articles

img

பிரெஞ்சு கோலியாத்தை வீழ்த்திய புர்கினோவின் டேவிட் - பேரா.விஜய் பிரசாத்

முடிந்து போன ஆண்டு கசப்பு நிறைந்த ஒன் றாக இருந்தாலும், கடைசியில் சற்று இனிப்பைத் தந்திருக்கிறது. சில வலுவான வெற்றிகள்; சில மிகக் கொடிய தோல்விகள் என்று கடந்து போன ஆண்டு, புவிக் கோளத்தின் வடக்கு துருவத்தில் உள்ள நாடுகளின் மோசமான தோல்விகளை- வீழ்ச்சிகளை வெட்ட வெளிச்சமாக்கி விட்டுச் சென்றிருக்கிறது. உயிர் காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உட்பட மிக முக்கியமான வளங்கள் அனைத்தையும் ஜனநாயகப்பூர்வமாக அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்யும் நடவடிக்கை யில் அப்பட்டமாக தோல்வி அடைந்துள்ளன. இதில் நகை முரண் என்னவென்றால், இந்த பெருந்தொற்றின் இறுதி யில் நாம் கிரேக்க மொழியின் எழுத்து வரிசையை கற்றுக் கொண்டதுதான் மிச்சம். டெல்டா, ஒமைக்ரான் என்ற பெயர்களில் அவை அழைக்கப்பட்டுள்ளன. இந்த வரிசை இன்னும் தொடரும் என்றே தெரிகிறது.

தடுப்பூசியும் பதுக்கலும்

உலகிலேயே மிக அதிக தடுப்பூசி செலுத்து விகிதத்து டன் கியூபா முன்னணியில் நிற்கிறது. தனது மக்களை பாது காப்பதற்காக முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே கண்டு பிடித்து உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசிகளை முழுமையாக பயன்படுத்தி இருக்கிறது. கியூபாவைப் போலவே வெனிசுலா முதல் வியட்நாம் வரையிலான நாடுகள் தடுப்பூசி செலுத்து வதில், தங்களது மக்களைப் பாதுகாப்பதில் முன்னணியில் நின்றதை இந்த உலகம் கடந்த ஆண்டு பார்த்திருக்கிறது. இந்த நாடுகளுக்கு மருத்துவ ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொள்கிற மிக நீண்ட நெடிய மகத்தான வரலாறு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகிலேயே மிக மிக குறைவான தடுப்பூசி செலுத்தியதில் புருண்டி முதல் நாடாக இருக்கிறது. அதை தொடர்ந்து காங்கோ ஜனநாயக குடியரசு, தெற்கு சூடான், சாட் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் மிகக் குறைவாகவே தடுப்பூசி செலுத்தியுள்ளன. இவை உலகிலேயே மிகவும் ஏழ்மையான நாடுகள். பெருமளவு வெளிநாட்டு உதவியை நம்பி இருக்கக்கூடிய நாடுகள். ஏனென்றால் இந்த நாடுக ளின் அடிப்படையான அனைத்து வளங்களும் ஏற்கனவே களவாடப்பட்டு - சூறையாடப்பட்டு விட்டன. இந்த நாடுகள் வாங்குவதற்கு முன்பே தடுப்பூசிகளை மிக மிகக் குறைவான விலைக்கு ஏற்கனவே பெருமளவு பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் விலை பேசி வாங்கிப் பதுக்கி விட்டன. 

2021 டிசம்பர் 15 கணக்கின்படி புருண்டியில், மொத்த முள்ள 1.20 கோடி மக்களில் வெறும் 0.04% மக்களே தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளனர். தற்போதைய விகிதத்தின் படி சென்றால், புருண்டியின் அனைத்து மக்களுக்கும் அதாவது வெறும் 1.20 கோடி மக்களில் 70% பேருக்கு முழு மையாக தடுப்பூசி செலுத்தி முடிப்பதற்கே 2111 ஜனவரி ஆகி விடும். எவ்வளவு மோசமான நிலைமை இது...? 2021 மே மாதத்தில் உலக சுகாதார அமைப்பின் தலை வர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம், “இந்த உலகம் தடுப்பூ சிப் பாகுபாட்டைச் சந்தித்திருக்கிறது” என்று கூறினார். அவர் கூறிய அந்த நிலைமையில் இருந்து இப்போதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை.   2021 நவம்பரில் ஆப்பிரிக்க யூனியனின் தடுப்பூசி வழங்கல் துறை இணை தலைவர் டாக்டர் அயோடு அலா கிஜா, தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் அவசர நிலை ஏற் பட்டுள்ளது என்று கூறினார். “இப்போது நடந்து கொண்டிருப் பது எந்த விதத்திலும் தவிர்க்க முடியாத ஒன்று. இது உலகம் முழுவதிலும் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு சமமான முறையிலும் துரிதமான முறையிலும் தடுப்பூசி கிடைக்கச் செய்வதில் உலகம் அடைந்துள்ள தோல்வியின் விளைவு” என்று அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல, இந்த அதி தீவிர தொற்று பரவல் என்பது, உலகில் அதிக வருமானம் கொண்ட நாடுகள் மிக அதிக அளவில் தடுப்பூசிகளை பதுக்கியதன் கொடிய விளைவு ஆகும் என்றும் அவர் ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.  

ஒவ்வொரு உயிரும் முக்கியம்

2021 டிசம்பர் மத்தியில் உலக சுகாதார அமைப்பு, டாக்டர் அலாகிஜாவை கோவிட் - 19 தடுப்பு கருவிகள் கொள்முத லுக்கான சிறப்புத் தூதராக நியமித்தது. ஆனால், அந்தப் பெண்மணியின் இலக்கை எட்டுவது எளிதாக இருக்கவில்லை. பிரஸ்ஸல்ஸில் ஒரு உயிர் எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவிற்கு மும்பையில் உள்ள உயிரும் முக்கியமானது; ஜெனீவாவில் ஒரு உயிர் எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவிற்கு சாவோ பாலோ நகரில் உள்ள ஒரு உயிரும் முக்கியமானது; வாஷிங்டனில் ஒரு உயிர் எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவிற்கு ஹராரே நகரில் உள்ள உயிரும் முக்கியமானது என்று அவர் தனது இலக்கினைத் தீர்மானித்து செயலாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  தடுப்பூசிப் பாகுபாடு என்பது நமது உலகில் நிலவுகிற மருத்துவப் பாகுபாடு எனும் மிகப் பரந்து விரிந்த பிரச்சனை யின் ஒரு பகுதி ஆகும். நமது காலத்தில் நான்கு விதமான பாகுபாடுகளை பார்த்திருக்கிறோம். அதில் ஒன்றுதான் இது. உணவுப் பாகுபாடு, பணப் பாகுபாடு மற்றும் கல்விப் பாகுபாடு ஆகியவையே இதர மூன்று பாகுபாடுகள். 

ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கை பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை குறிப்பிடுகிறது. அதில் ஒன்று, ஆப்பிரிக்கா வில் போதிய ஊட்டச்சத்து உணவு கிடைக்காத மக்களின் எண்ணிக்கை 2014இல் 8.91 கோடியாக இருந்தது; 2020 இல் 28.16 கோடியாக மிகக் கடுமையாக அதிகரித்திருக் கிறது. இந்த இடத்தில்தான் டாக்டர் அலாகிஜாவின் கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. இந்த உலகில் வெவ்வேறு மனிதர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி. வாஷிங்டனில் உள்ள ஒரு உயிருக்கு அளிக்கப்படுகின்ற மதிப்புதான் ஆப்பி ரிக்காவில் ஹராரேயைச் சேர்ந்த உயிருக்கும் அளிக் கப்படுகிறதா? இத்தகைய பாகுபாடுகளை தூக்கி எறிய வேண்டுமானால் - நமது புவிக்கோளம் முழுவதுமுள்ள மக்கள் எதிர்கொண்டு வரும் அடிப்படையான பிரச்சனை களுக்கு தீர்வு காண வேண்டுமென்றால் - இந்த காட்டு மிராண்டித்தனத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்றால் - தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பு முறை மனித குலத்தின் மீதும் இயற்கையின் மீதும் கட்ட விழ்த்து விட்டுள்ள கொடிய சித்ரவதைகளுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்றால் அதற்காக களம் இறங்க வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது. 

சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள்

இத்தகைய கொடிய பாகுபாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும், இந்த தருணத்தில் பிறந்துள்ள 2022 புத்தாண்டில் மனித குலம் சில குறிப்பிட்ட அம்சங்களில் ஒரு முன்னேற்றத்தை எட்டியுள்ளது என்பதை நாம் பெரு மிதத்துடன் கூறலாம். 

1  சீன மக்கள் தங்கள் நாட்டில் நிலவிக் கொண்டி ருந்த கடைசி மனிதனின் கொடிய வறுமையை யும் முற்றாகத் துடைத்து எறிந்து இருக்கிறார்கள். கடந்த எட்டு ஆண்டு காலத்தில் வறுமையின் பிடியில் இருந்த 10 கோடி மக்கள் முற்றிலும் நல்ல நிலைக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இது இந்த உலகின் நவீன வரலாற்றில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகும்.

2 இந்திய விவசாயிகளின் துணிச்சல் மிக்க எழுச்சி 3 கொடிய வேளாண் சட்டங்களை தூக்கி எறிய வைத்திருக்கிறது. இந்திய விவசாயிகளின் வாழ் நிலையை சின்னாபின்னமாக்கி சீரழிக்கும் அச்சு றுத்தலை ஏற்படுத்திய சட்டங்களை ஓராண்டு காலம் வலுவான போராட்டத்தை நடத்தி அரசாங்கத்தை பணியச் செய்தி ருக்கிறார்கள் விவசாயிகள். சமீப ஆண்டுகளில் உலகில் மிக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள குறிப்பிடத்தக்க பாட்டாளிவர்க்க வெற்றி இந்திய விவசாயிகளின் வெற்றி. இந்திய விவசாயிகளின் இந்தப் போர், இந்தியாவில் மட்டு மல்ல; உலக அளவிலும் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக நடந்த முக்கியமான போர்க்குணமிக்க போராட்டங்களில் முதன்மையானது என்று நிச்சயம் குறிப்பிடமுடியும். 

3   பொலிவியா, சிலி, ஹோண்டுரஸ் ஆகிய நாடுகளில் இடதுசாரி அரசாங்கங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கும் மகத்தான நிகழ்வுகள். இந்த நாடு களில் கொடிய ராணுவக் கலகங்கள் நடந்து கொண்டிருந்த இழிவான வரலாற்றை மாற்றி, புதிய  எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. சிலியில் 1973 இல் இருந்தே ராணுவக் கலகங்களும் சர்வாதிகாரிகளின் ஆட்சியும் தான். 2009இல் ஹோண்டுரசில் ராணுவக் கலகம் நடந்தது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சி வீழ்த்தப் பட்டது. பொலிவியாவில் 2019இல் ராணுவக் கலகம் நடந்ததை நாம் பார்த்தோம். ஆனால் இன்றைக்கு அந்த நிலைமையில் ஒரு தாக்குதல் தொடுக்கப்பட்டு இருக்கி றது. பன்முக உலகம் என்ற உயரிய கோட்பாடு வலுவ டைந்து வரும் சூழல் உருவாகி இருக்கிறது. இது உலக அர சியல் அரங்கில் அமெரிக்காவின் கட்டுப்பாடு மெல்ல அரிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. இந்த நாடு களில் அமெரிக்கா என்ன திட்டமிட்டதோ அந்த இலக்கை அடைய முடியவில்லை. அதேபோல கியூபப் புரட்சியை ஒழித்துக் கட்டுவதற்கும் வெனிசுலாவில் புரட்சிகர நடை முறையை அழிப்பதற்குமான யுத்தத்தை அமெரிக்கா நடத்திக் கொண்டிருந்தது. இந்த நாடுகளில் எதிர்க்கட்சிகள் என்று தங்களை அழைத்துக் கொள்கிற வலதுசாரி அமெரிக்க ஏகாதிபத்தியக் கைக்கூலிகளை தூண்டிவிட்டு, அவர்கள் மூலமாக ஆட்சிகளைக் கவிழ்ப்பது; வன்முறை வெறி யாட்டத்தை நடத்துவது என்ற அமெரிக்காவின் நடவடிக் கைகளுக்கு இந்த நாடுகளின் மக்கள் தற்போது இடது சாரிகளைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் சரியான பதிலடி அளித்திருக்கிறார்கள். பிரேசிலிலும் கூட 2022-இல் நடைபெறவுள்ள தேர்தலில் லூலா டி சில்வா, தனக்கு எதி ராக வரப்போகிற வலதுசாரி வேட்பாளரை நிச்சயம் தோற் கடிப்பார் என்பதற்கான அறிகுறிகள் உருவாக்கியுள்ளன. 

4  ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய ஏகாதிபத்திய சக்திகளின் ராணுவ முகாம்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவிற்கு கோபாவேச அலை மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. புர்கினோ பாசோ நாட்டின் மேற்கத்திய பகுதியிலுள்ள கயா (KAYA) என்ற நகரில் நடந்த நிகழ்வுகள் இதை உறுதி செய்கின்றன. இந்த நகருக்கு அருகில் கடந்த நவம்பர் மாதம் பிரெஞ்சு ராணுவ வாகனங்கள் நெருங்கி வந்தபோது அந்நகரின் மக்கள் பெரும் கூட்டமாக அணிதிரண்டு அதற்கெதிராக போராட்டம் நடத்தி ராணுவ வாகனங்களை தடுத்து நிறுத்திய முக்கியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த தருணத்தில் அந்தக் கூட்டத்தை கண்காணிப்பதற்காக பிரெஞ்சு ராணுவத்தினர் ஒரு ட்ரோன் கருவியை அனுப் பியிருக்கிறார்கள். அந்த கருவியை 13 வயதே ஆன அலியு சவடோகோ என்ற சின்னஞ்சிறுவன் தனது கவட்டை வில்லால் அடித்து தாக்கி வீழ்த்தி இருக்கிறான். பிரெஞ்சு கோலியாத்தை வீழ்த்திய புர்கினோ பாசோவின் டேவிட்.

5  உலகம் முழுவதிலும் அனைத்து வகையான தொழி லாளர்கள் - குறிப்பாக வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் முதல் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் வரை அனைத்து தரப்பு பாட்டாளிகளின் மிகப் பிரம்மாண்டமான வேலைநிறுத்தப் போராட்டங்களை இந்த காலத்தில் உலகம் கண்டிருக்கி றது. இந்த தொழிலாளர்கள் கொரோனா தொற்றுக் காலத்தில் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் குரூரமான தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள். ஆனால் இந்த தொழிலாளர்கள் அதற்கு அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்க தயாராக இல்லை. தங்களது கவுரவத்தை முதலாளித்து வத்தின் கரங்களில் ஒப்படைத்து சரணாகதி அடைய விரும்பவில்லை. அவர்கள் முதலாளித்துவத்தின் கொள் கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் எதிராக துணிந்து நிற்கி றார்கள். மிகப் பெரும் போராட்டங்களில் அணிவகுத்து வருகிறார்கள்.

ஆனால் இவையே முழுமையாக அனைத்தும் நிறை வேறிவிட்ட பட்டியல் அல்ல. எனினும் இவை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் என்பதில் சந்தேகமில்லை. 

கூர்மையடையும் சமத்துவமின்மை

இருபது ஆண்டுகள் கழித்து ஆப்கானிஸ்தானில் தோல்வியடைந்து கடைசியில் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலைமை அமெரிக்காவுக்கு ஏற்பட்டது, 2021ஆம் ஆண்டின் மிகக் குறிப்பிடத்தக்க நிகழ்வு. ஆப்கா னிஸ்தானில் நடத்திய இந்தப் போரில் அமெரிக்கா தனது இலக்காக முன்னிறுத்திய எதையுமே கடைசிவரை சாதிக்க முடியவில்லை. மாறாக 3.90 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த நாடு முற்றிலும் பட்டினியின் பிடியில் சிக்கியது தான் மிச்சம். ஆப்கானிஸ்தானுக்குச் சேரவேண்டிய 9.5 பில்லியன் டாலர் நிதி அமெரிக்காவின் வங்கிகளில் இப்போதும் இருக்கி றது. அதை ஆப்கானிஸ்தானுக்கு கொடுக்காமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபை என்ற கட்டமைப்பிற்குள் ஆப்கானிஸ்தான் அரசு வந்துவிடா மல் தடுப்பதிலும் அமெரிக்கா முனைப்பாக இருக்கிறது. நியா யமாக கிடைக்க வேண்டிய உதவித் தொகை கிடைக்க விடாமல் தடுக்கப்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தி தொகையில் 43 சதவீதத்தை இழந்தது. இந்தப் பின்னணி யில் ஆப்கானிஸ்தானில் தனிநபர் வருவாய் 2012ஆம் ஆண்டு இருந்ததைவிட சரி பாதி அளவிற்கு வீழ்ச்சி அடை யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால் அந்நாட் டின் 97 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் செல்வார் கள். ஒட்டுமொத்த நாட்டையும் பசியும் பட்டினியும் துயரமும் சூழும். இதன் பொருள் என்னவென்றால், ஆப்கனின் வக் கான் பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரின் உயிர் லண்டனில் வாழும் ஒருவரின் உயிரைப் போல மதிப்பு வாய்ந்தது அல்ல என்று ஏகாதிபத்திய உலகம் கருதுகிறது என்பதுதான்.

இது ஆப்கானிஸ்தான் தொடர்புடைய பிரச்சனை மட்டு மல்ல; புதிதாக வெளியிடப்பட்டுள்ள “உலக சமத்துவ மின்மை அறிக்கை 2022” முக்கியமான பல விவரங்களை சுட்டிக்காட்டுகிறது. உலக மக்கள்தொகையில் வறுமையின் பிடியில் இருப்பவர்களில் சரிபாதிப் பேர், ஒட்டுமொத்த தனி யார் சொத்துக்களில் வெறும் இரண்டு சதவீதத்தை மட்டுமே சொந்தமாக வைத்திருக்கிறார்கள்; அதேவேளையில் பெரும் பணக்காரர்களாக உள்ள 10சதவீதம் பேர் உலகின் ஒட்டு மொத்த தனியார் சொத்துக்களில் எழுபத்தி ஆறு சதவீதத்தை கைகளில் வைத்திருக்கிறார்கள். இதில் பாலின சமத்துவ மின்மை இன்னும் கூர்மையாக வெளிப்படுகிறது. 

2022 துவக்கம், இவ்விதமான கசப்புகளை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. வெற்றிகளின் வெளிச்சத்தில், புதிய உலகம் படைக்கும் பயணத்தில் 2021இன் அனுபவங்கள் உதவும்.

தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்
  

;