articles

img

டாக்டர் அம்பேத்கர் என்றென்றும் எல்லோருக்குமானவர்தான்....

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் பிறந்ததின நூற்றாண்டு விழா காலத்திலும்,நூற்றி இருபத்தைந்தாவது பிறந்த தின காலத்திலும் அவரின் எழுச்சி மிக்க வரலாறு இந்நாட்டு மக்களிடையே வந்து குவிந்தன.  அதுவரை இந்திய அரசியல் சாசனத்தை வடித்தவர், அரசியல் சட்டத் தந்தை எனபுகழாரம் சூட்டியதோடு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைச்சூரியன் என்று மட்டும் மிகச் சுருக்கமாகவே  பாடப்புத்தகங்கள் பதிவு செய்தன. மேல்தட்டு அறிவுஜீவிகளும் நுனிப்புல் மேய்ந்தனர்.  படித்து மேலெழும்பிய  சமூக நேசர்கள் சிலரும்,அமுக்கப்பட்ட சமூகத்திலிருந்து கிளர்ந்தெழுந்த அறிவு ஜீவிகளும் சமூக பண்பாட்டு வரலாற்றை அடித்தட்டு மக்கள் பார்வையில் எழுத முற்பட்டனர். அதன் விளைவாக டாக்டர் அம்பேத்கரின் அற்புத வரலாறும் ஜெகஜோதியாய் மலரத் தொடங்கியது.

 அவரின் மேதமையை பழைமையை சுட்டெரிக்கும் சூரியன், பொருளாதார மேதை, தொழிலாளி வர்க்கத்தின்விடுதலை நாயகன், ஒட்டுமொத்த மகளிரின் சுயமரியாதையை மீட்டெடுக்க உரிமைகளை சட்டமசோதாவாக கொண்டு வந்த பகலவன், இன்னும் ஏராளமான செயல்பணிகளை உயர்த்திப் பிடிக்கின்றனர். முற்போக்கு சிந்தனாவாதிகள் இப்படி உயர்த்துகிறார்கள்.  இடதுசாரிகளின், தொழிலாளர்களின் ஒற்றுமையை சிதைக்க நினைப்போர் சமூக நீதிக்காகப் போராடுவோரிடமிருந்து  அம்பேத்கரை அந்நியப்படுத்தும் வகையில்  தங்களது கைச்சரக்கை அவிழ்த்து விடுகிறார்கள். ஆளுகின்ற  பிற்போக்கு சனாதன சக்திகளும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரை இந்துத்துவ அம்பேத்கர் என்று தந்திரமாக அணைத்து அவரின் தலைமையில் இயற்றப்பட்ட அரசியல் சாசன சமத்துவ மதச்சார்பின்மைச் சுடர்களை அணைத்து விட பகீரத பிரயத்தனம் செய்கிறார்கள். 

1936 ஆம் ஆண்டில் நிலமற்ற விவசாயத் தொழிலாளிகள், ஏழை விவசாயிகள், குத்தகையாளர்கள், ஆலைத் தொழிலாளர்களின் குறைகளைப் போக்கவும், இந்தியசமூகத்தில் சமூகச் சீர்திருத்தங்களைச் செய்யவேண்டிய தேவையை வலியுறுத்தியும் பல திட்டங்களை உட்படுத்திக் கொண்டு சுதந்திரத் தொழிலாளர் கட்சி என்ற அரசியல் கட்சியை டாக்டர் அம்பேத்கர் தொடங்கி நடத்தி அனுபவம் பெற்றவர்.வேலைநிறுத்தங்களை தடைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தொழிற்தகராறுகள் மசோதாவை அறிமுகப்படுத்தியது. சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கடுமையான எதிரப்பை அரசு சந்திக்கவேண்டியிருந்தது. சட்டமன்றத்தில் இந்த மசோதா 38 நாட்களுக்கு விவாதிக்கப்பட்டது. இந்த மசோதாவில் அடங்கியிருந்த முக்கியமான தொழிலாளர் விரோத பல அம்சங்களில் இந்த மசோதாவில் அடங்கியிருந்த தொழிலாளர் விரோதமான கொடூரங்களான ஒரு தொழில் தகராறில் நடுவர்அமைப்பிற்கு கட்டாயமானதொரு தன்மை அளிக்கப்படவேண்டும். மீறினால் வேலை நிறுத்தங்கள் சட்டவிரோதமாக அறிவிக்கப்படும். நடுவர் அமைப்பை ஏற்றுக்கொண்டால்தான் சங்கத்திற்கு அங்கீகாரம்  வழங்கப்படும் என்ற நிபந்தனையை புகுத்துவது.   

இந்தியத் தண்டனைச் சட்ட விதி 66ஆவது விதி ‘தொழில் நீதிமன்றத்தால் சட்டவிரோதமெனக் கருதப்படும்,ஒரு வேலை நிறுத்தத்தை ஓர் ஊழியர் தொடங்கினாலோ அல்லது அதில் ஈடுபட்டாலோ ஆறு மாதத்துக்கு மேற்படாதசிறைவாசம் அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கபட்டுத் தண்டிக்கப்படுவார் என்று குறிப்பிட்டிருந்தது. இந்தியத் தண்டனைச்சட்டம் விதி 67 தொழில் நீதிமன்றத்தால் சட்டவிரோதமானதென அறிவிக்கப்பட்ட   ஒருவேலைநிறுத்தத்தில் அல்லது கதவடைப்பில் பங்கு கொள்ளும்படி மற்றவர்களை ஊக்குவித்தாலும் சரி, தூண்டினாலும் சரி, அதற்காதரவாகச் செயல்பட்டாலும் சரி, அத்தகைய வேலை நிறுத்தம் அல்லது கதவடைப்பு ஆரம்பமானாலும், ஆரம்பமாகாவிட்டாலும் , இப்படிப்பட்டவர்களுக்கு ஆறுமாத காலத்திற்குட்பட்ட சிறைவாசமும் அல்லது அபராதமும் அல்லது இவை இரண்டும் சேர்த்தும் விதிக்கப்படலாம்.’ என்று விதியை குறிப்பிட்டிருந்தது. இது 1929 மசோதாவில் மூன்று மாதச் சிறைத் தண்டனை என்று குறிப்பிட்டிருந்ததை 1939 ஆம் ஆண்டின் சட்டம் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையாக விரிவுபடுத்தியது.  

அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் இந்த மசோதாவை கடுமையாகக் கண்டனம் செய்ததோடு 1939 நவம்பரில் பம்பாய்  மாநில தொழிற்சங்கக் காங்கிரஸ் 90000 தொழிலாளர்களை திரட்டி ஒருநாள் வேலைநிறுத்தம் நடத்தியது. டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சுதந்திரத் தொழிலாளர் கட்சியும் வேலைநிறுத்தத்தை ஆதரித்தது. அப்போது நடைபெற்ற பிரமாண்டமான பேரணியில் தோழர்கள் பி.டி. ரணதிவே, எஸ். ஏ. டாங்கே ஆகியோருடன் டாக்டர் அம்பேத்கரும் கரம் கோர்த்து தலைமைப் பொறுப்பை ஏற்று தொழிலாளர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி முழங்கினார். பம்பாய் சட்டமன்றத்தில் இந்த கொடூரமான தொழிலாளர் விரோதமான தொழிற் தகராறு சட்ட மசோதாவை எதிர்த்து தனது ஆணித்தரமான ஆழ்ந்த புலமையோடு வாதத்தை எடுத்துரைத்தார். மசோதா ஒன்றுபட்ட போராட்டத்தாலும் டாக்டர் அம்பேத்கரின் கம்பீரமான வாதத்தாலும் முறியடிக்கப்பட்டது.

1939 ஆம் ஆண்டில் பம்பாய் எல்பின்ஸ்டன் ஆலையில் தொழிலாளபிரச்சனைகளை மையப்படுத்தி வேலைநிறுத்தம் செய்தனர். எந்தவிதமான வன்முறையும் இல்லாத அளவு தொழிலாளர்கள் போராடினார்கள். ஆனால்காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவு போய்விட்டது. விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு அறிக்கையும்சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தி ‘ கூட்டத்தினரின் போக்கும் செயல்களும்தான் துப்பாக்கி சூட்டுக்கு முற்றிலும் காரணமாகும். எல்பின்ஸடைன் ஆலையில் நடைபெற்ற கலவரங்களுக்கும், துப்பாக்கிச் சூட்டுக்கும், அதன் விளைவாக ஏற்பட்ட உயிர்ச் சேதத்திற்கும் நேரடி நடவடிக்கைக் குழுவினர்தான் (போராட்டக் குழு) இறுதிப் பொறுப்பேற்க வேண்டும் என்பது எங்கள் அபிப்பிராயம். வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்யும் பொருட்டு, அவர்கள்தான் தங்களது தீவிர பிரச்சாரத்தால் கல்வி வாசனையற்ற தொழிலாளர்களை வன்முறையில் ஈடுபடும்படித் தூண்டிவிட்டு விட்டனர் ’என்று
குறிப்பிட்டிருந்தது. பம்பாய் சட்டமன்றத்தில் இது குறித்த விவாதம் வரும்போது விசாரணை அறிக்கையின் மேற்குறிப்பட்ட பகுதியைச் சுட்டிக்காட்டி டாக்டர் அம்பேத்கர் நடத்திய விவாதம் காவல்துறையின் அட்டூழியத்தையும், முதலாளிகளின் கைப்பாவையாக செயல்பட்டதை அம்பலப்படுத்தியது.

இந்த மோசமான நிகழ்ச்சி நடைபெற்றது உண்மையானால், ‘அரசு வளர்த்துவரும் இந்தப் போலீஸ் படை, தொழிலாளர்களின் கிளர்ச்சியை அடக்கி ஒடுக்கும் நோக்கத்திற்காக முதலாளி வர்க்கம் பயன்படுத்தும் கைக்கூலிகளின் பக்கம் இருக்கும் போலீஸ்படை, கொலைகாரர்களுடன் உறவு கொண்டாடும் போலீஸ்படை என்றேகருத வேண்டியுள்ளது’ என்று நாட்டில் நடக்கும் தொழிலாளர் உரிமைகளுக்குப் போராடுவோரை கார்ப்பரேட்டுகளுடன் சேர்ந்துகொண்டு பலி வாங்கும் கொடூரச் செயலை  அம்பலப்படுத்தி கர்ஜித்தார். இன்றும் அந்த சதிச் செயல்  போராடுவோருக்கு எதிராக தொடர்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.1939ல் பம்பாய் எல்பின்ஸ்டன் ஆலையின் கொடூரச் செயலை டாக்டர் அம்பேத்கரின்  வெளிப்படுத்திய தொழிலாளர் ஆதரவு நிலை விவாதம் நம் காலத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு நினைவுக்கு வருகிறது.

 1942 முதல் 1946 வரை வைஸ்ராய் சபையில் இந்திய தொழிலாளி வர்க்கத்தின் தொழிலாளர் உரிமைகளுக்கு உயிர்கொடுத்த  அம்பேத்கர் ஆங்கிலேய வைஸ்ராய் சபையில் சர் சி. பி. ராமசாமி அய்யர், சர் முகம்மது உஸ்மான் ,டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் நிர்வாக சபையில் (வைஸ்ராய்சபை) நியமிக்கப்பட்டனர். டாக்டர் அம்பேத்கர் தொழிலாளர் துறை அமைச்சராகவும், பொதுப்பணித் துறை அமைச்சராகவும் 20 ஜூலை 1942 ல் நியமிக்கப்பட்டார். இந்தப்பொறுப்புகளில் 1946 ஜூன் 6ஆம் தேதி வரை பெருமைப்படத்தக்க விதத்தில் ஒட்டு மொத்தமான இந்திய வளர்ச்சிக்காக செயல்பட்டார்.        

சுதந்திரத் தொழிலாளர் கட்சி 1936 துவங்கி இயக்கம் நடத்திய அனுபவமும், ஏ ஐ டி யூ சி , கிர்ணி காம்கர் சங்கம் ஆகியவைகளின் போராட்டங்களும் 1939ல் தொழிற்சங்க கூட்டமைப்பின் போராட்டத்தில் கலந்து கொண்டு பம்பாய் அரசின் தொழில் தகராறு சட்டகொடூரங்களை எதிர்த்து போராடிய அனுபவமும் அவரின் மனக்கண் முன் விரிந்து நின்றதால்தான், தனக்குக் கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி சில சட்டங்களை இயற்றினார்.தொழிலாளர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முத்தரப்பு பேச்சுவார்த்தை என்பதை சட்டமாக்கினார். முத்தரப்பு மாநாடு ஏற்பாடு செய்த அம்பேத்கர் , தொழிற்சாலையில் உருவாகும் பிரச்சனைகளை தொழிலாளர் பிரதிநிதி, ஆலை உரிமையாளர், அரசுப் பிரதிநிதி ஆகிய அமைப்பினர் சேர்ந்து பேசி நல்ல தீர்வுகள் ஏற்பட முத்தரப்பு ஒப்பந்தம் உருவாக்க சட்டம் இயற்றினார். தொழிலாளர் நலத்துறையின் நிலைக்குழு அமைக்கப்பட்டது.    

பாண்டிச்சேரியில் உள்ள ஆங்கிலோ பிரஞ்சு டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளர்கள் தோழர்  சுப்பையா தலைமையில் 8 மணி நேரம் வேலை கேட்டு பேரணி நடத்தியபோது பிரெஞ்சு அரசாங்கம் பேரணியில் சென்ற தோழர்கள் 12 பேர்களை சுட்டுக் கொன்றது. 20பேர்கள் படுகாயமுற்றனர். இந்தப் போராட்டத்தின் விளைவாக 1936ல் பிரெஞ்ச் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிச்சேரியில் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை  உறுதிப்படுத்தப்பட்டது. இந்தச் சூழலில் ஆங்கிலேய வைஸ்ராய் சபையில் தொழிலாளர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் தலைமையில்  நடைபெற்ற ஏழாவது இந்தியதொழிலாளர் மாநாட்டில்தான் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் என்றிருந்ததை 8 மணியாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்திய தொழிற்சங்கத் திருத்த மசோதா 1926 ன்படி தொழிற்சங்கங்கள் பதிவு செய்யமட்டுமே முடியும். அரசு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. ஆனால் 8  நவம்பர் 1943இல் டாக்டர் அம்பேத்கர் தொழிற்சாலை திருத்த மசோதாவை முன்மொழிந்து தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கும்  மசோதா சட்டமானது. இத்துடன் அகவிலைப்படி வழங்கிடும் சட்டம்,  சுகாதாரக் காப்பீட்டுத் திட்ட சட்டம்,மகப்பேறு கால விடுப்புச் சட்டம், தொழிலாளர் வைப்புநிதிச் சட்டம்,  ஊதியத்துடன் கூடிய விடுப்புச் சட்டம், தேசிய வேலை வாய்ப்பு அலுவலகஉருவாக்கம், தொழிலாளர் விபத்து நஷ்ட ஈடு முன்மொழிவு,சமவேலைக்குச் சம ஊதியம் ஆகிய      இவைகளெல்லாம் டாக்டர் அம்பேத்கர் 1942 முதல் 1946 வரை ஆங்கிலேய வைஸ்ராய் சபையில் தொழிலாளர் துறை அமைச்சர் பதவியில் இருந்த போது தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உருவாக்கப்பட்டது. 1937 செப்டம்பர் 17-ல் கோட்டி என்ற ஜமீன்தாரி முறையை எதிர்த்து ஒரு சட்ட மசோதாவைக் கொண்டு வந்தார். கோட்டி முறையை மாற்றி ரயத்வாரி முறையை கொண்டு வர வலியுறுத்தியவர் டாக்டர் அம்பேத்கர்.

சுதந்திரத்தின் பாதுகாவலனாக இருக்க வேண்டிய நாடாளுமன்ற ஜனநாயகம் , ஏழை எளிய மக்களுக்கு அடிமட்டத்தில் அமிழ்ந்து கிடக்கும் மக்களுக்கு  சொத்துரிமை பறிக்கப்பட்ட வர்க்கத்திற்கு மென்மேலும் பொருளாதார தீங்குகளை, சீர்கேடுகளை துன்ப துயரங்களை இழைத்துவந்தது. தவறான சித்தாந்தமும் ஒரு காரணம். சமூகபொருளாதார சுதந்திரம் இல்லாத இடத்தில் அரசியல் ஜனநாயகம் வெற்றிபெற முடியாது என்பதை நாடாளுமன்ற ஜனநாயகம் உணரத் தவறியது ஆகும்.சமூக ஜனநாயகமும் பொருளாதார ஜனநாயகமும் அரசியல் ஜனநாயகத்தின் நரம்பும் நாளமும் ஆகும். இந்த நரம்பும் நாளமும் உறுதியாக இருந்தால்தான் உடல் வலுமிக்கதாக ஆரோக்கியமானதாக இருக்கும் என்றார் அம்பேத்கர். 

 ஜனநாயகம் என்பது சமத்துவத்துக்கு மற்றொரு பெயர். நாடாளுமன்ற ஜனநாயகம் சுதந்திர தாகத்தை விழைவை கிளர்த்திவிட்டு விட்டது என்பதில் ஐயமில்லை. ஆனால் சமத்துவத்துக்கு ஆதரவாக ஒருபோதும் தலையசைத்தது கூட இல்லை. சமத்துவத்தின் முக்கியத்துவத்தை அது உணரத் தவறிவிட்டது. அதுமட்டுமல்ல சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக்கும் இடையே ஒரு சமநிலையைத் தோற்றுவிப்பதற்குக் கூட அது எத்தகைய முயற்சியையும் எடுத்துக்கொள்ளவில்லை.அரசாங்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உழைக்கும் வர்க்கங்கள் தவறிவிட்டன. உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தற்கால சமூக அரசாங்க ஒழுங்கமைப்பு குறித்த அடிப்படையான செயல்முறை ஆவணங்களை அவசியம் பரிச்சயம் செய்துகொள்ள வேண்டும். ரூசோவின் சமூக ஒப்பந்தம், மார்க்ஸின் கம்யூனிஸ்ட் அறிக்கை, தொழிலாளர்களின் நிலை குறித்த போப்பாண்டவர் பதிமூன்றாம் லியோவின் சுற்றுக் கடிதம்,சுதந்திரம் பற்றிய ஜான் ஸ்டூவர்ட் மில்லின் நூல் ஆகியநான்கையும் இவ்வகையில் முக்கியமாக குறிப்பிட வேண்டும். ஆனால் உழைக்கும் வர்க்கங்கள் இந்த ஆவணங்களின்பால் உரிய கவனம் செலுத்த தவறிவிட்டன” என்று தொழிலாளி வர்க்கத்தின்மீது ஆதங்கப்படுகிறார்.இந்தியாவில் ஒரு தொழிற்கட்சி உதயமாகுமானால் ஆட்சி பீடத்தில் தன்னை அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை அது வாக்காளர்களிடம் முன் வைக்குமானால், தொழிலாளர்கள் ஆட்சி செய்ய தகுதியானவர்கள்தானா என்ற ஒரு கேள்வி எழும் என்பது நிச்சயம். மற்ற வர்க்கங்களைவிட தொழிலாளர்கள் மோசமாக ஒன்றும் ஆட்சி செய்ய மாட்டார்கள் என்று கூறினார்.

மகளிர் தினம் கொண்டாடும் போதும், இந்து சட்டத்தொகுப்பு சீர்திருத்த மசோதா கொண்டு வந்து பெண்ணுரிமைகளான பால்ய விவாகம் தடுப்பு, விவாகரத்து உரிமைபெண்களுக்கு, சொத்துரிமை பெண்களுக்கு,விதவைத் திருமணம் அங்கீகரித்தல் ஆகியவற்றுக்காக நாடாளுமன்றத்தில் வாதாடி அம்பேத்கர் கொண்டுவந்த மசோதா தோற்கடிக்கப்பட்டதால் தனது சட்ட மந்திரி பதவியை 1951ல் தூக்கியெறிந்தவர் என்ற முறையில் பெண் விடுதலை சுயமரியாதைப் போராளிகளை நினைக்கும்போது டாக்டர் அம்பேத்கரும் போற்றப்படக் கூடியவர்தான். 

1949  நவம்பர் 25 -ல் அரசியல் சாசனத்தை அறிமுகப்படுத்திப் பேசும்போது அவர் இந்த தேசத்தின் மதவெறி இருள் கவ்வியிருக்கும் அடையாளத்தை அப்போதே கண்டுபிடித்து கவலையோடு அழுத்தமாக ஒன்றை வெளிப்படுத்தினார். “இந்தியர்கள் தங்கள் மத நம்பிக்கைக்கு மேலாக நாட்டை கருதப் போகிறார்களா அல்லது நாட்டைவிட மத நம்பிக்கைக்கே முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. கட்சிகள்  நாட்டைவிட தங்கள் மதக் கோட்பாடுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தால் நமது சுதந்திரத்திற்கு இரண்டாவது தடவையாக ஆபத்து என்பதுடன் என்றென்றைக்கும் நமது சுதந்திரத்தை இழப்பது நிச்சயம். இந்த விளைவுக்கு எதிராக நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். நமது சுதந்திரத்தை பாதுகாப்பதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும்”  என்பதுதான் அந்த கவலையான எச்சரிக்கை. இன்றைய நாட்டின் அரசியல் சூழலை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவரது கவலை எவ்வளவு அர்த்தமானது என்பது தெரிகிறது.

கட்டுரையாளர்: ...பேரா.க.கணேசன்... குமரி மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

;