரம் ஆகிவிட்டது. எழுந்து வாருங்கள்! நாங்கள் எல்லோரும் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று சொன்னவுடன், அப்பாவின் நெற்றியில் ஒரு சுருக்கமும், புருவத்தில் ஒரு சிறு அசைவும் தெரிந்ததாக அம்மா சொன்னார்கள். கட்சி, கொள்கைகள், அவரது உயிரிலும் இரண்டறக் கலந்தே இருந்துள்ளது. இறப்பதற்கு முன்பு, மருத்துவமனையில் என்னைப் பார்த்தவுடன், “வந்துவிட்டாயா? உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும். விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கு எதிராக நாடு முழுவதும் இயக்கங்கள் நடத்த வேண்டும். நீ மதுரைக்குச் சென்றவுடன் தோழர் நன்மாறனிடம் இது குறித்துப் பேச வேண்டும்” என்றார். இதுவே அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தைகள். வாஞ்சையுடன் அப்பாவாக அவரது கைகள் என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டிருந்த போதிலும், அவர் தோழராகத்தான் என்னிடம் பேசினார். செவ்வணக்கம் அப்பா, தோழா!
