பாஜக தலைவர் அண்ணாமலை எப்போதும் பொய்தான் பேசுவார் என்று கூறிவிட முடியாது. சில சமயங்களில் தம்மை மறந்து உண்மையும் பேசுவார். அப்படித்தான் தன்னுடைய 7வது கட்ட பாதயாத்திரையின் போது பவானி கூடுதுறைக்குச் சென்ற அவர் ‘ஏழை என்ற சாதியை ஒழிப்பதே இலக்கு’ என்று பேசியதாக தினமலர் தலைப்பிட்டுள்ளது.
அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், பாஜகவைப் பொறுத்தவரை இரண்டே சாதிகள்தான் உள்ளன. ஒன்று பணக்கார சாதி, மற்றொன்று ஏழை சாதி. ஏழை என்ற சாதியை ஒழித்து அனைவரையும் பணக்கார சாதியாக்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு என்று உண்மையை ஊர் நடுவே நின்று உரத்துச் சொல்லியுள்ளார். பாஜக பொறுப்பேற்ற பிறகு ஏழைகளை ஒழித்துக் கட்டும் வேலையைத்தான் அன்றாடப் பணியாக செய்து வருகிறது.
அம்பானி, அதானி என்ற இரு கார்ப்பரேட் முதலாளிகள் குறித்துத்தான் அவர்களுக்கு கவலை. விமான நிலையம், துறைமுகம் என அனைத்தையும் தந்து அவர்களது ஏழ்மையை ஒழித்து வருகிறது மோடி அரசு.
ஏழைகள் ஏழையாக இருக்கக்கூடாது என்பதற்காக பிரதமர் மோடி வங்கிக் கணக்கு, 100 நாள் வேலைத்திட்டம் என பல பணிகளை செய்து வருவதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். ஜன்தன் கணக்கு என அனைவரும் வங்கிக் கணக்கை துவக்கச் சொல்லிவிட்டு, வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லை என்று 35 ஆயிரம் கோடியை சுருட்டியதுதான் ஏழைகளுக்கு இவர்கள் செய்த சேவை. தமிழ்நாட்டில் திமுக அரசு பெண்களுக்கு உரிமைத் தொகையாக வங்கியில் செலுத்திய ஆயிரம் ரூபாயில் கூட குறைந்தபட்ச இருப்பு இல்லை என வங்கிகள் சுருட்டியது ஏழைகளுக்காக செய்யப்பட்ட சேவையா?
100 நாள் வேலைத்திட்டத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து அந்தத் திட்டத்தையே கருணைக் கொலை செய்வது ஏழைகளுக்கு இனிப்பான செய்தியா? இவர்களது நோக்கம் ஏழ்மையை ஒழிப்பது அல்ல. ஏழைகளை ஒழிப்பதுதான் என்று அண்ணாமலை அப்பட்டமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஜெய் ஸ்ரீராமும்- தென்கச்சியார் கதைகளும்
அ கமதாபாத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது, ‘ஜெய் ஸ்ரீராம்’ என பாஜக-ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் கூச்சலிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராம பக்தர்கள் பக்தியோடு சொல்லும் ஒரு கோஷத்தை இவர்கள் வெறுப்பு அரசியலின் விதையாக மாற்றியுள்ளனர்.
இதுகுறித்து ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அவர் எந்தப் பதிலும் அளிக்காமல் பலமுறை ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறியுள்ளார். புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஜெய் ஸ்ரீ ராம் என்பது வெற்றியை குறிப்பது அதில் ஒன்றும் தவறு இல்லை என்று கூறியுள்ளார்.
இந்தப் போட்டியையொட்டி ‘மேக் மைக் டிரிப்’ என்ற நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்தில் ‘போட்டியைப் பார்க்க பாகிஸ்தான் ரசிகர்களை வரவேற்கிறோம். எத்தனை ரன்களில் பாகிஸ்தான் தோற்கும் என்று கணித்தால் அதற்கேற்ப ஹோட்டலில் தங்குவதற்கான கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்’ என்று விளம்பரம் செய்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டுப் போட்டியைக் கூட மதவெறிமயமாக்குவது பாஜகவின் மலிவான அரசியலைக் காட்டுகிறது. இதுகுறித்த செய்திகளை படித்துக் கொண்டிருந்த போது தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் பேசிய ஒரு காணொலியை பார்க்க நேர்ந்தது. அதில் அவர் இரு கதைகளை கூறுகிறார்.
ஒரு நாள் ராமபிரானும் அவரது தம்பி பரதனும் பந்து விளையாடிக் கொண்டிருந்தனராம். விளையாட்டு முடிந்தவுடன் ராமபிரான் மகிழ்ச்சியோடு ஓடிவந்து தன்னுடைய தாயான கோசலையின் மடியில் படுத்துக் கொண்டாராம். ராமனின் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என கோசலை கேட்டதற்கு எங்களுக்குள் நடந்த போட்டியில் தம்பி பரதன் ஜெயித்துவிட்டான். இதனால் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்றாராம் ராமன்.
அடுத்து வந்த பரதன் மிகவும் சோர்வாக இருந்தாராம். சோர்வுக்கு என்ன காரணம் என கோசலை வினவ இந்த விளையாட்டில் உண்மையில் அண்ணன் ராமன்தான் வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் எனக்காக விட்டுக் கொடுத்தார். அண்ணன் ராமனின் தோல்வி எனக்கு வருத்தமளிக்கிறது என்றாராம் பரதன். இந்தக் கதையை கூறிவிட்டு தென்கச்சியார் வெற்றிபெறுவதில் அல்ல, விட்டுக் கொடுப்பதிலும், அடுத்தவரை துன்பப்படுத்தாமல் இருப்பதிலும் தான் மகிழ்ச்சி இருக்கிறது என்று கூறிவிட்டு இன்னொரு கதையை கூறுகிறார்.
நபிகள் நாயகத்தின் மகள் பாத்திமாவுக்கு ஹுசைன் - ஹசன் என இரு புதல்வர்கள். இருவரும் சில நாட்களாக பேசிக் கொள்வதில்லை என்பதை பாத்திமா கவனித்திருக்கிறார். இருவரையும் அழைத்து இரண்டு முஸ்லிம்கள் மூன்று நாட்களுக்கு மேல் பேசிக்கொள்ளாமல் இருந்தால் அது ஒருவரை கொலைசெய்வதற்கு சமம் என்று நபிகள் நாயகம் கூறியிருப்பது உங்களுக்கு தெரியாதா என அன்னை பாத்திமா கேட்டாராம்.
அதற்கு ஹுசைன் - ஹசன் இருவரும் நபிகள் நாயகம் இவ்வாறு கூறியிருப்பது எங்களுக்குத் தெரியும். அதேநேரத்தில் நபிகள் நாயகம் மற்றொன்றையும் கூறியுள்ளார். இரண்டு பேர் சந்திக்கும் போது யார் முதலில் வணக்கம் சொல்கிறார்களோ அவர்களுக்கு நல்லது நடக்கும் என்றும் பெருமானார் கூறியுள்ளார். அதன்படி அண்ணனுக்கு நல்லது நடக்கட்டும் என தம்பியும் தம்பிக்கு நல்லது நடக்கட்டும் என அண்ணனும் விட்டுக் கொடுத்து காத்திருப்பதாகப் பதிலளித்தார்களாம்.
இத்தகைய கதைகள் மக்களிடையே நல்லிணக்கத்தை, நல்லுறவை வளர்ப்பதற்காக கூறப்பட்டவை. ஆனால் ஆர்எஸ்எஸ் வகையறா கருணையின் வடிவமாக மக்கள் பார்த்து வந்த ராமபிரானை தங்கள் வெறுப்பரசியலுக்கு வெட்கமில்லாமல் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
தேர்தல் பத்திரம்- ஜனநாயகம் பத்திரம்
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக கார்ப்பரேட் முதலாளிகளிடம் தேர்தல் நிதியாக பெரும் தொகையை சுருட்டி வருகிறது. இந்த முறை கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தேர்தல் பத்திர முறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது, இதை விசாரிக்க அவசரம் இல்லை என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.
தற்போது சில மாநில சட்டமன்றத் தேர்தல்களும், நாடாளுமன்றத் தேர்தலும் நெருங்குகிற நிலையில் இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என மனுதாரர்கள் கேட்டுக் கொண்டதால் இந்த வழக்கை அரசியல் சட்ட அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இப்போதாவது விசாரிக்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. தேர்தல் பத்திரம் மூலம் நிதி கொடுத்தவர்கள் யார் என்பது வெளியில் தெரிவிக்கப்படமாட்டாது. ஆனால் ஒன்றிய அரசு இந்த விபரத்தை பெற்று எதிர்க்கட்சிகளுக்கு நிதி கிடைக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். அரசியல் கட்சிகள் ரூ.12 ஆயிரம் கோடி தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்றிருப்பதாகவும் இதில் மூன்றில் ஒரு பங்கை ஒரே கட்சி மட்டுமே பெற்றிருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 தேர்தலுக்கு முன்பாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு நல்ல தீர்ப்பளிக்கப்படுமானால் ஜனநாயகத்திற்கு அது நல்லதாக அமையும்.