பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்போம்!
பத்திரிகைகளை பாதுகாப்போம்!!
பத்திரிகையாளர்கள் அவர்தம் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்!!! என்கின்ற மூன்று முக்கிய குறிக்கோள்களை அடிப்படையாக வைத்து கடந்த 1990-ஆம் ஆண்டில் மே மாதம் நமது சங்கம் துவக்கப்பட்டு கடந்த 31-ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள் உரிமைகளுக்கு போராடி தமிழகத்தில் பல்வேறு நலச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதில் டியூஜே பெருமையடைகிறது.
இன்றைய சூழல் என்பது ஊடகத்துறைக்கு மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள காலகட்டமாகும்.உலகம் முழுவதும் கொரோனா என்ற பெரும் தொற்றால்பொதுமக்கள் பல லட்சக்கணக்கில் கொத்துக் கொத்தாய் உயிரிழக்கும் பேரழிவு காலமாக உள்ளது.இதில் முன் களப்பணியாளர்களாக உயிரைப் பணயம் வைத்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள், அடிநிலை ஊழியர்கள் மற்றும் சமூகத்திற்கு இந்த பெருந்தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் பல்லாயிரக்கணக்கில் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர்.
இந்த நெருக்கடியான சூழலை ஊடக நிறுவனங்கள் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டு ஊடகவியலாளர்களை பணிநீக்கம் செய்வது, ஊதியத்தை குறைப்பதுபோன்ற நேர்மையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.குறிப்பாக தமிழகத்திலும்,இந்தியா முழுமைக்கும் இந்த கொடுமை அரங்கேறி வருகிறது.இன்னும் சொல்லப் போனால் சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து நாங்கள் போராடி வந்தோம் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழ்மொழிஉள்ளிட்ட அனைத்து மொழி நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள்,மாத இதழ்கள், தங்கள் செய்தியாளர்களையும், ஊழியர்களையும் பணிநீக்கம் செய்வதிலும், ஊதியத்தை வெட்டுவதிலும் முன்னணியில் உள்ளன.
பத்திரிகையாளர்களை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் கொண்டு வந்த எந்தவித நலச் சட்டங்களையும் கருத்தில் கொள்ளாமல் அதன்படி நடக்காமல் அச்சமின்றி மனசாட்சி இல்லாமல் இச்செயலில் ஈடுபடுகின்றார்கள்.குறிப்பாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுச் செயல்படுத்தாத இந்த நிறுவனங்கள், தங்களுக்கு விளம்பரங்களின் மூலம் பலகோடிகளை பெற்று தங்கள் குடும்பங்களின் நல்வாழ்வை பெருக்கிக்கொள்வதையே குறியாக இருந்தவர்கள் தங்கள் லாபத்தில் ஊடகவியலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் பங்கும் தராதவர்கள், அரசின் ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றாதவர்கள், அடுத்தவர்களுக்கு புத்தி சொல்லும் பத்திரிகை முதலாளிகள், இன்று கொரோனா பெருந்தொற்றை காரணம்காட்டி பல்லாயிரம் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளனர்.இந்த மோசமான சூழலில் பெருந்தொற்றின் உண்மை நிலையையும், தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஆகியவற்றால் கொத்துக் கொத்தாய் உயிரிழக்கும் பொதுமக்கள் பற்றி செய்தி வெளியிட்டால்,அந்த செய்தியாளர்களை “தேசவிரோத வழக்கில் கைது செய்வோம்” என்று மத்திய-மாநில அரசுகள் குறிப்பாக பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநில முதல்வர்கள் கடும்மிரட்டல்கள் விடுத்து காவல்துறையினர் மூலம் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனை தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்த உச்ச நீதிமன்றம் இதுபோன்ற கருத்துரிமைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட மத்திய-மாநில அரசுகளை கடுமையாக கண்டித்ததுடன் அப்படி ஒரு தவறான வழக்குகளை மேற்கொண்டால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுப்போம் என்றுநான்கு தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.இத்தகைய கடுமையான நேரத்தில் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து களத்தில் நின்று போராடி செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள் மீது ஆங்கிலேய ஆட்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்களை ஒடுக்க கொண்டுவரப்பட்ட “இந்திய தண்டனைச் சட்டம்-1870” பிரிவு-124(A)-ன் படிஅடக்குமுறை ஒழுங்காற்றுச் சட்டத்தின் கீழ் சுதந்திரப் போராட்ட தலைவர்கள் “பாலகங்காதர திலகர், குறிப்பாக தமிழகத்தில் வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோரை ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.
இதே காலாவதியாகி போன சட்டத்தை தூசிதட்டி எடுத்து கடந்த ஆண்டு 2020-ல் அ.தி.மு.க அரசை விமர்சனம்செய்து எழுதிய நக்கீரன் வார இதழ் ஆசிரியர்-நக்கீரன் கோபாலை கைது செய்தது.இந்த சட்ட விரோத கைதை எதிர்த்து தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள், பத்திரிகையாள அமைப்புக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.இந்நிலையில் இவர் கைதுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றமே தமிழக அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்து அவர்மீது இருந்த தேசத்துரோக வழக்கை ரத்து செய்து விடுதலைசெய்தது.
தற்போது மணிப்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோர்சந்திரா மற்றும் சத்தீஸ்கரை சேர்ந்த பத்திரிகையாளர்கண்ஹயால் சுக்லா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தேசத்துரோக சட்டத்தை நீக்கக் கோரியும், மத்திய-மாநில அரசுகள் செயல்பாடுகளை விமர்சனம்செய்தாலோ, கேள்விஎழுப்பினாலோ தேசத்துரோகச் சட்டம் பாய்கிறது.இந்தச் செயல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு-19 வழங்கியுள்ள-பேச்சுரிமை,கருத்து தெரிவிக்கும் உரிமை, அமைதியான முறையில் கூட்டம் கூட்டுவதற்கான உரிமை, சங்கங்கள், அமைப்புகள் தொடங்க உரிமை ஆகியஅடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது.எனவே,பிரிவு-124(A)வை நீக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள்-இந்திரா பானர்ஜி, வி.வி.லலீத், கே.எஸ்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு,அந்த மனுவிற்கு உரிய பதிலளிக்க மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
“உரலுக்கு ஒருபக்கம் இடி. மத்தளத்திற்கு இருபக்கம் இடி”என்ற பழமொழியோடு பத்திரிகையாளர்களுக்கு நிர்வாகங்கள் மூலமும், மத்திய-மாநில அரசுகள் மூலமாகவும் “நான்கு பக்கங்களிலும் இடியாக உள்ளது”.பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த 1993-ஆம் ஆண்டு மே-3-ஆம் தேதி கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் “உலகபத்திரிகையாளர்கள் தினம்” அறிவித்து ஆண்டுதோறும். மே-3-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்தியாவில் தேசிய பத்திரிகை கவுன்சில் துவங்கப்பெற்ற 1966- நவம்பர்-16-ஆம் தேதியை “இந்திய பத்திரிகையாளர் தினமாக கடைப்பிடித்து வருகின்றோம்”.
பத்திரிகையாளர்களை பாதுகாக்க ஏற்கனவே இருந்த சட்டங்களையும் அதன் அதிகாரங்களையும் குறைத்து மத்திய அரசு கடந்த 2020 கொரோனா காலகட்டத்தில் அவசரஅவசரமாக புதியச் சட்டங்களை கொண்டு வந்து பத்திரிகையாளர்களை வஞ்சித்துள்ளது.இதே போன்று தொழிலாளிகள் நல 26- சட்டங்களை குறைத்து 4-சட்டங்களாக மாற்றி கடந்த ஆண்டு புதிய தொழிலாளர் விரோத சட்டங்களை நிறைவேற்றியது.இதை எதிர்த்து இந்தியாவின் அனைத்து தொழிற்சங்கங்களும் 2020- நவம்பர்-26 ஒரு “அகில இந்திய பந்த்” நடத்தி தங்கள்எதிர்ப்பைப் பதிவு செய்தது.
இதே கொரோனா காலகட்டத்தில் விவசாயிகளுக்கு விரோதமான மூன்று அவசரச் சட்டங்களை கொண்டு வந்ததால் உலகம் காணாத அளவிற்கு இந்தியாவின் தலைநகரான புதுதில்லியில் நடந்த 2020-நவம்பர் 26 அன்று துவங்கிய விவசாயிகள் போராட்டம் ஐந்து மாதங்கள் கடந்து நடைபெற்று வருகிறது.சுமார் 300-விவசாயிகள் தங்கள் இன்னுயிரை போராட்டத்தில் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களை ரத்து செய்த மத்திய அரசின் செயலை கண்டித்து எந்த மாநிலத்திலும் முழுமையாக எந்த ஒருபோராட்டமும் நடைபெறவில்லை, குறிப்பாகத் தமிழகத்திலும் அதே நிலை தான் என்பது வெட்கக்கேடான ஒன்று.எனவே, தற்போது புதிதாக அமைய உள்ள மாநில அரசு மூலம் பத்திரிகையாளர் விரோதச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தமிழகத்தில் உள்ள அனைத்து சங்கங்கள் மற்றும் அமைப்புக்களின் உதவியோடு இந்த செயலை டியூஜே முன்னெடுக்கும்.
கட்டுரையாளர் : பி.எஸ்.டி.புருஷோத்தமன்
மாநிலத் தலைவர்,தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் (டியூஜே)
.........................(மே.3) சர்வதேச பத்திரிகையாளர்கள் தினம்..................