கண்ணே, மணியே ரோசாப் பூவே..ஜி.செல்வா
ஜூலை 21 பிற்பகல் நேரம், ஏற்கெனவே திட்டமிட்டிருந்த படி, மத்திய சென்னை தோழர்களிடம் தீக்கதிர் சந்தா பெற்றுக் கொள்ளும் இயக்கப் பணியில் எங்களோடு வெவ்வேறு அலுவலகங்களுக்கு வந்து கொண்டிருக்கையில் மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம், அன்புத் தலைவர் வி.எஸ் மறைந்துவிட்டார் என்று தனக்கு வந்த செய்தியைக் கனத்த குரலில் பகிர்ந் தார். உடனடியாக அஞ்சலி நிகழ்ச்சி நடை பெற்றது. தோழர் வி.எஸ். முகத்தை இறுதியாகப் பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பால், மறு நாள், கேரளாவின் ஆலப்புழா ரயில் நிலை யத்திற்கு அதிகாலை மூன்றரை மணிக்குச் சென்றடைந்தோம். அந்த அதிகாலை வேளையிலும் ஆலப் புழா மாவட்டக் குழு அலுவலகம் முழுக்க தோழர்கள் குவிந்திருந்தனர். அங்கிருந்து சில கிலோமீட்டர் பேருந்து பயணத்தில் அவரது இல்லத்திற்குச் சென்றால், காலை 6 மணிக்கே தெருவெங்கும் தோழர்கள் திரண்டிருக்க, தோழர் வி.எஸ். உடல் வீட்டி ற்கு வர நண்பகல் ஆகும் என அங்கிருந்த வர்கள் சொன்னதும், இறுதி நிகழ்வுகள் நடைபெறும் புன்னப்புரா வயலார் தியாகி கள் திடலுக்குச் சென்றோம். திடல் முழுக்க தோழர்கள். இறுதி நிகழ்வுகளுக்கான பணிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தன. மீண்டும் ஆலப் புழா மாவட்டக் குழு அலுவலகத்துக்கு காலை 10 மணி அளவில் சென்றோம். இப்போ தோ, அந்தப் பகுதி முழுக்க ஆயிரக்கணக் கான தோழர்கள். குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை ஏராளமானோர் திரண்டு இருந்தனர். இடைவிடாத முழக்கங்கள்.
கண்களில் மின்னிய வாழ்க்கை
1952-இல் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலப் புழா மாவட்டச் செயலாளராக செயல்பட்ட வர் வி. எஸ். அச்சுதானந்தன். அவரது உழைப்பின் அடித்தளம் அலுவலகத்தின் விரிந்து பரந்த தளத்திலும், அம்மாவட்ட மக்களின் உணர்விலும், பேச்சிலும் வெளிப்பட்டது. உடலோடு ஒட்டிய வெள்ளை ஜிப்பா, ஜிப்பாவை கைமுட்டி வரை சுருட்டி வேட்டி யை ஒரு கையில் பிடித்து வி.எஸ். நடக்கும் வேகம், வர்க்க அரசியலை ஆவேசமும் நையாண்டியுமாய்த் தலையை ஆட்டி ஆட்டிப் பேசும் பேச்சு, பதவி எந்த உச்சத் தில் இருந்த போதும், மெத்தை இல்லாத கட்டிலும், எளிய உணவுகளும், கட்டஞ்சா யாவும் போதும் என வாழ்ந்த வாழ்வு, ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக முன்னெடுத்த இயக்கங்கள், தனி நபர்க ளின் துயர் தீர்க்க நேரம் ஒதுக்கி எடுத்த நடவடிக்கைகள், முதலமைச்சர் நாற்கா லியில் அமர்ந்த போது, அந்த நாற்காலியின் எல்லையை அதிகாரவர்க்கம் வரையறுத்து இருந்த போதும், அதையும் தாண்டி உழைக்கும் மக்களுக்காகக் களத்தில் இறங்கி செயல்பட்ட தருணங்கள், கல்வி நிலைய ஆண்டு விழாக்களில் தாங்களும் வி. எஸ். போன்று பேசி கைத்தட்டலோடு பரிசும் வாங்கியது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு நினைவுகளைக் கடத்திக் கொண்டே இருந்தனர். கடத்தப்பட்ட வார்த்தைகளின் அர்த்தம் பேசுபவர்களின் கண்களில் வெளிச்சமாய் மின்னிக் கொண்டிருந்தது. மாநாட்டுப் பேச்சுக்கு உயிர் கொடுத்த தலைவர் ஆலப்புழா கட்சி அலுவலகம் பிரம்மாண் டமாய் அமைந்திருந்தது. கேரளக் கட்ட டக்கலையின் வெளிப்பாடும், உழைக்கும் வர்க்கத்தின் அழகியலும் இழைத்துச் சேர்த்து கட்டப்பட்ட கட்டிடம். அலுவலகக் கட்டுமானம் குறித்து அரு கில் இருந்த தோழரிடம் உரையாடிய போது, “அதோ அங்கு இருக்கிறாரே, நமது கட்சி யின் இப்போதைய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அவர் ஆலப்புழா மாவட்டக் குழுவின் இடைக்கால அமைப்பாளராகப் பொறுப்பேற்றபோது புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் இது” எனத் தெரிவித்தார். தோழர் வி.எஸ்.மறைவுக்கு உணர்வுப் பூர்வமான இரங்கல் கட்டுரையை ஆங்கில இந்து நாளிதழில் எம்.ஏ.பேபி எழுதியது சட்டென்று நினைவுக்கு வந்தது. 1985-இல் கேரள மாநில மாநாட்டில் பல்வேறு விவாதங்கள் முன்னுக்கு வந்தன. அதிலொன்று கட்சித் தோழர்களை அன்போடும், அரவணைப்புடனும் அணுக வேண்டும் என்பது. மாநில மாநாட்டுக்குப் பிறகு கட்சி அலுவ லகம் வருகையில், எப்போதும் நேரே தனது அறைக்குள் சென்று அமரும் தோழர் வி.எஸ். வழக்கத்திற்கு மாறாக வெளியே உட்கார்ந்திருந்த இளம் தோழர்களை நெருங்கி அவர்களோடு அன்பு கலந்து உரை யாடிவிட்டுப் பிறகே உள்ளே சென்றுள்ளார். இது விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக உள்வாங்கிக் கொள்ளும் அவரது அசாத்தியத் தன்மையை வெளிக்காட்டியது என
புகழாரம் சூட்டியிருந்தார் எம்.ஏ.பேபி. உயிரற்ற உடல், ஆனால் உயிர்ப்பிக்கும் சக்தி!
திட்டமிட்ட நேரத்தைத் தாண்டி, 12 மணி நேரம் கழித்து மாவட்டக் குழு அலுவல கத்தில் உணர்வற்ற மக்களையும் உயிர்ப் பிக்கும் சக்தியாய் வாழ்ந்து களமாடிய அலு வலகத்திற்கு வந்தடைந்தது தோழர் வி.எஸ். உடல். உயிர்த்தெழும்பும் முழக்கங்களின் இடையில், உணர்ச்சி வயப்பட்ட நிலை யில் தோழரின் முகத்தை அருகே கண்ட டைந்தோம். சிலிர்ப்புற்றோம். மலையாள மொழி முழக்கங்களுக்கி டையில் தமிழில் முழக்கங்கள் எழுப்பி னோம்: “செவ்வணக்கம் தோழரே. உமது போர்க் குணமிக்க போராட்டப் பாதையில் நாங்களும் பயணிப்போம்.”
எம்ஜிஆரும், இளையராஜாவும் செய்த தேர்தல் பணி!
தமிழ் முழக்கம் அவருக்குப் பிடித்த மானது. தமிழும் தமிழர்களின் உணர்வும் நன்கு அறிந்தவர் வி.எஸ். நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பயன்படுத்தித் தேர்தல் மூலம் கேரளாவில் 1957 - இல் தோழர் இ.எம்.எஸ் தலைமையில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் ஆட்சியில் சட்டமன்ற உறுப்பி னராகத் தேர்வு செய்யப்பட்டவர் ரோசம்மா புன்னூஸ். ஏதோ ஒரு காரணத்திற்காக நீதிமன்றம் ரோசம்மா புன்னூஸ் தேர்வு செல்லாது என்று சொல்லிவிட்டது. இந்திய நாடு விடுதலை பெற்று நடை பெற்ற முதல் இடைத்தேர்தல். தேவிகுளம் சட்டமன்றத் தொகுதி. வேட்பாளர் ரோசம்மா புன்னூஸ். தேர்தல் பணிக்காக இ. எம். எஸ்., அவர்களால் நியமிக்கப்பட்டார் தோழர் வி. எஸ். அச்சுதானந்தன். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும். முதலமைச்சர் இ.எம்.எஸ் அவர்களோ எந்த மந்திரியும் இடைத்தேர்தல் பணியில் ஈடுபடக் கூடாது எனத் தெரிவித்துவிட்டார். தேவிகுளம் சட்டமன்றத் தொகுதி தமி ழர்கள் அதிகம் வாழும் தொகுதி. நிதி நெருக்கடி. காலமும் குறைவு. திட்டமிட்டுப் பணிகளை நகர்த்தினார் வி.எஸ்.
தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தமிழில் பிரச்சாரம்
புகழ்பெற்ற பாவலர் வரதராசன் சகோ தரர்களின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். தனது இருபதுகளில் இருந்த இளையராஜாவும் தேர்தல் பிரச்சார நிகழ்வில் பாடினார். அப்பகுதிக்கு திரைப்பட வேலையாக வந்திருந்த எம்.ஜி.ஆர் அவர்களையும் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்காகப் பிரச்சா ரம் செய்வதற்கு அழைத்து வந்தார் வி. எஸ். தேர்தல் நிதி கேட்டு கட்சி விடுத்த வேண்டுகோளை ஏற்று, தேவிகுளம் தபால் நிலையத்திற்குப் பலரும் பணம் அனுப்பி னர். பணத்தை வாங்குவதற்கு என்று தனி யாக ஒரு தோழரை தபால் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார் வி.எஸ். இந்திய நாட்டில் நடைபெற்ற முதல் இடைத்தேர்த லைப் பொறுப்பேற்று நடத்தி நமது கட்சி யின் வேட்பாளரை வெற்றி பெற வைத்த வர் தோழர் வி.எஸ்.
கண்ணே, மணியே, முத்தே…!
தன் வீட்டுக் குழந்தையைக் கொஞ்சு வது போல, தூக்கி வைத்து கொண்டாடுவது போல, 101 வயது மனிதரின் நினைவுகளை, சாதனைகளை, பங்களிப்புகளை நினைவு கூர்ந்து முழக்கமிட்டுக் கொண்டே இருந்தது கேரளம். பொதுமக்களின் அஞ்சலிக்காக, அரபிக் கடலோரம், திடலில் அவரது உடல். அரபிக் கடலோடு போட்டி போடும் வகையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மழை கொட்டுகிறது. இயற்கையும் துயரில் பங்கேற்றது.
காலநிலை மாற்றமும், கணிப்பொறி அறிவும்!
மழையிலும் நகராமல் வரிசையில் அஞ்சலி செலுத்த காத்திருந்த இளைஞர்க ளிடம் பேச, அவர்கள் தோழர் வி.எஸ்., புகழை நினைவு கூர ஆரம்பித்தனர். கேரளம் இன்றைக்கும் பசுமையாக இருப்பதற்கு, கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு அடிப்படையானது. ஆட்சியில் இருந்தா லும், இல்லாவிட்டாலும் மண் வளத்தை, இயற்கையைப் பாதுகாக்க முன்னிற்பதில் கேரள கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பைக் கற்றுணர வேண்டும். எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்துக்குத் தடை விதிக்கக் கோரி நடை பெற்ற போராட்டங்கள், மலை, காடுகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கார்ப்பரேட் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று துணிவாகக் குரலெழுப்பி, நேரடியாகக் களமிறங்கி முன்னின்று செயலாற்றியது, சுற்றுச்சூழலை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என ஒவ்வொன்றிலும் வி.எஸ்., புகழ் நிலைத்து நிற்கிறது. கணிப்பொறி, தகவல் தொழில்நுட்ப யுகத்தின் எதிர்காலத்தை நன்கு உணர்ந்து அதற்கேற்ப கேரள சமூகத்தை கட்ட மைத்ததிலும் வி.எஸ்., பங்கு முக்கிய மானது. இந்திய நாட்டில் முதன் முதலாக தகவல் தொழில்நுட்பத்தைப் பாடப் பொரு ளாகப் பள்ளிக்கூடத்தில் கொண்டு வந்தது இடது ஜனநாயக முன்னணி அரசு. பள்ளி கள் தோறும் குறைந்தபட்சம் 10 கணிப் பொறிகளை உறுதி செய்து மாணவர்களு க்குக் கணினி பயிற்றுவிக்கப்பட்டது. கார்ப்பரேட் சாஃப்ட்வேர் கொள்ளைக்கு எதிராக, ஃபிரீ சாஃப்ட்வேர் இயக்கத்தை முன்னின்று முதலாவது நடத்தியதும் கேர ளத்தில் வி.எஸ்., தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசுதான். அரபிக் கடலோரத்தில் அலைகள் கொந்தளித்துக் கொண்டிருந்தது. விரல் பிடித்து அடி எடுத்து வைக்கக் காரணமாக இருந்த சகாவு கிருஷ்ண பிள்ளை சமாதி யின் அருகில், நில உடமைக்கு எதிராக அதி கார வர்க்கத்தினால் அத்தனை ஒடுக்கு முறைகளையும் எதிர்கொண்டு போராடி உயிர் நீத்த சக போராளிகளின் நினைவுத் திடலில், தோழர் வி.எஸ்., அவர்களது இறுதி நிகழ்வுகளும் நடந்தேறின. என்றென்றும் உரமூட்டும் உந்து சக்தி! முதலாளித்துவ ஊடகங்களும் தவிர்க்க இயலாமல் வி.எஸ்., வாழ்க்கைப் பயணம் குறித்து எழுதின. வழக்கம் போலவே சில குரல்கள், புகழாரம் சூட்டுகிறோம் என்ற பெயரில் வி.எஸ். மறைந்து விட்டார், அவரோடு அவர் கனவுகளும் மறைந்து விட்டன, கேரளத்தின் கடைசி கம்யூனிஸ்ட் காலமானார், கடைசி சிவப்பு இலையும் உதிர்ந்து விட்டது என்றெல் லாம் எழுதி, கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கே அஞ்சலி எழுத முனைப்புக் காட்டுகின்றன.
தோழர் வி.எஸ். முகம் பார்த்துக் குழந்தைகள் எழுப்பும் முழக்கத்தின் அடையாளம் என்ன?
பதின் பருவ இளம் பெண்கள், இளை ஞர்கள், கொட்டும் மழையிலும் இடைவிடா மல் உயிர் கொடுத்து, உரக்க முழக்கமிடும் சொற்கள் சொல்வது என்ன? குடும்பம் குடும்பமாய்ப் பெரியவர்களும் சிறியவர்க ளும், பெண்களும் ஆண்களுமாய் வழி நெடுகக் காத்து நின்று, வழி அனுப்பும் வார்த்தைகளின் பொருள் என்ன? “தோழர் அச்சுதானந்தன் நீங்கள் மறையவில்லை.. உங்கள் சிந்தனைகள் மறையவில்லை.. உங்களுக்கு மரண மில்லை. உங்களது சிந்தனைகளும் செயல் பாடுகளும் எங்களின் வழியே தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.” இந்தப் பொருளை கார்ப்பரேட் ஊட கங்கள் மறைத்தாலும், உழைக்கும் வர்க்கம் மறக்காது. தோழர் வி.எஸ். முன்னெடுத்த வர்க்கப் போராட்டத்தை முன் நின்று நடத்தும்.