articles

img

பண மதிப்பு நீக்கம் தேசத்திற்கு போனது தூக்கம் - பண மதிப்பு நீக்கம் தேசத்திற்கு போனது தூக்கம்

பணமதிப்பு  நீக்கம் முடிவு எடுக்கப்படுவதற்கு  இரண்டு காலாண்டுகளுக்கு முன்பு வரை இந்தியப் பொருளாதாரம் 9 சதவீதம் வளர்ச்சியை எட்டி வந்தது. அப்போதிருந்து வளர்ச்சி யில் பெரும் சறுக்கல் ஏற்படத் துவங்கி கோவிட்டுக்கு முந்தைய காலாண்டில் 3 சதவீதம் என்ற அளவு வரை வீழ்ச்சி சென்றது. ஒரு கிழிந்த காகிதத்தில் எளிமையான கணக்கைப் போட்டு பார்ப்போம். 9 சதவீத வளர்ச்சி நீடிக்காமல் போனதால் ஏற்பட்டிருக்கிற இழப்பு 13 லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும்.

இரத்தம் குடித்த முடிவு

பொருளாதாரத்திற்கு பணம் என்பது உடலுக்கு தேவைப்படுகிற இரத்தம் போன்றது. மொத்த இரத்த மும் நமது உடலில் இருந்து உறிஞ்சி எடுக்கப்பட்டால் நாம் உயிரற்ற பிணங்கள் ஆகி விட மாட்டோமா? அது போலவே 86 சதவீதம் ரூபாய் நோட்டுகள் புழக் கத்தில் இருந்து திடீரென்று திரும்பப் பெறப்பட்ட தால் அது பெரும் பொருளாதார சீரழிவாக அமைந்து விட்டது. புதிய நோட்டுகளை அச்சிடுவது, சுற்றுக்கு கொண்டு வருவது, செல்லாப் பணத்திற்கு ஈடான சட்டப்பூர்வ மாற்று ஆவணங்களை உறுதி செய்வது ஆகிய பணிகளில் பெரும் நிர்வாகச் சீர்குலைவு ஏற்பட்டது.  50 நாளில் எல்லாம் சரியாகும் என்று பிரதமர் அடித்த தம்பட்டம் தோல்வியைத் தழுவியது. பல மாதங்கள் ஆகியும் சரியாகவில்லை. மீண்டும் பணம் வந்து சேருவதற்குள் பல குறு, சிறு, நடுத்தர தொழில கங்கள் நசிந்து உயிரை விட்டு விட்டன.

வளர்ந்த வறுமை - வேலையின்மை

பண மதிப்பு நீக்கம், வேலை வாய்ப்புகளை உரு வாக்கக் கூடிய குறு சிறு தொழில்களின் முதுகை முறித்துவிட்டது. வேலை வாய்ப்பு உருவாக்கம் 1980 களில் 2.02 சதவீதம், 1990 களில் 1.54 சதவீதம், 2000 களில் 1.47 சதவீதம், 2010 - 18 இல் 0.03 சதவீதம் என சரிந்து வந்தி ருக்கிறது. வேலையின்மை வளர்ந்திருக்கிறது. ஊதியம், கூலி தேக்கம் அடைந்திருக்கிறது. இது கிரா மப்புற மக்களின் நுகர்வை பெருமளவு குறைத்துள் ளது. வறுமை உயர்ந்துள்ளது. 2011- 12இல் வறுமை 21.9 சதவீதம் வளர்ந்தது. 2019-20 இல் வறுமை 25.9 சதவீதம் வளர்ந்திருக்கிறது. இந்த விவரங்கள் எல்லாம் பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி அமலாக்கம் ஆகியன வேலை உருவாக்கத் தை கடுமையாக பாதித்துள்ளது என்பதையே வெளிப் படுத்துகின்றன. 

கறுப்புப் பணம் ஒழிந்ததா?

பணமதிப்பு நீக்கம் என்கிற கொள்கை முடிவை எடுத்த முக்கியமான பொறுப்புகளில் இருந்தவர்கள் ரூ.3 லட்சம் கோடிகளில் இருந்து ரூ.5 லட்சம் கோடிகள் வரையிலான கறுப்புப் பணம் வெளியே வரும் என்று கூறினார்கள். கணக்கில் வராத பணத்தை வைத்திருப்பவர்கள் வங்கிகளுக்கு வந்து அப் பணத்தை மாற்ற மாட்டார்கள், பயப்படுவார்கள் என்று நம்பினார்கள். அப்படி நடந்தால் ரிசர்வ் வங்கியின் பொறுப்புகள் அந்த அளவிற்கு குறையும் என்று கணக்கும் போட்டார்கள்.  எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. என்னைப் போன்ற சில மாநில நிதியமைச்சர்களிடம், புத்தி சாலித்தனம் அற்ற இத்திட்டம் குறித்து அப்போ தைய ஒன்றிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இப்படி யெல்லாம் விளக்கம் கொடுத்தார். எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. கறுப்புப் பணத்தை பற்றி எப்படி இவ்வளவு மோசமான புரிதல் இவர்களுக்கு இருக்கிறது என்று...! 

கறுப்புப் பணம் ஒரு இடத்தில் பதுங்கி இருப்ப தல்ல. அது பாய்ந்து கொண்டே இருக்கும். சட்டப்பூர்வ மற்ற நடவடிக்கைகள் மூலம் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கும். வரியில் இருந்து தப்பி விட்டால் அவை முழுமையான சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்று விடுகின்றன. கறுப்புப்பணத்தின் இருப்பு சாக்குப் பைகளுக்குள் அடைக்கப்பட்டதாக இருப்பதில்லை. மாறாக சொத்துக்களில் முதலீடாக, வணிக நடவடிக்கை களில் ஈடுபடுவதாக, அந்நிய நாடுகளில் ஒளிந்து கொள்வதாக உருமாறி விடுகிறது. பணமதிப்பு நீக்கத் தால் கறுப்புப் பணத்தை ஒழித்து விட முடியாது.  இந்த எளிமையான உண்மையே செல்லா பணமான ரூ.1000, ரூ.500 நோட்டுகளில் 99.3 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பி வந்த போது நிரூபணம் ஆனது. 

கதைகள் : கிழிந்த கந்தைகள்

கறுப்புப் பண ஒழிப்பு என்ற காரணம் எடுபடாதோ என்ற சந்தேகம் வந்தவுடன் புதிய காரணங்களை அவிழ்த்து விட்டனர். அவற்றில் மூன்று காரணங்கள்: 

  • ஒன்று ரொக்கமற்ற பரிவர்த்தனை அல்லது டிஜிட்டல் நடவடிக்கைகள் ஊக்கம் பெறுகிற நிலை யில் கணக்கிற்கு வராத பணமே இருக்காது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. 
  • இரண்டாவதாக கள்ள நோட்டு ஒழிக்கப்படும், செல்லாப்பணம் ஆன கள்ள நோட்டுக்கள் சுற்றில் இருக்க முடியாது என்றும் கூறப்பட்டது.
  • மூன்றாவதாக, கள்ள நோட்டுக்கள் ஒழிந்தால் கள்ள நோட்டுகளை பயன்படுத்தும் தீவிரவாதமும் குறையும் என்று அடித்துப் பேசப்பட்டது. 

ஆனால் இன்று என்ன நிலைமை? 

  • பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டு ஐந்து ஆண்டு கள் ஆகி விட்டன. நவம்பர் 2016 இல் 17.97 லட்சம் கோடி அளவிற்கு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது; நவம்பர் 2021 இல் இது 29.44 லட்சம் கோடி களாக நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது. 64 சதவீதம் ரூபாய் நோட்டுக்கள் அதிகம் ஆகியுள்ளன. ரொக்கமற்ற பரிவர்த்தனை என்பது என்னஆயிற்று?
  •  கள்ள நோட்டுக்கள் ஒழிந்து விட்டனவா? 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பழி வாங்குவது போல வெறித் தனமாக சுற்றுக்கு வந்துள்ளன. 
  • தீவிரவாதம் குறைந்ததா? 2015 இல் தீவிர வாதிகளின் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் 164 எனில் 2018 இல் இந்த எண்ணிக்கை 387 ஆக அதி கரித்தது.  இப்படி அவர்களின் கதையாடல்கள் மாறிக் கொண்டே இருந்தன. ஒவ்வொரு கதையாடலுமே அம்பலம் ஆகிக் கொண்டும் வந்தது. 

அமைதியாக  புதைக்கப்பட்ட உண்மை

எந்தவொரு பொருளாதார நிபுணரும், நவீன தாராள மயத்தின் தீவிர ஆதரவாளரானாலும், இந்த மூடத்தன மான நடவடிக்கையை பரிந்துரைக்க மாட்டார்கள். கொள்கையை உருவாக்குபவர்கள் பணத்தோடு விளையாட மாட்டார்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தி யின் (ஜி.டி.பி) குறிப்பிட்ட விகிதத்தில் பணம் சுற்றில் இருப்பதை உறுதி செய்வார்கள். அது மீதத்தை பார்த்துக் கொள்ளும். 

மில்டன் பிரீட் மேன் என்கிற அமெரிக்க பொருளா தார நிபுணர் கினீசிய வழிமுறையை விமர்சித்து புதிய  பணக் கொள்கையை (Monetarism) முன் வைத்தவர். அவருடைய இந்திய பக்தர்கள் பணத்தை சிதைத்ததை, ஏன் ஒரு படி மேலே போய் ஒழித்ததை, பார்த்து அவர் கல்லறைக்குள் நெளிந்திருப்பார். மோடி ஆட்சியில் என்ன பிரச்சனை என்றால், நெருங்கிய வட்டத்திற்கு வெளியே உள்ளவர்கள் எவருக்கும் என்ன நடக்கிறது என்று தெரியாது. அவரின் முன்னாள் பொருளாதார ஆலோசகர்கள் கூட அறிய மாட்டார்கள். வேறு யார் இந்த பொருளாதார குழப்பத் திற்கு வழி வகுத்தவர்கள்? நிச்சயமாக பொருளாதார நிபுணர்கள் இல்லை. யாரோ சில பொருளாதார குள்ள நரிகள். திரைக்குப் பின்னால் இருந்து இயங்குப வர்கள். யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். தேசத்திற்கு நல்லதல்ல. 

ஆனால் இவ்வளவு பெரிய சீரழிவை கொண்டு வந்த தற்கு இதுவரை வருத்தம் தெரிவித்து ஒரு வார்த்தை இல்லை. சுய பரிசீலனை இல்லை. தங்களின் நியாயம் பற்றிக் கூட அவர்கள் பேசவில்லை.  அதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் கூட தங்க ளின் கோபத்தை வெளிக் காட்டவில்லை. என்ன கார ணம்? பண மதிப்பு நீக்கத்திற்கு அரசு சொன்ன கார ணத்தை அவர்கள் நம்பினார்கள். அந்த நடவடிக்கை யை கறுப்புப் பணம், கள்ளப் பணத்திற்கு எதிரான துல்லிய தாக்குதல் என்றே நினைத்தார்கள். நீண்ட  வரிசைகளில் அவர்கள் நின்றாலும், “கறுப்புப் பணத்தால்” ஊக்கம் பெறும் தீவிரவாதிகளை எதிர்த்து போராடும் இராணுவ வீரர்களோடு தங்களை  ஒப்பிட்டுக் கொண்டார்கள். பணக்காரர்களும் வரிசை யில் நின்றதை நினைத்து ஆறுதல் அடைந்தார்கள். 

பிரதமர் இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்து நாட்டையே அதிர்ச்சிக்கு ஆளாக்கிய அதே இரவில் நானும்  எனது அமைச்சக அறையில் ஒரு ஊடக சந்திப்பை நடத்தி பிரதமரின் அறிவிப்பை “பைத்தி யக்காரத்தன நடவடிக்கை” (Act of Madness) என்று விமர்சித்தேன். ஆனால் என்னுடைய நண்பர்கள் பல பேர் “இப்படி அவசரப்பட்டு விமர்சிக்காதீர்கள்; உங்களை கறுப்புப் பண ஆதரவாளர் என மக்கள் கருது வார்கள்” என எச்சரித்தார்கள். 

கதையாடலும், அது அடுத்தடுத்து புதிய கதையா டல்களாக மாற்றப்பட்டதும்  பெரிய சீரழிவை மறைக்க உதவியது. மிகப் பெரும் தோல்வி மக்களின் கவ னத்திற்கு வராமலே அமைதியாக புதைக்கப் பட்டுள்ளது.  பண மதிப்பு நீக்கம் ஏற்படுத்தியுள்ள அவலங்களை ஐந்தாண்டு அனுபவம் வெளிக் கொணர்ந்துள்ளது. இன்னும் அந்த மோசமான முடிவின் தாக்கத்தில் இருந்து தேசம் வெளி வர முடியவில்லை. 

யூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 17.11.2021 “COLOSSAL NOTES BAN FAILURE BURIED IN SILENCE” என்ற கட்டுரை 
தமிழ்ச் சுருக்கம் : க.சுவாமிநாதன்


 

;