சென்னை தினம் 22.08.2022 மதராஸ் எனும் சென்னப்பட்டணத்தின் வரலாறு என்றாலே நினைவுக்கு வரக்கூடியவர்கள் ஜே.டால்பாய் வீலர், ஹென்றி டேவிசன் லவ் ஆகியோர் மட்டுமே. வீலரின் “மதராஸ் இன் ஓல்டன் டைம்ஸ்” நூல் 1861இல் மூன்று பாகங்களாகவும், லவ்வின் “வெஸ்டிஜெஸ் ஆஃப் மெட்ராஸ்” 1913இல் நான்கு பாகங்களாகவும் முறையே மதராஸ் ஹிக்கின்பாதம்ஸ் நிறுவனத்தாலும், லண்டன் ஜான் மர்ரே நிறுவனத்தாலும் வெளியிடப்பட்டிருக்கிறது. அதே தருணத்தில் இதற்கு முன்னும் சரி பின்னும் சரி மதராஸை தொட்டுப் பார்த்து செல்லக்கூடிய நூல்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பிரசுரிக்கப்பட்டு வந்திருப்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. 1861லேயே மதராஸை தலைமையிடமாக கொண்டிருந்த பதிப்பாளர்களான காண்ட்ஸ் பிரதர்ஸ் மதராஸ் மாகாணம் பற்றிய சுருக்கமான வரலாற்றினை கொண்டு வந்திருக்கின்றனர். இவர்கள்தான் க்ளைன் பார்லோவும், கணபதி அக்ரஹாரம் நடேசனும் பணிபுரிந்து வந்த மதராஸ் டைம்ஸ் எனும் ஆங்கில நாளிதழின் வெளியீட்டாளர்களும் கூட. பார்லோவே 1921இல் “தி ஸ்டோரி ஆஃப் மெட்ராஸ்” எனும் சுருக்கமான அதே நேரத்தில் செறிவான வரலாற்றை எழுதினார். ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டி பிரஸ் இதை வெளியிட்டிருந்தது. 1924இல் சென்னை சட்டசபைத் தலைவர் கனம் திவான் பகதூர் எல்.டி.சுவாமிக்கண்ணு பிள்ளையின் முகவுரையுடன் சென்னை தொல்லியல்துறை பி.வி.ஜகதீச ஐயரால் எழுதப்பட்டு சென்னை ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ் நிறுவனத்தால் “ஜில்லா சரித்திரம் சென்னப் பட்டணம்” வெளியிடப்பட்டிருக்கிறது.
அறுபத்து நான்கு பக்கங்களைக் கொண்ட இச்சரித்திரம் சென்னை வரலாறு பற்றிய தமிழின் முன்னோடி முயற்சிகளில் ஒன்றாக இருக்கக்கூடும். மதராஸின் 300ஆவது ஆண்டையொட்டி பிரசுரம் ஒன்றை கொண்டுவரும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக ராவ் சாகிப் சி.எஸ்.ஸ்ரீநிவாஸாச்சாரி யும் உறுப்பினர்களாக திவான் பகதூர் டாக்டர் எஸ்.கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், ராவ் பகதூர் கே.வி. ரங்கஸ்வாமி அய்யங்கார், பேராசிரியர் எம் ரத்னஸ்வாமி, பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, பேராசிரியர் பி.ஜே.தாமஸ், பேராசிரியர் எம்.வெங்கடரங்கையா, குமாரராஜா எம்.ஏ.முத்தையா செட்டியார் ஆகியோரும் இருந்தனர். இக்குழுவின் செயலாளராக வி.ஆர்.ராமச்சந்திர தீட்சதர் இருந்தார். இக்குழுவினர் மதராஸ் குறித்த காத்திர மான பதிப்பை 1939இல் ஆங்கிலத்தின் கொணர்ந்தனர். ராவ் பகதூர் எஸ்.ஈ.ரங்கநாதனின் அறிமுக உரையுடன் கூடிய இப்பதிப்பில் வரலாறு, நிர்வாக அமைப்புகள், வர்த்தகம், புவியியல், மதம், கலை ஆகிய ஆறு பிரிவு களின்கீழ் டாக்டர் ஏ.எல்.முதலியார், எம்.ஜி.முகமது அலி மரைக்காயர், பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, ராவ் பகதூர் கிருஷ்ணா ராவ் போன்ஸ்லே தவிர வேறு பலரும் எழுதிய 50 சிறப்பு வாய்ந்த கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன. இப்பதிப்பை ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டி பிரஸ் வெளியிட்டிருந்தது. அதே தருணத்தில் அதாவது 1939இல் எஸ்.ஈ.ரங்க நாதனின் அணிந்துரையுடன் கூடிய சி.எஸ்.ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் “ஹிஸ்டரி ஆஃப் தி சிட்டி ஆஃப் மெட்ராஸ்” பி.வரதாச்சாரி அண்ட் கோவினால் வெளியிடப்பட்டது. சென்னை நகர வரலாற்றைக்கூறும் முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களில் ஒன்றாக விளங்கும் இது குறித்து நரசய்யாவின் மதராசபட்டி னத்தில் சுவடேதும் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது.
அறுபதுகளின் துவக்கத்தில் சென்னை நகரம் பற்றிய வித்தியாசமான தகவல்களுடன் டபிள்யு.எஸ்.கிருஷ்ண ஸ்வாமி நாயுடுவால் எழுதப்பட்ட “ஓல்ட் மெட்ராஸ்” வெளிவந்தது. இதற்கு அடுத்த கட்டத்தில் ஏற்கனவே மதராஸ் பற்றி அவ்வப்போது பத்திகளில் எழுதிவந்த என்.எஸ்.ராமஸ்வாமியின் “ஃபவுண்டிங் ஆஃப் மெட்ராஸ்” ஓரியண்ட் லாங்மென் நிறுவனத்தால் வெளியிடப் பட்டது. அவரே மதராஸ் டிபிஐ வளாகத்திற்குள் அமைந்துள்ள மதராஸ் லிட்ரரி சொஸைட்டியின் நூலகத்தின் வரலாற்றினை மெட்ராஸ் லிட்ரரி சொஸைட்டி எ ஹிஸ்டரி எனும் நூலை எழுதியுள்ளார். பின்னர் 1981இல் எஸ்.முத்தையாவின் “மெட்ராஸ் டிஸ்கவர்டு” பிரசுரிக்கப்பட்டது. 160 பக்கங்களைக் கொண்ட இதை அஃபிலியேட்டட் ஈஸ்ட் வெஸ்ட் பிரஸ் பிரைவேட் லிமிடெட் வெளியிட்டது. இந்த வெளியீட்டுக்குப் பின்னரே முத்தையா சென்னை நகரம் குறித்து விரிவாக எழுதத் துவங்கியதோடு, இந்து ஆங்கில நாளிதழில் தொடர்ச்சியாக அவரது வாராந்திரப் பத்திகள் வெளியாகக் தொடங்கின. இதன் தொகுப்பாக “மதராஸ் ரி டிஸ்கவர்டு” பதிப்பும் வெளியாகியது. இவையன்றி சென்னை நகரின் துவக்க கால நிறுவனங்களான ஸ்பென்ஸர்ஸ், பாரி நிறுவனம், மதராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் பற்றிய சரித்திரங்களு டன் சென்னைத் துறைமுகம் பற்றிய நூலொன்றும் வெளியாகியிருக்கிறது. துறைமுக வரலாற்றினை முத்தையாவுடன் இணைந்து எழுதிய நரசய்யாவே அதை தமிழிலும் பின்னர் மொழி பெயர்த்துள்ளார். சென்னை நகர வரலாற்றினை கூறும் பெரும்பாலான பதிப்புகள் ஆங்கிலத்தில்தான் வெளியிடப்பட்டிருந்தன.
அன்றைய நடைமுறையை அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் வித்தியாசமாக இருக்க முடியாது. ஐம்பது களுக்குப் பின்னரே தமிழில் சென்னை நகரம் பற்றிய கட்டுரைகள் அவ்வப்போது பத்திரிகைகளில் பிரசுரிக்கப் பட்டு வந்தாலும் முழுமையான நகர வரலாறு பெரிய அளவில் வெளியிடப்படவில்லை. இந்நிலையில்தான் மா.சு. சம்பந்தனின் “சென்னை மாநகர்” எனும் சென்னையின் வரலாறு 1955இல் சென்னை லிங்க செட்டித் தெருவில் உள்ள தமிழர் பதிப்பகத்தால் வெளியிடப் பட்டிருக்கிறது. இதற்கு முன்னரே தமிழகம் எனும் மாதப் பத்திரிகையின் ஆசிரியர் ஏ.கே.சந்திரசேகர முதலியாரால் “கார்ப்பரேஷன் சரித்திரம்” எழுதப்பட்டி ருக்கிறது. சென்னை கார்ப்பரேஷனின் வரலாற்றை முழுமையாகக் கூறும் சிறப்பு வாய்ந்த புத்தகமாகும். ராமசாமி, முத்தையா ஆகியோரின் நாளிதழ் பத்திகளின் பாதிப்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் அந்தந்தப் பகுதிக்குரிய பிரச்னைகளை முன் வைத்து பகுதிப் பத்திரிகைகளும் சென்ற நூற்றாண்டின் இறுதியில் வெளிவரத் தொடங்கின. மயிலாப்பூர் டைம்ஸ், மாம்பலம் டைம்ஸ், நுங்கம்பாக்கம் டைம்ஸ் என்று நானாவித பெயர்களைக் கொண்ட இப்பத்திரிகைகளிலும் வழக்கமான நாளிதழ்கள் பருவ இதழ்களைப் போன்று நகர மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மட்டுமின்றி நகரம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும் இடம் பெற்றிருந்தது. இது தவிர முத்தையாவை ஆசிரிய ராகக் கொண்டு சென்னை நகரின் பிரத்யேக பத்திரிகை யாக “மதராஸ் ம்யூசிங்ஸ்” எனும் ஆங்கில மாதமிரு முறை பத்திரிகையும் வெளிவரத் தொடங்கியது. இந்த முயற்சிகளே சென்னை நகர வரலாறு தமிழில் வெளிவருவதற்கான உத்வேகத்தை அளித்தது.
நகர வரலாறு மட்டுமின்றி நகர வாழ்வின் அனுபவங்களும் பதிப்பிக்கப்பட்டன. ஒட்டுமொத்த நகரின் வரலாறு மட்டுமின்றி நகரின் அங்கமாக விளங்கக்கூடிய பகுதிகளின் வரலாறும் இன்றைய தினம் பதிப்பிக்கப் பட்டு வருகிறது. இவை குறித்து அறிந்த பார்வை யில் பட்டவற்றை பார்ப்போம். இது பின்னர் விரிவு பெற்றிடவும் வகை செய்யக்கூடும். பழம் பெருமைகளையும் புது அருமைகளையும் முடிந்த அளவிற்கு திரட்டித் தந்துள்ளதாக குறிப்பிடப்படும் “சென்னப்பட்டின வரலாறு” குன்றில் குமார் அவர்களால் எழுதப்பட்டு அழகு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்மகனின் “மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்” எனும் கட்டுரைகளின் தொகுப்பு உயிர்மை வெளியீடாகும். சுவார சியம் மிக்க அனுபவங்களின் தொகுப்பாகும் இது. இதேபோன்று அனுபவங்களின் அடிப்படையில் “அலை புரளும் வாழ்க்கை சென்னை சில சித்திரங்கள்” எனும் புத்தகம் அய்யனார் அவர்களால் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கடலோடி நரசய்யாவால் எழுதப்பட்ட “மதராசபட்டி னம்” நகர வரலாறு பற்றிய சிறப்பு வாய்ந்த விரிவான தகவல்களைக் கொண்டிருக்கக்கூடிய புத்தகமாகும். பழனியப்பா பிரதர்ஸ் இதை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் நகரம் அனைவருக்குமானது என்பதை மையக்கருத்தாகக் கொண்ட ராமச்சந்திர வைத்தியநாத்தின் “சென்னப்பட்டணம் மண்ணும் மக்களும்” பாரதி புத்தகாலய வெளியீடாக 1916இல் பிரசுரிக்கப்பட்டது. “அழகிய சென்னை பழகிய சென்னை” என்பது குவளைக் கண்ணனின் அனுபவங்கள். அவ்வாறே சென்னை அனுபவங்கள் பற்றி ஞாநி, பிரபஞ்சன், மருது, நாசர், கே.பாண்டியராஜன், பிரபஞ்சன் ஆகியோரின் கட்டுரை தொகுப்புதான் “சென்னையும் நானும்”. இவ்வி ரண்டு புத்தகங்களும் நம்ம சென்னை வெளியீடாகும். முத்தையாவின் “மதராஸ் ரி டிஸ்கவர்டு” கார்த்திக் நாராயணனின் மொழிபெயர்ப்பில் “சென்னை மறு கண்டு பிடிப்பு” என்று கிழக்கு பதிப்பக வெளியீடாகவும், பார்லோ வின் “ஸ்டோரி ஆஃப் மெட்ராஸ்” ப்ரியா ராஜ் எனும் கட்டளை வெங்கட்ராமன் ராஜாமணி அவர்களின் மொழி பெயர்ப்பில் “சென்னையின் கதை”யாக சந்தியா பதிப்பகத்தாலும் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை நகரின் பிரச்னைகள், சுற்றுச் சூழல் குறித்து அ.பாக்கியம் எழுதிய “சென்னையின் மறுபக்கம் நிஜங்களின் தரிசனம்” பாரதி புத்தகாலய வெளியீடாக இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதே வரிசையில் கோ.செங்குட்டுவனின் “கூவம், அடையாறு, பக்கிங்காம் சென்னையின் நீர்வழித் தடங்கள்” எனும் சுற்றுச் சூழல் பற்றிய ஆய்வு நூலொன்றும் வெளியாகி யுள்ளது. சென்னைக்குள் அடங்கிய பகுதிகளின் வரலாற்றின் முதல் முயற்சி எனில் சி.வி.மலையனின் “சூளை மேடு வரலாறு அன்றும் இன்றும்” எனும் புத்தகத்தை குறிப்பிட முடியும். 2011இல் இதை மேகலா வெளியீடு பதிப்பித்தது. அதே போன்று நல்லியாரின் “தியாகராய நகர் அன்றும் இன்றும்” என்ற பதிப்பும் தகவல்கள் நிறைந்ததாகும். பிரெய்ன் பாங்க் வெளியீடாக வந்த இது பின்னாளில் கவிதா பப்ளிகேஷன்ஸ் பதிப்பாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அட்டையிலேயே திருவல்லிக்கேணியை சுட்டிக் காட்டிப் பாடப்பட்ட நாலாயிர திவ்வியப் பிரபந்த பாசுரத் தோடு சையத் தாஜூதீன் எனும் கெல்லட் மேல்நிலைப் பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவர் “திருவல்லிக்கேணி” பற்றிய வரலாற்றினை விசேட அமைப்பில் 2013இல் பதிப்பித்துள்ளார். இவையன்றி சென்னை பற்றிய பல்வேறு தகவல் களைக் கொண்டிருக்கும் புத்தகங்களுக்கு பஞ்சமே கிடையாது. டி.சுவாமிநாதனின் “சென்னை கோயில்கள்” விகடன் பிரசுரமாகும். இந்து சமய அறநிலையத் துறையும் “சென்னை மாவட்ட திருக்கோயில்கள் வழிகாட்டி” எனும் நூலையும் பதிப்பித்துள்ளது. அல்லயன்ஸ் பதிப்பான “சென்னையில் உப்பு சத்யாக்ரகம்” 2006இல் வெளியிட்டப்பட்டதாகும். பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள “சென்னை நூலகங்கள்” இவ்வரிசையில் வெளியிடப்பட்ட வித்தியாசமானதொரு புத்தகமாகும். இடம் கொடுத்தான் குன்றத்தூரான், பெயர் பெற்றான் செம்பரம்பாக்கத்தான், பயன்பெற்றான் மாங்காட்டா னும் கோவூரானும் என்ற முழக்கத்தோடு ஜெய பொன்ன ரசுவின் “குன்றத்தூர் 2000” என்பது சென்னையையொட்டி அமைந்துள்ள குன்றத்தூரின் வரலாறாகும். குன்றத்தூர் முரசு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் வெளியான ஏராளமான நூல்களில் தனித்து இருப்பது என்றால் பி.வி.ஜகதீச ஐயரின் “ஜில்லா சரித்திரமும் சென்னப்பட்டணமும்” மா.சு.சும்பந்தனின் “சென்னை மாநகர்” மட்டுமே என்று கூறலாம். பி.வி.ஜகதீச ஐயர் தொல்லியல் துறையிலும் மா.சு.சம்பந்தன் சென்னை கன்னிமாரா நூலகத்திலும் பணி புரிந்தவர்கள் என்பதினாலோ என்னவோ அவர்கள் எழுதிய சென்னை வரலாறு இன்றும் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளன. இத்தனைக்கும் 64 பக்கங்களே கொண்ட ஜகதீச ஐயரின் புத்தகம் சுருக்கமாகவும் வரையறை செய்யப்பட்ட பாடப்புத்தகம் போன்று கச்சிதமாகவும் அமைந்துள்ளது.
மா.சு.சம்பந்தனின் சென்னை மாநகர் ஒரு வித்தியாச மான புத்தகமாகும். சென்னை நகர வரலாற்றினை விரி வாக எளிய நடையில் கூறிய இதைப் போன்று வேறொரு நகர வரலாறு இன்று வரை வெளியிடப்பட வில்லை என்று உறுதிபடக் கூற முடியும். இப்பதிப்பு அச்சமைப்பிலும் எழுத்துரு தேர்விலும் நேர்த்தி யானதாகும். சென்னை பற்றிய பெரும்பாலான இதர வரலாறு களில் இத்தகைய அக்கறையும் ஆய்வும் இருப்பதில்லை. சென்னை பாண்டி பஜாரின் பெயர்க்காரணத்தை தனது புத்தகத்தில் நல்லியார் தெளிவுபட விளக்கியபோதிலும், இன்றும் அது பற்றிய உளறல்கள் இருந்து வருகிறது. அதே மாதிரிதான் சேத்துப்பட்டு பழமை வாய்ந்த கிராமமாக இருப்பினும் செட்டியார்கள் குடிபெயர்ந்த மையை பெயருக்கான காரணமாக காட்டுவதும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பட்டினத்தை புராண நகராக சித்தரிக்கும் போக்கும் இருந்து வருகிறது. மலையனின் “சூளைமேடு அன்றும் இன்றும்” பகுதி நகர வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும்.
லயோலா கல்லூரியின் கட்டுமானப் பணியாளர்களில் ஒருவராக பணியாற்றிய இராமசாமி நாயக்கரின் பேரன் என்பதால் உறுதி செய்யப்பட்ட வாய்மொழித் தகவல்களும், நேரடி அனுபவங்களும் வரலாறு பற்றிய புரிதலும் அவரது புத்தகத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. சைதைத் தொகுதிக்குட்பட்டதாக அந்நாளில் இருந்த சூளைமேட்டில் உள்ள விநாயகபுரம், திருவள்ளுவபுரம் ஆகியவற்றின் பெயர் காரணத்தை கூறுவதோடு தற்போது நுங்கம்பாக்கம் இரயிலடி அருகில் உள்ள மயானம் சௌராஷ்டிர நகரிலிருந்து திருவள்ளுவர்புரம் மேற்கில் இடம் பெயர்ந்து, 30களின் இறுதியில் தற்போதைய இடத்திற்கு மாறியது என்ற செய்தியும் வியப்பளிக்கிறது. இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட “சென்னை மாவட்ட திருக்கோயில்கள் வழிகாட்டி” மற்றும் “சென்னை கோயில்கள்” எனும் விகடன் பிரசுரத்திலும் சென்னை நகரின் மிகப் பழமையான கோயில்களான பாடி, திருவொற்றியூர் பற்றி குறிப்பேதும் இல்லை. மதுரை, காஞ்சி போன்ற நீண்ட நெடிய வரலாற்றி னைக் கொண்டிருக்கக்கூடிய நகரங்களைப் போலன்றி சென்னை நகர வரலாற்றுப் பக்கங்களை காண்பது என்பது எளிதானது. கிழக்கிந்திய கம்பெனி இந்த கடற்கரை கிராமத்தில் கால் பதித்து முதல், விரிவான பதிவுகளும் பின்னர் பிரிட்டனின் நேரடி நிர்வாக அமைப்பு உருவான வுடன், அது பற்றிய ஆவணங்களும் உருவாகி முறையாக பராமரிக்கப்பட்டும் வந்திருக்கிறது.
ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு கிராமங்கள் இணைக்கப்பட்டு மாநகராக விரிவுபெற்றது குறித்து தகவல்களும் சான்றாதாரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே இடைச் செறுகல் ஏதுமின்றி சென்னை நகர வரலாற்றை எழுதிட முடியும். லவ், வீலர், பார்லோ ஆகியோரின் சென்னை நகர வரலாறு இந்த ஆவணங்களின் அடிப்படையில்தான் அச்சு அசலாக எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிய வேண்டி யுள்ளது. பின்னாளில் ராமஸ்வாமி, முத்தையா, நரசய்யா, ராமச்சந்திர வைத்தியநாத் ஆகியோரும் ஆவணங்களின் அடிப்படையில்தான் சென்னை பற்றிய குறிப்புகளை எழுதி வந்திருக்கின்றனர். ஆயின் பிந்திய காலங்களில் குறிப்பாக தமிழில் எழுதக்கூடிய சென்னை வரலாறு ஸ்தல புராணங்களாகவும், மகாத்மியங்களாகவும் உருப்பெற்றிருக்கிறது. இதற்கு அறியாமை மட்டுமே காரணமாக இருக்க முடியாது. இது புத்தகங்களில் மட்டுமின்றி பத்திரிகைகளில் வெளியாகும் பத்திகளிலும் தொடர்வது அதிர்ச்சியளிக் கிறது. அதர் ஸ்டேட்டிலிருந்து வந்தமையால் ஒரு பிரிவினர் சேட்டு என்று அழைக்கப்படுவதாக குறிப்பிடு வதை வரலாற்றுக் குறிப்பாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? இன்றைய தினம் வரலாற்றை சிதைக்கும் போக்கிற்கு இடையில் இத்தகைய திசை திருப்பும் முயற்சிகள் தேசம், மொழி, இனம் கடந்து பல்வேறு பட்ட மனிதர் களின் பங்களிப்பில் உழைப்பில் உருவான பெருமை கொண்ட நகரம் என்பதை மறுதலிக்கும் போக்கின் வெளிப்பாடு என்றே கூற முடியும். எழுதப்பட்ட வரலாற்றை சிதைப்பது போன்றதுதான் வரலாற்று சிறப்பு வாய்ந்த வீதிகளின் பெயர் மாற்றமும்.
இங்கே மற்றொரு புத்தகம் குறித்து குறிப்பிடாமல் இக்கட்டுரையை முடித்துவிட முடியாது. இத்தனைக்கும் அது சென்னை நகரின் வரலாறோ அல்லது மதராஸ் மாகாணத்தின் வரலாறோ அல்ல. விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் எனும் இப்புத்தகம் இந்த மாகா ணத்தின் அரசியல் வரலாறாகும். தோழர் பி.ராம மூர்த்தி எழுதி பழநியப்பா பிரசுரத்தால் 1983ல் வெளி யிடப்பட்டதாகும். இதில் சென்னை நகரை உள்ளடக்கிய இந்த மாகாணத்தின் சகலவிதமான வரலாறும் எளிதில் வாசிக்கத்தக்கவகையில் கூறப்பட்டிருப்பது இதன் சிறப்புகளில் ஒன்றாகும். நிறைவாக மா.சு. சம்பந்தனின் “சென்னை மாநகர்”, பி.வி.ஜகதீச ஐயரின் “ஜில்லா சரித்திரம் சென்னப் பட்ட ணம்” ஏ.கே.சந்திரசேகர முதலியாரின் “கார்ப்பரேஷன் சரித்திரம்” போன்ற புத்தகங்கள் அபூர்வமாகவே உள்ளது. இதை உரிய பதிப்பகங்கள் மறு பதிப்பாக கொண்டு வருவது இன்றைய தினம் சென்னை நகர வரலாற்றை அறியவிரும்புவோருக்கு மட்டுமின்றி ஏற்கனவே நகர வரலாற்றை எழுதிய அல்லது இனி எழுத விரும்பு வோருக்கும் நிச்சயம் வழிகாட்டியாக விளங்கும்.