articles

img

மழைநீர் வீடுகளுக்குள் புகுவதை தடுப்பது சாத்தியமா? - கே.கந்தசாமி

தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த மழையின் காரண மாக பல நகரங்களில், தெருக்களில் வீடுகளுக் குள் மழை நீரும் கழிவு நீரும் புகுந்து இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பொரு ளாதார ரீதியாக பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குழந் தைகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏதோ திடீரென்று இந்த வருடம் மட்டும்தான் மழை பெய்து வீடுகளுக்குள்ளும் மழைநீர் சென்றது என்ப தல்ல. சாலைகளில் தேங்கியிருப்பதும் புதிது அல்ல. தொடர்ச்சியாக தமிழகம் சந்திக்கக் கூடியது தான். கடந்த 2005 மற்றும் 2015 ஆம் ஆண்டு  தலைநகர் சென்னையில் கடுமையான வெள்ளம்.பொதுவாக ஒரு பாமர மனிதன் எழுப்பக்கூடிய கேள்வி இதுதான். 

பொறியியலில் திறமை வாய்ந்தவர்கள் ஏராளமாக இருந்தும் தமிழகம் ஓரிரு நாள் மழைக்கே தத்தளிக் கிறது என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் என்ன? தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பொறியாளர் கள் பணிபுரிகிறார்கள். இதுமட்டுமல்லாமல் ஏதாவது பெரிய திட்டங்களுக்கு ஆலோசனைகள் தேவைப் பட்டால், பிரச்சனைகள் ஏற்பட்டால் ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், இது மட்டுமில்லாமல் தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்களை அழைத்து ஆலோசனை பெறக்கூடிய பழக்கமும் இருக்கிறது. இப்படிப்பட்ட தமிழகத்தில் அரசு பொறியாளர்கள், மழைக்காலங்களில் மட்டும் மழை கடுமையாகப் பெய்து விட்டது. எதிர்பார்க்காத மழை. எனவே மழை வெள்ளத்தில் வீடுகளுக்குள் மழை நீரும் கழிவு நீரும்  சேர்ந்து வருகிறது என்று சாதாரண பாமரர் சொல்வது போல பதில் சொல்வதுதான் புரியவில்லை.

தமிழகத்தின் புவியியல் அமைப்பைப் புரிந்து எதிர் காலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால் உள்ளாட்சி அமைப்புகளிலும் நெடுஞ்சாலை துறை பொதுப்பணித் துறைகளிலும் மழைநீர்வடி கால் வாய்க்கால்களை திட்ட மதிப்பீடு சரியாக உள்ளது  என்றுதான் பார்க்கிறார்களே தவிர, புவியியல் ரீதியாக, அறிவியல்பூர்வமாக இந்த மழைநீர் துவங்கிய இடத்தில் இருந்து சேரக்கூடிய இடங்கள் வரையும் இதனுடன் இடையே இணையக்கூடிய வாய்க்கால்களும் இணைந்து கடைசிவரை பூகோள ரீதியாக அறிவியல் ரீதியாகச் செல்கிறதா என்று பார்ப்பதில்லை. நடக்கக் கூடியவை என்னவென்றால் ஒரு நகரத்தில் 300 கிலோ மீட்டருக்கு மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டவேண்டும் என்று சொன்னால், இவர்கள் ஒரு வார்டில் ஒரு தெருவில் 200 மீட்டருக்கு சாக்கடை கட்டுவார்கள். இன்னொரு வார்டில் 150 மீட்டர், வேறு ஒரு பகுதியில் 50 மீட்டர் என்று மழைநீர் வடிகால் வாய்க்கால் களை கட்டிக்கொண்டே இருப்பார்கள். இப்படித்தான் 300 கிலோ மீட்டருக்கு வடிகால் வாய்க்கால்கள் கட்டப் பட்டுள்ளன தமிழகத்தில்.

பெரும்பாலும் எங்குமே துவங்கிய இடத்தில் இருந்து கடைசி வரை ஒரே நேரத்தில் மழை நீர் வடிகால் வாய்க்கால்களை உள்ளாட்சி அமைப்புகள் கட்டிய தில்லை. அவை ஏற்கனவே கட்டப்பட்ட வாய்க்கால்களு டன் இணைக்கப்படுகின்றன. கூடுதலாக இணைக்கப் பட்டால் ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால் இந்த மழைநீரையும் கழிவுநீரும் தாங்குமா, கடைசி வரை அதனுடைய ஆழம், அகலம் எவ்வளவு உள்ளது, அதனுடன் வேறு சில வாய்க்கால்களை இணைப்பதன் மூலம் அந்தத் தண்ணீர் தெருவுக்குள், வெளியே வரும் வீடுகளுக்குள் செல்லுமா செல்லாதா என்று ஆய்வு செய்வதில்லை. இவர்களுடைய வேலை என்பது மதிப்பீட்டில் ஒன்றரை அடி ஆழம், ஒரு அடி அகலம், இரண்டடி உயரம் சரியாக இருக்கிறதா, உடனே ஒப்பந்ததார ருக்கு பில்லை கொடுத்து விடுவது. அந்த வாய்க்கா லில் மழைநீர் செல்கிறதா, கழிவுநீர் செல்கிறதா, எங்கே யாவது தேங்கி நிற்கிறதா, தேங்கி நின்றால் சரி செய்யப்பட்டதா வாட்டம் உள்ளதா என்று பார்த்தால், பெரும்பாலும் இல்லை. தேங்கித் தான் நிற்கிறது.

இதுவரை மூன்று முறை கடுமையான மழையை தமிழகம் சந்தித்துள்ளது.  ஏன் அரசு நிர்வாகங்கள் சம்பந்தப்பட்ட இடங்களை பூகோள ரீதியாகவும் அறி வியல் பார்வையுடனும் ஆய்வு நடத்தி எதிர்காலத்தில் இந்த மழைநீர் வாய்க்கால்களுடன் சம்பந்தப்பட்ட வேறு பகுதிகளுக்கும் பாதிப்பு வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து வாய்க்கால்களை ஆழப்படுத்தி, அகலப் படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு உள் ளாட்சி அமைப்புகளில் செய்வதில்லை. இதன் விளை வாகவே தமிழகம் இந்த துன்பத்தை சந்திக்கிறது. மேலும் பல இடங்களில் கழிவுநீர் வாய்க்கால்கள் மூடப்பட்டுள்ளன. கழிவுநீர் வாய்க்கால் அளவிற்கு சிறு பாலங்கள் கட்டப்படுவதில்லை. தரைதட்டிய பாலங்க ளை அப்படியே விட்டு விடுகிறார்கள். மேலும் கான்கிரீட் போட்டு முட்டுக் கொடுப்பார்கள் அந்த மரங்களை எடுப்பதில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் சாக்க டைக்குள் பிளாஸ்டிக் பாட்டில்கள் கழிவுப்பொருட்களை கொட்டுவதால் அந்த மரத்தில்சிக்கி தண்ணீரை செல்ல விடாமல் நிறுத்தி விடுகிறது.

பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டது என்று அரசு அறிவித்தும் இன்றுவரை  தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாவதும் விற்பனை செய்வதும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் பெயரளவிற்கு கணக்கு காட்டு வதற்காக அபராதம் விதிக்கக் கூடிய தன்மை தான் தமிழகத்தில் இன்று வரை உள்ளது. அரசு என்ன தான் சொன்னாலும் கீழ்மட்டத்தில் நடக்கக் கூடிய நிலைமை என்பது வேறுவிதமாகத் தான் உள்ளது.    மேலும் சமீபத்தில் தலைமைச் செயலாளர் அவர்கள், கழிவு நீர் வாய்க்கால்கள் அனைத்தும் தூர் எடுக்கப்படவேண்டும் என்று சொன்னார். ஆனால் அரசுக்கு கணக்கு காட்டுவதற்காக குறிப்பிட்ட பகுதி யில் மட்டும் எடுத்துவிட்டு முழுமையாக எடுக்கப்பட்டது என்று கணக்கு காட்டக்கூடிய நிலைமை தான் இருக் கிறது. அதற்கேற்ப பணியாளர்களும் உள்ளாட்சி  அமைப்புகளில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இந்த வேலை அவர்களின் தினசரி வேலைகளுடன் இணைந்து விடுகிறது. ஒட்டு மொத்தமாக குறிப்பிட்ட நாளில் இப்பணியை மட்டும் செய்தால் தினசரி அவர்கள் சேகரிக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவது, பொதுமக்களிடம் வாங்குவது தடைபட்டுப் போகும். மக்கள் தொகைக்கு ஏற்ப நக ரங்களும் கிராமங்களும் விரிவாக்கத்திற்கேற்ப தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. மிகப் பெரிய நகராட்சியாக இருக்கக்கூடிய அளவிற்கு உள்ள  கிராம ஊராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள் 8 பேர் வேலை பார்க்கக் கூடிய நிலைமை தான் தமிழகத்தில் இன்றும் உள்ளது.  வாய்க்கால்களில் தூர்வாரும் பணி பெய ரளவுக்கு நடைபெற்றதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

மேலும் மழை நீர் வடிகால் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்பை எடுப்பதில்லை. சாக்கடைகளின் மேலேயே அரசியல் செல்வாக்கால் வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக அப்பகுதியில் தூர்வாரும் பணி நடைபெறுவதில்லை. சமீபத்தில் தமிழ் நாடு முழுவதும் அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நகராட்சிப் பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி நடைபெற்றுள்ளது. இப்பணி மிகப்பெரிய தோல்வியையே அடைந்துள் ளது. உதாரணம் பழனி நகராட்சியில் ரூ.58 கோடியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட பெரிய மழை நீர் வடிகால் வாய்க்கால்களை சிறிய வாய்க்காலில் இணைத்து தண்ணீர் செல்ல முடியாமல், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மக்களை கடுமையாக பாதித்தது. 500 மீட்டருக்கு மேல் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் வாய்க் கால்கள் பயனற்றவை என்று ஒப்புக் கொண்டு உள்ளார் கள். எனவே மழை நீர் வடிகால் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புச் செய்வது தடுக்கப்பட வேண்டும்.

ஆக்கிரமிப்புகள் எடுக்கப்பட வேண்டும். சாலைகள் ஒவ்வொரு முறையும் போடும் பொழுது அரையடி உயரம் உயர்ந்துகொண்டே செல்கிறது. வீடு கள் உயர்ந்து செல்ல முடியாது. ஆரம்பத்தில் வீடுகள் கட்டப்பட்ட பொழுது சாலை பள்ளமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு சாலை உயர்ந்துள்ளது. வீடுகள் பள்ளம் ஆகிவிட்டன. இதற்குக் காரணம் அதிக லாபம் தரக்கூடிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள். காரணம் உயரத்தைக் குறைத்து வீடுகள் மட்டத்தில் சாலைகளை அமைத்தால் ஒப்பந்ததாரர்களுக்கு லாபம் கிடைக்காது. அதனால் ஒப்பந்ததாரருக்கு லாபம் கிடைக்கும் வகையில் சாலைகளை உயர்த்துவதால் வீடுகள் பள்ளமாகி மழை நீரும் கழிவு நீரும் மழைக்காலத்தில் வீடுகளுக்குள் செல்கிறது. இதுவே மிக முக்கியமான காரணம். 

ஒவ்வொரு முறையும் சாலைகள் போடும் பொழுது ஏற்கனவே போடப்பட்ட சாலையை தோண்டி எடுத்து விட்டு புதிய சாலை போடப்பட வேண்டும். அப்படிச் செய்யாமல் அப்படியே உயரப்படுத்துவது தான் இதற்கு காரணம். எனவே  இப்பொழுது சாலைகள் புதிதாகப் போடும் போது பழைய சாலையை எடுத்து விட்டுத் தான் போட வேண்டும் என்ற தலைமைச் செயலாள ரின் உத்தரவு அமல்படுத்தப்பட வேண்டும். இல்லை  என்றால் தமிழகம் அடுத்து வரும் மழைக்காலங்களில் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் அபாயம் ஏற்படும் என்பதையே இப்பொழுது பெய்த மழை நமக்கு தெளிவாகக் காட்டியுள்ளது. இதுவரை மழைநீர் செல்லாத வீடுகளில் இப்போது மழைநீர் உள்ளே சென்றுள்ளது.

எனவே மழை பெய்யும் காலங்களில் உள்ளாட்சி அலுவலர்கள் நேரடியாக ஆய்வு நடத்த வேண்டும். இப்பணி தமிழகத்தில் பெரும் பாலும் நடைபெறுவதில்லை. சம்பந்தப்பட்ட மக்கள் உள்ளாட்சி அமைப்புகளில் சொன்னால், அரசு நிதி வரட்டும் பிறகு பார்க்கலாம், இப்போது எங்களால் எது வும் செய்ய இயலாது என்ற பதில் தான் சாதாரணமாக வருகிறது. அரசியல் செல்வாக்குடன் சென்றால், ஒரு இரண்டு மாதத்தில் நாங்கள் ஒப்பந்தப்புள்ளி கோருகி றோம். அதுவும் முழுமையாக செய்ய முடியாது. ஓரள வுக்கு முடிந்தவரை ஒரு 300 மீட்டருக்கு சாக்கடை கட்ட வேண்டும் என்று சொன்னால் ஒரு 100 மீட்டருக்கு சாக்கடை கட்டுகிறோம் என்று தான் பதில் வரு கிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். 

மழைக்காலங்களில் உள்ளாட்சி பொறியாளர்கள் 24 மணி நேரமும் செயல்படக்கூடியவர்களாக மாற்றப்பட வேண்டும். அதற்கு தேவையான உப பணியாளர்களும் நியமிக்கப்பட வேண்டும். இருக்கக்கூடிய பணியாளர்க ளை வைத்து செய்வதிலும் நிர்வாகத்திற்கும் சிரமம் உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் தொகைக்கேற்ப, விரிவாக்கத்திற்கேற்ப  பணியாளர் கள் முழுமையாக நிரப்பப்பட வேண்டும். இவர்கள் நிரந்தரமானவர்களாக இருக்க வேண்டும். ஒப்பந்தப் பணியாளர்கள் ஆக இருந்தால் ஒப்பந்ததாரர் செல்வாக்கு தான் இருக்குமே தவிர, நிர்வாகம் வேலை வாங்கக் கூடியதாக இருக்காது. எனவே 2005, 2015, 2021 மீண்டும் வராமல் தடுக்க தமிழ கம் முழுவதும் மேற்கண்ட பல்கலைக்கழக தொழில் நுட்ப பேராசிரியர்களை பயன்படுத்தி ஆய்வுகள் முறை யாக மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட நகரங்களில் உடனடியாக மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் கட்டப்படுவதற்கு சிறப்பு நிதி ஒதுக்கி திறமையான, நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகள், சிறந்த பொறியாளர்களின் கண்காணிப்பின் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கட்டுரையாளர்: சிபிஐ(எம்) பழனி நகரச் செயலாளர்

;