articles

img

உருமும் டிராக்டர்களின் பேரொலியில்...

குளிர் தாங்க முடியாமல் இறக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.கடைசியாக தற்கொலை செய்து கொண்ட விவசாயி தில்லியிலேயே தன்னை புதைக்குமாறுகூறிச் சென்றுள்ளார். ஒருவேளை வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் தலைநகருக்கு செல்லும் சாலைகள் யாவும் கல்லறைகளாக மாறும் என இறப்பிலும் அவர் அரசுக்கு எச்சரிக்கை செய்கிறாரோ..!

தினம் தினம் சாகிறார்கள். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சுதந்திரமும் ஜனநாயகமும் அற்ற ஒரு நாட்டில் உயிருடன்வாழ்வதில் ஒரு அர்த்தமும் இல்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். இல்லையென்றால் கடுங்குளிரையும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏன் அவர்கள் அங்கு காத்திருந்து சாக வேண்டும். அவர்கள் அப்படிச் சாவதில் சர்வாதிகாரம் படைத்த ஆட்சியாளர்களாகிய நீங்கள் சங்கடப்பட வேண்டியது இல்லை. பேசத்தெரிந்த மிருகங்களாகவே தொடர்ந்து நடந்து கொள்ளுங்கள்.கொரோனா உச்சத்தில் இருந்தபோது மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்தினீர்கள். விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடூரவேளாண் சட்டங்களை குறுக்கு வழியில் நிறைவேற்றிக் கொண்டீர்கள்.

கொரோனா மட்டுப்பட்டநிலையில் விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்ட காரணத்தால் குளிர்கால கூட்டத் தொடரை நடத்த மறுக்கிறீர்கள். அதை மறைக்க குடியரசு நாளை கொண்டாட போவதாக கூறுகிறீர்கள். இதுநகைமுரணாக இல்லையா?சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருந்த பிரிட்டிஷ் பிரதமர்இந்தியா வர மறுத்து விட்டார். அதற்கு காரணம்கொரோனா மட்டும் அல்ல, நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை முறிக்க நீங்கள் போட்ட சட்டமும் அதற்கு எதிரான விவசாயிகளின் போராட்டமும் தான்! இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் குடியரசு நாளை கொண்டாடுவதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? இதையும் ஒருதேசவிரோதி கேட்பதாகவே வைத்துக் கொள்ளுங்கள். பதில் எதுவும் சொல்ல வேண்டாம். ஆனால் புலிவாலைப் பிடித்த கதையாய் உங்களை வேளாண் சட்டம் நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதை வேசம் தரித்த உங்கள் முகம் அடிக்கடி காட்டிக் கொடுத்து விடுகிறது.

அவர்கள் பெரும்பாலும் வயதான குடியானவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் நாட்டின்விடுதலைக்காக போராடியவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் எல்லையில் தேசம் காக்கும் ராணுவ வீரர்களாகவும் இருக்கிறார்கள். இப்பொழுது நாட்டின் விவசாயத்தை பாதுகாக்கும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கோதுமை வயல்கள் கனவாகிப் போய்விடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் இரவு நேரங்களிலும் உறங்காமல் விழித்து இருக்கிறார்கள்.

கறவை மாட்டை கிணற்றில் தள்ளுவதுபோல்
உங்களுக்காக சொகுசு விமானம் வாங்கிக்கொண்டீர்கள். உங்களுக்காக சொகுசு அரண்மனை ஒன்றும் கட்ட இருக்கிறீர்கள். இதைப்பற்றி எல்லாம் அவர்கள் எதுவும் கேட்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் பிரதமரான நீங்கள்
எல்லாவற்றிலும் ஆடம்பரமாக இருப்பதில் அவர்களுக்கு ஆட்சேபனை ஏதும் கிடையாது. ஆனால் அவர்களைப் போய் கறவை மாட்டை கிணற்றில் தள்ளுவது போல நீங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காவு கொடுக்கிறீர்கள்.அவர்களை உங்களுக்கு பிடிக்கவில்லை. அதற்கு காரணம் அவர்கள் உங்களின் ஏமாற்றுவித்தைகளையும், மோசடியான மாய்மாலங்களையும் தோலுரிப்பதால் கூட இருக்கலாம். போராடும் அவர்களைப் பார்த்து முதலில் மாறிமாறி பழி சுமத்திப் பார்த்தீர்கள். பிறகு அதற்காகவெட்கப்பட்டது போல அவ்வப்போது உங்களின் தலை சாய்ந்து தாழ்ந்தும் விடுகிறது. அப்போதெல்லாம் விவசாயிகளுக்கு வணக்கம் தெரிவிப்பதாக சொல்லி ஒரு கோழையைப் போல சமாளிக்கிறீர்கள். ஆனால் என்ன செய்வது, வீரத்தாலும் தியாகத்தாலும் விவசாயிகளின் தலை, பட்டேல் சிலையைக் காட்டிலும் நிமிர்ந்து கொண்டே போகிறதே..!

அலுத்து சலிக்கும் அளவுக்கு உங்கள்அமைச்சரவை சகாக்கள் இருவர் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மதிய உணவு இடைவேளையில் விவசாயிகளை நைச்சியமாக விருந்தாளிகளாகவோ அல்லது அவர்கள் ஏமாந்தால் பிச்சைக்காரர்களாவோ மாற்ற முயற்சித்தீர்கள். நீங்கள் கொடுத்த உணவு அவர்களால் விளைவிக்கப்பட்டது தான் என்றாலும் அதை ரத்தக்கறை படிந்த உங்கள் கையால் ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர். மறந்து விடாதீர்கள் அவர்களை நீங்கள் எதிரிகளாகத் தான் பார்க்கிறீர்கள். ஆனால் அவர்களோ உங்களை துரோகிகளாக பார்க்கிறார்கள்.கையில் நிலங்கள் இருந்தால் தானே விளைபொருட்களுக்கு ஆதார விலை கேட்பார்கள்.ஒப்பந்த அடிப்படையில் அடிமாட்டு விலைக்கு விளைபொருட்களை பறித்துக் கொண்டால்.. தரமற்றவை என நிராகரித்தால்.. நிர்க்கதியாய் நிற்பவர்களிடம் நிலங்களையே அபகரித்துக் கொண்டால்.. பதுக்கல் மூலம் கொள்ளை அடித்தால்.. நாட்டில் விவசாயம் இருக்காது, வியாபாரம் மட்டுமே நிலைக்கும் என்ற உங்களின் அற்ப புத்தியை அறிந்த அவர்கள் நிச்சயம் உங்களிடம் ஏமாறப் போவதில்லை.

சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றஒற்றைக் கோரிக்கைக்காக மட்டுமே அவர்கள்திரண்டு கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு துணையாக டிராக்டர்களும் வந்திருக்கின்றன. டிராக்டரைத் தவற விட்ட ஒரு விவசாயி சைக்கிளை எடுத்துக் கொண்டு 400 கிலோமீட்டர்தூரம் பயணம் செய்திருக்கிறார். போராடுபவர்களின் நெஞ்சழுத்தமும் வைராக்கியமும் அவரில் தெரிகிறதா? உங்களில் ஒருவன் சொல்கிறான், அவர்கள் உல்லாசமாக இருக்க தில்லிக்குசென்றிருக்கிறார்கள் என்று. அட மானம் கெட்டவர்களே! உல்லாசம் என்ற பெயரில் பதின்மவயதுச் சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பெரிய மனிதர்கள் உங்களின் பின்புறம் ஒளிந்திருப்பதை மறந்து விட்டுப் பேசாதீர்கள்.

நிலம் உயிர், விவசாயம் வாழ்வாதாரம்
தலைநகரை முற்றுகை இட்டிருப்பது சீன,பாகிஸ்தான் ராணுவங்கள் அல்ல. அவர்கள்நம் நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் உணவளிக்கும் ஈசன்கள். அவர்களிடம் போராடும் அறத்தைத் தவிர ஆயுதங்கள் எதுவும் இல்லை. உங்களின் தடை அரண்களை, தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரங்களை, குண்டாந்தடிகளை, கண்ணீர் புகை குண்டுகளை, குண்டுகள் நிரம்பியதுவக்குகளை, சிறைச்சாலைகளை.. என எல்லாவற்றையும் எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள். நிலம் அவர்களின் உயிர்! விவசாயம் அவர்களின் வாழ்வாதாரம்! நிலத்தையும் விவசாயத்தையும் மட்டுமல்ல நாட்டின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை அவர்களுக்கு இருப்பதாக கருதுகிறார்கள். அது அவர்களின் வேலை அல்ல எனவீண்வாதம் செய்யாதீர்கள். அம்பானி, அதானிகளின் கால்களைக் கழுவும் அடிமைகளான உங்களுக்கு சுதந்திரத்தின் அருமையும் தெரியாது, ஜனநாயகத்தின் பெருமையும் தெரியாது.இன்னும் சில வாரங்களில் குடியரசு தினம் வருகிறது. அது கடந்த நாட்களைப் போல சம்பிரதாயப்பூர்வமாக இருக்காது. இந்த முறை தில்லியின் ராஜபாட்டையில் ராணுவ டிரக்குகளுக்கு பதிலாக குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி லட்சக்கணக்கான டிராக்டர்களின் அணிவகுப்பு நடைபெறும். ஒரே நேரத்தில் உருமும் டிராக்டர்களின் ஒட்டுமொத்த பேரொலியில் உங்களின் வேளாண் விரோத குள்ளநரிச் சட்டங்கள் வீழ்ந்து போகும். உங்கள் தலைகளை அலங்கரிக்கும் கார்ப்பரேட் கம்பெனி மணிமகுடங்கள் மண்ணில் உருண்டோடும். புழுதி படர்ந்த விவசாயிகளின் கால்களுக்கு அடியில் உங்களின் ஆணவமும் அதிகாரத் திமிரும் நொறுங்கி தூள்தூளாகும்.

==வ.இராஜமாணிக்கம்===

;