articles

img

எங்கே எங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை? - எம்.பாலசுப்பிரமணியன்

அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் தமிழ்நாட்டில் மதுரையில் நிறுவிட அறிவிக்கப்பட்டு கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் மதுரை தோப்பூரில் அடிக்கல் நாட்டப்பட்டது. அன்றிலிருந்து 4 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், பூச்சு இல்லாத செங்கல்லைக் கொண்ட சுற்றுச்சுவருடன் இன்று வரை காட்சி தருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு ஜனநாயக சக்திகளின் பல கட்டப் போராட் டங்களுக்குப் பின் ஒப்புதல் தரப்பட்டு இத்திட்டம் ஒன்றிய பாஜக - மோடி அரசின் ‘ஓரவஞ்சனையால்’ கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

மதுரையில் எய்ம்ஸ் அமைவதால் உண்டாகும் நன்மைகள்

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவதன் மூலம் அதில், பணிபுரியும் மருத்துவ வல்லுனர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருந்தாளு னர்கள், லேப்-டெக்னீசியன்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், சிப்பந்திகள் என சுமார் 5,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், இந்நிறுவனம் சார்ந்த உபதொழில்கள் மூலம் 30,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் அமைய உள்ள மருத்துவக் கல்லூரி யில் கூடுதலாக 650 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக் கான இடங்கள் கிடைக்கும். மதுரை மற்றும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு உலகத் தரத்திலான உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும் மேலும்;

•    மதுரை விமான நிலையம் சென்னையைப் போல சர்வதேச விமான நிலையமாக மாற்றம் பெறும்.

•    மெட்ரோ - மின்சார ரயில் போன்ற ரயில் போக்கு வரத்து திட்டங்கள் உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். மேம்பட்ட சாலைப் போக்குவரத்து உள்ளிட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சியை அவசியமாக்கும்.

•    மருத்துவ உபகரணங்கள், மருத்துவப் பொ ருட்கள், கையுறை, காலுறை, கவச உடைகள் தயாரிப்பு போன்ற தொழில் சார்ந்த உற்பத்தி நிறு வனங்கள் பெருகும். இது தென் மாவட்டம் முழுவதும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

•    மருத்துவ வல்லுனர்கள், பேராசிரியர்கள்/உதவி பேராசிரியர்கள், மாணவர்கள் நிரந்தரமாக தங்கி பணியாற்றவும்/கல்வி பயிலவும் தேவையான குடி யிருப்புகள் உருவாகும்;  இது கட்டுமானத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்; இதன் மூலம், கட்டுமா னத் தொழில் சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாகும்.

•    வரலாற்று மற்றும் ஆன்மீகச் சுற்றுலா தலமாக உள்ள மதுரை - மருத்துவச் சுற்றுலா நகரமாகவும் மாறும். இதன் மூலம் ஹோட்டல்கள், விடுதிகள், வணிக நிறுவனங்கள், வேன், ஆட்டோ, சாலை யோர வியாபாரம் ஆகியவற்றின் மூலம் முறைசாராத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பெருகும்.

•    மொத்தத்தில் மதுரை மாவட்ட மக்களுக்கு மட்டு மின்றி, தென் மாவட்ட மக்களுக்கும் மிகப்பெரிய வரமாக ‘எய்ம்ஸ்’  அமையும்!

எய்ம்ஸ் அறிவிப்பும் -  கடந்து வந்த பாதையும்...!

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்ப தற்காக முதன் முதலில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர். பி. மோகன் ஆவார். அவர் தொடர்ந்து இதற்காக குரல் கொடுத்து வந்தார். நாடாளுமன்றத்தில் தோழர். பி.மோகன் குரல்  கொடுத்த நேரத்தில், மக்கள் மன்றத்தில் இக்கோரிக் கையை பல்வேறு போராட்டங்களின் மூலம் முன்னெ டுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் பல்வேறு வெகுஜன அமைப்புகளுமாகும். குறிப்பாக 2017-ஆம் ஆண்டு இந்திய தொழிற்சங்க மையம், வாலிபர், மாதர், மாணவர், இன்சூரன்ஸ், வங்கி, மூட்டா, தொலை தொடர்பு, எழுத்தாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சார்ந்த பல்லாயிரக்க ணக்கானோர் மதுரை தெற்குமாசி வீதியில் நடத்திய பிரம்மாண்டமான மனிதச் சங்கிலி போராட்டம் முத்திரை பதித்த போராட்டமாகும்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, திமுக, காங்கி ரஸ், சிபிஐ, மதிமுக, விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிக ளும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மடீட்சியா உள்ளிட்ட சிறு - குறுந்தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளும், பல்வேறு ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து இதற்காக குரல் கொடுத்து வந்துள்ளன. இதன் விளைவாகத்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்த லுக்கு முன்னதாக மோடி அரசு எய்ம்ஸ் அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் கடந்த 2019-இல் மதுரை நாடாளு மன்ற உறுப்பினராக தோழர்.சு.வெங்கடேசன் தேர்வான பின்னர் தொடர்ந்து இது குறித்து நாடாளு மன்றத்தில் குரல் கொடுத்து வருவதோடு, இதன் பணிகளை துவக்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இதன் மீது தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

ஒன்றிய பாஜக -  மோடி அரசின் ஓரவஞ்சனை

•    2003 -இலிருந்து  இந்தியா முழுவதும் இதுவரை 8 கட்டங்களாக 24 - எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைத்திட ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

•    மோடி அரசு 5ஆவது கட்டமாக அறிவித்த பட்டிய லில்  மதுரை எய்ம்ஸ் இடம் பெற்றுள்ளது.

•    மதுரை எய்ம்ஸ் அறிவிக்கப்பட்ட அதே ஆண்டில் ஜம்மு- காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், அஸ்ஸாம், பீகார் மாநிலங்களுக்கும் சேர்த்து அறிவிக்கப்பட்டது. ஆனால் அவையனைத்தும் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்து விட்டன.

•    மதுரை எய்ம்ஸ் மட்டும் தான் அடிக்கல் நாட்டப் பட்டதோடு கடந்த 4 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  

•    மதுரைக்குப் பின் 6, 7, 8-ஆம் கட்ட பட்டியலில் அறி விக்கப்பட குஜராத், ஜார்க்கண்ட், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் எய்ம்ஸ் பணிகள்  நிறை வடைந்து பயன்பாட்டிற்கு வந்து விட்டன.

•    மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்கு ஒன்றிய அரசே நிதி வழங்கியுள்ள நிலையில், மதுரை எய்ம்ஸ்க்கு மட்டும் அந்நிய (ஜப்பான்) நாட்டு ‘ஜைகா’  என்கிற கார்ப்பரேட் நிறுவனத்தின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு தனது பொறுப்பை மோடி அரசு உதறி யுள்ளது.!

மொத்தத்தில்,  பாஜக - மோடி அரசு இதனை தேர்தல் ‘ஜூம்லா’ (வெற்று வாக்குறுதி) போல ஆக்க  நினைக்கிறது. மற்ற மாநிலங்களில் எல்லாம்  அறி விக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் - தமிழ்நாட்டிற் கென்று  மதுரையில் அமைத்திட அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் பணிகளை நிறைவேற்றாமல் இழுத்தடித்து பாஜக - மோடி அரசு தமிழ்நாட்டு மக்களிடம் ஓரவஞ்ச னையாக நடந்து கொள்வதோடு,  மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரும் துரோகத்தை யும் இழைத்து வருகின்றது! இதைப்பற்றி தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைமையோ  மதுரையில் உள்ள பாஜக-வினரோ கண்டு கொள்ளாமல் வாய்மூடி மௌனியாக உள்ளனர். இந்நிலையில் மதுரையில் எய்ம்ஸ் அமைய குரல் கொடுப்பது - தென் மாவட்டங்களின் சுகாதாரக் கட்ட மைப்பு மற்றும் தொழில் வளர்ச்சி சார்ந்தது மட்டுமல்ல  தமிழ்நாட்டின் கௌரவம் மற்றும் உரிமை சார்ந்த விசயமும் ஆகும்.  எனவே தான்  இதனை தமிழ்நாட்டின் மாநில உரிமையைப் பாதுகாக்கும் விதமாகவும், எய்ம்ஸ் பணிகளை விரைவில் நிறை வேற்றச் செய்திடவும் உறுதி மிக்கப் போராட்டங்களை முன்னெடுப்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

அதன் முத்தாய்ப்பான போராட்டமாக வருகிற ஜனவரி - 24-ஆம் தேதி மதுரையில்  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் 10,000 பேர் பங்கேற்கும்  பெருந்திரள் தொடர் முழக்கப் போராட்டம் நடை பெறவுள்ளது. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யில் நடந்தாலும் இதில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்களும், விசிக, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலை வர்களும் கலந்து கொள்ள உள்ளனர். “ஊர் கூடித் தேர் இழுப்பதில்” மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுதியாய் இருக்கிறது என்பதன் அடையா ளமாய் நடைபெற உள்ள இப்போராட்டம் - ஒன்றிய பாஜக - மோடி அரசுக்கு எதிரான அரசியல் போராட் டத்தின் ஒரு பகுதியே ஆகும்.!

கட்டுரையாளர் : சிபிஎம் மாவட்ட 
செயற்குழு உறுப்பினர். மதுரை மாநகர்

;