மறக்க முடியாத மார்க்சிய ஆசான் : தோழர் பி.ஆர்.சி.
தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் தோழர் பி.ஆர்.சி.யின் பங்களிப்பு மகத்தானதாகும். திருச்சி மாவட்டத்தில் கட்சி ஸ்தாபன அமைப்பைக் கட்டுவதிலும், வளர்த்தெடுப்பதிலும் அவர் வகித்த பாத்திரம் எவராலும் மறுக்க முடியாதது. கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினராக, அகில இந்திய அளவில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக அவர் மிகவும் திறம்படப் பணியாற்றினார். தோழர் சுர்ஜித், பொதுச் செயலாளராக இருந்தபோது, கட்சியின் அகில இந்திய மையத்தில் அவர் வகித்த பாத்திரம் சிறப்பானது. என்னைப் பொறுத்தவரை, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், மாநில செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டபோது அவருடன் நெருக்கமாகப் பழகியுள்ளேன். தனித்த அக்கறையோடு என்னுடன் பலமுறை அவர் அரசியல் உரையாடல்கள் நடத்தியதை மறக்க முடியாது. சாதிய ஒடுக்குமுறை குறித்த தெளிவு தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருந்தபோதும், அதன் பிறகும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பிரச்சனையில் கட்சி தலையிடுவதற்கு உதவும் வகையில் எனக்குப் பொறுப்பு அளிக்கப்பட்டது. நாலுமூலைக்கிணறு, கொடியங்குளம் தலித் மக்கள் மீது காவல்துறை நடத்திய கொடூரத் தாக்குதல்கள் மட்டுமல்ல; தென்மாவட்ட சாதிய மோதல்களின் போதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் நேரடியாகச் சென்று நிலைமைகளை ஆய்வு செய்து கட்சிக்கு பல அறிக்கைகளை அளித்தேன். அத்தகைய சந்தர்ப்பத்தில், தோழர் பி.ஆர்.சி. என்னை தனியாக அழைத்து, சாதிய ஒடுக்குமுறை குறித்து எனது புரிதல் பற்றிப் பல கேள்விகளை எழுப்பி உரையாடல் நடத்தினார். அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்ததோடு, சித்தாந்த ரீதியாகச் சமூக ஒடுக்குமுறை குறித்துப் பல கேள்விகளையும் அவரிடம் நான் எழுப்பினேன். சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பிரச்சனைகளில் கட்சி தலையீட்டிற்கு உதவியாக எனது செயல்பாடுகளுக்காக முதலில் பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்தார். வர்க்க ஒடுக்குமுறையும், சாதி ஒடுக்குமுறையும் பின்னிப் பிணைந்தவை என்ற நிலைபாட்டைப் புரிந்துகொண்டு அதற்கேற்பச் செயல்பட்டதால், சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக அக்காலத்தில் கட்சியின் செயல்பாடுகளும், தலையீடுகளும் கட்சியின் மதிப்பை உயர்த்தியுள்ளது என்றார். மேலும், சாதியாக மிகவும் ஒடுக்கப்பட்டு வரும் பிரிவினரான தலித் மக்கள் உழைக்கும் வர்க்கத்தின் குறிப்பிடத்தக்க பிரிவினர் என்ற புரிதலும், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் உழைக்கும் வர்க்கப் போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதி என்ற புரிதலும் கட்சிக்குள் பலப்படுத்தப்பட வேண்டும் என்று மிகுந்த ஆதங்கத்துடன் குறிப்பிட்டார். இதோடு அவர் என்னிடம், மார்க்சிய மற்றும் இடதுசாரி அறிஞர்களான டி.டி. கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்யாயா ஆகியோர் இந்திய சாதி அமைப்பு குறித்து எழுதிய நூல்களைக் குறிப்பிட்டு அவற்றைப் படிக்குமாறு வற்புறுத்தினார். தோழர் இ.எம்.எஸ். எழுதிய சில நூல்களையும் அவர் குறிப்பிட்டார். மார்க்சிஸ்ட் இதழில் கட்டுரை சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகத் தமிழகக் கட்சியின் தலையீடுகள் குறித்து விபரமான ஓர் அறிக்கை தருமாறு என்னிடம் கேட்டார். நானும் அவ்வாறே எழுதி அவரிடம் அளித்தேன். ஒரு மாதம் கழித்து அவர் என்னை தொலைபேசியில் அழைத்து, மார்க்சிய ஆய்வு அடிப்படையில் இந்தியாவில் சாதி அமைப்பு குறித்துத் தான் ஒரு கட்டுரை எழுதியிருப்பதாகவும், ஆங்கில மார்க்சிஸ்ட் இதழில் அது வெளிவருவதாகவும், அதைத் தவறாமல் படிக்குமாறும் கேட்டுக் கொண்டார். அக்கட்டுரை சாதி அமைப்பு குறித்துப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவியாக இருந்தது. தமிழகத்தில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சில தலையீடுகள் இக்கட்டுரையில் இடம்பெற்றிருந்தன. இது ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில் அவருடன் எனக்கு ஏற்பட்ட மிக முக்கியமான ஒரு அனுபவமாகும். உண்மையில், சமூக ஒடுக்குமுறை குறித்து மட்டுமல்ல; மார்க்சிய சித்தாந்தத்தின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாடு குறித்து அவரது புரிதல் மிக வலுவானது. அனுபவப் பாடம் மார்க்சிய சித்தாந்தத்தின் பல அம்சங்கள் குறித்தும், நடைமுறை அரசியல் குறித்தும் ஏராளமான வகுப்புகளை அவர் மிக எளிமையான முறையில் நடத்தியுள்ளார். அதில் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன். இதோடு கட்சி ஸ்தாபனம் குறித்தும் ஆழ்ந்த புரிதலைக் கொண்டிருந்தார். கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதையும், சிறைவாழ்க்கை, தலைமறைவு வாழ்க்கை உட்பட அடக்குமுறைகளை எதிர்கொண்டு செயலாற்றியதையும் மறக்க இயலாது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் தோழர் பி.ஆர்.சி.யின் பங்களிப்பு என்றென்றும் நிலைத்து நிற்கும்.
